அஸ்திவாரம்

Saturday, November 11, 2023

திருப்பூர் இனி வரும் காலங்களில் இடம் பெறுமா ?

ஒரு ஆசிரியை தொழில் சார்ந்த பல கட்டுரைகள் எழுதுவீர்கள்? ஏன் இப்போது எழுதுவதில்லை? என்று கேட்டு எழுதியுள்ளார்.

நான் நம்பக்கூடிய நல்ல பழகிய தெரிந்த புத்திசாலிகள் அனைவரும் இணையம் என்பதனை லுச்சா தனமான செயல்பட்டுக்கு மட்டும் என்று உறுதியாகவே நம்பி செயல்படுகின்றார்கள். என்னை விட அவர்கள் பல விசயங்களில் வல்லுநர்கள். ஆனால் எதையும் எங்கேயும் கடந்த விரும்பாத இரும்பு மனம் படைத்தவர்களாக இருப்பதையும் பார்த்து வருகிறேன். இதன் காரணமாகத் தொழில் சார்ந்த விசயங்களில் எழுத விரும்புவதில்லை என்றேன். அவர் வேறொரு விசயத்தையும் சுட்டிக் காட்டியிருந்தார். வேறு சிலர் எழுதிய சில பதிவுகள் வாயிலாக திருப்பூர் ஏன் வளரவில்லை? என்பதற்குப் பின்னால் உள்ள காரணிகளை அலசியிருந்தார்கள். அது குறித்து உங்கள் பார்வையைச் சொல்லுங்கள் என்று கேட்டுள்ளார்.


தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தொழில் நகரத்திற்கும் வெளியே தெரிந்த ஒரு முகம் உண்டு.

அதே போல வெளியே இருந்து அந்த ஊரைப் பார்க்கின்றவர்களுக்குத் தெரியாத ஆயிரம் முகமும் அந்த ஊருக்கு இருக்கும் என்பதனை மறந்து விடக்கூடாது.

சிலவற்றை வெளிப்படையாக எழுதவே முடியாது.

திருப்பூர் குறித்து 15 வருடங்களாக எழுதி வருகிறேன். மொத்தத்தில் பத்து சதவிகிதம் தான் எழுதியுள்ளேன்.


மறைந்த சமஉ கம்யூ (மா) திரு. தங்கவேல் அவர்கள் டாலர் நகரம் புத்தகத்திற்கு அணிந்துரை எழுதி முடித்தபின்பு தனிப்பட்ட முறையில் ஒரு விசயத்தைச் சொன்னார். அவர் மறைந்து மூன்று ஆண்டுகள் முடிந்து விட்டது.

செட்டி நாட்டுப் பகுதியிலிருந்து வந்து எங்கள் உண்மையான கதையை இங்குள்ள தொழிலுக்குப் பின்னால் உள்ள நல்லதைக் கெட்டதை உங்களைப் போன்ற இளைஞர்கள் எழுத வேண்டிய நிலைமை உள்ளது. படிக்கும் போது உங்கள் மேல் கோபமாக வந்தது. ஆனால் எழுதியது உண்மைதானே என்று என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் முடிந்தது என்றார்.

இத்தனைக்கும் அந்தப் புத்தகம் பாதிக்குக்கு பாதித் தான் எடிட் செய்து புத்தகமாக வெளியே வந்தது.

திருப்பூருக்குத் தொடர்பு இல்லாமல், இந்த ஊரில் வாழாமல், இங்குள்ள தொழிலில் ஈடுபடாமல் அதைப் பற்றி கற்பனையாக எழுதலாம். மதிப்புக் கூட்டு விசயங்கள் முதல் மதிப்பே இல்லாத மனிதர்கள் வரைக்கும் ஆயிரம் எழுதினாலும் உங்களைப் போன்றவர்களால் இங்குள்ள பெருச்சாளிகளைப் பற்றி எழுத முடியாது. காரணம் இந்த ஊர் வளர்ந்து விடவே கூடாது. தங்கள் கைகளை விட்டுப் போய்விடவே கூடாது. இங்குள்ள ஒவ்வொன்றும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள்ளே இருக்க வேண்டும் என்பதற்காக இவர்கள் செய்து கொண்டு இருக்கும் ஒவ்வொரு காரியத்திற்கும் அவனவன் கர்மவினை தான் தண்டனை வழங்க வேண்டும்.

