அஸ்திவாரம்

Wednesday, December 28, 2016

திண்டுக்கல் பூட்டு என்பது பழைய பெருமை?


ஏழாண்டுகள் முடியப் போகின்றது. இணைய உலகில் எட்டாவது ஆண்டை நெருங்கப் போகும் எனக்கு ஒவ்வொரு ஆங்கில வருடப் புத்தாண்டு சமயத்திலும் "கற்றதும் பெற்றதும்" என மனதில் தோன்றுவதை ஒவ்வொரு ஆண்டின் இறுதி நாட்களில் எழுதி வைக்க விரும்புவதுண்டு. காரணம் சென்ற மாதம் நடந்தது என்ன? என்பது மறந்துவிடும் அளவிற்குத் தொழில் வாழ்க்கை நெருக்கடிகள் ஒரு பக்கம் உந்தித்தள்ளினாலும் என் வலைப்பதிவில் எழுதும் எழுத்து என்பது ஒவ்வொரு சமயத்திலும் என்னை என் வாழ்க்கையை, என் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொண்டே வந்துள்ளது. 

நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்தாலும் உருவான அன்றைய நெருக்கடிகளை எழுத்துக்களைச் சமூகப் பார்வையாக மாற்றி வைத்து விட்டு ஆழ்ந்த தூக்கத்தின் மூலம் என் ஆரோக்கியத்தைக் காப்பாற்றிக் கொள்வதுண்டு. 

பல வருடங்கள் கழித்துப் பழைய குப்பைகளைக் கிளறிப் பார்க்கும் போது நாம் எந்த இடத்தில் இருந்து இன்று எந்த இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளோம்? என்பதனை புரிந்து கொள்ள உதவியாக உள்ளது. மற்றபடி இணைய உலகில் மகுடம் சூட்டியவர்களையும், மகுடத்தை இன்னமும் கழட்ட விரும்பாதவர்களையும் வேடிக்கை பார்ப்பதோடு சரி. 

இந்த வருடம் என்ன எழுதலாம்? என்று யோசித்துக் கொண்டிருந்த போது எப்போதும் அவரிடம் இருந்து அவரின் புதிய பதிவு குறித்து மின் அஞ்சல் வந்தது. அதே சமயத்தில் என் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு குழுவில் அவர் என்னை இணைத்து இருந்தார். 

சரியாகக் கடந்த 12 மாதங்களாகத்தான் வாட்ஸ்அப் என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றேன். அதற்கு முன்னால் இந்த வாட்ஸ் அப் என்ற வசதி இல்லாத காரணத்தால் பல இன்னல்களையும் சந்தித்த போதும் கூட விடாப்பிடியாக அதனைப் புறக்கணித்தே வந்துள்ளேன். நம் நேரத்தைக் கொன்று விடும் என்பதே முக்கியக் காரணமாக இருந்தது. நண்பர் ராஜராஜன் தான் புதிய அலைபேசியில் அறிமுகம் செய்து வைத்தார். ஒரு புதிய தொழில் நுட்பத்தை எவ்வாறு? எதற்கு? எந்தச் சமயத்தில்? கையாள வேண்டும் என்பதற்கு வரையறை வைத்துள்ள காரணத்தால் கடந்த ஒரு ஆண்டில் இந்த வாட்ஸ் அப் மூலமாகப் பல உன்னதச் செயல்பாடுகள் என் வாழ்வில் நடந்துள்ளது. 

மிக அழகான தொழில் நுட்பம். எந்தக் குழுவையும் உள்ளே அனுமதிப்பதே இல்லை. முக்கியக் காரணம் ஒரு தொழில் நுட்பத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதனை நம் தமிழர்கள் கற்றுக் கொள்ள இன்னும் பத்தாண்டுகள் தேவைப்படும். குப்பைகளைப் பகிர்வதே பெருமையாகக் கருதுவதால் நேரவிரயமும் மன உளைச்சலும் தான் நமக்குப் பரிசாகக் கிடைக்கும். 

