அஸ்திவாரம்

Sunday, February 15, 2015

வலைத்தமிழ்

"ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்" தொடர் வலைத்தமிழ் இணையதளத்திற்கு முதல் தொடர் என்கிற ரீதியில் எங்களுக்கு இது முதல் அனுபவம். சில வாரங்களுக்கு முன்புதான் ஆரம்பித்ததுபோல் தோன்றினாலும் இருபது வாரங்களைக் கடந்து வாசகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் தொடராக வெற்றிகரமாக வெளிவருவதற்கு முழுமுதல் காரணம் திருப்பூர் ஜோதிஜியின் எழுத்து நடை மற்றும் தொடருக்கு ஏற்ற வண்ண வண்ண படங்கள் ஆகியவையே என்று கருதுகிறேன். 

ஒரு தொழிற்சாலை குறித்து எழுதப்பட்ட இந்தத் தொடருக்கும் வாசகர்களிடம் கிடைத்த ஆதரவும், அவர்கள் வழங்கிய கருத்துரையும் எங்கள் தளத்திற்குச் சிறப்பான அங்கீகாரத்தைத் தந்தது என்றால் அது முற்றிலும் உண்மையாகும். எந்தத் துறையைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் வாசகர்கள் படிக்க விரும்பும் நடையில், எளிய மொழியில் எழுதினால் அது வெற்றியைப் பெறும் என்பதற்கு இந்தத் தொடர் முக்கிய உதாரணமாகும். 

இந்தத் தொடர் ஆரம்பித்தது முதல் இன்று வரை பல்வேறு ஆலோசனைகளை, வாசகர்களின் மன ஓட்டங்களை அறிந்து, தன் அனுபவங்களைப் பகிந்துகொண்டு வலைத்தமிழ் ஆசிரியர் குழுவினருடன் கைகோர்த்துப் பயணித்தது எங்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவம். 

ஜோதிதியின் ஆலோசனையின்பேரில் பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்களைத் தளத்தில் செய்தோம், இன்னும் ஒருசில மாற்றங்கள் விரைவில் முடிய இருக்கிறது. இது வலைத்தமிழ் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். 

"ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்" தொடர் மாடசாமி, ரம்யா, ராஜா போன்ற பாத்திரங்கள் வழியே தங்களின் வலியை, வாழ்க்கையை மிக நேர்த்தியாகப் பதிவு செய்து இன்றைய எதார்த்த நிலையை ஆசிரியர் ஜோதிஜி படம்பிடித்துக் காட்டியுள்ளார். 

ஒவ்வொரு தொழிலும் உழைப்பவர்கள் மட்டும் ஒரு பக்கமும், உழைப்பை உறிஞ்சு வாழ்பவர்கள் மறுபக்கமும் இருப்பது இயல்பு தானே? இதைத்தான் இந்தப் பாத்திரங்கள் வழியே ஜோதிஜி படம் போட்டுக் காட்டியுள்ளார். 

இடையிடையே ஆயத்த ஆடைத்துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் வாழ்க்கை சார்ந்த பல்வேறு குறிப்புகள், முதலாளிகளின் மனோபாவம், தான் சந்தித்த அனுபவங்கள் வழியே உணர்ந்து எழுதிய மேற்கோள்கள் போன்றவற்றை மிக நேர்த்தியாக எழுதியுள்ளார். 

ஒவ்வொரு தொழிலும் பணத்தைத்தான் முதன்மை படுத்துகின்றது. பணம் தங்கள் வாழ்க்கையைச் சிறப்படைய வைக்கும் என்று நம்புகின்றார்கள். ஆனால் எத்தனை பணம் சேர்ந்தாலும் எவரும் நிம்மதியாக இருப்பதில்லை. அதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன? என்பதனை தனக்குரிய பாணியில் தான் பார்த்த தொழில் சமூகத்தை வைத்து பலவித கருத்துக்களைச் செறிவாக வழங்கியுள்ளார். 

எல்லா உழைப்புக்குப் பின்னாலும் வெற்றி கிடைத்து விடுவதில்லை. குறிப்பிட்ட உழைப்பைத் தவிர வேறு எதற்கும் இங்கே எளிதில் அங்கீகாரம் கிடைத்து விடுவதில்லை. ஏன்? அதற்கான காரணங்கள் என்ன? என்பதனை தன்னை உதாரணமாகக் கொண்டு தான் பெற்ற தோல்வியை வெட்கப்படாமல் எடுத்துரைத்து அதன் வழியே புதிய கருத்துக்களை வழங்கியுள்ளார். இவர் இந்தத் தொடரில் எழுதியுள்ள பல நிகழ்வுகளில் நேர நிர்வாகம் குறித்து எழுதப்பட்ட பல சம்பவங்கள் அனைவருக்கும் பயன்தரக்கூடியது. 