நண்பர் இப்படிச் சொல்வார்.

நல்ல தொழில் மோசமான மனிதர்களிடம் சிக்கியுள்ளது.

மோசமான மனிதர்களால் நல்ல உழைப்பாளிகள் தங்களை இழந்து கொண்டு இருக்கின்றார்கள்.

இரண்டையும் வைத்து மத்திய மாநில அரசுகள் அவர்களுக்கு என்ன தேவையோ அதை அவர்கள் எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

நம்பிக்கையோடு வரும் புதிய தலைமுறைகள் அடிமைகளாக வாழ்ந்து தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டு விடுகின்றார்கள்.

இவர்கள் வளர்வதாகச் சொல்லும் எதுவும் வளர்ந்தாகவும் தெரியவில்லை. இலக்குகள் எதையும் எட்டியதாகவும் சாதிக்கவில்லை.

நண்பரிடம் பேசிய போது தொழில் என்றாலே, தொழில் சார்ந்தவர்களின் மனோபாவம் என்பது எல்லா இடங்களிலும் இப்படித்தான் இருக்கும் என்று பல உதாரணங்கள் காட்டி எனக்குப் புரிய வைத்தார்.

ஆனால் இங்கே நடந்தது, நடந்து கொண்டு இருப்பது அனைத்தும் தன் வாய்க்கு எவ்வளவு தேவை என்பதனையும் அறிந்து அதற்கு மேலே திணித்து மீதி உள்ளதைப் பசி உள்ளவனுக்கு வழங்காமல் கீழே சிதறி வீணாக்கும் கலையைத்தான் இந்தத் தொழிலில் குறிப்பிட்ட கும்பல் தொடர்ந்து செய்து வருகின்றார்கள்.

இங்கே இருப்பது தொழில் சார்ந்த சிந்தனைகள் அல்ல.

இங்கே புழங்குவது தொழில் சார்ந்த முன்னெடுப்புகளும் அல்ல.

அடுத்த கட்டம் எப்படி நகரும் என்பதனை உணர்ந்து உள்வாங்கி குழு மனப்பான்மையோடு உறவாடும் எண்ணம் கொண்டவர்களும் இங்கே எவருமில்லை.

சிலர் திட்டமிட்டே ஊருக்குள் இருக்கும் ஊரணியில் முதலைகள் உள்ளது. யாரும் இறங்காதீர்கள் என்று சொல்லி மொத்த ஊரையும் பயமுறுத்தி அந்த நீரைப் பயன்படுத்த விடாமல் குரூர மனப்பான்மையில் ஓநாய் வாயில் வடியும் இரத்தம் போலவே செயல்படுவார்கள்.

மொத்த ஊரும் எண்ணமும் இப்படித்தான் கடந்த 25 ஆண்டுகளாகவே உள்ளது.

வட இந்தியா போய் எல்லாம் சாதிக்க வேண்டாம். அவரவர் சாவைச் சந்திப்பதற்குள் தன்னுடன் நீண்ட காலமாகப் பணியாற்றி தங்கள் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தவர்களுக்கு மருத்துவ வசதிகளை, குடியிருப்பு வசதிகளை உருவாக்குங்கள். பிரதமர் மோடி வந்து அடிக்கல் நாட்டிய மருத்துவமனை கூட ஓர் ஒழுங்குக்கு வந்து நிற்க நாலைந்து ஆண்டுகள் ஆகின்றது என்றால் இவர்கள் எப்பேர்பட்டவர்கள் தெரியுமா? நீங்கள் கற்பனை செய்து கூட பார்க்கவே முடியாது? ஏற்றுமதி இறக்குமதி துறையில் மத்திய அரசு உருவாக்கும் நல்லது கெட்டதை அலசி பயிற்றுவிக்கும் பயிற்றுநராக இருக்கும் நண்பர் உள்ளே நடக்கும் நிகழ்வுகளைச் சொல்லிக் கதறுகின்றார்.