ஆனால் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் என்னையும் வாட்ஸ் அப் (தமிழ் வலைப்பதிவகம்) குழுமத்தில் சேர்த்து இருந்தார். 

அவரின் ஒவ்வொரு பதிவையும் தவறாமல் சென்று வாசித்து விடுவதுண்டு. காரணம் அவரின் வலைப்பதிவு என்பது ஒரு கலைக்களஞ்சியம். புரிந்தவர்களுக்குப் பொக்கிஷம். கற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்குப் பல்கலைக்கழகம். கற்றுக் கொடுத்தாலும் காசு வாங்காத ஆசான். 

பதிவு வெளியிட்ட பத்து நிமிடத்திற்குள் போக்குவரத்து நெரிசல் போன்ற கூட்டத்தை உருவாக்கும் வல்லமை கொண்டவர். வாசிக்கும் அத்தனை பேர்களும் ஒட்டளித்து விடுவார்கள். விமர்சனம் செய்து விடுகின்றார்கள். காரணம் ஏதோவொருவகையில் அவருக்கு நன்றி கூற விரும்பும் ஏராளமான நண்பர்களைப் பெற்றுள்ளார். அவருக்கு வலையுலக நண்பர்கள் "வலைச்சித்தர்" என்று பெயர் வைத்துள்ளனர். 

திண்டுக்கல் என்றாலே பூட்டு என்பதனைத் தாண்டி இன்று உலகம் முழுக்க வாழும் தமிழ் வலையுலகம் அறிந்த ஒரே பெயர் என்றால் அது திண்டுக்கல் தனபாலன் தான் என்பதனை என்னால் தைரியமாகச் சொல்ல முடியும். அவரைக் கிண்டலடித்த பலரும் கிண்டி கிளங்கெடுத்த அத்தனை பேர்களும் இருந்த இடம் இல்லாமல் மறைந்து விட்டனர். ஆனால் இவரோ நாளுக்கு நாள் வாலிப மிடுக்கோடு அதே வேகத்தோடு தான் செயல்பட்டு வருகின்றார். 

எல்லோருக்கும் உள்ளதைப் போல அவருக்கும் தொழில் சார்ந்த நெருக்கடிகள் இருக்கத் தான் செய்கின்றது. ஆனால் அதனையும் தாண்டி அவர் கற்றதையும் பெற்றதையும் பலருக்கும் பலன் அளிக்கும் வகையில் தன் வாழ்க்கையை மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றார். 

நான் எழுதுவது என்பது என் தேவைகளின் பொருட்டே. என்னை இறக்கி வைக்க, சற்று இளைப்பாற, சற்று எழுதக் கற்றுக் கொள்ள என்பது போன்ற எதுவும் அவரிடம் இல்லை. ஆனால் அவர் எழுத்து என்பதோடு நின்று விடாமல் ஒவ்வொருவரின் திறமைகளைக் கடத்தும் சாதனமாகவும் இருக்கின்றார் என்றால் அது மிகையல்ல. 

எனக்கு நன்றாக நினைவிருக்கின்றது. இவரைக் கிண்டல் செய்யாத நபர்களே இல்லை என்கிற அளவிற்குப் பல இடங்களில் இவர் செயல்பாடுகளைப் பற்றிப் பலரும் விமர்சனம் செய்துள்ளார்கள். தனிப்பட்ட குழுமங்களின் வாயிலாக இதைத்தவிரச் சந்திக்கும் போது என்று பல இடங்களில் இவர் பெயர் அடிபடும். நானே பல இடங்களில் கேட்டுள்ளேன். பல சமயங்களில் வாசித்துள்ளேன். ஒவ்வொருவரும் நக்கல் கலந்த பாணியில் விமர்சனம் செய்வர். அப்போது வரைக்கும் அவர் பெயர் தெரியுமே தவிர நேரில் சந்தித்தது இல்லை. அவரின் செயல்பாடுகளை எப்போதும் போல அமைதியாகக் கவனித்துக் கொண்டு தான் வந்துள்ளேன். 