மொத்தத்தில் "ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்" ஆயத்த ஆடைத்துறையை மட்டும் விவரித்துச் செல்லாமல் இதன் மூலம் அனைவருக்கும் பயன்படும் வகையில் ஒரு தொழிற்சாலையைத் தாண்டிய கருத்துக்களாக விளங்குகிறது. 

ஒவ்வொரு வாரமும் பதியப்படும் வாசகர்களின் கருத்துக்கள் இந்தத் தொடரின் வெற்றியை உறுதிசெய்தது. இந்தத் தொடரைப் தொடர்ந்து படித்துவிட்டு அமெரிக்காவில் பணிபுரியும் பேராசிரியர் ஒருவர் அழைத்து ஜோதிஜியின் "ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்" போல், தமிழகக் கண்டுபிடிப்புகள், குறிப்பாக ஜி.டி.நாயுடு குறித்துத் தான் ஒரு தொடர் எழுத வலைத்தமிழில் வாய்ப்பிருக்குமா? என்று எங்கள் குழுவினரிடம் கேட்டார். 

மேலும் ஜோதிஜியின் "ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்" என்னை வெகுவாகக் கவர்ந்தது என்று குறிப்பிட்டார்.. இதுபோல் இங்கே இந்தத் தொடர் வெளியானது முதல் எங்களுக்குப் பலதரப்பட்ட இடங்களில் இருந்தும், பல உயர்பதவிகளில் வகிப்பவர்களிடமிருந்து ஆக்கப்பூர்வமான உற்சாகமான பாராட்டுக்கள் வந்து கொண்டே இருந்தன. 

ஜோதிஜி கடந்த 2009 முதல் 'தேவியர் இல்லம்' என்ற வலைபதிவின் மூலம் பலதரப்பட்ட விசயங்களைக் குறிப்பாகத் தற்காலச் சமூகம் குறித்து, தான் கடந்து வந்த வாழ்க்கை குறித்து எழுதி வருகின்றார். 

தன் அனுபவங்களை எவ்வித பாசாங்கு இல்லாத நடையில் பட்டவர்த்தனமாக எழுதுவது இவரின் சிறப்பாகும். தான் பணிபுரியும் ஆயத்த ஆடைத்துறையில் உள்ள அக்கிரம நிகழ்வாகட்டும், ஈழம் சார்ந்த நாம் அறியாத தகவலாகட்டும் எதையும் மேம்போக்காக எழுதாமல் தான் உணர்ந்தவற்றை, தன் மொழியில் எழுதிவிட்டு நகர்வது இவரின் சிறப்பு. 

தான் எது எழுதினாலும் அதில் ஒரு சமூக நேர்மை, அன்றாட வாழ்வியலில் இன்றைய நெருக்கடிகள் குறித்துப் பதிவு செய்துவரும் ஜோதிஜி, இதில் தமிழகத்தின் இன்றைய சூழலில் இயங்கும் ஒரு தொழிற்சாலையின் நிலை, அதன் உட்கட்டமைப்பு மற்றும் சவால்கள், தொழிற்சாலையை நடத்தும் முதலாளிகளின் நிலை, தொழிலாளர்களின் நிலை, அரசு மற்றும் போட்டியாளர்களின் சவால்கள் என்று பல்வேறு கோணத்தில் இந்தத் தொடரை செதுக்கியுள்ளார். 

இவர் இதற்கு முன்னால் "டாலர் நகரம்" என்றொரு புத்தகத்தின் வாயிலாகத் திருப்பூர் குறித்துப் பொதுவான பார்வையைப் பதிந்துள்ளார். அதனைத் தொடர்ந்து வலைத்தமிழ் இணைய இதழில் திருப்பூருக்குள் உள்ள தொழிற்சாலையைக் குறித்து எழுதியிருப்பது மிகவும் பொருத்தமான ஒன்ற. பாகம் ஒன்று பாகம் இரண்டு என்பதாக எடுத்துக் கொள்ளலாம். 

இது தொழிற்சாலைகள் குறித்த ஆவணம், குறிப்பாகத் திருப்பூர் ஆடைத் தொழில் குறித்த முழுமையான ஆவணம். இது ஒரு நூலாக வெளிவரும்போது இந்தத் துறையில் வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்கள், தொழில் ஈடுபட்டு வரும் தொழில்முனைவோர் என்று பலருக்கும் பயனளிக்கும். 

இதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்பது தமிழ் தாண்டி அனுபவங்கள் சென்று சேர வழிவகுக்கும். இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விரைவில் வெளியிட வாலைத்தமிழ் குழு இசைந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.. 

