நாம் சும்மாயிருந்தாலும் தம்பிமார்கள் நம்மை சும்மா இருக்கவிடுவதில்லை என்பது வரமா? சபமா? என்று தெரியவில்லை.
"அண்ணே பள்ளிக்கூடம் பற்றி நீங்கள் ஏன் ஒன்றும் எழுதவில்லை?" என்று ஒர் கோரிக்கை மனு ஒன்றைத் தம்பி ஒருவன் கேட்டதற்காக....
நான் அந்தப் பள்ளிக்கூடம், தரங்கெட்ட ஆசிரியர், அதற்காகப் பிரிந்து நிற்கும் கூட்டத்தைப் பற்றி எழுத மாட்டேன். அதற்குள் உள்ளே நுழைந்தால் அது பல கிளைக்கதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். அடுத்த சில மாதங்களில் வெளிவரும்.
ஆனால் இந்த சமயத்தில் வேறு சில விசயங்களைக் குறிப்பாக பெண் பிள்ளைகளை வைத்துள்ள தாய் மற்றும் தகப்பன்சாமிகளுக்குச் சிலவற்றை உணர்த்த விரும்புகிறேன்.
எப்போதும் மகள்களின் நடவடிக்கைகளில் அவர்கள் மற்றவர்களுடன் எப்படிப் பழகுகின்றார்கள் என்பதனை பலவிதங்களில் கூர்மையாக கவனிப்பேன்.
உறவுக்கூட்டங்களுடன் ஒன்றாக சேரும் போது அவர்களின் நடவடிக்கை எப்படியுள்ளது என்பதனை அதிகம் கவனிப்பேன். பேசும் வார்த்தைகளில் எந்த அளவுக்கு மரியாதை வருகின்றது என்பதனை தூரத்திலிருந்து கவனிப்பேன்.
காய்கள், பழங்கள் கொண்டு வருபவர்களிடம் எளிய பின்புலம் கொண்டவர்களிடம் எப்படி உரையாடுகின்றார்கள்? எப்படி அவர்களை மதிக்கின்றார்கள் என்பதனையும் கவனத்தில் வைத்திருப்பேன்.
இவை அனைத்தும் அவர்களின் எதிர்கால வாழ்க்கையைப் பிரதிபலிப்பது என்பதனை சபாநாயகரிடம் சொன்னாலும் எடுபடாது. அதெல்லாம் அந்தந்த சமயத்தில் கற்றுக் கொள்வார்கள் என்பார்.
அருகே உள்ள கடைகளுக்கு அனுப்பி பொருட்களை வாங்கி வரச் சொல்வேன். பாதிக்கும் மேற்பட்ட சமயத்தில் பாதிக் காசு வாங்காமல் வருவார்கள். அல்லது தவறாக காசை விட்டு விட்டு வருவார்கள். ஒவ்வொன்றையும் மனதில் குறித்து வைத்திருந்தேன். 96 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்றுக் கொண்டிருந்தவர்களுக்கு நான் கொடுத்தது 30 மதிப்பெண்கள்.
எனக்கு கல்வி முக்கியமாகத் தெரியவில்லை. கல்வி மூலம் இவர்கள் எதனை எப்படி இங்கே பிரதிபலிக்கப் போகின்றார்கள் என்பதே என் கவலையாக இருந்தது. எதிர்காலத்தில் ஒருவேளை சந்தர்ப்பச் சூழல் மாறி வசதிகள் குறைவாக வாழ்வது பிரச்சனையல்ல. அதனை எப்படி எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்பதனைத் தான் நான் மனதில் வைத்திருந்தேன்?
இவர்கள் படித்த பள்ளிக்கூடம் ஒழுக்கம் என்ற பெயரில் பெரிய பயத்தை மனதில் உருவாக்கியிருந்தார்கள். கனவு என்ற பெயரில் நாள் ஒன்றுக்கு 12 மணி நேரத்திற்கு மேலாக மனப்பாடம் செய்ய வைத்துக் கொண்டிருந்தார்கள். ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்பதனை வைத்து தமிழும் ஆங்கிலமும் சரிவர பேச முடியாமல் செய்திருந்தார்கள். சுருக்கமாக உரையாடல் கலை என்பதே இல்லாமல் ஆக்கியிருந்தார்கள்.
