ரவி இணையம் மூலம் அறிமுகமானவர். அவரின் இணைய முகவரி வெட்டுக்காடு. தான் பிறந்த ஊரையே தளத்திற்கு வைத்திருப்பவர். நாங்கள் இருவரும் சந்தித்ததே இல்லை. குறுகிய காலத்தில் பழகி, அலைபேசி உரையாடலின் வழியே நெருக்கமானவர்.
குடும்ப உறுப்பினர் அளவில் நெருங்கியவர். பரஸ்பரம் குடும்பம் தொடர்பான விசயங்கள் முதல் அரசியல் வரைக்கும் இருவருக்கும் ஒரே கருத்தோட்டம் மற்றும் அலைவரிசை இருப்பதால் ஒவ்வொரு உரையாடலும் முடிவற்றதாகவே இருக்கும். சமவயது. எந்த நாட்டில் இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அழைத்துப் பேசி விடுவார்.
"டாலர் நகரம்" புத்தக வெளியிட்டு விழாவில் வந்து கலந்து கொண்டு இன்ப அதிர்ச்சி அளித்தவர். எனக்குத் தெரிந்தவரையில் ரவி மேடையில் பேசச் தொடங்கியது என் புத்தக வெளியீட்டு விழாவில் இருந்து தான் என்று நினைக்கின்றேன். ஆனால் இன்று படிப்படியாக வளர்ந்து தான் வசிக்கும் சிங்கப்பூரில் பட்டிமன்றம் நிகழ்வில் கலந்து கொள்ளும் அளவிற்குப் பேச்சாற்றலில் வளர்ந்து கொண்டிருப்பவர். கடந்த நான்கு ஆண்டுகளாக நான் அவரையும் அவர் என்னையும் பரஸ்பரம் எழுத்து ரீதியாகக் கவனித்துக் கொண்டிருப்பதால் இருவருக்கும் இடையே உள்ள புரிதல் இடைவெளி இல்லாமல் இருக்கின்றது.
நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் தன்னுடைய "வெட்டிக்காடு" மற்றும் அவர் மனைவி எழுதிய "கீதா கஃபே" என்ற நூலில் வெளியிட்டு விழா தஞ்சாவூரில் நடக்க இருப்பதைச் சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது. அவர் இணையத்தில் எழுதத் தொடங்கியது முதல் கவனித்து வருபவன் என்ற முறையில் மகிழ்ச்சியைத் தந்தது. 18.12.2016 ஞாயிற்றுக் கிழமை என்பதால் கலந்து கொள்ள முடிவு செய்து அன்றே ரயில் பயணத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தேன்.
விழா அரங்கில் மதியம் நான் தான் முதலில் நுழைந்தேன். நான் பயணித்து வந்த சதாப்தியில் ஈரோடு கதிரும் வந்திருந்தார். ஆனால் இருவரும் சந்திக்கவில்லை. அவர் நேரிடையாகத் தங்கும் விடுதிக்குச் சென்று விட்டார். அரங்கத்தில் ஏற்பாடு செய்திருந்த மதிய உணவை ரவியுடன் சாப்பிட்டுவிட்டு ஏற்பாடு செய்து இருந்த விடுதிக்கு வந்து விட்டேன். சற்று நேரத்தில் புதுகை அப்துல்லா மற்றும் ஓஆர்பி ராஜா இருவரும் விடுதிக்கு வந்து தங்களைத் தயார் படுத்திக் கொண்டு அரங்கத்திற்குச் சென்று விட்டனர். என் அறைக்கு அருகே இருந்த மணிஜி, கேஆர்பி செந்தில், கேபிள் சங்கர், போன்றோர்களுடன் அரங்கத்திற்கு வந்து சேர்ந்தேன்.
