அஸ்திவாரம்

Sunday, August 23, 2020

"முகமற்ற வருமானவரி மதிப்பீடு" (Faceless Assessment)

பிரதமர் அறிவித்துள்ள "முகமற்ற வருமானவரி மதிப்பீடு" (Faceless Assessment) என்றால் என்ன? வரி செலுத்துவோருக்கு ஏற்படும் சாதக பாதக அம்சங்கள் என்ன?

இந்தியாவில் அதிகபட்ச காப்பித் தோட்டங்களுக்கு சொந்தக்காரர் திரு. வி.ஜி.சித்தார்த்தா. பா.ஜ.க பிரமுகரும், முன்னாள் கர்நாடக முதல்வருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன். கஃபே காபி டே நிறுவனர். 13,000 ஏக்கர் காப்பி தோட்டங்கள். நாடெங்கும் 1,600 காபி டே கடைகள். சித்தார்த்தா ஜூலை 2019ல் தற்கொலை செய்துகொண்டார். தனது தற்கொலைக் கடிதத்தில் "நிறுவனத்தின் பரிவர்த்தனைகளை வருமான வரித்துறை நிறுத்தியதால் நெருக்கடி ஏற்பட்டது. மற்றவர்களை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கம் எனக்கில்லை. நான் ஒரு தோல்வியடைந்த தொழிலதிபர்" என்று விரக்தியுடன் கூறியிருந்தார்.



இந்தியாவின் மிக பெரிய கார்ப்பரேட்களின் நிறுவனர்களில் ஒருவர் வி.ஜி.சித்தார்த்தா. இவர் எழுதிய இந்த மரண சாஸனம் மத்திய அரசின் மனசாட்சியை உலுக்கிவிட்டது. அந்த வாரமே நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் இதை கவனத்தில் எடுத்துக்கொள்வதாக அறிவித்தார். சொன்னது போலவே இரண்டு மாதங்களில் "வருமான வரித் துறை சம்பந்தப்பட்ட ஆணைகள், சம்மன்கள் அனைத்தும் மத்திய அலுவலகத்தின் அனுமதியோடுதான் அனுப்பப்படும்" என்று அதிரடியாக கட்டளையிட்டார். சரியாக ஒரு வருடம் கழித்து இப்பொழுது இரண்டு புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. முதல் ஷரத்து:

இனிமேல் வரி செலுத்துவோரை மோசடி நபராக அனுமானித்துக் கொண்டு வரித்துறை விசாரனை நடத்தாது. முறையாக வரி செலுத்துபவர் என்கிற ஆரோக்கிய நம்பிக்கையுடன் விசாரிக்கும். மிக முக்கியமாக "இனிமேல் வரி செலுத்துவோர் நேர்மையாளராகப் பார்க்கப்படுவார்". வருமான வரி செலுத்துவோர் நிம்மதிப் பெருமூச்சு விடலாம். இனி அவர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் சிக்கி சீரழிய வேண்டாம்.

பிரதமர் அறிவித்த மற்றொரு ஷரத்து "முகமற்ற மதிப்பீடு" (faceless assessment)

தற்போதைய நடைமுறைபடி வரி செலுத்துபவருக்கு அவரது ‘ரிடர்ன்’ யாரிடம் போகும்; யார் மதிப்பீடு செய்கிறார் போன்ற விபரங்கள் தெரியும்.

இனிமேல் அவருக்கு தனது ‘மதிப்பீட்டு அதிகாரி’ (Assessment Officer) யாரென்று தெரியாது.

வருமான வரி அதிகாரிக்கும் தன்னுடைய அதிகார வரம்பு (jurisdiction) எதுவென்று தெரியாது.

ஆடிட்டர் மொழி வழக்கில் சொல்வதென்றால் இன்று முதல் பேப்பர் சேஸிங் பண்ண முடியாது.