பத்து மணிக்குப் படுத்தால் 12 மணிக்கு எழுந்து அம்மா சாப்பாடு தயாரா? பள்ளிக்கூடத்திற்கு தாமதம் ஆயிற்று என்கிற ரீதியில் மனோரீதியாக பாதிக்கப்பட்டு இருந்தார்கள்.
பள்ளியின் பிராண்ட் நேம் அவர்கள் செய்வது அனைத்தும் சிறப்பு என்கிற ரீதியில் சமூகத்தை நம்ப வைத்துக் கொண்டிருந்தது, அவர்கள் எதற்குப் பணம் கேட்டாலும் கொடுக்கத் தயாராக இருந்தார்கள். ஆனால் பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் மூன்று மாதத்திற்கு மேல் எவரும் தங்குவதில்லை. ஒரு வருடத்தில் ஒரு பாடத்திற்கு ஐந்து ஆசிரியர்கள் மாறிக் கொண்டே இருந்தால் ஒரு மாணவர் எப்படிப் படிக்க முடியும் என்பதனை உணரத் தயாராக இல்லை. காரணம் ஒவ்வொருவருக்கும் உள்ளே இருக்கும் பயம். கௌரவம் என்ற பெயரில் வாழும் போலித்தனம்.
பள்ளி என்பது வெறும் கட்டிடம் மட்டுமே. பள்ளியின் பெயர் என்பது பிராண்ட் நேம். தரம் என்பது நாம் நம்பும் நம்பிக்கையைப் பொறுத்துத் தான் இருக்கும். ஆனால் பள்ளியில் ஆசிரியர்கள் தான் எல்லாமே. நல்லவர்கள், கெட்டவர்கள் கலந்து தான் ஆசிரியர்களாக இருக்கின்றார்கள்.
அங்கு இல்லையா? இங்கு இல்லையா? என்று கேட்பது அநாகரிகம். இங்கு நடந்துள்ளது? இதனைக் கேட்போம்.
அங்கு நடந்த போது, அங்கு நடந்தவற்றை எவரும் கேட்பதில்லையே? என்று கேள்வி எழுந்தால் அவர்கள் பீ தின்பதனை பெருமையாக நினைக்கின்றார்கள்? நாம் திங்க நினைப்போமா?
இது போன்ற சமயத்தில் சமூகநீதிக் காவலர்கள் பொந்துக்குள் இருந்து வெளியே வந்து உரக்க சப்தம் போடத்தான் செய்வார்கள். தாழ்வு மனப்பான்மை உள்ளவர்களையும், விபச்சாரத்தை நாகரிகமாக அரசியல் என்ற பெயரில் செய்பவர்களையும் பொருட்படுத்தாதீர்கள். இது போன்ற பிரச்சனைகள் நாளை உங்கள் குடும்பத்தையும் தாக்கக்கூடியது.
நேற்று முதல் பனிரென்டாம் வகுப்பு முதல் அலகு தேர்வு வீட்டில் இருந்தே எழுதச் சொல்லி உள்ளனர். 63 மாணவிகளை ஒருவர் கட்டி மேய்க்கின்றார். மற்றொருவர் 75 மாணவிகள் அடங்கிய இரண்டு பகுதி உள்ள வெவ்வேறு பிரிவுக்குப் பாடம் நடத்துகின்றார்.
ஆசிரியையால் முடியவில்லை. தொழில்நுட்பம் பாதிப் பிரச்சனை. உடல் சார்ந்த நோய்கள் அடுத்த பிரச்சனை.ஆனால் ஆசிரியைகள் இவர்களைக் கவனித்தபின்பு தொடக்கத்தில் என்னிடம் கேட்டார்கள். நாங்கள் என் மகள்கள் போலப் பார்த்துக் கொள்கிறோம். எனக்கு உதவச் சொல்லுங்கள் என்றார்.