வாழும் ஊர் அருகருகே இருந்தாலும் ஈரோடு கதிருடன் அரங்கத்தில் முதல் முறையாக அப்போது தான் சந்தித்துப் பேசினேன். நண்பர் பதிவர் கரந்தை ஜெயக்குமார் அவர்களும் வந்து சேர்ந்தார். அப்பொழுதே அரங்கத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்குக் கூட்டம் இருந்தது. அரங்கத்தில் மருத்துவர் புருனோ மற்றும் அரவிந்தன் கிருஷ்ணமூர்த்திப் போன்றோரை சந்தித்தேன். ஜாக்கி சேகர் தனது மனைவி மற்றும் மகளுடன் வந்திருந்தார். அவர் தான் காணொளி தொடர்பான அனைத்து வேலைகளையும் சிறப்பாகச் செய்து கொண்டிருந்தார்.
விழா தொடங்கியதுமே விழா அரங்கம் நிரம்பியது. வந்திருந்த அத்தனை பேர்களும் மொத்தமாக அனைவரும் என்னை ஆச்சரியப்படுத்தினார்கள். புத்தக விழா என்றால் எத்தனைப் பேர்கள் தற்போதைய சூழ்நிலையில் கலந்து கொள்வார்கள் என்ற எண்ணம் கொண்டவரா நீங்கள்?. ரவியின் புத்தக வெளியீட்டு விழாவில் 400 பேர்களுக்குக் குறைவில்லாமல் கலந்து கொண்டார்கள். என்னை ஆச்சரியப்படுத்திய புத்தக வெளியீட்டு விழா இதுவாகத்தான் இருக்கும்.
பதிவர்கள் சார்பாக அப்துல்லா, கதிர், முனைவர் இளங்கோவன், ஓஆர்பி ராஜா போன்றோர் பேசினார்கள். நிகழ்ச்சியைச் சுரேகா சுந்தர் தொகுத்து வழங்கினார்.
ஆனால் விழாவில் கூடுதல் சிறப்பம்சமாக ரவியின் தொடக்கப் பள்ளிக்கூட ஆசிரியர், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பேசினார்கள். தொடக்கப் பள்ளியில் ரவிக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியரே ரவியின் மேல்நிலைப் பள்ளி ஆசிரியருக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் என்பது கூடுதல் சிறப்பு.
விழாவின் சிறப்பு அழைப்பாளராக நடிகர் மற்றும் எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி அவர்களும் பேசினார். அதே போலக் கீதா அவர்களின் ஆசான், வழிகாட்டி அவர்களும் பேசினார்கள். தஞ்சாவூர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களும் பேசினார்கள். இவர்கள் என்ன பேசினார்கள்?.
நான் ரவி குறித்து மனதிற்குள் வைத்திருந்த சில விசயங்களை அங்கே இருந்த ஒவ்வொருவரும் பேசிய போது எனக்கே சற்று ஆச்சரியமாக இருந்தது. காரணம் அந்த அளவிற்கு ரவி பலரையும் பாதித்துள்ளார்.
சராசரி மனிதர்கள் நம்ப முடியாத அளவிற்குத் தொடக்கம் முதல் தன்னைத் தெளிவாக வடிவமைத்து வளர்ந்துள்ளார். "கல்வியே பெரிய சொத்து" என்பதனை தனது 3 வயதில் அடையாளம் கொண்டு அதன்படியே வளர்ந்து வாழ்ந்து இன்று அவர் அடைந்துள்ள உச்சம் என்பது பெருமைப்படக்கூடியதாகவே உள்ளது. இன்று சிங்கப்பூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் தொலைத் தொடர்புத் துறையில் முக்கிய பொறுப்பில் இருக்கின்றார்.
இவர் எப்படிக் கிராமத்தில் படித்த போது அண்ணா யூனிவர்சிட்டி என்ற பல்கலைக்கழகத்தைக் கண்டுபிடித்து அங்கே போய்ச் சேர்ந்தார்?
இவர் எப்படி நாடு நாடாகச் சுற்றிக் கொண்டு எழுத உட்கார முடிகின்றது?
ஒவ்வொரு தனி மனிதர்களுடன் பழகும் போதும் அவர்களுக்காகத் தன்னை மாற்றிக் கொண்டு சிறிது கூடச் சுயகௌரவம் பார்க்காமல் பண ரீதியான உதவி முதல் நினைவில் வைத்துத் தொடர்ந்து தொடர்பில் வைத்திருந்து தன் நட்பு வட்டத்தைப் பேணிக் கொண்டு வருதல் என்பது நிச்சயம் தற்போதைய சூழ்நிலையில் வாய்ப்பில்லை என்று தான் கருதுவோம்.
