அதுவொரு ஞாயிற்றுக்கிழமை.........
அன்று தான் முதன் முறையாக நடைப்பயிற்சியைத் தொடங்கினேன். ஞாயிறு என்பது எனக்கு விசேட தினம். ஆறு நாட்கள் யாருக்கோ உழைத்து, எவருடனோ விருப்பமின்றி உறவாடி, பலவித வேடங்கள் போட்டு எனக்கான சுயத்தை மறந்து வாழும் எனக்கு ஞாயிறென்பது எனக்கான தினம். ஒவ்வொரு ஞாயிறும் அதிகாலையில் விழிப்பு வந்து விடும். முதல் நாள் இரவு எத்தனை மணிக்கு வந்து படுத்தாலும் மனம் சொல்லிவைத்தாற்போல ஐந்து மணி அளவில் உடம்பை எழச் செய்துவிடும்.
சனிக்கிழமையன்றோ வீட்டில் நான்கு பேர்களும் ஒரு வசனத்தைத் தூங்கப் போவதற்கு முன்பு மறக்காமல் சொல்வார்கள். "நாளைக் காலை எங்கள் யாரையும் ஏதாவது தொந்தரவு செய்தால் நடப்பதே வேறு?" என்று மிரட்டல் தொனியில் எச்சரிப்பார்கள். காரணம் ஒவ்வொரு ஞாயிறும் அவர்களுக்கு அதிக நேரம் தூங்க வேண்டும் என்பது அவர்களின் கொள்கை.
ஏற்றுமதி நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் மீது எப்போதும் எனக்குக் கனிவுப் பார்வை உண்டு. எட்டரை மணிக்கு உள்ளே வந்து மீண்டும் எட்டரைக்கு வீட்டுக்குச் செல்லும் இவர்களின் மற்ற கடமைகளை எப்படி முழுமையாகச் செய்ய முடியும்? என்பதே இதன் அடிநாதம். அவசரம் அவசரமாக ஓடிவந்து, உள்ளே வந்து கைரேகை பதித்துப் பத்தரை மணிக்கு விடப்படும் தேநீர் இடைவேளையில் அவசரகதியில் அமர்ந்து அவர்கள் கொண்டு காலை உணவை உண்ணும் போது மனம் வலிக்கும். ஆனால் வெளியே காட்டிக் கொள்ள முடியாது. மணிச் சப்தம் ஒலிக்கும் போது பாத்திரங்களைக்கூடக் கழுவ நேரமிருக்காமல் ஓடி வருவார்கள்.
பல முறை கவனித்துள்ளேன். அதையே வீட்டுக்கு வந்து குழந்தைகளிடம் வந்து சொல்லும் போது எளிமையாகப் பதில் சொல்வார்கள். "நீங்க தானே மேனேஜர். உங்கள் முதலாளியிடம் சொல்லி கூடுதலாக நேரம் கொடுக்க வேண்டியது தானே?" பதில் பேசாமல் நகர்ந்து விடுவேன்.
இங்கு ஒவ்வொருவருக்கும் ஒரு பாத்திரப்படைப்புச் சமூகம் உருவாக்கி வைத்துள்ளது. அதுவொரு வேடம் என்றாலும் அந்த வேடத்தில் எந்தளவுக்குத் திறமையாக நடிக்கக் கற்றுக் கொண்டவர்களால் மட்டுமே தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். நடிக்கத் தொடங்கும் போது சுயம் கழன்று விடும். அறம் என்பது மறந்து விடும். அதிகப் பணமிருப்பவர்களுக்கும் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பணத்தைத் தேடுபவர்களுக்கு மத்தியில் நாம் வாழ்ந்தாக வேண்டும் என்றால் அலுவலகத்திற்குச் செல்லும் போது உடைகள் மாற்றத் தொடங்கும் போதே உள்ளே உள்ள நடிகனுக்குத் தேவைப்படும் ஒத்திகையையும் ஒரு முறை பார்த்துக் கொள்ள வேண்டும்.
பல நாட்கள் ஞாயிற்றுக்கிழமையும் தொழிற்சாலையில் வேலையிருக்கும். நான் கிளம்பும் வரைக்கும் மூன்று பேரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பார்கள். ஆச்சரியமாகவும், அயர்ச்சியாகவும் இருக்கும்.
