அஸ்திவாரம்

Tuesday, March 02, 2021

வைகோ மகன் துரை வையாபுரி

கடந்த சில நாட்களில் அதிகாலையில் நான் நடந்து செல்லும் போது பார்த்த, சாலையோரங்களில் ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகளில் குறிப்பாக மதிமுக கட்சியினர் துரை வையாபுரி (வைகோ மகன்) படத்தைப் பெரிதாகப் போட்டு சங்கே முழங்கு என்று எழுதியிருந்ததைப் பார்த்த போது முதலில் எனக்கு நம்பிக்கை வரவே இல்லை. காரணம் அந்தத் தம்பி வித்தியாசமான ஆத்மா.  

மற்ற அரசியல் வியாதிகளின் வாரிசு பொறுக்கிகள் போல இல்லாமல் தான் இருக்கும் இடம் கூட வெளியே தெரியாமல் இருந்தவரை இப்போது காலம் அரசியலுக்கு அழைத்து வந்து கொண்டிருக்கிறது.

இவர் ஏற்கனவே 2016 சட்ட மன்ற தேர்தலில் மறைமுகமாகச் செயல்பட்டாலும், மதிமுகவின் இணைய அணியில் இருந்தாலும் முழுமையான ஈடுபாடு காட்டாத அளவுக்குத்தான் இவரின் அரசியல் ஆர்வம் இருந்தது. 

ஏற்கனவே இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் சொந்த மாவட்டத்தில் ஏதோவொரு கூட்டத்தில் பேசிய பேசிய பேச்சில் "அப்பாவிடம் நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். உங்களை மதிக்காத இந்த மக்களுக்காக உழைத்து மேலும் நீங்கள் உங்கள் உடல் நலத்தைப் பாதிப்புக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பலமுறை நான் சொல்லி இருக்கிறேன்" என்று ஆதங்கத்தோடு பேசியதைக் கேட்டு இருக்கிறேன். 

ஆனால் இவர் எப்படி திடீரென்று அரசியலுக்கு உள்ளே வருகின்றார்? என்பது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது.

வைகோ "பொது வாழ்வில் தூய்மை" என்பதனை சங்க நாதமாக முழங்கியவர். மற்ற வியாதியஸ்தர்களை ஒப்பிடும் போது இவர் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் இணைய மீம்ஸ்களுக்காகவே உருவாக்கப்படுபவை. ராசியில்லாதவர். புரோக்கர். உள்குத்து போராளி என்று பல அர்ச்சனைகள் இவரைத் தொடர்ந்து துரத்திக் கொண்டே வந்தாலும் "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்று அவர் பாணியில் தன் வாழ்க்கையை, அரசியல் வாழ்க்கை ஏறக்குறைய முடித்தே விட்டார்.  

காரணம் சமீப காலமாக நான் பார்க்கும் வீடியோ காட்சிகளில் அவரின் சோர்வு, முதுமை அப்பட்டமாகத் தெரிகின்றது. சிறிது தூரம் நடந்து செல்லவே தடுமாறுகின்றார். அவர் உள்ளம் ஒத்துழைக்கும் அளவிற்கு உடல் நலம் ஒத்துழைக்கவில்லை என்பதனை பார்க்கும் போதே புரிந்து கொள்ள முடிகின்றது.

வங்கிகளின் EMI உலகம்

வங்கியில் கடன் அட்டை வாங்கியவரின் கதை

நவீன உலகில் வாழ தேர்ந்தெடுக்கப் பழகிக் கொள்

வைகோ மேல் உள்ள "பரிசுத்தமானவர்" என்ற இமேஜ் உடைக்க பலரும் முயன்றனர். அதில் ஒருவர் 'தென்னாட்டு காந்தி' அதிமுக வில் உள்ள நத்தம் விஸ்வநாதன். 

"உங்கள் மகன் ஐடிசி நிறுவனத்தில் புகையிலை பொருட்களை ஏஜென்சி எடுத்து இளைஞர்களைப் பாழும் கிணற்றில் தள்ளிக் கொண்டு இருக்கின்றார்" என்ற குற்றச்சாட்டைச் சுமத்தினார். 

வைகோ எளிமையாக "ஆமாம். உண்மை தான். அவர் தான் சொந்தத் திறமையில் அங்கே பெற்று தொழில் செய்து கொண்டிருக்கின்றார். எனக்கும் அதற்கும் தொடர்பு இல்லை" என்று முடித்து விட்டார்.