ஆனால் இவர் மட்டுமல்ல இவர் மனைவி கீதா அவர்களும் அவர் நட்பு வட்டாரம் என்ற பெயரில் பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்கள் என்கிற ரீதியில் பெரிய கூட்டமே வந்து கலந்து கொண்டார்கள். பல ஊர்கள். பல பெரிய பதவிகள் தொடங்கிச் சாதாரணமானவர்கள் என்பது வரைக்கும் இருவருக்கும் பெரிய பட்டியல் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்.
குடும்ப விழா, நண்பர்கள் விழா என்று பலமுகமாக இந்த விழா இருந்தாலும் எண்ணமும் சொல்லும் ஒரேமாதிரியாக வாழ நினைப்பவர்களுக்கு ரவி இந்த விழாவின் மூலம் முன் உதாரணமாக இருந்தார்.
இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் என்ற பெயரில் இருப்பவர்கள், நானும் எழுத்தாளன் தான் போட்டியில் இருப்பவர்கள் என்ற பெரும் படைபட்டாளங்கள் நடத்தும் விழாவில் காண முடியாக ஒழுக்கமும் நேர்த்தியும் உண்மையும் இந்த விழாவில் இருந்தது.
அரங்கத்தில் இருந்த நண்பர் சொன்ன வாசகம் இது. "இதுவே எழுத்தாளர்கள் விழா என்றால் அரங்கத்தில் பத்துக் கூட்டங்கள் தனித்தனியாக நடந்து கொண்டிருக்கும். இந்த விழாவில் மட்டும் தான் விழாவை நோக்கிய அனைவர் பார்வையும் இருக்கின்றது" என்றார். அது உண்மையும் கூட.
ரவியின் அம்மா முதல் ஆசிரியர்கள், முக்கிய விருந்தினர்கள் என்று அனைவருக்கும் ரவியும் கீதாவும் பொன்னாடை போர்த்தி ஆசி பெற்றனர். ரவி தனது அம்மா அவர்கள் காலில் விழுந்து வணங்கிய போது மகனுக்கும் மகளுக்கும் ஆசிர்வாதம் செய்து உடனே இருவர் கையில் ஆசிர்வாத பணம் கொடுத்ததும் அதே போல ரவியின் மாமனார் (தஞ்சையின் பிரபல மருத்துவர்) மகளுக்கும் மருமகனுக்குத் தங்க மோதிரம் மாட்டி ஆசிர்வாதம் செய்தது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது.
எனக்குத் தெரிந்தவரையில் ரவி கடந்த பத்தாண்டுகளாகத் தமிழ்நாட்டில் தான் பிறந்த கிராமம் முதல் கல்விக்காகக் கஷ்டப்படும் பல மாணவர்கள் வரைக்கும், பல துறைகளில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமலேயே பண உதவி செய்து வருபவர். அதனை விழாவில் ஓஆர்பி ராஜா குறிப்பிட்டு பேசியது சிறப்பான அங்கீகாரமாக இருந்தது.
அரங்கத்தில் வெளியிட்ட புத்தகத்தை வாங்க நினைப்பவர்கள் என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம்? அதே சமயத்தில் அந்தப்பணம் தான் வாழ்ந்த கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கு கல்வி ரீதியான செயல்பாட்டுக்கு வழங்கப்படும் என்று ஏற்கனவே என்னிடம் சொல்லியிருந்தார். அதனையே விழாவில் செயல்படுத்திக் காட்டினார்.
இதனைத் தொடர்ந்து கல்வி செயல்பாட்டின் அடிப்படையில் ஒரு அறக்கட்டளை தொடங்க எண்ணம் இருப்பதை வெளிப்படுத்தினார். கோடி கொடுத்து குடியிருந்த வீடும் கொடுத்த வள்ளல் அழகப்பச் செட்டியார் போல வாழ நினைக்கும் ரவி எண்ணம் ஈடேற வேண்டும்.