எந்த வலைப்பதிவு என்றாலும் எவர் என்ற பாரபட்சம் இல்லாத இவரின் விமர்சனம் தான் முதலில் இருக்கும். எனக்கே சற்றுக் குழப்பமாக இருந்தது. எப்படி இது சாத்தியம்? இதையே கவனித்துக் கொண்டிருக்க முடியுமா? அடிப்படையான அன்றாட வாழ்க்கையை இவரால் வாழ முடியுமா? என்று பலவிதங்களில் யோசித்துள்ளேன். எனது முதல் புத்தகம் "டாலர் நகரம்" புத்தக விழாவில் கலந்து கொள்ளத் திருப்பூர் வந்தவரை அப்போது தான் முதன் முதலாகச் சந்தித்தேன். அன்று முதல் மனதுக்கு இனியவராக மாறினார். தோழமையுடன் தொடர்ந்த நட்பு குடும்ப ரீதியான உறவாக மாறினார். 

அதன் பிறகு ஒரு நாளில் வெளியாகும் ஒவ்வொரு வலைப்பதிவுகளையும் எளிதாகக் குறுகிய நேரத்தில் அடையாளம் காண்பது என்பது பற்றி எனக்குப் புரியவைத்தார். அவர் சார்ந்த தொழில் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொண்டேன். எங்கள் ஏற்றுமதி துறை சார்ந்த பல விசயங்களில் நேரிடையாக மறைமுகமாகப் பணிபுரிந்ததையும் கண்டு கொண்டேன். நேரிடையாக அவரைச் சந்திக்க வீட்டுக்குச் சென்ற போது முழுமையாகப் புரிந்து கொண்டேன். 

அவரின் தற்போதைய போராடும் தொழில் வாழ்க்கை முதல் தோற்றுப் போன அவரின் கடந்த காலக் காலடித்தடம் போன்ற அனைத்தையும் புரிந்து கொண்ட எனக்குள் உருவான ஆச்சரியம் என்னவெனில் இத்தனையும் கடந்து அவருக்குள் இருக்கும் "பகிர்தல்" என்பது வெறும் பழக்கமாக இல்லாமல் இது பிறவி குணமாக உள்ளது என்பதனையும் தெரிந்து கொண்டேன். 

தனக்குத் தெரிந்த வலைப்பதிவு தொழில் நுட்ப சமாச்சாரங்களை அடுத்தவருக்குக் கற்றுக் கொடுப்பது என்பதனை தனது அன்றாடக் குடும்ப வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கைக்கு இடையே ஒரு தவம் போலவே கடந்த சில ஆண்டுகளாகச் செய்து வருகின்றார்.  வலையுலகத்தில் புதிய நபர்களின் வருகை மற்றும் தொடர்ந்து செயல்பட ஆர்வமும் இவரால் தான் உருவாகின்றது.

அழியப் போகும் பட்டியில் தமிழ் மொழி உள்ளது என்றார்கள். ஆனால் இன்று எவருமே நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உலகமெங்கும் வலைமொழியாகி உள்ளது. தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவரும் தன்னால் பணியைத் தன்னலம் கருதாமல் செய்த காரணத்தால் இன்று தமிழ் மொழி உலக மொழியாகி உலகத்தில் பல பகுதிகளில் வாழும் தமிழர்களை இணைக்கும் பாலமாக மாறியுள்ளது. 

என் பார்வையில் பெருமையாகச் சொல்லிக் கொள்ள மூவர் உண்டு. 

தமிழ்மணம் என்ற திரட்டியை உருவாக்கக் காரணமாக இருந்த காசி ஆறுமுகம். தமிழ் சந்திப்பிழை திருத்தி, தமிழ் எழுத்துப்பிழை திருத்தி முதல் தமிழ் மொழி சார்ந்த பல மென்பொருள் சமாச்சாரங்களை இன்று வரையிலும் ஒவ்வொன்றாகப் படிப்படியாக உருவாக்கிக் கொண்டிருக்கும் நீச்சல்காரன் என்ற பெயரில் உள்ள ராஜாராமன் வரிசையில் திண்டுக்கல் தனபாலன் அவர்களும் உள்ளார் என்பதனை இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன். 