டயாலிஸ் செய்து கொண்டு மாணவிகள் வாழ்க்கையில் அதீத ஆர்வத்தோடு மனசாட்சியோடு கல்விப்பணி செய்து கொண்டிருப்பவருக்காக மகளை அவரிடம் ஒப்படைத்து விட்டேன். ஆசிரியைக்கு அடங்காத கேங் கோஷ்டிகள் மகளைக் கண்டு அலறுகின்றார்கள்.
அக்மார்க் ரௌடியாக மாறிவிட்டார்கள் என்று சபாநாயகர் அலறுகின்றார். நான் அட்டகாசம் என்பதனை வெளிப்படையாக சொல்லாமல் உள்ளுற ரசித்துக் கொண்டிருக்கிறேன்.
கடைசியாக
ராட்சசன் என்றொரு படம் வந்தது உங்கள் நினைவில் இருக்க வாய்ப்புண்டு. அவசியம் நேரம் இருந்தால் மகள்களுடன் அந்தப்படத்தைப் பாருங்கள்.
இயக்குநர் ராம்குமார் இன்று ட்விட்டரில் எழுதிய கருத்து இது.
"ராட்சசன் இன்பராஜ் கதாபாத்திரம் சுயமாக உருவாக்கம் செய்யப்படவில்லை. பல உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டது. அந்தச் சம்பவங்களின் குற்றவாளிகள் இன்பராஜை விட மோசமானவர்களாக இருந்தார்கள்!"
•••••••
வாரத்தில் ஒருவராவது பள்ளிக்கூட ஆசிரியர்களின் சம்பளத்தைப் பற்றி எழுதாமல் இருப்பதில்லை. அவர்களைக் கொரோனா களப்பணியில் இறக்காமல் ஏன் அரசு வைத்துள்ளது?
இதே போலப் பலவிதமான கோரிக்கைகளுக்கு ஒரே காரணம் அவர்கள் வாங்கும் சம்பளம்.
இது தவிர அவர்கள் வேலை செய்வதில்லை. வட்டிக்கு விட்டுச் சம்பாதிக்கின்றார்கள். அவர்களின் ஒரு நபர் சம்பளத்தில் தனியார் பள்ளிக்கூடத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மூன்று பேர்கள் பணிபுரிகின்றார்கள். இது போல இன்னமும் பல கருத்துரைகள் ஆதங்கமாக வெளிவரும்.
இவை அனைத்துக்கும் அடிப்படைக்காரணம் கொச்சை மொழியில் சொல்லப்போனால் பொச்செரிச்சல்.
இன்னும் கொஞ்சம் கூர்மையாக நகர்ந்து சென்றால் அரசு பள்ளிக்கூடங்கள் அனைத்தையும் மூடி விட்டு தனியார் ஒப்படைத்து விட்டால் மாணவர்களுக்குக் கொம்பு முளைத்து சிறகு முளைத்து அந்த வருடமே ஐபிஎம் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து விடுவார்கள் என்ற எண்ணம்.
இதை வாசிக்கும் போது நண்பர்கள் பாய்ந்து பிறாண்ட வருவார்கள். கவலையில்லை. சில கேள்விகள்?
மற்ற துறைகளை விட்டுவிடுங்கள். முக்கியமான மூன்று துறைகள்.
பத்திரப்பதிவுத்துறை,
வாகனப்பதிவுத்துறை,
மாசுக்கட்டுப்பாட்டுத்துறை
இந்த மூன்று துறைகளில் பணியாற்றுவர்களின் சம்பளம் தவிர்த்து மாதம் எவ்வளவு சம்பாதிக்கின்றார்கள் என்று உங்களால் யூகமாக சொல்ல முடியுமா?
பல்லடத்தில் பத்திரப்பதிவு முடித்து நொந்து போய் வந்த நண்பர் சொன்ன தகவல் இது.
ஒரு டப்பா கணினி, ஓர் உடைசல் ரைப் ரைட்டர், பத்துக்கு பத்து அறை. ஒரு பெண்மணி. உதவியாளர் யாருமில்லை. அவர் நண்பரிடம் அங்கலாய்ப்புடன் சொன்னது இது.