தொடக்கத்தில் குறைந்தபட்சம் குழந்தைகளையாவது இந்தப் பழக்கத்தில் மாற்றிவிட முடியுமா? என்று முயற்சித்த போது குடும்பம் மொத்தமாக எதிரணியில் நின்று நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றி குண்டுக்கட்டாகத் தூக்கி சபையை விட்டு வெளியே அனுப்பி வைத்து விட்டார்கள். அப்பொழுதே புரிந்து விட்டது. சபாநாயகர் மனைவியின் சோம்பேறித்தனத்திற்கு மூன்று உறுப்பினர்களும் ஒட்டு மொத்த ஆதரவு தெரிவித்த பின்பு சுயேச்சை உறுப்பினர் நான் மட்டும் என்ன செய்ய முடியும்?
இதுவும் ஒரு வகையில் நல்லதாகப் போய்விட்டது.
காலைக்கடன்கள் முடித்து விட்டு எழுதத் தொடங்கினால் அந்த வாரத்திற்குத் தேவையான விசயங்களை அடுத்த நான்கு மணி நேரத்தில் எழுதி முடிக்க வசதியாக இருந்தது. அவர்கள் ஒவ்வொருவராக முழித்து வெளியே வந்து நிற்கும் போது நான் பிழைகள் திருத்திக் கொண்டிருப்பேன். இடையிடையே அந்த வாரத்தில் வந்த அரசியல் சார்ந்த காணொலிக் காட்சிகளைப் பார்த்து முடித்து இருப்பேன்.
மற்ற நகரங்களில் எப்படியோ? ஆனால் திருப்பூரில் தொழிலாளர்கள் மட்டுமல்ல, பெரும்பணம் படைத்த முதலாளிகளும் தொடர்ந்து வேலை செய்து கொண்டேயிருப்பது என்ற பழக்கத்திற்கு அடிமையாகத் தான் உள்ளனர். மற்ற துறைகளில் உள்ள முதலாளிகள் வாழ்க்கையை அனுபவிக்கப் பல வித முன்னேற்பாடுகளை மாதந்தோறும் வருடந்தோறும் செய்து அதன்படி வாழ்ந்தாலும் இங்குள்ள முதலாளிகள் பதட்டமும் பரபரப்புமாகவே வாழ்க்கையைக் கழிக்கின்றனர்.
இந்தக் கூட்டத்தில் பழகியே தொடர்ந்து வேலை செய்வது என்ற பழக்கம் எனது இயல்பான குணாதிசியமாகவே மாறிவிட்டது. இது தான் எங்கள் வீட்டுச் சபாநாயகருக்கும் எனக்குக் கருத்து வேறுபாடுகள் உருவாக முக்கியக் காரணமாகவும் அமைந்து விடுகின்றது.
இதே பழக்கம் இன்று குழந்தைகளுக்கும் தொற்றி ஞாயிறென்றால் பத்து மணி வரைக்கும் தூங்கிக் கொண்டிருக்கின்றார்கள். பல முறை ஆச்சரியமாக ஆழ்ந்து தூங்கும் இவர்களைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே நின்று கொண்டிருப்பேன். ஒரு சலனம் இருக்காது. வெளியே ஒரு உலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. வாகனங்களின் சப்தங்கள் எதுவும் அவர்களைத் தொந்தரவு செய்யாது. அப்போது தான் தூங்கச் சென்றது போல இவர்கள் தூங்கிக் கொண்டிருப்பார்கள்.
பள்ளி செல்லும் நாட்களில் நாள் தோறும் அதிகபட்சம் பத்து மணிக்குள் ஆழ்ந்த தூக்கத்திற்குள் சென்று விடும் இவர்கள் சரியாக ஆறு மணிக்கு எழுந்து தங்கள் கடமைகளைச் செய்யத் தொடங்கி விடுவார்கள். எட்டு மணி நேரமும் முழுமையான தூக்கம். ஆனால் இதனையும் மீறி ஞாயிற்றுக் கிழமையென்றால் கூடுதல் போனஸ். இவர்களை மாற்ற வேண்டும் என்பதற்காக வாக்கிங் செல்ல அழைப்பு விடுப்பேன். அது காற்றில் கேட்ட கேள்வியாக மாறிவிடும். கேலியாக மாறுவதற்குள் வெளியே நடக்கத் தொடங்கி விடுவேன்.