வலைப்பதிவு உலகத்தில், உலகம் முழுக்க உள்ள வலைப்பதிவர் மத்தியில் காலம் கடந்து நிற்கும் பெயர் திண்டுக்கல் தனபாலன். 

வலைப்பதிவில் உள்ள தொழில் நுட்பம் சார்ந்த விசயமாக இருக்கட்டும்?, வலைப்பதிவில் சிறப்பான எவரும் அறியாத தொழில் நுட்பங்கள் மூலம் புதுமையாகப் பதிவுகளை உருவாக்கிப் பல ஆச்சரியங்களையும் உருவாக்குவதாக இருக்கட்டும்? வலைப்பதிவுகளைப் பற்றி அறிமுகம் செய்து வைக்கும் தனி நபர்கள் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்வது, விளக்கவுரை மூலம் சிறப்புச் செய்வது என்று இவரின் ஒவ்வொரு செயல்பாடுகளும் எனக்கு ஆச்சரியம் அளிப்பதாகவே உள்ளது. 

தற்போது வாசிக்கும் பழக்கம் படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகின்றது என்ற குற்றச்சாட்டு இருந்தாலும் அதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த என்ன செய்யலாம் என்று யோசிப்பதோடு நின்று விடாமல் திரட்டி மற்றும் திரட்டியைப் போன்ற பல வடிவங்களில் உள்ள அத்தனை நவீன தொழில் நுட்ப வசதிகளையும் அறிமுகம் செய்வதோடு அதனைப் பகிர்ந்து பலரின் பார்வைக்குக் கொண்டு செல்வது சிறப்பல்ல. உங்களுக்கு இது குறித்து ஏதும் சந்தேகம் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் என்னை அழைக்கலாம் என்று சொல்லும் இவரின் பணியென்பது பெருமைப்படக்கூடிய விசயமாகும். 

2016 ஆம் ஆண்டின் தன்னலம் கருதாத "வலையுலகச் சாதனை மனிதர் "திண்டுக்கல் தனபாலன் அவர்களை வாழ்த்துகிறேன். 




10 comments:

  1. வலையுலகச் சாதனை மாமனிதர் என்றே இவரை அழைக்கலாம்
    யாருக்கும் எளிதில் வாய்க்காத பெருந்தன்மைமிகு மனிதர்
    போற்றுவோம், அவர்காலத்தில் நாமும் வாழ்ந்தோம்
    நாமும் இவரை அறிந்திருந்தோம்,இவரும் நம்மை அறிந்திருந்தார் என்பதெல்லாம்
    நமக்குப் பெருமைதான்

    ReplyDelete
  2. தனபாலன் அண்ணாவின் குணம் வலையுலகில் வேறு யாருக்கும் இல்லை என்றே சொல்லலாம்....

    உங்கள் எழுத்தில் அவருக்கான கட்டுரை... பிரமாதம்.
    வாழ்த்துக்கள் இருவருக்கும்...

    ReplyDelete
  3. சகோ DD அவர்களுக்கு பொருளாதாரப் பிரச்சினைகள் இருந்த போதும் ,பலருக்கும் அவர் மனமுவந்து செய்யும் உதவிகளை பட்டிலியட முடியாது !மதுரையில் பதிவர் திருவிழா சிறப்பாக நடந்ததற்கு அவரும் ஒரு முக்கிய காரணம் !எனக்கும் பல உதவிகள் செய்துள்ளார் !அவரோட நல்ல மனம் வாழ்க !நாடு போற்ற வாழ்க !

    ReplyDelete
  4. என்ன சொல்ல...? எதைப் பற்றி சொல்ல என்றே தெரியவில்லை...