அப்துல்லா வரவேற்பு நிகழ்ச்சியில் பேசும் போது நான் என்ன மனதில் நினைத்து இருந்தேனோ? அதனைச் சுருக்கமாக அழகாகப் பேசினார். பொய் பேச விரும்பாத அரசியல்வாதியைத் தமிழகம் அவசியம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஈரோடு கதிர் கீதா கஃபே புத்தகத்தை வெளியிட்டுத் தேர்ந்த மேடைப் பேச்சாளர் போலவே பேசியது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது.
ரவி என்னிடம் நவம்பர் மாதம் விழா குறித்துத் தகவல் தெரிவித்து விட்டு வெட்டிக்காடு மற்றும் கீதா கஃபே புத்தக வடிவத்தை அனுப்பி ஒரு பார்வை பார்த்து விடுங்கள் என்றார். இரண்டு நாட்கள் பார்த்து படித்து விட்டு அவரை நான் அழைத்துச் சொன்ன வார்த்தைகள் இது.
"இது இலக்கியமில்லை. நேர்ந்த எழுத்தாளர் நடையில்லை. ஆனால் குறிப்பிட்ட காலத்தில் வந்த முக்கியமான புத்தகம் இது. குறிப்பாகத் தமிழகக் கிராமங்களின் வாழ்க்கை முறைகளை எதிர்காலத்தில் எவராவது ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் உங்கள் புத்தகம் நிச்சயம் உதவி புரியக்கூடியதாக இருக்கும்" என்று சொல்லி தொடர்ந்து அவரிடம் பேசிய போது ரவி கூச்சத்தில் நெளிந்தார்.
ஆனால் இந்த வார்த்தைகளை அப்படியே மாறாமல் முனைவர் இளங்கோவன் பேசிய போது தெரிவித்தார்,
இப்போது சொல்லுங்கள் ரவி. நான் உங்களிடம் என்ன சொன்னேன் என்பது உங்கள் நினைவில் இருக்கும் தானே? நான் சொன்னவற்றைத்தான் வேல ராமமூர்த்தி அவர்கள் வரைக்கும் அவரவர் பாணியில் பேசினார்கள்.
வாழ்த்துகள் ரவி.
தொழில் வாழ்க்கையில் வென்றவர்கள் குடும்ப வாழ்க்கையில் தோற்றுவிடுவதுண்டு. ரவியின் மகள் இங்கிலாந்து சர்வதேச பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வருகின்றார். அவர் விழாவில் கடைசியாகப் பேசினார். மகன் சிங்கப்பூரில் சர்வதேச பள்ளியின் பயின்று வருகின்றார். குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை இரண்டிலும் வென்றவர். இதில் இரண்டிலும் வென்றவர்கள் தங்கள் வந்த பாதையை மறந்து விடுவார்கள். ரவி தான் பிறந்த மண்ணை, கிராமத்தை, ஆசிரியர் எவரையும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.
விழாவில் தன் கிராமம் சார்ந்த நண்பர்கள், உறவினர்கள், பழக்கத்தில் உள்ளவர்கள் அனைவரையும் வரவழைத்து மரியாதை செய்து இருந்தார். மூன்றிலும் வென்றவர். கடைசியாக நட்புலகத்தைப் பேணுவதில்லை. நமக்கென்ன? என்ற எண்ணம் இயல்பாக உருவாகி விடும். ஆனால் இதிலும் நேர்த்தியாக நட்புலகத்தை வடிமைத்த ரவி ஆச்சரியப்படக்கூடிய வகையில், பெருமைப் படத்தக்கவராக எனக்குத் தெரிகின்றார்.
மொத்தத்தில் ரவி அனைவராலும் ஆசிர்வதிக்கப்பட்டவர். லட்சத்தில் ஒருவருக்குத் தான் இது போன்ற வாழ்க்கை அமையும். நான் பார்த்த வரைக்கும் நடிகர் சிவகுமார் அவர்களுக்குப் பின் ஆச்சரியப்பட்ட மனிதர் ரவி என்றால் அது மிகையல்ல.