"சார் தினமும் பத்தாயிரம் மூன்று மணிக்குள் பார்த்து விடுவேன். இன்றைக்கு எவன் மூஞ்சியிலே முழித்தேன் என்று தெரியவில்லை. ஆறாயிரம் தாண்டல".
அவர் வெறுமனே இணைப்புப் பாலம் மட்டுமே. அதாவது உள்ளே வெளியே பட்டியல் போட்டு வாங்கிக் கொடுக்கும் கட்டக்கடேசி ஊழியர். அரசு ஊழியர் அல்ல.
உங்கள் ஊரில் மாசுக்கட்டுப்பாட்டு அலுவலகம் இருந்தால் அங்கே வரக்கூடிய உயர் அதிகாரி எத்தனை கோடி கொடுத்துக் குறிப்பிட்ட ஊர்களில் போஸ்டிங் வாங்கி வருகின்றார்கள் என்று யாரிடமாவது கேட்டுப் பாருங்கள். இது போல ஒவ்வொரு துறைகளையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
ஆசிரியர்கள் ட்யூசன் எடுக்கின்றார்கள். பல தொழில்கள் செய்கின்றார்கள் என்று சொல்வீர்கள் எனில் மற்ற துறைகளில் உள்ளவர்கள் ஒரு மாதம் சம்பாதிக்கும் பணத்தை அவர்கள் உழைப்பின் மூலம் எடுக்க அடுத்த இரண்டு மூன்று வருடங்கள் ஆகலாம்.
ஆசிரியர்களுக்கு எவ்விதச் சுதந்திரமும் இல்லை. என் பார்வையில் பள்ளி தலைமையாசிரியர் என்பவர் பாவப்பட்ட ஜீவன். மாவட்ட கல்வி அதிகாரிகளின் அரசியல் முதல் பள்ளிக்கூடத்திற்குள் அரசியல் வரைக்கும் அவர் சமாளித்து வருவதை நேரிடையாகக் கண்ட போது நொந்து போனேன்.
அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் நலத்திட்டம் என்பதனை உச்சி முகர்ந்து பாராட்டும் எவரும் அதற்குப் பின்னால் கருப்பு பக்கங்களும் அதன் மூலம் ஆசிரியர்கள் செய்ய வேண்டிய அடிப்படைக் கடமைகளும் எப்படி மாறி எதை நோக்கிச் செலுத்தப்படுகின்றார்கள் என்பதனை உணர உங்களுக்குக் கொஞ்சமாவது மனிதாபிமானம் வேண்டும்.
அப்படியெனில் அவர்கள் இந்த வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்குச் சென்று விடலாம் என்று நீங்கள் கேட்பீர்கள் எனில் நீங்கள் இந்தச் சமூகத்தோடு தொடர்பில்லாத வேறொரு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதாகத்தான் நான் கருதுவேன். தனியார்ப் பள்ளியில் முறையற்று வாங்கும் பணம் குறித்து அவர்களிடம் என்றாவது எதிர்க்கேள்வி கேட்டு இருப்பீர்களா? அங்கே ஆசிரியர் குறைவான சம்பளத்தில் தானே பணியாற்றுகின்றார் என்று கேட்கும் நீங்கள் அந்த நிறுவனம் வாங்கும் பணத்தைக் கருப்புப் பணமாக மாற்றுகின்றதே என்று என்றாவது ஆதங்கப்பட்டு இருக்கின்றீர்களா? உங்கள் மகன் மகள் தாய்மொழியில் பிழையின்றி ஏன் எழுதத் தடுமாறுகின்றார்கள் என்று என்றாவது யோசித்ததுண்டா?
அரசு பள்ளிக்கூடம் என்பது இந்தியத் தமிழக வாழ்வியலை, இங்கே எப்படி வாழ வேண்டும் என்பதனை, எப்படிச் சமூகம் இயங்குகின்றது என்பதனை, உண்மையான சமூகம் என்ன என்பதனைப் போன்ற பலவிசயங்களை கற்றுக் கொடுக்கின்றது என்பதனை நான் கடந்த இரண்டு வருடங்களில் தான் முழுமையாக புரிந்து கொண்டேன்.