    நன்றி என்கிற உன்னத சொல் தவிர, வேறு எதுவும் உலகில் இல்லை என்றே நினைக்கிறேன்...

    நன்றி... நன்றி... நன்றி...

    ReplyDelete
  5. இந்த பதிவை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்!
    வலைச்சித்தரை பற்றி எல்லா விஷயத்தையும் நீங்களே சொல்லிவிட்டதால் என்னால் எதையும் புதியதாய் கூற ஒரு வாய்ப்பும் தரவில்லையே!
    முதல் கருத்து இட்டு வலைப்பதிவர்களை ஊக்கப்படுத்தும் அருமையான ஒரு ஆன்மா! வாழ்க பல்லாண்டு நலமோடும் வளமோடும்.

    ReplyDelete
  6. சரியான நபரிடம் இருந்து வந்த மிக தெளிவான விமர்சனம் பாராட்டுபவருக்கும் பாராட்டு பெறுபவருக்கும் எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்

    ReplyDelete
  7. நான் வலை பதிவன் அல்லன்,வாசிப்பவன்.மாத்தி யோசி என்பர் ,திருக்குறள் உரை அய்யா DD :சினிமாபாடலில் குறள்ளா or குறளில் சினிமாவா .என நம்மை நினைக்க வைக்கிறார் .அவர் எண்ணும் எழுதும் குறள் தந்த குரல்.வணக்கம்

    ReplyDelete
  8. நண்பர், திண்டுக்கல் தனபாலன் அவர்களைக் கவுரவிக்கும் விதமாக ஒரு பதிவினை எழுதிய தங்களுக்கு நன்றி.

    வலைப்பதிவர்கள் சந்திப்பு அல்லது பயிற்சி முகாம் அல்லது கூட்டம் என்று எது நடந்தாலும், அவரைக் கண்ட மாத்திரத்திலேயே, பலரும் அவரை எதிர்பார்த்து காத்திருந்தவர்களாய் அவரிடம் போய் அவர் நலம் விசாரிப்பதும், அவரிடம் தங்கள் வலைத்தளம் பற்றிய சந்தேகங்களை கேட்பதும் – அடிக்கடி நான் பார்க்கும் காட்சிகள். அவரும் அத்தனை பேருக்கும் மலர்ந்த முகத்துடன் அயராது விளக்கம் தருவார்.

    ஆரம்ப கால வலைத் தளங்களில், Blogspot இல், ரிப்ளை பட்டன் கிடையாது. இப்போது உண்டு. எனவே இது விஷயமாக திண்டுக்கல் தனபாலன் அவர்களை நான் நாடியபோது, அவர்தான் உதவி செய்தார். இது போல பலருக்கும் தொழில்நுட்ப உதவிகள் செய்தவர் அவர். ‘நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லாருக்கும் பெய்யும் மழை’ . வாழ்க அவர் தொண்டு.

    ReplyDelete
  9. நூற்றுக்கு நூறு ஆமோதிக்கிறேன்.அவரை குறை மதிப்பீடு செய்தவர்கள் பலர். அவரது தொழில் நுட்ப அறிவு முறையாக மென்பொருள் பயின்றவரை விட மேலானது.பிரதி பலன் ஏதும் பாராமல் உதவும் பண்பால் பலரும் பலன் அடைந்திருக்கின்றனர்.
    எந்த தொழில் நுட்பத்தையும் கைவசப் படுத்தும் ஆற்றல் பெற்றவர்.
    நல்லதோர் பதிவு . மகிழ்ச்சி ஜோதிஜி சார்

    ReplyDelete
  10. திண்டுக்கல் பூட்டு என்பது பழைய பெருமை? - திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களை 26.10.14 மதுரை பதிவர்கள் சந்திப்பில் சந்தித்தேன். அந்த நிகழ்ச்சி வெற்றிக்கு அவர் தான் பிரதான காரணகர்த்தர், வாழ்த்துகள் திரு திண்டுக்கல் தனபாலன் - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.