"தயவு செய்து இந்தச் செடியை வெட்டி விடாதே" என்று மனைவியிடம் கெஞ்சலாகக் கேட்டு அந்தச் செடியைக் காப்பாற்றி வைத்திருந்தேன். நடைப்பயிற்சி தொடங்குவதற்கு முன்பு காலையில் கழிப்பறைக்குச் செல்லும் போது அந்தச் செடியைக் கண்டேன். சந்து போன்ற பகுதியில் சுவரின் ஓரமாகச் சிமெண்ட் தரையிலிருந்து அந்தச் செடி முளைத்திருந்தது. அதுவும் சுவரின் ஓரமாக அருகே இருந்த சிமெண்ட் பைப் விரிசலின் இடைவெளியில் கிடைத்த துளி அளவு ஓட்டைக்குள் இருந்து அந்த விதை ஜனனமாகியிருந்தது. ஒரே ஒரு பச்சை இலை என்னை வரவேற்றது. ஆச்சரியமாக இருந்தது.
இரண்டு வாரங்கள் கழித்துப் பார்க்கும் போது நாலைந்து இலைகளுடன் அழகான ஒரு குறுஞ்செடியாக மாறி பச்சை பசேல் என்று என்னைப் பார்த்துச் சிரித்தது. சுவரின் ஓரமாக அந்தச் செடி வளர்ந்த காரணத்தினால் சுவரில் விரிசல் வந்து விடுமோ? என்ற அச்சத்தில் மனைவி அந்தச் செடிக்கு தூக்குத் தண்டனை நாள் குறித்து இருந்தார். முதல் நாள் இரவில் வெளியே அமர்ந்து குழந்தைகளுடன் பேசிக் கொண்டிருந்த போது அவர் எண்ணத்தைச் சொன்ன போது திடுக்கிட்டுப் போனேன்.
சில வாரங்களுக்கு முன்னால் தான் வீட்டில் மற்றொரு படுகொலை நடந்திருந்தது. வீட்டுக்கு முன்னால் ஒரு பெரிய வேப்ப மரம் இருந்தது. வீட்டின் உரிமையாளர் பெண்மணி அந்த மரத்தைப் பற்றி அவ்வப்போது புலம்பலாகப் பேசிக் கொண்டிருப்பார். தினந்தோறும் உதிரும் சருகுகள் அவருக்கு வேலை வைத்துக் கொண்டிருந்தது. என்னால் தினமும் கூட்டிப் பெருக்க முடியவில்லை. இந்த மரத்தை வெட்டினால் தான் சரியாக இருக்கும் என்று மனைவியிடம் சொல்லியிருக்க அந்தச் செய்தி என் காதுக்கு வந்து சேர்ந்த போது அதிர்ச்சியடைந்தேன். மறுநாளே அவரிடம் சென்று "அந்த மரத்தை வெட்டிவிட வேண்டாம்" என்று வேண்டுகோள் வைத்தேன். மனைவியும் அவரும் சிரித்தனர்.
ஒரு நாள் மதியம் வீட்டுக்குச் சாப்பிட வந்து சேர்ந்த போது சுத்தமாக மொட்டையடிக்கப்பட்டுத் தூர் மட்டும் மிஞ்சியிருந்தது. எங்கள் வீட்டின் சந்தின் முனையில் நுழைந்த எனக்குத் தூரத்தில் பார்த்த போதே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இனி இவர்களிடம் பேசி பலன் இல்லை என்று நினைத்துக் கொண்டு இரண்டு நாட்கள் மனம் துக்கத்தை மனதிற்குள் கொண்டாடிவிட்டு கடந்து வந்து விட்டேன். பல வருடங்கள் வளர்ந்த மரம். நிழல் தந்து அந்த இடத்தையே குளுமையாக வைத்திருந்தது. சருகுகள் வேலை வாங்க ஒரே முடிவில் முடித்து விட்டார்கள்.
