அஸ்திவாரம்

Thursday, May 07, 2020

ZOOM APP ON LINE - பாடங்கள்

சுய ஊரடங்கு 3.0 - 39
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)


கொரானாவிற்காக ஊரடங்கு தொடங்கி தற்போது ஒரு மாதம் முடிந்துள்ளது.

கடந்த சில தினங்களாக ஜும் செயலி வழியாகப் பள்ளியிலிருந்து பாடங்கள் நடத்திக் கொண்டு இருக்கின்றார்கள். தற்போதைய தலைமுறையின்

ஆசிரியர் -மாணவர்கள் - பாடங்கள்

இந்த மூன்றையும் இப்போது தான் பார்க்கின்றேன்.



கூடவே இந்தத் தலைமுறையின் நவீன தொழிற்நுட்ப வரத்தின் அனைத்து தன்மைகளையும், நன்மைகளையும் பார்க்கிறேன்.

கைப்பற்றிக் கொண்டார்கள் கூடவே கட்டளையிட்டு வெளியே அனுப்பி விடுகின்றார்கள். சில தினங்களாக இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது.

அரசாங்கம் "தனித்திரு". "விலகியிரு". "அன்பாகயிரு" என்கிறார்கள். இவர்கள் அதட்டி அறிவுரை சொல்லி "வெளியே போய் அமர்ந்து கொள்ளுங்கள்" என்கிறார்கள். எல்லாவற்றையும் தங்கள் வசமாக மாற்றிக் கொண்டு விட்டார்கள். பேசக்கூடாது. சிரிக்கக்கூடாது. ஏகப்பட்ட கட்டளைகள். அலைபேசியில் பேசிக் கொண்டிருந்த நண்பர்கள் திட்டத் தொடங்கி விட்டார்கள். எல்லாவற்றுக்கும் தடா. மீற முடியாது.

சில நாட்கள் இணையம் வழியே நடந்த பாடங்களை, ஆசிரியர்களை அவர்களின் பேச்சுக்களைச் செயலிகளின் வினோதங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அலுப்பாகப் போய்விட்டது. பத்திரிக்கைகள் எதுவும் வருவதில்லை. ஆசிரியர்கள் ஆர்வமாக நடத்திய பாடங்களை மீண்டும் நடத்துகின்றார்கள். முக்கியமான கேள்வி பதில்களை நினைவூட்டுகின்றார்கள். அக்கறையுடன் சொல்கின்றார்கள். ஆர்வத்துடன் மாணவர்களை ஒன்றிணைக்கின்றார்கள். 30 பேர்களில் 20 பேர்கள் தான் ஆன்லைன் வகுப்பில் இருக்கின்றார்கள். கால் பங்கு மாணவர்கள் தப்பித்து விடுகின்றார்கள். காரணங்கள் கேட்டால் சீன செயலி பாதுகாப்பு இல்லை என்று என்று அப்பா சொன்னார் என்று ஜாலியாகப் படம் பார்க்கத் தொடங்கி விடுகின்றார்களாம்.

தனியார்ப் பள்ளிகள் பாடு பெரும்பாடு தான்.

ஆசிரியர்களும் சரி தலைமையாசிரியர்களும் சரி இப்போதைய சூழலில் மிகுந்த மன உளைச்சலில் தான் இருக்கின்றார்கள். 10 ஆம் வகுப்பிற்கு 95 சதவிகிதம் பாடங்கள் நடத்தி, புதிய சிலபஸ் என்பதால் அதனை அக்கறையும் ஆர்வத்துடன் நடத்தி முடித்தார்கள். அவசரம் அவசரமாக நடத்தி, மூன்று மாதங்களுக்கு முன்பே முடித்து, முழுத் தேர்வுகள் பலவும் நடத்தி வெற்றிக் கோட்டைத் தொட்டு விடலாம் என்கிற நேரத்தில் திருவாளர் கொரானா உள்ளே வந்து விட்டார்.

சென்ற ஆண்டு அரசாங்கம் கதறியது. விடுமுறை தினங்களில் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது. தண்டனை உண்டு என்றார்கள். ஆனால் எப்போதும் போல மீறவே செய்தார்கள். தைரியமாக அப்பட்டமாகவே செய்தார்கள். ஆனால் இந்த முறை அரசாங்கம் அறிவுறுத்தத் தொடங்கிய போது பள்ளிகள் மதிக்கத் தயாராக இல்லை. பல பள்ளிகள் எப்போதும் போலவே இயங்கியது.