தங்கள் கண்களைத் தங்கள் விரல்களால் குத்திக் கொண்டு குருடனாகப் போனால் பரவாயில்லை. இவர்களின் சுயநலத்தால் மொத்த தொழிலையும் அந்தப் பாதையில் தான் கொண்டு செல்கின்றார்கள் என்று ஒவ்வொரு முறையும் புலம்புகின்றார்.

இப்போது தொழிலாளர்களை வீட்டு வாசலுக்கே சென்று அழைத்து வருவதைப் போல, விமானம் புக் செய்து ஒரிஸ்ஸா என்று பல வட மாநிலங்களில் மொத்தமாக அழைத்து வருவதைப் போலத் தொழிலாளர் பற்றாக்குறையின் காரணமாக அடுத்து நிறுவனத்திற்கு அருகே மொத்தக் குடும்பத்தினருக்கும் நிறுவனம் சார்பாக வீடு அமைத்துக் கொடுக்கும் திட்டமும் வந்தே தீரும் என்றே யோசிக்கின்றேன்.

எஸ்கார்ட் நந்தா தன் சுயசரிதை புத்தகத்தில் ஒரு இடத்தில் இப்படி எழுதியிருந்தார்.

என் நிறுவனங்களில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றுபவர்கள் அறுபது வயது முடிந்து ஓய்வு பெறுவார்கள். மிகுந்த ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். உயர் அதிகாரி முதல் சாதாரண கடைநிலை தொழிலாளர்கள் வரைக்கும் அனைவருக்கும் அனைத்தும் நிறுவனம் சார்ந்து இலவசமாக பெற முடியும். நாலைந்து மாதங்கள் வீட்டில் இருப்பார்கள். அதன் பிறகு வந்து எங்களால் வீட்டில் இருக்க முடியவில்லை. வேலை கொடுங்கள் என்பார்கள். பெரிய பதவியில் இருந்தவர்கள் கூட சாதாரண எளிய வேலை ஒன்றை பெற்றுக் கொண்டு மாதம் ஒரு தொகையை வீட்டுக்கு எடுத்துச் செல்வார்கள் என்று எழுதியிருந்தார்.

அவர் தொன்னூறு இறுதியில் இறந்தார் என்று நினைகின்றேன். அவர் பேத்தி தலைமைப் பொறுப்புக்கு வந்து இருந்தார். ஊழியர்கள் குடும்பத்திலும் மூன்றாவது தலைமுறை உள்ளே வந்து இருந்தது.

கோத்ரேஜ், டாடா, பிர்லா, கோயங்கா, மபத்லால் அவரவர் கொள்கைகள் நோக்கங்கள் வேறு. ஆனால் தலைமுறைகள் கடந்து நகர்ந்து வந்து கொண்டே இருக்கின்றார்கள். வட இந்தியாவில் என் எண்ணத்தில் எண்ணிக்கையில் அடங்காத அளவுக்கு பல பெயர்கள் நினைவுக்கு வருகின்றது. தமிழகத்தில் இரண்டு கைக்குள் அடக்கி விடக்கூடிய அளவுக்குத்தான் உள்ளது. அதில் திருப்பூர் இடம் பெறவே இல்லை. இனி வரும் காலங்களில் இடம் பெறுமா என்று தெரியவில்லை??

No comments:

Post a Comment

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.