ஊரில் வாழ்ந்த போது அம்மா, அக்காக்கள் தோட்டத்தில் உள்ள ஒவ்வொரு மரத்தின் சருகுகளையும் தினமும் கூட்டிப் பெருக்கும் நாட்கள் என் நினைவுக்கு வந்து போனது. நானும் தம்பிகளும் கூடப் பல முறை கூட்டிப் பெருக்கியிருக்கின்றோம். குளுமையாக இருந்த நாட்கள் இன்று வரையிலும் மனதில் பசுமையாக உள்ளது. ஆனால் நகர்ப்புறங்களில் வாழும் போது நாம் தினந்தோறும் இழக்கும் இழப்புகள் கணக்கில் அடங்கா?
தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் மனிதர்களும் இங்குள்ள அமைப்புகளும் ஒவ்வொரு காரணம் வைத்துள்ளார்கள். அரசாங்கம் சாலை விரிவாக்கம் செய்கின்றோம் என்று 50 வருடங்கள் வளர்ந்த மரங்களை ஒரே நாளில் வெட்டிச் சாய்த்து விடுகின்றார்கள். இந்தச் செயலில் ஈடுபடும் அதிகாரிகளிடம் பேசிப் பாருங்கள்? முதலில் பேசவே மறுப்பார்கள். அப்படியே பேசினால் கூட எகத்தாளமாகப் பேசுவார்கள். ஈரம் என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்பார்கள்? நாம் இங்கே வாழ வேண்டுமென்றால் பலவற்றைப் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
பேசிக் கொண்டிருந்த போது குழந்தைகளிடம் கேட்டேன். "அந்தச் செடியைப் பார்த்தீர்களா?" என்று. ஒருவர் மட்டும் கவனித்திருந்தார். ஆனாலும் அதனை அவர் பொருட்படுத்த தயாராக இல்லை. அடுத்த இருவரும் அப்போது தான் பார்க்க ஓடினார்கள். மனதில் குறித்துக் கொண்டேன்.
காலையில் தாமதமாக எழுவதும், மனைவியிடம் திட்டி வாங்கிய பின்பு ஆடி அசைந்து குளியல் அறைக்குச் செல்லும் இவர்கள் எதையும் கவனிப்பதில்லை என்பதனை உள்வாங்கிக் கொண்டேன். விடாத வேதாளம் போல மூவரிடமும் அலுவலகம் செல்லும் போது ஒரு கேள்வியைக் கேட்டு விட்டுச் சென்றேன். அந்தச் செடி மூலம் என்ன உணர்ந்தீர்கள்? என்ன கற்றுக் கொண்டீர்கள்? நான் அலுவலகம் முடித்து இரவு வந்ததும் எனக்குச் சொல்ல வேண்டும் என்று சொல்லிவிட்டுச் சென்றேன்.
எப்போதும் போல நான் கேட்ட கேள்வியை மறந்து விட்டனர். இரவு சாப்பாடு முடிந்து தூங்கச் சென்றவர்களிடம் மறக்காமல் கேட்டேன். அப்போதும் நாளை பேசிக் கொள்ளலாம் என்று அவசரம் அவசரமாகத் தப்பிப்பதில் குறியாக இருந்தனர். அடுத்த இரண்டு நாட்கள் பொறுமையாக இருந்து காலைவேளையில் அந்தச் செடிக்கு அருகே நின்று கொண்டு வந்த ஒவ்வொருவரிடமும் இந்தச் செடி மூலம் என்ன கற்றுக் கொண்டீர்கள்? என்ற கேள்வியைக் கேட்ட போது இனி தப்பிக்க முடியாது என்பதனை உணர்ந்து கொண்டு ஒவ்வொருவரும் ஒரு பதிலைத் தந்தனர்.
மூத்தவர் மட்டும் நான் நினைத்திருந்ததற்கு அருகே வந்து பதில் அளித்தார். "போராடினால் வெற்றி நிச்சயம்" என்றார். அடுத்த இருவரும் "நிறையக் கஷ்டப்பட்டு வளர்கின்றது" என்றார்கள். சரி இரவு வந்ததும் பேசுகின்றேன் என்று சொல்லிவிட்டு நகர்ந்து சென்று விட்டேன்.
