அஸ்திவாரம்

Friday, May 08, 2020

மலிவான அரசியல் செய்யாதீங்க - ஸ்டாலினை கடுமையாக சாடிய விஜயபாஸ்கர்


சுய ஊரடங்கு 3.0 - 40
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)



அரசியலுக்கு நேர்மையும் உழைப்பும் முக்கியமல்ல. இந்தப் பாணி தமிழகத்தில் 1969 ஆம் ஆண்டோடு முடிந்து விட்டது. அதன் பிறகு தந்திரமும், குயுக்தியும் தான் தமிழக அரசியலாக மாறியது. அதுவே நிரந்தரமானது. எதிரியைப் புரிந்து கொண்டு, எறிகணைகளிலிருந்து தற்காத்துக் கொண்டு தன்னை தக்க வைத்துக் கொண்டு முன்னேறுவது தான் முக்கியம். இதுவரையிலும் தமிழக அரசியல் அப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது.



பந்தி இன்றைக்கு இல்லப்பா? என்று சொன்னாலும் சைவமா? அசைவமா? என்று கேட்பவர்களை வைத்துச் சமாளிக்க வேண்டியதாக உள்ளது.

எப்படிக் கூவினாலும் கவனிக்க ஆள் இல்லாத அலுப்பு எதிரணிக்குத் திகைப்பாகவே உள்ளது. ஆட்சியில் இருப்பவர்கள் யோக்கியவான்கள் அல்ல. 

ஆனால் நெருக்கடியான சூழலில் முடிந்தவரைக்கும் உழைக்கக் கூடியவர்களாக, களத்தில் இறங்கி பணியாற்றத் தயக்கம் இல்லாதவர்களாக இருக்கின்றார்கள்.

ஊடகப் பார்வை, கட்சிப் பார்வை, அவரவர் சொந்த விருப்பப் பார்வை என்பதனை விடத் திருப்பூரில் "மாவட்ட நிர்வாகம்" எப்படியுள்ளது?

அவினாசி சாலையிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொங்கு நகர்ப் பகுதிக்குக் குறுக்குவழியாகச் செல்ல முடியாது. ஒவ்வொரு சந்திலும் கட்டை வைத்து அடைந்துள்ளார்கள். முக்கிய சாலை வழியே சென்றாலும் நிச்சயம் நீங்கள் ஐந்து செக் போஸ்ட்களைக் கடந்து செல்லும் போது அங்கேயிருக்கும் காவலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவன இளைஞர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொன்ன பிறகு தான் கடந்து செல்ல முடியும். திருப்பூரின் நான்கு பக்கமும் நுணுக்கமாக இப்படித்தான் பிரித்து வைத்து உள்ளார்கள்.

இதற்குள் துணைப் பிரிவுகள் உண்டு. தொற்று பாதிக்கப்பட்ட பகுதி, பிரிக்கப்பட்ட பகுதி என்று வகைவகையாக பிரிந்து தனியாக காவல் போட்டுள்ளனர். இது போன்ற இடங்கள் ஜம்மு காஷ்மீர் இராணுவக் கட்டுப்பாடு போலவே உள்ளது.

தினமும் மூன்று முறை காவல் ரோந்து வாகனம் வருகின்றது. அல்லது இரண்டு சக்கர வாகனங்களில் காவலர்கள் பார்த்துக் கொண்டே வருகின்றார்கள். ஒவ்வொரு சந்துக்குள்ளும் புகுந்து வெளியே வருகின்றார்கள். வெளியே சுற்றினால், திரிந்தால் கட்டாயம் அவர்கள் கண்ணில் சிக்கும் வாய்ப்புண்டு. வீட்டுக்குள் இருந்தே ஆக வேண்டும்.

புதிய பேருந்து நிலையத்தில் உருவாக்கப்பட்ட உழவர் சந்தையை மிக மிகச் சிறப்பாக உருவாக்கி உள்ளனர். அதிகாலை நான்கு முதல் காலை 9 மணி வரைக்கும் செயல்படுகின்றது. ஒரு பக்கமாகத்தான் உள்ளே நுழைய முடியும். முகக் கவசம் கட்டாயம் மாட்டியிருக்க வேண்டும். கூம்பு வடிவ ஒலிப் பெருக்கி வழியே அறிவிப்பு காற்றில் வந்து கொண்டே இருக்கின்றது. சாலையில் இருந்து உள்ளே நுழையும் போதே நம்மைச் சிலர் கண்காணித்துக் கொண்டேயிருக்கின்றார்கள். அறிவுரைகள் சொல்கின்றார்கள். பேருந்து நிலையம் உள்புறம் பெரிய சின்டெக்ஸ் டேங்கில் மருந்து கலக்கப்பட்ட நீர் வைத்துள்ளார்.