வீட்டுக்குள் பலவற்றை மாற்ற முயற்சித்துள்ளேன். ஆனால் பலன் என்னவோ பூஜ்யம் தான். காரணம் ஒரு சேவலும் நான்கு கோழிகளும் இருந்தாலும் என்னவாகும்? ஒவ்வொரு முறையும் சேவலில் கம்பீரமான கொக்கரக்கோ சப்தம் கூடக் கெக்கெக்கே என்று சிரிப்பொலியில் மறைந்து விடுகின்றது.
இருந்தாலும் இவர்களை மாற்ற வேண்டும் என்பதற்காகவே வீட்டுக்குள் வளர்ந்து கொண்டிருக்கும் போதிமரத்தை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தேன்.
நடைபயில்வோம்.............
முந்தைய பதிவு
பெண்கள் எங்கும் கஷ்டம்தான்படுகிறார்கள் அங்கு ஏற்றுமதி துறையில் வேலை செய்யும் பெண்கள் எப்படி கஷ்டப்படுகிறார்களோ அது போல இங்கு ஐடியில் வேலை பார்க்கும் பெண்களும் அதே போல கஷ்டப்படுகிறார்கள்
ReplyDeleteஇதனைப் பற்றி விரிவாகவே எழுதுகின்றேன். தொடர்ந்து வரும் உங்களுக்கு நன்றி.
Deleteமுன்னுரை போல
ReplyDeleteஅருமையான துவக்கம்
நாங்களும் போதி மரம் குறித்து
அறிய ஆவலுடன்...
நன்றி
Deleteபோதி மரமருகே வர காத்திருக்கிறோம்.
ReplyDeleteஅடுத்த பதிவில்
Deleteமாற்றம் நடந்ததா...?
ReplyDeleteநாம் தான் மாறிக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் தான் வாழ வேண்டியுள்ளது?
Deleteநடைமுறை வாழ்க்கை பெரும்பாலும் எல்லா மனைகளிலும் இதுதான் நிலை.....
ReplyDeleteநன்றி அனுராதா.
Deleteசுவையான ஒரு பதிவு! சேவலின் ஆதங்கத்துடன்!!
ReplyDeleteதாமதமாக எழுதல் என்பது பல வீடுகளில் ஞாயிறு என்றல்ல எந்த விடுமுறை நாளிலும் என்றாகிவிட்டது. ஏன் எப்படி இந்தப் பழக்கம் உருவானது...தொற்றிக் கொண்டது என்று தெரியவில்லை...குறைந்தது 8, 9 மணி வரை தூங்குவதைப் பார்க்கிறேன். அதனால் நான் விடுமுறை நாளில் யாரையேனும் காணச் செல்ல வேண்டும் என்றால், மதியம் அல்லது மாலைதான் செல்ல முடிகிறது. அது கூட சில சமயங்களில் நடப்பதில்லை. அன்றுதான் அவர்கள் பல வேலைகளை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வேளை நான் வேலை பார்க்கும் பெண் இல்லையாதலால் இப்படி எனக்குத் தோன்றுகிறதோ என்னவோ...அவர்களுக்கு விடுமுறை நாள் ஒன்றுதானே சற்று ஓய்வான நாள் என்பதால் இருக்கலாமோ என்று தோன்றுகிறது.
எனக்குச் சிறு வயது முதலே அதிகாலை 4.30 க்கு எழுந்து பழக்கம். ஊர்க்கோயிலுக்குச் சென்று வாசல் பெருக்கித் தெளித்து கோலமிட்டு விட்டு வீடு வந்து வாசல் பெருக்கி, சாணம் இட்டு தெளித்து, கோலம் போட்டு அதன் பின் பாடங்களைப் படித்து 7.20 க்குப் பேருந்தைப் பிடித்து, பள்ளி, கல்லூரி சென்று என்று இப்போது வரை இரவு எத்தனை மணிக்குப் படுத்தாலும் அதிகாலை முழிப்பு கொடுத்துவிடும். ஒரு சில சமயம் மட்டுமே என்னையும் அறியாமல் தூங்கியது...அதுவும் 5.30 க்கு மேல் இல்லை. 6க்கு நடைப்பயிற்ச்சி பல வருடங்களாக...என்று இருப்பதால்..