தொடர் நிறைவடையும் இந்தத் தருணத்தில் இந்த முதல் தொடரை எழுதிய ஜோதிஜிக்கு வலைத்தமிழ் ஆசிரியர் குழு சார்பாக எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

இதன்மூலம் வலைத்தமிழ் ஆசிரியர் குழுவிற்குக் கிடைத்த அனுபவமும், ஜோதிஜியின் எழுத்துக்களைத் தொடர்ந்து படித்து வரும் இணைய நண்பர்களின் ஒத்துழைப்பும், இத்தொடர் மூலம் தானும் தன் அனுபவங்களைப் பகிர வாய்ப்பிருக்குமா என்று கேட்டுவரும் எழுத்தாளர்களுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.. 
நன்றி.. 

ஆசிரியர் குழு சார்பாக 

ச.பார்த்தசாரதி 
U.S.A


தொடர்புடைய பதிவுகள்

Monday, February 09, 2015

உணர்வுகளை வாசித்து, வெற்றிக்கு வழிகாட்டும் ஆவணம்

திருப்பூர் பனியன் தொழிலில் தான் நுழைந்தது முதல் சந்தித்து வரும் பல்வேறு நிகழ்வுகளை, அந்த நகரம் பிறமாவட்டங்களிலிருந்து புலம் பெயர்ந்து வரும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை உள்வாங்கிக் கொண்டு வாழவைப்பதை, வாழ்ந்தவர்கள் வீழ்ந்ததை, ஏற்றுமதி மிகுதியினால் அந்நிய செலாவணி மிகுந்திருப்பதைத் தனது டாலர் நகரம் புத்தகத்தில் எழுதியிருந்தார்.

வலைதமிழ் என்ற இணைய இதழில் தொடராக எழுதி வந்து தற்போது மின்நூலாக வந்திருக்கும் ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் அதன் இரண்டாம் பாகம் என்றும் சொல்லலாம், 

பின்னலாடை தொழிலோடு இணைந்து அதில் உழலும் முதலாளிகள் முதல் அடிமட்ட தொழிலாளி வரை உள்ள மனிதர்களை வாசித்த வரலாறு என்றும் சொல்லலாம். 

திருப்பூர் எனது சொந்த ஊர். நான் 4 வகுப்பு வரை அங்குக் கொங்கு நகர் நகராட்சி பள்ளியில் படித்துவிட்டு, பின்னர்த் திண்டுக்கல்லில் பள்ளிக் கல்வியைத் தொடர்ந்தாலும், வருடந்தோறும் விடுப்பிற்குத் திருப்பூர் வந்து கொங்குநகர், பன்சிலால், தனலட்சுமி மில் ரோடு, யூனியன் மில் ரோடு, கஜலெட்சுமி தியேட்டர், டைமண்ட் தியேட்டர் பகுதி, ராயபுரம், ஏற்றுமதியில் நிராகரிக்கப்பட்டு 2ம் தரம் (செகண்ட்ஸ்) உலாவரும் காதர்பேட்டை எனச் சுற்றிச் சுற்றி வந்தது, முன்சீப் சீனிவாசபுரம் (தற்போதைய திருப்பூர் திருப்பதி கோவில் தெரு) ல் உள்ள பஞ்சாலை தொழிலாளர் சங்க தலைவர்களின் நடவடிக்கைகளைப் பள்ளிப்பருவத்திலிருந்தே கண்காணித்து வந்தது போன்ற வற்றால், நண்பர் ஜோதிஜியின் தொடரின் ஒவ்வொரு அத்தியாயம் வெளி வந்த போதும் நுனிப்புல் மேய்வது போல் சில வரிகளை மட்டும் படித்துவிட்டு அறிவாளி திரைப்படத்தில் எஸ்.வரலட்சுமி நடிகைக்குச் சப்பாத்தி செய்யத் தங்கவேலு சொல்லிக் கொடுக்கும் போது ஒவ்வொரு நிலையிலும் அதுதான் எனக்குத் தெரியுமே என்பது போல் நான் அருகில் இருந்து சுவாசித்த பனியன் தொழிலின் சில விபரங்களை அதுதான் எனக்குத் தெரியுமே என்று நகர்ந்திருக்கிறேன். 

ஆனால் முழுத் தொடரும் முடிந்து நண்பர் மின்நூல் வடிவில் பதிவேற்றியபிறகு பதிவிறக்கம் செய்து ஒரு விடுப்பு நாளில் தொடர்ந்து படித்த போது விறுவிறுப்பும், சுவாரசியமும் தொற்றிக் கொண்டது என்றால் அது மிகையல்ல. 

தனியார் தொழிலில் ஒரு நிறுவனத்தை விட்டு மற்றொரு நிறுவனத்திற்குத் தொழிலாளிகள் மாறுவது என்பது யதார்த்தமாக நிகழக் கூடிய ஒன்றே. அந்த வகையில் ஒரு நிறுவனத்தின் நிர்வாகப் பிரிவில் பணியாற்றி வந்த ஜோதி கணேசன் மனித வள மேம்பாடு மற்றும் நிர்வாகத்திறன் இணைந்த ஒரு பொறுப்பில் புதிய நிறுவனம் ஒன்றில் உள் நுழைந்தது முதல் அங்குள்ள பிரச்சனைகளை ஆழ்ந்து உணர்ந்து படிப்படியாக அவற்றைக் களைந்து வெற்றி கண்ட கதையைத் தொடர் அருமையாகப் படம் பிடித்துக் காண்பிக்கிறது. 