குழாய் வழியே வரும் நீரில் நாம் கைகளைக் கழுவிய பின்பு காய்கறி வாங்கச் செல்ல முடியும். ஒருவர் சானிடைசர் வைத்து நின்று கொண்டே இருக்கின்றார். நாம் நகர முடியாது. அவரே அழைத்து உள்ளங்கையில் ஊற்றி விடுகின்றார். நமக்கு எரிச்சலாக இன்ப அதிர்ச்சியாக உள்ளது. திருமணம் ஆகி முதல் முறையாக வீட்டுக்கு வந்த மருமகன் போலத் திருப்பூர் மாவட்ட ஆட்சியரும், நிர்வாகமும் திருப்பூர் முழுக்க இதே போலப் பல உள் கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளனர்.

வீட்டுக்கு, சந்தில் உள்ள வீடுகளுக்குத் தினமும் ஒருவர் மருந்தடிக்க வந்து விடுகின்றார். இவர் மதியம் வந்து விட்டால் வாகனத்தில் பெரிய பைப் மாட்டி அடுத்த நான்கு பேர்கள் சந்து பொந்து எல்லா இடங்களிலும் மொத்தமாக மருந்தடித்து விட்டுச் செல்கின்றார்கள்.

பெண்மணிகள் வீட்டின் உள்ளே கிணறு உள்ளதா? தேங்கும் தண்ணீர் நிலை உள்ளதா? என்று வாரத்தில் இருமுறை வந்து சோதிக்கின்றார்கள்.

நாள் தோறும் நூறு ரூபாய்க்கு காய்கறிகள் விற்கும் வண்டி ஒவ்வொரு சந்துக்கும் வருகின்றது. 500 ரூபாய் மளிகைச் சாமான்கள் வாகனங்களும் வந்து விடுகின்றது. பால் தட்டுப்பாடு இல்லை.

சந்துக்குள் மளிகைக்கடைகள் உள்ளது. அருகே பெரிய கடைகள் மதியம் 2 மணி வரைக்கும் திறந்து உள்ளனர். பழங்கள் விலை மிக மிக குறைவு. உழவர்களுக்கு எப்படி கட்டுபிடியாகும் என்கிற அளவுக்கு வெங்காயத்தின் அதிரடி விலைகள் ஆச்சரியமாக உள்ளது.

திருப்பூர் ரெட் அலர்ட் ல் தான் உள்ளது. ஆனால் எனக்கு ஆரோக்கியப் பால் விளம்பரத்தில் வரும் பெண்மணி சொல்லும் வசனம் தான் நினைவுக்கு வருகின்றது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ட்விட்டரில் எடப்பாடி அவர்களிடம் பாராட்டு வாங்கியுள்ளார். எப்படியிருந்தாலும் திருப்பூர் நிறுவனங்கள் சகஜ நிலைமைக்கு மீண்டு(ம்) வர ஜூன் இறுதி ஆகும். ஆனால் ஐரோப்பா கண்டமும், அமெரிக்கா கண்டமும் முழுமையாக சகஜநிலைமைக்கு வர என் கணக்குப்படி நவம்பர் ஆகலாம். அதாவது இந்த வருட கிறிஸ்துமஸ் விழா கொண்டாடுவதற்கு சற்று முன்பு. அதுவரையிலும் திருப்பூரில் கீழிலிருந்து மேல் வரைக்கும் பிரச்சனை தான். கவலைப்பட்டு ஒன்றும் ஆகப் போவதில்லை. ஓடிக் கொண்டேயிருப்பவர்களுக்குக் கால் தடுமாறி விழுந்து கீழே விழுந்தால் எப்படியிருக்கும்? மீண்டு(ம்) ஓடத்தான் வேண்டும்.

திருப்பூர் இதை விடப் பெரிய இழப்பை எல்லாம் கடந்து வந்துள்ளது. காரணம் இங்குள்ளவர்கள் உழைப்பை மட்டுமே நம்பக்கூடியவர்கள்.

வர்லாம் வர்லாம் வா................







ZOOM APP ON LINE - பாடங்கள்

2 comments:

  1. நாளுக்கு நான் கொரோனா தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வது வேதனையைத் தருகிறது ஐயா

    ReplyDelete
  2. திருப்பூர் மாவட்ட அதிகாரிகளின் செயல்முறைகள் பாராட்டுக்குரியவை. நல்லதே நடக்கட்டும்.

    இந்தப் பிரச்சனைகள் விரைவில் அகலட்டும்.

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.