நான் இதனைத்தான் உண்மையான சமூகநீதி என்பேன்.
என் மகள் மகன் கல்வியை விட முக்கியமான இங்கே வாழும் விதம். அதனைப் புரிந்து கொள்ளும் திறன். அதற்கான பயிற்சி. கூடவே முயற்சி. 90 சதவிகிதம் எதிர்மறைக்குள் அவர்கள் நீந்திவர ஒழுக்கம் மட்டும் முக்கியமல்ல. அவர்கள் எதிர்கொள்ளும் திறன் மற்றும் திறமை. அதனை நிச்சயமாக அரசு பள்ளிக்கூடங்கள் தெளிவாக கற்றுக் கொடுக்கின்றது என்பேன்.
அரசியல்வாதிகளின் ஊழல் மிகுந்த திட்டமிடுதலும், அதிகாரிகள் மற்றும் பினாமிகளின் தனியார் பள்ளிக்கூட அரசியலுக்கிடையே தமிழக மாணவர்களுக்குக் கடைசியாக இருக்கும் அடைக்கலம் அரசு பள்ளிக்கூடங்கள் மட்டுமே.
ஒவ்வொரு தனியார் பள்ளிக்கூடங்களும் நீட் பயிற்சி என்பதனை கட்டாயப்படுத்தி காசு வாங்குகின்றார்கள். மொத்தத் தனியார்ப் பள்ளிகளைப் பட்டியலிட்டு, மாணவர்களின் எண்ணிக்கை கணக்கிட்டு எத்தனை பேர்கள் பயிற்சி நிலையம் செல்லாமல் நீட் வெற்றி பெற்று மருத்துவ மாணவர்களாக மாறுகின்றார்கள் என்பதனை நீங்கள் புரிந்து கொண்டால் போதும்.
ஏன் தனியார் பள்ளிக்கூட ஆசிரியர்கள் மாறிக் கொண்டேயிருக்கின்றார்கள். திறமை இல்லாத காரணமா? நெருக்கடியைத் தாங்க முடியாத காரணமா? என் மகள் பத்தாம் வகுப்பு படித்து முடிப்பதற்குள் ஐம்பது ஆசிரியர்களைப் பார்த்து வந்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒருவர் பிரபல்யமான தனியார்ப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு வரைக்கும் படிக்க வைத்தார். ஆறாம் வகுப்பு முதல் ஐஐடி பயிற்சி என்பதோடு சேர்ந்து பணம் கட்டி படிக்க வைத்தார். ஐஐடி நுழைவுத்தேர்வில் அவன் மட்டுமல்ல. அந்த வருடத்தில் அந்தப் பள்ளியில் எழுதிய எவரும் தேர்ச்சி அடையவில்லை. அந்தப் பள்ளியில் சீட் வாங்க முதல் வருடமே முன்பணம் பணம் கட்டி வைத்திருக்க வேண்டும். பாலர் பள்ளி முதல் அங்கே தான் மகன் படித்தார். அவர் சொன்ன கணக்குப்படி 12 ஆம் வகுப்பு வரைக்கும் 75 லட்சம் ரூபாய் வரைக்கும் செலவழித்து உள்ளேன் என்றார்.
தனியார்ப் பள்ளி அரசுப் பள்ளி என்பது இங்கே பிரச்சனையல்ல.
ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு எங்கே இருக்கின்றதோ? அந்த மாணவர்கள் புண்ணியம் செய்தவர்கள்.
