அஸ்திவாரம்

Sunday, November 12, 2023

2023 தீபாவளி

 2023 தீபாவளி

தீபாவளி என்பதனை வட இந்தியர்கள் கொண்டாடுவது ஒரு மாதிரி. தென் இந்தியா கொண்டாடிக் களிப்பது வேறு மாதிரி. ஒரு பக்கம் பகலில் மறு பக்கம் இரவு தொடங்கும் போது அவர்கள் கொண்டாடத் தொடங்குகின்றார்கள்.  ஆன்மீகம் சார்ந்த பண்டிகை என்றாலும் இந்தியா முழுமையும் (பரம ஏழைகள், ஏழைகள், கீழ் நடுத்தர வர்க்கம், நடுத்தர வர்க்கம் உயர் நடுத்தர வர்க்கம் உயர்குடிகள்) அனைவரையும் ஒருங்கிணைப்பதும், ஒன்றாகச் சந்தைப் பொருளாதாரத்தில் கலக்க வைக்கும் ஒரே பண்டிகை தீபாவளி மட்டுமே.

பொங்கல் முதல் மற்ற பண்டிகைகள் வரை மாநிலத்திற்கு மாநிலம் வேறு படும். வியாபாரச் சந்தையின் போக்கும் வித்தியாசமாகவே இருக்கும்.  ஓணம் பண்டிகையின் தாக்கம் தமிழகத்தில் மிக மிகக் குறைவு.   ரம்ஜான், கிறிஸ்மஸ் என்றாலும் சந்தைப் பொருளாதாரத் தாக்கம் மிகக் குறைவே.

சில உதாரணங்களைத் தருகிறேன்.

1. ஐ போன் அய்யா டிம் குக் அவர்கள் தெரிவித்துள்ள கருத்தின்படி ஐ போன் இந்திய விற்பனை என்பது இதுவரையிலும் எங்கும் சாதிக்காத சாதனை. காலாண்டில் விற்ற ஐபோன் எண்ணிக்கை என்பது சாதனை ப்ரேக் என்கிறார்.  ஓர் ஐ போன் குறைவான விலை என்பது 65 000 தான்.  ஒன்றரை லட்சம் வரைக்கும் உள்ளது.  இந்தியாவில் பாதி ஜனத்தொகைக்கு ஆறு மாதம் சம்பளம்.  (உயர் நடுத்தர வர்க்கம்) (தேவை & விநியோகம்)

2. நேற்று ராஜமாணிக்கம் கிருஷ்ணா ஸ்வீட்ஸ்  கடையில் வாங்கிய மைசூர்பா வாங்கிய போது இனிப்பு வழங்கும் பையன் அண்ணா 70 பேர்களைத் திருப்பி அனுப்பி விட்டேன். இன்னும் 7 பேருக்கு பார்சல் செய்கிறேன். இருந்தால் தருவேன் என்கிறார்.  (கிலோ 1500 ரூபாய் அருகே வருகின்றது) (நடுத்தர வர்க்கம்)  (தேவை ....விநியோகம்)

இந்த இரண்டு சந்தைகளும் மனிதர்களைத் தேர்ந்தெடுக்கின்றது. அனைவருக்குமான சந்தையல்ல. விளம்பரம் தேவையில்லை. கௌரவம் என்பது கண்களுக்குத் தெரியாது கீரிடம் போன்றது. சாதிப் பெருமை போல.. என்ன பிரயோஜனம்? யாருக்கு லாபம் என்பதெல்லாம் பேச்சல்ல.வாய் வார்த்தை மூலமே பரவுகின்றது.  இந்த வருடம் ஐ போன் வாங்கினேன் என்பது தான் விளம்பரம். அடுத்து உங்க ஃபேக்டரியில் கிருஷ்ணா ஸ்விட்ஸ் பாக்கெட் கொடுத்தார்களா? குப்தா ஸ்வீட்ஸ் கொடுத்தார்கள்?

3. கல்லூரி மாணவிகள் தற்போது மீசோ ஆப் என்ற செயலியை அதிகம் பயன்படுத்துகின்றார்கள். எளிய விலை முதல் உச்சபட்ச விலை வரைக்கும் மிகச் சிறப்பாகவே பயன்படுத்துகின்றார்கள். 300 ரூபாய்க்கு நீங்கள் தரமான ரெடி மேட் சுடிதார் எடுத்துவிட முடியும்.  வீடு தேடி வந்து விடுகின்றது. வேறு எந்தச் செலவும் செய்யத் தேவையில்லை.  கீழ் நடுத்தரவர்க்கம் ரூபாய் 1500 இருந்தால் தீபாவளி கொண்டாடி விட முடிகின்றது.