அதன் பிறகே சாட்டையை எடுத்துச் சொடுக்கத் தொடங்கினார்கள்.

கல்வித்துறை பலமுனை தாக்குதல் நடத்தியது. அத்துடன் மாணவர்களின் உயிர்பயமும் உள்ளே வந்து சேர்ந்தது. பள்ளிக்கூடம் நிர்வாகம் பயந்து போனது. சிறப்பு வகுப்புகள் நடத்தி மாணவர்களுக்குத் தொற்று நோய் வந்து விட்டால், அதுவும் பள்ளி முழுக்க பரவி விட்டால் வெளியே பெரிய அளவுக்குக் களேபரம் ஆகிவிடும். அத்துடன் பள்ளியின் பெயர் கெட்டு விடும் என்றே பயந்து சிறப்பு வகுப்புகளை நிறுத்தினர். வீட்டில் இருந்தே படியுங்கள் என்று அறிவுறுத்தினார்கள்.

முதலில் 21 நாட்கள் என்றதும் அனைவரும் இயல்பாகவே இருந்தனர். இரண்டாவது முறை நீட்டிக்கப்பட்டவுடன் சோர்வடைந்து விட்டனர். திடீரென மே 10க்கு மேல் கல்வித்துறை அரசாணை வெளியிடும். அடுத்த பத்து நாளில் பரீட்சைகள் தொடங்கும். அதுவும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடங்கும் என்று சில வாரத்திற்கு முன்பு கல்வியமைச்சர் அறிவித்தார்.

ஆனால் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப் போகின்றது என்று பேச்சு மெது மெதுவாக வரத் தொடங்கியுள்ளது. நான் மொத்தம் 42 நாட்கள் என்று தான் நினைத்திருந்தேன். இப்போது எந்த எண்ணிக்கையில் போய் நிற்கும் என்றே யூகிக்க முடியவில்லை.

ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றார்கள். ஜும் செயலி வாயிலாக வேண்டா வெறுப்பாக மாணவர்கள் பாடம் படிக்கின்றார்கள். முகத்தைப் பார்த்து, பாவனைகள் வைத்து உணர்ந்து பாடம் நடத்தி கேள்வி கேட்டு பதிலை எதிர்பார்த்து மிரட்டி கற்றுக் கொடுத்து உறவாடிய மாணவர் ஆசிரியர் உறவுகள் கொரானா சீட்டுக்கட்டு போலக் கலைத்துப் போட்டு விட்டது.
நீட் என்ற வார்த்தை இந்தியாவில் அறிமுகமான பின்பு இணைய வகுப்புகள் இங்கே சூடுபிடிக்கத் தொடங்கின.

நேரிடையாக வகுப்புக்குச் சென்று கற்றுக் கொள்வதைப் போல வீட்டில் இருந்தபடியே கணினி வழியே கற்றுக் கொள்ளத் தொடங்கினர். பெரு நகரங்களைத் தவிரச் செயலி வழியாகவே அல்லது கணினி வழியாகவே சிறு நகரங்களில் இணைய வகுப்புகள் சூடுபிடிக்காமல் தான் இருந்தது. கொரானா புண்ணியத்தில் சந்து பொந்து என்று எல்லா இடங்களிலும் பரவிவிட்டது.

தனியார்ப் பள்ளிகள் விடாமல் மாணவர்களுக்கு நீட் பரீட்சைக்கான முன்னெடுப்புகளையும் இந்தச் சமயத்தில் செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.  11, 12 வகுப்பு பாடத்துடன் ஜும் செயலி வாயிலாக நீட் பாடத்தையும் நடத்துகின்றார்கள். ஆனால் முதல் மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்கள்கூட எங்களுக்குப் புரியவில்லை என்கிற நிலையில் தான் இணைய வகுப்பு உள்ளது.

எங்கே செல்லும் இந்தப் பாதை.

4 comments:

  1. பதிவில் இருக்கும் படம்கடைகள் சொல்கிறதே வீட்டில் கவனிப்பு போதாதோ

    ReplyDelete
  2. நம் தமிழ் நாட்டில் ஆன் லைன் முறையில் பாடம் படிப்பது என்பது அதிக சதவீத மாணவர்களுக்கு எட்டா கனிதான் ஐயா

    ReplyDelete
  3. ஆன்லைன் பாடம் - சில பள்ளிகள் இன்னும் இந்த முறையைத் தொடரவில்லை. எங்கே செல்லும் பாதை - யார் அறிவார்.

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.