நீங்கள் நேர்மையானவர் எனில் சங்கம் என்ற பெயரில் புரோக்கர் வேலை பார்ப்பவர்களை நோக்கி உங்கள் கேள்விகளை எழுப்புங்கள். நான்கு பென்சில் இரண்டு ரப்பர் மூன்று கருவிகள் வைத்து கொடுத்துவிட்டு பத்தாயிரம் பில் போட்டு அதனை நீங்களே உங்கள் கணக்கில் இருந்து கட்டுவது போல கட்டுங்க என்று தலைமையாசிரியரிடம் மிரட்டல் தொனியில் வசூலிக்கும் மாவட்ட கல்வி அதிகாரியை நோக்கி கேள்வி கேளுங்கள். எப்படி இந்த அமைச்சர் மீண்டும் தேர்தலில் வென்றான்? செய்த பாவத்திற்கு தண்டனை இல்லையா? என்பது போன்ற கேள்விகளைக் கேட்டால் உங்கள் மனதில் இன்னமும் மனிதாபிமானம் மிச்சம் உள்ளது என்பேன்.
குருவை பழித்தால் குலநாசம்.
ஆசிரியர் வேறு, குரு வேறு...!
ReplyDeleteஇப்பதிவில் ஆசிரியர்கள் பள்ளிகள் பற்றி பல ஆழமான கருத்துகளைச் சொல்லியிருக்கிறீர்கள்.
ReplyDeleteதனியார் பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்குச் சொல்லப்படும் சம்பளம் ஒன்று கொடுக்கப்படும் சம்பளம் மிக மிகக் குறைவு என்று அங்கு வேலை செய்த உறவினர் மூலம் அறிய நேர்ந்தது. இத்தனைக்கும் கொஞ்சம் பெயர் பெற்ற பள்ளிதான்.
ஆசிரியர்கள் வேலை மாறுவதற்குக் காரணம் ஒன்று இப்படியான சம்பளம், மற்றொன்று பள்ளியோடு ஒத்துப் போக முடியாமை அதனால் மன உளைச்சல், அதைவிட முக்கியமான காரணம் வேறு வேலை கிடைக்காமல் கிடைத்த பணி என்று ஆத்மார்த்தமாக இல்லாமல் ஆசிரியப் பணிக்கு வருபவர்கள்...நல்ல வேலை கிடைத்ததும் அதாவது சம்பளம் கூடுதலான வேலை கிடைத்ததும் விட்டுச் செல்லுதல்.
எனக்குத் தெரிந்து ஆசிரியப் பயிற்சி படித்து வேலைக்கு வருபவர்கள் மிக மிகக் குறைவு. அது ஆசிரியப் பணியை விரும்பி ஏற்பவர்கள் படிப்பது அல்லது வேறு வேலை கிடைக்காமல் இடைப்பட்ட வேளையில் படிப்பவர்கள்.
எத்தனை ஆசிரியர்கள் தரமிக்கவர்களாக இருக்கிறார்கள்? குழந்தைகள் கேள்வி கேட்டால் (கேட்பவர்களை எண்ணிவிடலாம் என்று உறுதியாகச் சொல்லலாம்..) அதற்கு சரியான விடை சொல்லும் அல்லது தனக்குத் தெரியவில்லை என்றால் அடுத்த வகுப்பில் விடை தெரிந்து கொண்டு சொல்கிறேன் என்று சொல்லி அடுத்த வகுப்பில் அதைச் சொல்லித் தரும் ஆசிரியர்கள்? புரியவில்லை என்று சொன்னால் ஆசிரியர்கள் மீண்டும் சொல்லித் தருகிறார்களா? அல்லது புரியாத மாணவ மாணவிகளுக்கு பள்ளி முடிந்து தன்னை வந்து பார்க்கச் சொல்லி, சொல்லிக் கொடுக்கிறார்களா?
நூலக வகுப்பு உண்டா இப்போது? எனக்கு என் பள்ளி, கல்லூரி நினைவுக்கு வருகிறது. பாடம் மட்டுமின்றி வாழ்க்கையை எதிர்கொள்வது வரை போதித்த பள்ளி, கல்லூரி.
நிறைய சொல்லலாம் இப்போதைய பள்ளிகள் பற்றி அத்தனையும் வேதனை நிறைந்ததாக இருக்கும்.