இப்பழக்கம் சில சமயங்களில் பயண தூரத்தில் இருக்கும் உறவினர் வீட்டில் தங்க நேரும் சமயம், காலையில் அவர்கள் எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்க, நான் மட்டும் முழித்திருந்து என்ன செய்ய என்று தெரியாமல், புத்தகம்வாசிக்கலாம் என்று விளக்கு போட்டால் சத்தம் கேட்டால் அவர்களுக்குத் தொந்தரவாக இருக்குமோ என்று நினைத்து கொட்டக் கொட்ட முழித்திருந்து அதனால் இப்போதெல்லாம் உறவினர் வீட்டிற்குப் போகவே யோசிக்க வேண்டியதாகிறது...
கீதா
இந்த விமர்சனம் எனக்கு அதிக ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் தந்தது. காரணம் நம் அனுபவம் வாசிக்கும் சிலருடன் அவர்கள் வாழ்க்கை அனுபவங்களுடன் ஒத்துப் போகும் போது அதையே விமர்சனத்தின் வாயிலாக படிக்கும் போது உருவான மகிழ்ச்சி எந்த அளவுக்கு இருக்கும் என்பதனை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகின்றேன். அந்த அளவுக்கு மகிழ்ச்சியை தந்தது. காரணம் இதில் உள்ள ஒவ்வொரு வரிகளும் என் வாழ்க்கையில் நடந்த நிகழ்வாகும். நீங்க குறிப்பிட்டது போல கல்லூரிப் பருவம் முடியும் வரையிலும் தினமும் ஊரில் காலை ஐந்து மணிக்கே பழக்கம் உள்ளவன். இதுவே வெளியே தங்கும் போது உங்களைப் போல மொத்த நபர்களும் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பார்கள். நானும் உங்களைப் போலவே என்ன செய்வது இனி? என்று யோசித்தபடியே அமர்ந்திருந்த காலம் என் நினைவுக்கு வருகின்றது. இதன் காரணமாகவே பலரின் வீட்டுக்கு நானும் செல்வதில்லை. அவர்களுக்கும் தொந்தரவு எனக்கும் தொந்தரவாக இருக்கும் என்பதால்.
Deleteநடைமுறைப் பழக்கங்களுக்கு ஏற்றவாறு உடலில் ஒரு கடிகாரம் இருக்கிறதோ என்னவோ.ஒரு சேவலும் நான்கு கோழிகளும் தலைப்பு ரசிக்க வைத்தது
ReplyDeleteநன்றி. மனம் சார்ந்த விசயங்களை தொடர்ந்து எழுதும் போது இதன் சூட்சமம் உங்களுக்குப் புரியும்.
Deleteபோதிமரத்தை எங்களுக்கும் அறிமுகம் செய்து வையுங்கள் ஐயா
ReplyDeleteதமிழ் இளங்கோ அய்யா அவர்கள் விமர்சனத்தின் வாயிலாக கேட்ட கேள்விகள் என்னை எழுதத் தூண்டியது. உங்களைப் போன்றவர்கள் கொடுக்கும் உற்சாகம் இப்போதைய சூழ்நிலையில் எழுத முடியாத நிலையில் இருந்தால் இரவு நேரங்களில் எழுதியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளது. நன்றி.
Deleteariviyal valairchyaal kolium, maatium, uanavu porulayum maatri ya naam ierkayem thanai maatri kondatho? alaram adika sevalum parkamudiyala. adutha padivuku aaval.
ReplyDeleteஞாயிறு என்றாலே நம் இஷ்டப்படி இருக்கலாம் என்று மனது ஒரு வரைக்குள் நுழைந்து விடுகிறது.
ReplyDelete