எழுத்துலகத்தில் நாம் எழுதும் எழுத்துக்கள் அனைத்தும் உண்மை என்று சொல்ல முடியாது. சில சமயம் சிலர் மட்டும் உண்மைக்கு அருகே சென்று முயற்சிப்பதுண்டு. ஆனால் ரவி தான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள அத்தனை பேர்களும் உயிருடன் வந்திருந்து வாழ்த்தியது ஆச்சரியம் என்றால் அத்தனை பேர்களும் ரவி சொன்ன மாதிரியே இருந்தது அதைவிட எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
விழாவின் கடைசி வரைக்கும் கூட்டம் கலையாமல் இருந்தது முதல் ஆச்சரியம். அதுவே விழா முடிந்து கடைசியில் கூட்டத்தினர் விழா நாயகன் நாயகிக்கு விழாவில் கலந்து கொள்ள வந்தவர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அன்பு செலுத்த மொத்த கூட்டம் முண்டியடித்ததைப் பார்த்துக் கொண்டே நானும் கதிரும் அவசரமாக ரயில் நேரம் பார்த்து ஓடி வந்தோம்.
ரவி அரங்கத்தில் தனிப்பட்ட உரையாடலில் பேசும் போது இந்த விழாவை சிங்கப்பூரில் நடத்துவதாக இருந்தது என்ற எண்ணத்தைச் சொன்னார். ஆனால் காலம் என்பது மிகச் சரியாக யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதனை உணர்த்திவிடும். உங்களின் சரியான நேர்த்தியான, தெளிவான வாழ்க்கைக்கு இந்த விழா மூலம் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்பதை இனிமேலாவது புரிந்து கொள்ளுங்கள் ரவி,
பிறந்த ஊரில், பழகிய மனிதர்களிடம் இருந்து அங்கீகாரம் கிடைப்பது என்பது தமிழ்நாட்டில் குதிரைக் கொம்புக்குச் சமமானது. ஆனால் அது உங்களுக்கு இயல்பாக கிடைத்துள்ளது. என்னுடன் வந்த நண்பர்கள் அனைவரின் எண்ணமும் இதுவாகவே இருந்தது.
// அந்தப்பணம் தான் வாழ்ந்த கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கு கல்வி ரீதியான செயல்பாட்டுக்கு வழங்கப்படும் //
ReplyDeleteநல்ல உள்ளத்திற்கு பாராட்டுகள்... வாழ்த்துகள்...
விழா நிகழ்வின் விவரிப்பு, உங்கள் பாணியில் அருமை...
வணக்கம்
ReplyDeleteநல்ல மனதுக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் நட்பு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிறப்பான விழா ஐயா
ReplyDeleteவிழாவில் தங்களைச் சந்தித்ததில் பெரு மகிழ்வு அடைந்தேன்
நன்றி ஐயா
மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteசிங்கப்பூரில் இருந்த போது ரவியுடன் பேசியிருக்கிறேன். தற்போது இது போல ஒரு விழாவில் ரவியை திரும்ப காண்பது மகிழ்ச்சியாக உள்ளது.
ரவி மென் மேலும் பல புத்தகங்கள் எழுத வாழ்த்துகள்.
ஜோஜிஜி உங்களுடைய தகவல்களும் ரவி பற்றிய செய்திகளும் நன்றாக இருந்தது. ரவி குறித்த தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது.
சொல்ல மறந்து விட்டேன்.. அட்டைப் படம் நன்றாக உள்ளது :-)
ReplyDeleteஅருமையான தொகுப்பு ஜோதிஜி... மகிழ்ச்சி
ReplyDeleteகதிர்
தகவல்கள் அருமை
ReplyDeleteமகிழ்ச்சி. வாழ்த்துகள்.
ReplyDeleteவெட்டிக்காடு கீதா கஃபே நூல்கள் பற்றி எனது வலையில் ஒரு பதிவு எழுதியுள்ளேன் ஐயா
ReplyDeleteநேரமிருக்கும்பொழுது வருகைதர அழைக்கின்றேன், நன்றி
http://karanthaijayakumar.blogspot.com/2016/12/blog-post_25.html
நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
ReplyDelete