உனக்கு அறிவு இருக்கா? உன் தலையில் களிமண்ணா இருக்கு? ஏன்டா இது கூட உனக்குப் புரியலையா? போன்ற கேள்விகளை நாம் படித்த பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் சொல்லி பல முறை கேட்டு கடந்து வந்திருப்போம். நம்முடன் படித்த பலரையும் பரிகசித்த ஆசிரியரை, சக மாணவ மாணவியரைப் பார்த்து பயந்த காலத்தை இப்போது யோசித்துப் பார்த்தாலும் வியப்பாகவே உள்ளது. இன்று வரையிலும் அறிவு என்றால் என்ன? அதன் அளவு கோல் தான் என்ன? என்பதனை இன்று வரையிலும் நம்மால் அறுதியிட்டுக் கூற முடியுமா?
சிந்தனை செயலாக்கம் என்பது இயற்கையில் உருவாகக்கூடிய ஒன்றா? அல்லது சூழ்நிலையின் காரணமாக இயல்பாகவே வரக்கூடியதா? என்ற கேள்விக்கு ஒவ்வொரு சமயத்திலும் நான் பதில் தேடிக் கொண்டேயிருப்பதுண்டு.
படு பயங்கர மக்கு என்று ஒதுக்கப்பட்ட பலரும் இன்று கோடீஸ்வர்களாக இருக்கின்றார்கள். படிப்பில் சுட்டி என்று சுட்டிக் காட்டப்பட்டவர்கள் இன்று மாதந்திர சம்பளத்திற்குள் வாழ்க்கையைப் பணயம் வைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
நாம் பார்க்கும் அரசியல்வாதியை நம்மால் திறமைசாலி என்று ஏற்றுக் கொள்ள முடிகின்றதா? ஒரு அமைச்சராவது ஒரு மாநிலத்தை நிர்வாகிக்கக் கூடிய திறமையுள்ளவர் என்று நம்மால் அடையாளம் காட்ட முடியுமா? இவர்கள் எப்படி ஐஏஎஸ் முடிந்தவர்களை, மற்ற அதிகாரிகளை வேலை வாங்க முடியும்? அவர்கள் எழுப்பும் வினாக்களை எப்படிச் சமாளிப்பார்கள்? எந்த அளவுக்கு நிர்வாகத்திறமையைக் கற்றிருப்பார்கள்? போன்ற பலவற்றை யோசித்தாலும் அத்தனையும் மக்களாட்சி தத்துவம் என்பதற்குள் அடங்கி விடுகின்றது. சுருக்கமாகச் சொன்னால் படிக்காதவன் முதலீட்டில் கட்டப்பட்ட கல்லூரிகளில் படித்துப் பல பட்டங்கள் வாங்கியவர் மாத சம்பளம் தொடர்ந்து கிடைக்குமா? என்ற அச்சத்தில் தான் வாழ வேண்டியுள்ளது.
இதனையே குழந்தைகள் விசயத்தில் பல சமயங்களில் யோசித்துப் பார்ப்பதுண்டு. இவர்கள் மூவரும் பிறந்த அந்தக் கணத்தில் அவர்கள் அழுகை என் காதில் விழுந்த நொடிப் பொழுது முதல் இன்று வரையிலும் அவர்களின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் கவனித்தே வருகின்றேன். எத்தனை பேர்களால் இப்படி முடியும்? என்று யோசித்துள்ளேன்.
அவர்களின் படிப்படியான வளர்ச்சியைக் கவனித்தவன் என்ற முறையில் இன்று ஏராளமான ஆச்சரியங்களும், அதிசியங்களும் ஒருங்கே எனக்குக் கிடைத்துள்ளது. "ஒரு குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்பதனை அவனிடம் கற்றுக் கொண்டு வாங்க" என்று என் அம்மா எனக்குக் கொடுத்த உயர்ந்த பட்ச அங்கீகாரம் இன்று காற்றில் பறந்து விட்டது. காரணம் இவர்கள் முழுமையாக மாறியுள்ளார்கள். அதில் ஒரு படி தான் இப்போது இந்தச் செடி குறித்து அவர்களிடம் கேட்ட கேள்விகளும்.