உங்கள் ஜாதகத்தை எந்த அதிகாரி மதிப்பீடு செய்வார் என்பதை இனி கணினிதான் தேர்வு செய்யும்.

இதே கணினி வழியில்தான் ‘முறையீடும்’ (appeal) நடக்கும். இதன் மூலம் துறை சார்ந்த பல முறைகேடுகள் தவிர்க்கப்படும்.

பிரதமர் அறிவித்த சில மணி நேரத்தில் மத்திய நேரடி வரி வாரியம் மேலும் சில அதிரடி ஆணைகளை பிறப்பித்தது. (F No. 187/3/2020-ITA-I/13-2020)

கடைகள், ஓட்டல்கள், தொழில் முனைவோரின் அலுவலகங்களில் சாதாரண மதிப்பீட்டுஅதிகாரி புகுந்து சர்வே செய்து வரி விதிப்பதெல்லாம் இனிமேல் இருக்காது.

டைரக்டர் ஜெனரல் அல்லது முதன்மை ஆணையர் அனுமதியுடன் மட்டுமே ‘சர்வே’ செய்ய முடியும்.

புதிய நடைமுறைகளின் சாதக பாதக அம்சங்கள் என்ன?

இதுவரை "சர்வே" முறை மூலம் அரசுக்கு கிடைத்த வருமானம் குறையும். கணிசமான வரி இழப்பு ஏற்படும்.

பெரும் வர்த்தகர்களுக்கு இனிதான் உண்மையான சுதந்திர தினம்.

பட்டய கணக்காளர்களுக்கு தேவை குறையலாம். நோ பேப்பர் சேஸிங்.

இனிமேல் நமது வரி மதிப்பீட்டில் சந்தேகம் வந்தால் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் முறையிட முடியாது.

வாடிக்கையாளர் சேவை எண்ணில் தொடர்பு கொண்டால் "எண் இரண்டை அழுத்தவும்" என்றோரு முகமற்ற இனிய குரல் நமக்கு உதவலாம்.

Dr.S.ஜெகத்ரட்சகன் - சொத்துப் பட்டியல்

வயது 12


9 comments:

  1. வரியெல்லாம் சரி தான்... அதைப்பற்றி விவாதிப்பது பிறகு...

    இதனால் வரும் பணமெல்லாம் என்னவாகிறது...?

    நாட்டின் வளர்ச்சிக்கு...?

    அல்லது...

    மத வளர்ச்சிக்கு...?

    ReplyDelete
    Replies
    1. என்னை நம்புங்க. எனக்குத் தெரியும். நான் செய்வேன். உங்கள் கேள்விகள் எதுவும் தேவையில்லை. உங்களுக்கு எது தேவை என்ன என்பது எனக்குத் தெரியும்.

      Delete
  2. நல்ல தகவல்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  3. பாஜக அரசு பல நல்ல திட்டங்களைக் கொண்டு வருகிறார்கள் ஆனால், செயல்படுத்துவதில் சொதப்புவதால், கெட்ட பெயரே மிஞ்சுகிறது.

    காங் அரசு தயக்கத்திலேயே எந்தத் தைரியமான முடிவையும் எடுக்காமல், காலம் தாழ்த்தி செயல்படுத்துவதே இல்லை.

    பாஜக அரசு தைரியமாக முடிவுகளை எடுக்கிறது ஆனால், செயல்படுத்துவதில் சொதப்புகிறது.

    தகவல்களுக்கு நன்றி ஜோதிஜி. சிலது புரிந்தும் புரியாமல் உள்ளது. இன்னும் விவரங்கள் / செய்திகள் தொடர்ச்சியாகப் படிக்கும் போது தெளிவாகலாம்.

    ReplyDelete
    Replies
    1. சொதப்புவது இல்லை கிரி. தெரிந்தே தான் செய்கின்றார்கள். எல்லாவற்றிலும் அவர்களின் கொள்கை சித்தாந்தம் உள்ளே வர அது தான் பிரச்சனையின் ஆணி வேர்.

      Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.