அஸ்திவாரம்

Sunday, August 06, 2023

விடாது துரத்தும் ரெய்ட்டுக்கு அண்ணாமலை தான் காரணமா?

2021  சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பறிகொடுத்தாலும் அதிமுக கொங்கு மண்டலத்தில் உள்ள பத்து தொகுதியையும் அப்படியே வாரிச் சுருட்டி எடுத்துக் கொண்டது. இது திமுகவிற்குத் தீராத ரணமாக இருக்க அதிமுக வில் இருந்து வந்த செந்தில் பாலாஜிக்கு முக்கியமான இரண்டு துறைகளாகக் கருதப்படும் மதுவிலக்கு மற்றும் மின்சாரத்துறை வழங்கி களமிறக்கப்பட்டார்.


நடந்த உள்ளாட்சித் தேர்தல் மற்றும் ஈரோடு இடைத் தேர்தல் என் இரண்டிலும் திமுக வெற்றி வாகை சூடியது.

செந்தில் பாலாஜியின் களப்பணி என்பது இதுவரையிலும் வேறு எவருடனும் ஒப்பிட முடியாத அளவுக்கு இருந்த காரணத்தால் ஸ்டாலின் குட்புக் ல் நிரந்தரமாக இடம் பெற்றார்.  கூடவே உதயநிதி யின் தலைமையை ஏற்றுக் கொண்டு வருங்கால முதல்வருக்கு உரிய சகலவிதமான மரியாதையையும் அளித்து அவர் மனதிலும் இடம் பெற்றார்.

ஸ்டாலின் உதயநிதி இருவரிடம் நெருக்கமாகப் பழகி அவர்கள் மனதில் இடம் பெற்று இருக்கக்கூடியவர்கள் இன்று பலரும் இருந்த போதிலும் செந்தில் பாலாஜியின் கூடுதல் தகுதி என்னவெனில் ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடமும் தன் விசுவாசத்தைக் காட்டி வேற லெவலில் இருந்த காரணத்தால் பழைய தலைகளுக்கு அமைதியாக இருப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.

இது மட்டுமா?

உளவுத்துறை முதல் முக்கிய அதிகாரிகளை வரை செந்தில் பாலாஜி கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கிசுகிசுக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள முக்கிய கட்சிக்காரர்களுடன் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் செந்தில் பாலாஜி கண் அசைவில் தான் நடந்தாக வேண்டும் என்ற சூழல் உருவானது.

எல்லாப் பக்கத்திலும் தன் ஆக்டோபஸ் கரங்களை நீட்டி தன் அதிகார எல்லையை விரிவுபடுத்தியிருந்தார்.  திமுகவில் உள்ள பழைய தலைகள் அனைவருக்கும் வேறு வழியே தெரியாமல் ஒன்றும் பேச முடியாத நிலையில் இருக்க எடப்பாடி இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்தார்.

அதிமுகவினர் பம்மத் தொடங்கினர். அடுத்தடுத்து வந்த ரெய்டுகளுக்கு அஞ்சத் தொடங்கினர். தங்களுக்கு எல்லாவிதங்களிலும் செந்தில் பாலாஜி தரும் குடைச்சலைப் பொறுத்துக் கொள்ள வேண்டிய சூழலில் தள்ளப்பட்டு இருந்தனர்.

திமுக முதல் இரண்டு வருட ஆட்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி கொடி பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்தது. யார் கண் பட்டதோ அப்படியே மாறத் தொடங்கியது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக பைல்ஸ் 1 கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடக் காட்சிகள் மாறத் தொடங்கியது.

இதில் முதல்வர் மு..ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, மருமகன் வி.சபரீசன், சகோதரி கனிமொழி மற்றும் தயாநிதி மாறன் உள்ளிட்ட 13 திமுக தலைவர்களின் சுமார் ரூ.1.34 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்து விவரங்கள் அடங்கிய 15 நிமிட வீடியோ காட்சி இடம் பெற்று இருந்தது.  இதில் செந்தில் பாலாஜி பற்றிய தகவல் எதுவுமில்லை. ஆனால் விதி வேறொரு வகையில் விளையாடியது.

அதிமுக வில் அமைச்சராக இருந்த போது செந்தில் பாலாஜி தான் வகித்து இருந்த போக்குவரத்துத் துறையில் ஆட்களைச் சேர்க்க லஞ்சம் வாங்கினர் என்ற வழக்கு இங்கே தள்ளுபடி ஆன போதும் உச்ச நீதிமன்றம் உத்தரவின் பெயரில் அந்த வழக்குக்கு மீண்டும் உயிர் வந்தது.

அண்ணாமலை திமுக பைல்ஸ் இரண்டு விரைவில் வெளிவரும் என்றார். அதிமுகவினர் செந்தில் பாலாஜி குறித்துப் பேச முடியாமல் அமைதி காத்தனர். ஒன்று தங்கள் ஆட்சியில் நடந்த ஊழல். மற்றொன்று தங்கள் மேல் உள்ள வழக்குகளை திமுக தூசி தட்டத் தொடங்கினால் சிறைக்கும் நீதிமன்றத்திற்கு அலைய வேண்டியிருக்கும் என்ற எதார்த்தார்த்தை உணர்ந்து தாங்கள் எதிர்க்கட்சி என்பதனையும் மறந்து அமைதி காக்கத் தொடங்கினர். அண்ணாமலை இதனைப் பயன்படுத்தி அடித்து ஆட தொடங்கினார்.