பொதுவாக ஒரு தொடரை, அல்லது அது தொகுப்பாகப் புத்தகமாக வெளிவருகையில் அதை வெளியிடும் நிறுவனத்தைச் சார்ந்தவர் தன்னுடைய வணிகமும் அதில் இணைந்துள்ளது என்கிற சுயநலத்தில் அந்தத் தொடரைப் பற்றி, புத்தகத்தைப் பற்றி உயர்வாக ஒன்றிரண்டு பக்கங்கள் பதிப்புரை எழுதுவது இயல்பு. 

ஆனால் வலைதமிழ் இணைய நிறுவனத்தினர் நண்பர் ஜோதி கணேசனின் தொடருக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்பினை கண்டு திக்கு முக்காடி, மின்நூலுக்கு எழுதியிருக்கிற நெடிய பதிப்புரையிலிருந்தே தொடரின் வெற்றியை நாம் உணர முடிகிறது. 

என் தம்பி ஒருவன் இன்று மிகப்பெரும் நிறுவனமாக வளர்ந்து நிற்கின்ற ஒரு பனியன் நிறுவனத்தில் படிப்படியாக வளர்ந்து பொதுமேலாளராக அந்த நிறுவனத்தில் ஒரு அங்கமாக வளர்ந்து ஏறக்குறைய ஒரு நாளைக்கு 14 முதல் 16 மணி நேரம் அந்த நிறுவனமே கதியென்று இருக்கிறான். அவனது முதல் மனைவி அந்த நிறுவனம், 2 வது மனைவிதான் இல்லற வாழ்விற்குத் தேர்வுசெய்து மணம் முடித்துக் கொண்ட மனைவியும், குழந்தைகளும். அத்தகைய dedicated அர்ப்பணிப்பான உழைப்புத்தான் இந்த உயரத்திற்கு அவனைக் கொண்டு வந்திருக்கிறது. 

அது போல திருப்பூர் பின்னலாடை தொழிலோடு ஐக்கியமாகிவிட்ட ஜோதிஜியின் அர்ப்பணிப்பை அவருடைய விவரிப்புகளிலிருந்து உணர முடிகிறது. அன்றாடம் வேலை தேடி வருபவர்கள், வேலையின் உள் நுழைந்து சூட்சுமங்களைப் புரிந்து கொண்டு காலூன்றி வெற்றி பெறுபவர்கள், சோம்பேறித்தனத்தால் பாதியில் விட்டு விட்டுத் தோற்பவர்கள், சம்பாதிப்பதில் பெரும்பகுதியை டாஸ்மாக் கில் இறைப்பவர்கள், நிறுவனத்தில் பணியில் இருந்து கொண்டே நிறுவனத்திற்குத் துரோகம் இழைப்பவர்கள் இப்படிப் பலரைப்பற்றி விவரித்துச் செல்கிறது தொடர். 

பஞ்சிலிருந்து நூலாகி, நூல் துணியாகி, துணி வெள்ளைக்கப்பட்டு, அதில் கலர்கள் சேர்க்கப்பட்டு, பல வடிவங்களில் வெட்டப்பட்டு, ஓரிடத்தில் தைக்கப்பட்டு, ஓரிடத்தில் தரம் பிரிக்கப்பட்டு, ஒரிடத்தில் பெட்டியில் அடுக்கப்பட்டு வணிக மையத்திற்குச் செல்லும் வரை பல உப தொழில்கள் அதைச் சார்ந்துள்ளது. அந்த விபரங்களைப் புரிந்து கொண்ட பல சாதாரணத் தொழிலாளிகள், சில வருடங்கள் தொழில் பழகிவிட்டு, தனக்குத் தெரிந்த மேற்சொன்னவற்றில் ஏதேனும் ஒன்றை உப தொழிலாகத் துவங்கிக் கொண்டு, தான் முன்னர்ப் பணி புரிந்த நிறுவனத்திலிருந்தே ஆர்டர்கள் பெற்று வெற்றிப் படியை தொட்டவர்கள் ஏராளம். 