எல்லாமே இவர்களுக்கு எளிதாகக் கிடைப்பதால், விரும்பிய அனைத்தும் இதுவரைக்கும் கிடைத்த காரணத்தால் இவர்களின் வாழ்க்கை முறை என்பது வேறு விதமாக அமைந்துள்ளது. கடைசியாக அவர்களிடம் சொன்னேன். "நான் பயன்படுத்துப் பீரோவில் ஒரு வாசகம் எழுதிய ஸ்டிக்கர் ஒட்டி வைத்துள்ளேன். அதனைப் படித்துப் பாருங்கள்" என்றேன். இருவர் வேகமாகச் சென்று பார்த்து விட்டு உரக்கப் படித்தார்கள்.
"பாறை இடுக்குகளில் வளர்வது தாவரமல்ல. தன்னம்பிக்கை".
நடைபயில்வோம்...........
முந்தைய பதிவுகள்
அருமை அருமை
ReplyDeleteமிகக் குறிப்பாக முத்தாய்ப்பாகச்
சொன்ன வாசகம்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஅந்த தன்னம்பிக்கையை வெட்டி சாயக்கதான் பல சுயநல வாதிகல் இருக்கிறார்களே. மரத்தை வெட்டிய வீட்டுகாரர்களின் கண்ணில்பட்டால் இந்த தன்னம்பிக்கை வெட்டி சாய்க்கப்படும்
நானும்கூடுமானவரை களை செடியை கூட பிடுங்காமல் வளர்த்து அதன் மலரையும் ரசிக்க கற்றுக்கொடுக்கிறேன் மகளுக்கு ..இதுவரை பூச்சி மருந்துகளைக்கூட செடிகளின் மீது பயன்படுத்தவில்லை ..எதையும் தாங்கி இடுக்கிலும்போராடி வளரும் செடிதான் தன்னம்பிக்கைக்கு அருமையான உதாரணம் ..அருமையான பகிர்வு
ReplyDeleteமூவருக்கும் நீங்களே போதி மரம்...
ReplyDelete
ReplyDeleteஎல்லாமே இவர்களுக்கு எளிதாகக் கிடைப்பதால், விரும்பிய அனைத்தும் இதுவரைக்கும் கிடைத்த காரணத்தால் இவர்களின் வாழ்க்கை முறை என்பது வேறு விதமாக அமைந்துள்ளது.
உண்மைதான் ஐயா
ஒரு தகப்பன் என்ற முறையில் கடந்த சில ஆண்டுகளாகவே
இதனை முழுமையாய் உணர்ந்து வருகிறேன்
poothei maram poothanai maram aaikaimaiku vaalthukal aya. siru setiyaga irukum podhu athai piduke man satiyao alathu nila parabilo vaithu irukalam.
ReplyDeleteஅந்தச் செடியைக் காப்பாற்ற முடிந்ததா. இல்லையென்றால் பல கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும்
ReplyDeleteநீங்கள் நினைப்பது போல் எல்லோரும் அப்படி இல்லை. பல வருடங்களுக்கு முன்பு current science என்ற பத்திரிக்கையில் அப்துல் கலாம் அவர்கள் பேராசிரியர் சதீஷ் தவான் அவர்களைப்பற்றி ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அப்போது பேராசிரியர் தவான் இஸ்ரோ வின் தலைவராக இருந்தார். ஸ்ரீஹரி கோட்டா வில் ஓரிடத்தில் ராக்கெட் சோதனை தளம் அமைக்க சுமார் ஆயிரம் மரங்களை வெட்ட வேண்டி இருந்ததாம். இதை அப்துல் கலாம் தயக்கத்துடன் பேராசிரியரிடம் தெரிவித்தாராம். பேராசிரியர் அந்த திட்டத்தை பிரச்னை இல்லாமல் வேறு இடத்துக்கு இயறகை பாதிப்பு குறைவாக இருக்கும் வகையில் மாற்றி விட்டாராம்.
ReplyDeleteஅனைத்து இஸ்ரோ மையங்களிலும் இயறகை அபரிமிதமான எழிலுடன் திகழ்வதட்கு பேராசிரியர் தவான் தான் காரணம் என்று கூறி இருந்தார்.
செடிகள், மரங்கள் வளர்வதை கவனித்தாலே ஏராளமாய் கற்கலாம் வாழ்க்கையை. அவற்றை கவனிக்கும் மனமும் நேரமும் வாய்ப்பதே பெரும் வரம்.