கீதா
நேற்று உறவினர் ஒருவர் வாட்சப்பில் சொல்லியிருந்தார். சென்னையில் மிகப் பிரபலமான பள்ளி ஆசிரியர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இப்படி இருந்தால்?
ReplyDeleteஆசிரியரின் தரம்? மற்றொரு பெயர் பெற்ற பள்ளி ஆசிரியர் பெயரும் அடிபட்டது என்றும் கேள்விப்பட்டேன். (ஆசிரியருக்கும் குருவிற்கும் வேறுபாடு உண்டு)
கீதா
வீட்டு கல்விமுறை பற்றி எழுதுங்கள்..
ReplyDeleteகடைசி வரை அந்த பள்ளி கூடம் பற்றி
ReplyDeleteஎழுதவே இல்லையே?!?!
ஒரு பட்டிமன்ற பேச்சாளர் ஒரு தலைப்பில் அற்புதமாக பேசினாராம். சில வருடங்களில் அதற்கு நேரெதிர் தலைப்பில் அதையும் ஆதரித்து அற்புதமாக பேசினாராம். உங்களிடமும் அந்த திறமை தெரிகிறது.
ReplyDeleteஒரு செய்தி. லாட்டரியை தடை செய்தபோது, மீண்டும் அனுமதிக்க கோரி ஒரு சென்னையில் பேரணி நடைபெற்றது. அதில் முன் வரிசையில் கண் தெரியாதோர், ஊனமுற்றோர் என பலர் பிரதானமாக இடம் பெற்றனர். இவர்களின் வாழ்வாதாரம் என்ன என கோஷம் எழுப்பப்பட்டது. நானும் அப்போது மாற்று தொழில் இல்லாததால் கலந்துகொண்டேன். அதில் அனைத்து செலவும் ஸ்டாக்கிஸ்ட் செய்தார். ஆனால் இதில் லாட்டரி வியாபாரிகளில் மாற்று திறனாளிகள் 5 சதவிகிதம் கூட கிடையாது என்பது எனக்கு தெரியும். இப்படித்தான் பேனை பெருமாளாக்குவார்கள் நம்மவர்கள்.
இந்த ஆசிரியர்களும் கதையும் அப்படித்தான். அங்கேயும் தன்னலமற்ற மனிதர்கள் இருக்கக்கூடும். அவர்கள் எத்தனை சதவிகிதம் என்பது அவரவர் கணக்கு.
பிற துறைகளில் மோசடி நடக்கிறது எனவே நாம் எல்லோரும் மோசடி பேர்வழியாக இருப்போம் என்றால், இதற்கு எப்படி பதில் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை.
இங்கே நான் அரசு ஊழியர்களின் அதிகப்படியான சம்பளத்தைத்தான் எதிர்க்கிறேன் அதில் ஆசிரியர்களும் அடக்கம்.
சமீபத்தில் `நீயா நானா`வில் ஒரு அரசு ஆசிரியர் சொன்னார். லாக் டவுனில் `எப்போது ஸ்கூல் திறக்கும், திறந்தால்தான் எங்களுக்கு சாப்பாடு கிடைக்கும்` என குழந்தை கேட்டதால் அந்த ஆசிரியரே பல குழந்தைகளுக்கு சாப்பாடு போட்டாராம். நல்ல கருணை உள்ள செய்திதான்.
இன்னொரு பக்கம் தனியார் ஒரு பள்ளி ஆசிரியை எங்களுக்கு 75 சதவிகிதம் சம்பளம் கிடைப்பதாகவும், இந்த சூழ்நிலைக்கு பரவாயில்லை வாங்கிக்கொள்கிறோம் என்றார்.
உங்களிடம் நிறைய சாப்பாடு (சம்பளம்) இருந்து அதை தானம் பண்ணுவதற்கும், உங்களுக்கு சாப்பாடே குறைவு அதையும் குறைத்து கொடுத்தால் அவர்கள் நிலை என்ன என்பதும் வேறு வேறு செயல். படிக்கச் வேண்டிய விதத்தில் படித்தால் இது புரியும்.
ஏன் இந்த தலைப்பு.
ReplyDeleteயார் குரு?