தொழில் சார்ந்த நிர்வாகவியலில் நண்பரின் தொடரை ஒரு பாடமாகவே வைக்கலாம். அத்தனை நெளிவு, சுளிவுகளை விவரித்துள்ளார். ஏற்றுமதி தொடர்பாகப் பையர் என்று சொல்லப்படுகிற வெளிநாட்டுப் பிரதிநிதிகள், அல்லது அவர்களின் முகவர்கள் வந்து பார்த்து, (சாம்பிள்) மாதிரி வாங்கி அனுப்பி, ஆர்டர் ஏற்கப்பட்டு மிகுந்த எதிர்பார்ப்போடு பலரின் கடுமையான உழைப்பை செலுத்தி தயார் செய்து இறுதிநிலை வருவதற்குள் நெய்தலில், சாயமேற்றுவதில், ஆடை வடிவமைப்பில், பட்டன் அமைப்பதில், ஜிப் அமைப்பதில், அளவில் இப்படி ஏதேனும் ஒரு விஷ‌யத்தினால் சிறு தவறு நேர்ந்தாலும் ஒட்டு மொத்த ஆர்டரும் ரத்தாகி அடிமாட்டு விலையில் காதர்பேட்டையை வந்தடைந்துவிடும். 

அந்த ஆர்டருக்காக உழைத்த முதலாளி எழுந்து நிற்க பல வருடங்களாகிவிடும் என்பதை அருமையாகச் சொல்லியிருக்கிறார் தொடரின் ஆசிரியர். 

காரைக்குடி நகரில் படிப்பை முடித்துப் பிழைப்பிற்காகத் திருப்பூர் புலம் பெயர்ந்து, நுழைந்ததிலிருந்து இது தான் தனது பிழைப்பிற்கான ஊன்றுகோல் என்று பின்னலாடை தொழிலை நேசித்து, அதன் ஒவ்வொரு அணுவையும் சுவாசித்து, வெற்றியடைந்ததை, இடையில் 30 ஆண்டுகளாகச் சந்தித்த இடைஞ்சல்களை, காயங்களை, அதிலிருந்து மீண்டு எழுந்து நின்றதை மிகச் சரியாக ஆவணப்படுத்தியிருக்கிறார் நண்பர் ஜோதி கணேசன். 

ஒரு தொழிற்சங்க நிர்வாகியான எனக்கு ஒரே ஒரு நெருடல், குழந்தை தொழிலாளர்- உழைப்புச் சுரண்டல், தொழிலாளர் நலச்சட்டங்களைப் பல நிறுவனங்கள் பின்பற்றாமலிருப்பது, உரிமைகள் கோர ஒன்றிரண்டு பேர் ஒன்றிணைந்தால் அவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்வதைக் காட்டிலும் அவரை உடனே வெளியேற்றுவது என்கிற முதலாளித்துவம் ஆகியவையும் இந்த நகர் முழுவதும் நிறைந்திருப்பதை விரிவாகச் சொல்லியிருக்கலாம் என்று எண்ணினேன். 

மற்றபடி இந்தத் தொடருக்கு விமர்சனம் எழுதிய அனைவரும் பல விபரங்களைச் சுட்டிக் காண்பித்தாலும், இறுதியில் இது தொழிலாளியாக, முதலாளியாக, நிர்வாகியாக எவ்வாறாகிலும் இந்தப் பின்னலாடை தொழிலில் நுழைபவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்று சொல்லியிருப்பதோடு நானும் உடன்படுகிறேன். 

நிச்சயமாக அவரின் தொழிலில் உள்ள stress, tension ஆகியவற்றிலிருந்து விடுபட நிச்சயம் அவரின் எழுத்து அவருக்கு உதவியாக உடனிருக்கும். ஜோதிஜி இன்னும் பல வெற்றிப்படிகளைக் கடக்க வாழ்த்துக்களுடன் 

தோழமையுடன் 
எஸ்.சம்பத். மதுரை.




தொடர்புடைய பதிவுகள்






Wednesday, February 04, 2015

கதை போல எழுத முடியுமா?

தமிழ் வலையுலகில் பிரபலமானவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களைப் பற்றி எழுதுபவர்களே. ஆனால் தனக்கென்று ஒரு களத்தை ஏற்படுத்திக் கொண்டு தான் சார்ந்த  துறையை சமூகப் பார்வையுடன் எழுதுபவர்கள் மிகச் சிலரே. அவர்களில் தனி முத்திரை பதித்தவர் தேவியர் இல்லம் என்ற வலைப்பூவில் எழுதிவரும் அன்பிற்குரிய ஜோதிஜி அவர்கள்.  

2013ஆம் ஆண்டு  வெளிவந்து வெற்றி பெற்ற "டாலர் நகரம்" என்ற புத்தகத்தின் வாயிலாக  திருப்பூரை படம் பிடித்துக் காட்டிய ஜோதிஜி "ஈழம் -வந்தார்கள் வென்றார்கள்" "வெள்ளை அடிமைகள்"  "கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு" போன்ற மின்நூல்களின் மூலமாக இணையத்தில் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு நன்கு அறிமுகமானவர். 