கொங்கு மண்டலம் அண்ணாமலையின் சொந்த மாவட்டம் அடங்கியது என்பது போல செந்தில் பாலாஜிக்கும் எடப்பாடிக்கும் இதே கொங்கு மண்டலம் தங்களுக்குரியது என்பதால் மூன்று பக்கமும் வெவ்வேறு விதமாகக் காய்கள் நகர தொடங்கியது.

அண்ணாமலைக்கு கொங்கு மண்டலத்தில் அரசியல் செய்ய வேண்டும் என்றால் எதிரே இரண்டு பேர்கள்  இருந்தனர். ஒரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமி மற்றொரு பக்கம் செந்தில் பாலாஜி.

செந்தில் பாலாஜி. இவரது தம்பி அசோக்குமார் உள்பட அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடு என இவருக்குத் தொடர்புடையதாகக் கருதப்படும் சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த மே மாதம் 26-ஆம்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டில் அப்போது சோதனை நடத்தச் சென்ற வருமான வரித்துறையினரை தி.மு..வினர் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் துணை ராணுவப் படை காவல்துறை பாதுகாப்புடன் அசோக்குமார் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் அமைச்சரின் நண்பர்கள் சங்கர், கொங்கு மெஸ் மணி ஆகியோரது வீடு, அலுவலகங்களில் சோதனை நடந்தது. பின்னர் 2-வது முறையாக நடந்த சோதனை 8 நாட்கள் நீடித்தது.

 

அப்போது சில முக்கிய ஆவணங்களையும் எடுத்து சென்றனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 23-ஆம்தேதி அமைச்சர் செந்தில்பாலாஜி ஆதரவாளர்களான சக்தி மெஸ் பங்குதாரர்கள் கார்த்தி, ரமேஷ் வீடு, அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் வீடு, வையாபுரி நகரில் உள்ள ஆடிட்டர் அலுவலகம், கரூர் ஜவகர் பஜாரில் உள்ள நகைக்கடை உள்பட 7 இடங்களில் 2 நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கரூரில் நேற்று 3-வது முறையாக வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை மேற்கொண்டனர். இதில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆதரவாளரான ராயனூர் பகுதியில் உள்ள கொங்கு மெஸ் சுப்பிரமணி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதனையொட்டி 2 வாகனங்களில் வந்த 5-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள்  கொங்கு மெஸ் சுப்பிரமணி வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விடாது துரத்தும் கருப்பு போல மற்றொரு புறம் அமலாக்கத்துறை தன் பணியைச் செய்யத் துவங்கியது. 

செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் தொடர்புடைய இடங்களில் கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் அலுவலகத்துக்குச் சீல் வைத்துச் சென்றனர். தற்போது இரண்டாம் முறையாக நான்கு இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக கரூர் - மதுரை புறவழிச்சாலையில் உள்ள அம்பாள் நகரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் உதவியாளர் சங்கர் என்பவர் வீட்டிலும், செங்குந்த புரத்தில் சங்கரின் நிதி நிறுவனத்திலும் சோதனை நடத்தி வருகின்றனர்.

சின்னாண்டான் கோயில் பகுதியில் உள்ள தனலட்சுமி மார்பில்ஸ் கடை மற்றும் அதன் உரிமையாளர்களில் ஒருவரான பிரகாஷ் என்பவரின் வீடு ஆகிய இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பிரகாஷ் என்பவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கரூரில் மார்பில் கடை நடத்தி வருகிறார்.இவர் கரூர் மட்டுமல்லாது காங்கேயம், தர்மபுரி ஆகிய இடங்களிலும் மார்பில் கடை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் அதிக அளவில் இவர்கள் ரியல் எஸ்டேட் துறையிலும் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. மார்பில் நிறுவன உரிமையாளர் பிரகாஷ் மூலம் பெரிய அளவில் நிலத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல்களையும் அமலாக்கத்துறையினர் தேடி வருவதாகக் கூறப்படுகிறது.

பாராளுமன்றத் தேர்தல் தேதி நெருங்க நெருங்க பாதயாத்திரையில் தற்போது மதுரை மாவட்டத்திற்குள் வந்துள்ள அண்ணாமலை நேற்று மேலூரில் பேசியது முக்கியத்தும் பெறுகின்றது.  அடுத்து ஓர் அமைச்சர் வீட்டில் விரைவில் ரெய்டு நடக்க வாய்ப்புள்ளது. என் குலதெய்வம் சாட்சியாக இதற்கு நான் காரணம் அல்ல என்று அவர் பேசிய பேச்சை எப்படி எடுத்துக் கொள்வது என்று திமுகவினர் மட்டுமல்ல அதிமுகவினரும் தடுமாறித் நிற்கின்றனர்.

மகளிர் உரிமைத் தொகை



No comments:

Post a Comment

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.