துரை வையாபுரி வி ரியாலிட்டி எல்எல்பி என்றொரு நிறுவனத்தை வைத்துள்ளார். கட்டுமானத்துறை தொடர்பான விசயங்களும் செய்து கொண்டிருக்கின்றார். ஏற்கனவே பரம்பரை சொத்துக்கள் அதிகம் உண்டு. பிறந்ததிலிருந்தே தங்க ஸ்பூன் என்று சொல்லக்கூடிய வகையில் வளர்ந்த இளைஞர்.

தமிழ்நாட்டில் தங்கள் ஆரோக்கியத்தை 75 வயது கடந்தும் மிக அற்புதமாகப் பேணிக் கொண்டிருப்பவர்கள் இரண்டு பேர்கள்.

ஒருவர் நடிகர் சிவகுமார். மற்றொருவர் வைகோ.  

சிவகுமார் கேரளா ஆயுர்வேத சிகிச்சை மையம் பக்கம் செல்லாதவர். யோகா, உடற்பயிற்சி, உணவு மூலம் இன்னமும் தன் ஆரோக்கியத்தைப் பேணிக் காத்துக் கொண்டிருப்பவர். ஆனால் வைகோ தமிழகத்தின் வடக்கும் கிழக்கும், மேற்கும் தெற்கும் நடந்தே தன் அரசியல் பயணத்தை மைல் கல்லாக மாற்றியவர். தன்னிடம் உள்ள சர்க்கரை நோயைக்கூட ஆச்சரியப்படும் அளவில் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர். ஆனால் இப்போது காலம் அதன் வேலையைக் காட்டத் துவங்கி விட்டது. மகன் வந்தே ஆக வேண்டும் என்று அவரை கட்சிக்குள் கொண்டு வந்துள்ளார் என்றே நினைக்கிறேன்.

நான் அறிந்தவரை மதிமுகவின் தலைமை அலுவலகமான தாயகம் பக்கம் கூடத் துரை வையாபுரி அதிகம் வந்தவர் அல்ல. சமீப காலமாகத்தான் மேடைப்பேச்சு பயிற்சி எடுத்து இருப்பார் என்றே நினைக்கிறேன். ஏற்கனவே வைகோ சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் சில அறிவிப்புகள் வெளியிடுவேன் என்று சூசகமாகச் சொல்லியிருக்கின்றார்.

இதை இப்போது இங்கே எழுதக் காரணம் உண்டு. 

மதிமுக கட்சியில் வைகோவிற்கு பிறகு தனக்குப் பெரிய வாய்ப்புண்டு என்று நம்பியவர் யார் தெரியுமா? 

இப்போது களப்போராளியாகத் தமிழ்நாட்டில் காட்சியளித்துக் கொண்டிருக்கும் திருமுருகன் காந்தி. இலை மறை காயாக மன்மோகன்சிங் ஆட்சியில் இருந்த போது, சோனியாவின் நேரிடையான பார்வையில் வைகோ மற்றும் திருமுருகன் காந்தி எப்படி செயல்பட்டார்கள்? அப்போது வைகோ திருமுருகன் காந்திக்கு கொடுத்த வாக்குறுதிகள் என்ன? என்பதனை அறிய வேண்டும் என்றால் உமர் எழுதிய "நான் ஏன் மே17 இயக்கத்திலிருந்து வெளியே வந்தேன்?" என்ற புத்தகத்தைப் படித்துப் பாருங்கள்.

காலம் துரை வையாபுரியைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. 

அதிகபட்சம் இல்லாவிட்டாலும் கூட மதிமுக என்ற கட்சிக்கு இன்றைய நிலையில் சில நூறு கோடிகளாவது சொத்துக்கள் இருக்கும் என்பதனையும் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

3 comments:

  1. கடைசி பத்தி - அரசியல் உண்மையைச் சொல்கிறது!

    நல்லதொரு கட்டுரை. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  2. ஆக, வாரிசு கிடைத்துவிட்டது என்று கொள்வோம்.

    ReplyDelete
  3. வைகோவிடம் ஓரிரண்டு விஷயங்கள் பிடிக்காது.  ஆனால் அவர் அரசியல் கலக்காமல் தமிழ் பேசினால் சுவாரஸ்யமாய்க் கேட்கலாம்.

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.