இந்த நூல்கள் 50000 முறைக்கு மேல் பதிவிறக்கம்  செயப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது 

சமீபத்தில் வலைத்தமிழ் இணைய இதழுக்கு "ஒரு தொழிற்சாலைக் குறிப்புகள் "என்ற தொடரை இருபது வாரங்களாக எழுதி  வந்தார். ஆயத்த ஆடைத்  தொழிலின் பின்னணியை விரிவாக   சொன்ன  இதுபோன்ற ஒரு நூலை இதுவரை படித்ததில்லை. ஒரு குறிப்பிட்ட தொழிற்சார்ந்தவற்றை எந்தக் கல்லூரியிலும் கற்றுத் தரமுடியாத நுணுக்கங்களை   சுவாரசியமான நாவல் போல 20 அத்தியாயங்களாகப் படைத்தளித்துள்ளார். 

இத்தொடரை வாசித்தவர்களிடம்  இருந்துவந்துள்ள விமர்சனங்களை வைத்தே இத் தொடரின் கருத்தாழத்தை அறிந்து கொள்ள முடிகிறது. படிப்பவர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதே ஒரு படைப்பின் சிறப்பு. அந்த வகையில் இத் தொடர் பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்பதில் ஐயமில்லை 

ஆயத்த ஆடைகளே தற்போது அதிகமாக விரும்பப் பட்டு வருகின்றன . அதன் ரிஷிமூலம் என்ன என்பதை  இத் தொடர் எடுத்துரைக்கிறது.ஒரு ஆறு மலையில் உற்பத்தியாகி  நிலத்தில் வீழ்ந்து காடு மேடுகளை கடந்து, கற்களை உடைத்து  சமவெளிகளில் சஞ்சரித்து  பின்னர் கடலை அடைகிறது. அது போலவே ஆடைகளும் பருத்தியாய் விளைந்து நூலாய் மாறி இயந்திரங்களாலும் மனிதர்களின் வியர்வை சிந்தும் உழைப்பாலும் ஆடையாக  உருப்பெற்று  அங்காடிக் கண்ணாடிகளில் அழகாய் தவம் இருந்து நம் உடலை அடையும் வரை, நாம்  அறியாத ஒவ்வொரு பகுதியையும்  நம் கண் கொண்டு வந்து நிறுத்தி பிரமிப்பூட்டுகிறார்.

இத் தொடரில் முதலாளிகளின் சுயநலத்தை  தோலுரித்திக் காட்டுவதோடு, தன்னால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டாலும் ஏன் தானே பாதிப்படைந்தாலும் வறட்டு கெளரவங்கள் ஆடம்பரங்கள் இவற்றை விடாது பிடித்துக் கொண்டிருக்கும் அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகளை சாட சிறிதும் தயங்கவில்லை  ஜோதிஜி  

அவர் பணியாற்றிய நிறுவனங்களின் செயல்பாடுகள் தவறாக இருந்தபோது அவற்றை ஆணவம் மிக்க முதலாளிகளுக்கு அஞ்சாமல் சுட்டிக் காட்டியது  ஜோதிஜியின்  தன்னம்பிக்கையும் உறுதியையும்  நேர்மையையும் வெளிப்படுத்துகிறது. முதலாளிகளின் பலவீனங்களை போட்டு உடைத்திருக்கும் அதே வேளையில்  அனைத்தையும் வெளிப்படையாக  சொல்ல முடியாது என்பதால்  அவற்றை தொடர்வதை சில இடங்களில் சாமார்த்தியமாக தவிர்த்திருக்கிறார். 

இத் தொடரில் குறிப்பிடப் பட்டிருப்பவை  அனைத்தும் அவரது சொந்த அனுபவங்கள். நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மட்டுமல்லாது  எப்படி இருக்கக் கூடாது என்பதற்கும் உதாரணங்கள் நிறைந்திருக்கின்றன இக் குறிப்புகளில்  இந்தத் தொடரை ஒரு  நிர்வாகப் பாடமாகக் கொள்ளலாம். இங்கு வாழ்ந்தவர்களும் உண்டு. வீழ்ந்தவர்களும் உண்டு. துரோகிகள் வஞ்சகர்கள், மாடாய் உழைத்துத்  தேயும்  உழைப்பாளிகள் ,சோம்பேறிகள் என அனைத்து தரப்பினரைப் பற்றியும் முதலாளி அறிந்திருக்கிறாரோ இல்லையோ நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும்  என்ற  அனுபவ நிர்வாகப் பாடம் பலருக்கும் பயனளிக்கக் கூடியது .