ReplyDeleteகுழந்தைகளுக்கும் இவற்றை தருவது மிக அவசியம்.
அருமை. நன்றி.
ReplyDeleteகடைசி வரி அருமை தோழர் வாவ்
ReplyDeleteமிக மிக நுணுக்கமாக ஆராந்து, சிந்தித்து எழுந்த எண்ணங்களுடனான அருமையான கட்டுரை...
ReplyDeleteகீதா: படிக்காதவன் முதலீட்டில் கட்டப்பட்ட கல்லூரிகளில் படித்துப் பல பட்டங்கள் வாங்கியவர் மாத சம்பளம் தொடர்ந்து கிடைக்குமா? என்ற அச்சத்தில் தான் வாழ வேண்டியுள்ளது.// இதுதான் இன்றைய யதார்த்தம். அதே போல கல்லூரியில் நல்ல பேராசிரியர் மாதச் சம்பளத்துடன் போராடிக் கொண்டிருப்பவரிடம் கற்கும் மாணவர்கள் அவரையும் விட இன்று மூன்று/நான்கு மடங்கு சம்பளத்தில் இருப்பவர்கள் அதிலும் கூட இந்தோ உங்கு குறிப்பிட்டுள்ள உங்கள் வார்த்தைகள். இதை நான் அடிக்கடி என் மகனிடம் சொல்லுவதுண்டு. என்றாலும் நாங்கள் அவனை ஒரு போதும் பணம் ஈட்டும் வழியில் சிந்திக்க வைத்ததில்லை. நீங்கள் இங்கு குறிப்பிட்டுள்ளதைப் போன்று வீட்டில் கான்க்ரீட் கழிவறையில் கூட இருக்கும் சிறு ஓட்டைகளில் சில சமயம் ஏதேனும் வெந்தயமோ, அல்லது கடுகோ பெருக்கும் போது சிதறி மாட்டிக் கொண்டவை வளர்ந்திருக்கும்....எனக்கு அதைக் கண்டு வியப்பாக இருக்கும்! எப்படிப்பட்ட ஒரு சூழலிலும் அது போராடி வளர்கிறது. என்ன சுய உந்துசக்தி..தன்னம்பிக்கை .என்றெல்லாம் நினைத்ததுண்டு. மகன் சிறுவயதிலேயே அதைச் சுட்டிக் காட்டி இப்படிச் சொன்னதுண்டு. நீங்கள் சொல்லியிருப்பது போல் எல்லாம் கிடைத்துவிட்டதென்றால் வாழ்க்கையும், எண்ணங்களும் மாறித்தான் போகின்றது. அதற்குத்தான் இப்போதெல்லாம் உளவியலாளர்கள் பெற்றோருக்குச் சொல்லுவது, குழந்தைகளுக்கு "நோ" சொல்லி வளருங்கள் என்று. எதற்கு வேண்டுமோ அதற்குச் செலவு. குழந்தைகளுக்கும் அதை உணர வைக்க வேண்டும். காசின் அருமை உழைப்பின் அருமை, தெரிய வேண்டும் என்று...சொல்லி வருகிறார்கள். அதே போன்று உங்களின் கேள்விகள் எனக்கு என் மகனிற்குச் சிறு வ்யதில் என் சிற்றறிவிற்கு எட்டிய சிலவற்றை நான் போதித்தவை நினைவில் வந்தது.
காட்டுச் செடிகள் வளர்ந்தால் கூட வெட்டுவதில்லை. அதையும் ரசிக்கக் கற்றுக் கொடுத்தேன் மகனுக்கு. வேண்டதவை என்று உலகில் எதுவும் இல்லை என்றே தோன்றும். எல்லாவற்றிலும் ஒரு பாடம் இருக்கும் உற்று நோக்கினால்...ஆழ்ந்து சிந்தித்தால். இயற்கை கற்றுத் தரும் பாடங்கள் பல...அலாதியும் கூட....ஏன் எதிர்மறை செயல்களில் கூட பாடம் இருக்கிறதே!
மிக் மிக அருமையான பதிவு!!!
ReplyDeleteகீதா