இந்தச் சந்தைக்குள் எந்த வர்க்கம் வேண்டுமானாலும் நுழையலாம். அவரவர் தகுதி பொறுத்து உள்ளே நுழையலாம். வெளியே வரலாம். சிக்கனமாகப் பயன்படுத்தும் வர்க்கத்திற்குரிய அருமருந்து இது.

4. கடந்த ஒரு வாரமாகச் சாலையின் இருபுறமும் இரண்டாம் தரப் பொருட்கள் அதிகம் விற்பதைப் பார்த்தேன். அது மற்றவர்கள் பயன்படுத்தியதா? ? அல்லது உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் ரிஜெக்ட் செய்தவற்றை எடுத்துச் சரி செய்து விற்கின்றார்களா? என்பது தெரியாது.  ஒரு மழைக்கான முழு கோட் என்பது ரூபாய் 200.  அந்த கோட் போட்டுக் கொண்டு ஹிமாச்சல் பிரதேசத்திற்குக் கூடப் போகலாம்.  அந்த அளவுக்கு அதன் சிறப்பு அருமையாக உள்ளது.   மூன்று மணி நேரத்திற்குள் மொத்தமும் காலியாகிவிட்டது.

நேற்று  தெருக்கள் ஒவ்வொன்றும் மனிதக் கடலாக இருந்தது. நேற்றைய முன் தினம் மனித அலை கடலாகவே இருந்தது. அதிகாலை பத்து மணிக்கு வேலையை முடித்து விட்டு கூட்டுக்குள் வந்து விடும் பழக்கம் உள்ள எனக்குக் கடந்த இரண்டு நாளும் அதிகப்படியான ஆச்சரியம். (மாதம் பத்தாயிரம் சம்பளம் வாங்கும் மக்களுக்கான சந்தையிது)

5. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரைக்கும் அணியக்கூடிய சட்டைகள் மூன்று அளவுகளில் எந்தச் சட்டை எடுத்தாலும் ரூபாய் 100 என்பது இப்போது அதிக அளவில் பிரபல்லியமாகிக் கொண்டே வருகின்றது.  துணிக்கான தொகையும் தையல் கூலி என் இரண்டையும் சேர்த்தால் இது எப்படிச் சாத்தியம் என்றே குழப்பம் வருகின்றது.  கடைசி வர்க்கத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் இது ரேமண்ட்ஸ் போல.  ஆடைகளின் தரமும் சிறப்பாகவே உள்ளது.

இறுதியாக

இந்த வருடத் தீபாவளிக்காக உத்திரப்பிரதேசத்தில் வாரணாசியில் இருபத்தி ஐந்து லட்சம் அகல்விளக்குகள் ஏற்றும் வைபவம் நடக்கவுள்ளது.  மண் சட்டி, விளக்கு, எண்ணெய், திரி இது சார்ந்த பூஜைப் பொருட்கள் என மேலே சொன்ன வர்க்கத்தில் சேர்க்கவே முடியாத முறை சாரா தொழிலில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை இந்த நிகழ்ச்சி பொருளாதார ரீதியாக எப்படி மேம்படுத்தும் என்பதனை சற்று யோசித்துப் பாருங்கள். 

இந்தியாவில் அனைத்து மதங்களின் சார்பாக வரக்கூடிய பண்டிகைகள் மட்டுமே அது சார்ந்து இயக்கும் பொருளாதாரச் சுழற்சியே அனைத்து மனிதர்களையும் சமமாகப் பாவிக்கின்றது. வாய்ப்பளிக்கிறது. வாழ வைத்துக் கொண்டு இருக்கின்றது.

இந்தியாவின் சந்தை உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் விரும்பக்கூடியது.  பகைத்துக் கொள்ள விரும்பாததற்குக் காரணம் இதுவே.  இந்தச் சந்தை தாங்கள் தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தங்கள் பேச்சை மட்டும் இந்தியா கேட்க வேண்டும் என்று மேற்கித்திய நாடுகள் திமிருடன் ஒரு காலத்தில் இருந்ததற்கு காரணம் இதுவே.  இப்போது ஆப்பு சொருகப்பட்டக் காரணத்தால் வரிசையில் வா, இது தான் எங்கள் சட்ட திட்டம், உனக்கு இது வேண்டுமானால் அதை எனக்குத்  தா என்று ஒவ்வொருவரையும் பார்த்துப் பார்த்து அனுமதிப்பதால் மனதளவில் வெறியோடு இருக்கின்றார்கள்.


No comments:

Post a Comment

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.