ஆயத்த ஆடைத் தொழிலில் ,  அயன் செய்தல், பிசிறு நீக்குதல் உட்பட சிறுசிறு பணிகள் கூட எவ்வளவு முக்கியமானவை  என்பதையும் விடாமல் கூறி இருக்கிறார். எதற்கு அதிக கவனம் கொடுக்கப் படவேண்டும் என்பதும் விவரிக்கப் பட்டிருகிறது . இவ்வளவு விஷயங்கள் இதில் உள்ளதா என ஆச்சர்யப் பட வைக்கிறது  ஜோதிஜியின் எழுத்துக்கள்  

அவர் அதிகாரப் பதவியில் இருந்தபோதும் தொழிலாளர்களின் சுக துக்கங்களை அருகில் இருந்து உணர்ந்தவர்  என்பதும்  அவரது எழுத்து உணர்த்துகிறது. தொழிலாளர்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டியது தவறாமல் கிடைக்கவேண்டும் என்பதை முதலாளிகளிடம் வற்புறுத்தத் தயங்காத  மனிதாபிமானம் மிக்க நிர்வாகியாக இருந்ததுமே அவரது வெற்றிக்குக் காரணமாக அமைந்திருக்கும் என்பதை உணரமுடிகிறது.

 பெரிய நிறுவனங்கள் அதனை சார்ந்து இருக்கும் சிறிய நிறுவனங்கள் இவற்றின் பணி என்ன? என்பதையும் இவற்றின் வளர்ச்சி வீழ்ச்சி பற்றியும் ஒரு ஆய்வே நடத்தி இருக்கிறார் ஜோதிஜி .
   
இந்த தொழிற்சாலைக் குறிப்புகள் மூல நான் அறிந்து  கொண்ட ஒன்று தொழிலாளிகள்  நிர்வாகிகள் முதலாளிகள் என்ற மூன்று தரப்பினரும் முறையான ஒருங்கிணைப்பின்றி வெவ்வேறு  நிலைகளில்   செயல்படுகின்றனர்.  ஒருவரை பற்றி ஒருவர் கவலைப் படுவதில்லை. ஓருவரின் மகிழ்ச்சியும் துன்பமும் வளர்ச்சியும் வீழ்ச்சியும்    இன்னொருவரிடத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. மனிதாபிமானத்திற்கு இங்கு அவ்வளவாக இடம் இல்லை என்ற உண்மையை ஓங்கி உரைக்கிறது இத் தொடர். திறமையான ஒருவர் வெளியே போனாலும் அதை யாரும் பொருட்படுத்துவதில்லை.

காலத்திகேற்ப இத் தொழிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதையும் சுட்டிக் காட்டுகிறார் ஜோதிஜி.. விஞ்ஞான தொழில்  நுட்ப வளர்ச்சி காரணமாக ஏராளமான இயந்திரங்கள் பயன்படுத்தப் பட்டாலும் மனித உழைப்பின் தேவையும் இருந்தே கொண்டேதான் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக  இயந்திரங்கள் வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன 

இவற்றின் தேவையும் அதிகரித்துள்ள நிலையில் உள்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக் கணக்கான பொறியாளர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் ஆனால் இவற்றில் அவர்களின் பங்கு சிறிதும் இல்லை என்ற ஆதங்கத்தின் மூலம்  கல்வி முறைக்கு ஒரு குட்டு வைக்கிறார் ஜோதிஜி  இடை இடையே சமுதாய  நிலையை கூறவும் தவறவில்லை..

ஒரு முறையற்ற தொழில் நகரமாக திருப்பூர் விளங்குகிறது என்பதை தெளிவாக உணர்த்துகிறார். திருப்பூருக்கு வந்தால் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு வருபவர்களை வரவேற்று வாழ வைக்கும்  இந்நகரம் தொழில்சார்ந்து  முறைப்படுத்தப் படவேண்டும் என்ற விருப்பம் இவரது எழுத்த்துகளில்  புலப்படுகிறது  

இந்தத் தொடர் முழுதும் தொழிற்சாலையில் பணிபுரியும்  மனிதர்களை உளவியல் ரீதியாக விவரித்துக் கொண்டே போகிறார் . இந்த தொடரில் தொழிற்சங்கங்கள் பற்றி எந்தக் குறிப்பும் காணப் படவில்லை என்று நினைக்கறேன். இருபது பகுதிகளைக் கொண்ட இத் தொழிற்சாலைக் குறிப்புகளின் ஒவ்வொரு பகுதியும் சற்று நீளமாக உள்ளது என்பதைத் தவிர பெரிய குறைகள் ஏதும் புலப்படவில்லை

திருப்பூர் ஆயத்த ஆடைத்  தொழிலின் பின்னணியை ஒரு ஆவணப் படம் போல கண்முன் கொண்டு வந்து நிறுத்தியதில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தத் தொடர் படிக்கும் சமயங்களில் சென்னை ரங்கநாதன் தெருவுக்கு செல்ல நேர்ந்தது .  பெரிய அங்காடிகளில் தொங்க விடப் பட்டுள்ள ஆயிரக் கணக்கான ஆயத்த  ஆடைகளை பார்க்கும்போது  ஒவ்வொன்றும் ஒரு முகம் காட்டுவது போல் தோன்றியது .  வறுமை, வெறுமை, கோபம் உழைப்பு  உயர்வு,ஏற்றம், இறக்கம், எதிர்பார்ப்புகள்  ஏமாற்றம் அனைத்தும் இணைக்கப்பட்டு ஆடை  வடிவம் கொண்டு தொங்கிக் கொண்டிருப்பதாக  உணர்ந்தேன்.

ஒரு வேளை நான் திருப்பூர் செல்ல நேர்ந்தால் திருப்பூர் மீதான பார்வை இதன் அடிப்படையிலேயே அமையும் வகையில் ஒரு தாக்கத்தை இத் தொடர் ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை 

இத் தொடரில் விவரிக்கப் பட்டுள்ள ஆயத்த ஆடையின் பல்வேறு தொழில்சார் தகவல்களையும் நடைமுறைகளையும், தொழிலாளர் முதலாளி நிர்வாகிகளின்   வலிகள், வேதனைகள், வஞ்சகங்கள்  சிக்கல்கள்,வெற்றி தோல்விகள் இவற்றை   அடிப்படையாகக் கொண்டு  ஒரு நாவல் படைக்கப் பட்டால்   ஜோடி. குரூஸ் அவர்களின் "கொற்கை" நாவல் போல பேசப்படும் ஒன்றாக அமையும்  என்று நம்புகிறேன்.

ஒரு பயனுள்ள தொடரை வெளியிட்ட வலைத் தமிழ் இணைய தளத்திற்கும் படைத்தளித்த ஜோதிஜி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் 



தொடர்புடைய பதிவுகள்

Monday, February 02, 2015

உன்னாலும் முடியும் தம்பி

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்..

”திருப்பூர் டைரி குறிப்புகளாக..”   ஆகஸ்ட் 1ல் துவங்கிய ஜோதிஜியின் உள்மன பயணம் டிசம்பர் 12ல் வெகு அற்புதமாக நிறைவடைந்து விட்டது .

இங்கு தோற்றவர்கள் , தவறாக ஜெயித்து விட்டு அதை தக்க வைத்துகொள்ள தெரியாமல் ,பேராசையால் அகலகால் வைத்து காலத்தின் நீண்ட எல்லைக்குள் அடையாளம் தெரியாமல் கரைந்து போனவர்கள் கடின உழைப்புக்கு மதிப்பு பெறாமல் விரக்த்தியில் நஷ்டபடுத்துபவர்கள் போன்ற பலரையும் பற்றி தன் பார்வையில் எடை போடும் களமாக இந்த தொடரை செதுக்கி இருக்கிறார் ஜோதிஜி

முதல் போட்ட முதலாளிகள் மனோபாவத்தில் தொடங்கி ஒவ்வொறு  துறையின் பணி, அதன் பணிச்சுமை ,அதில் பணிபுரியும் தொழிலாளிகளின் மனோ நிலை அவர்களை அணுகும் முறை மேலும் திருப்பூர் பற்றி சிறிதும் அறியாதவகள் அல்லது திருப்பூரில் பணிபுரிய வேண்டும் என்ற கனவுகளை சுமந்து கொண்டு இருபவர்களாக்கான  ஒரு ஆயத்த ஆடை நிறுவனத்திர்க்கான ”கையேடு”  போல  வெகு அற்புதமான தனது எழுத்து நடை அளுமைதிறத்தால் சொல்லி இருக்கிறார். தொடருக்கு  சுவாரசியம் சேர்க்க ஓர் கதைக்கு, திரைகதை முக்கியம் என்பதை போல சில உண்மை பாத்திரங்களை எடுத்து அழகாக தொடரை நகர்த்தி இருக்கிறார் .

தனது கடந்த 22 வருட அனுபவ பாதையில் கற்றதும் பெற்றதுமாக இந்த துறையில் தனது கடின உழைப்பை உரமாக்கி இதுதான் திருப்பூர் என்ற இங்குள்ள தொழில் அமைப்பை கூர்ந்து கவனித்து அதோடு சளைக்காமல் ஓயாமல் ஓடி , அதன் ஆழத்தை தொட்டு அதில் கண்டெடுத்த தனது அனுபவ முத்துக்களை சரமாக்கி வருங்காலதை திருப்பூரில் வளமாக்கிக் கொள்ள  விரும்புபவ்ர்களுக்கு நம்பிக்கை இருந்தால் ஜெயிக்கலாம் என்று தனது வாழ்வையே பணயமாக்கி சொல்லியிருக்கிறார் ’உன்னால் முடியும் தம்பி’ என்பது எம் எஸ் உதயமூர்த்தி வாக்கு.

ஆனால் ஜோதிஜியின் வாக்கியம் ”உன்னாலும் முடியும் தம்பி “ என்பதுதான் அது என்பதாக தந்து இருக்கிறார் .பொதுவாக ஆன்மீகத்தில் மட்டுமல்ல பல இடத்திலும் சொல்லு ஒரு வழக்கு உண்டு அது ”கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்”ஆனால் இவர் தான் கண்ட நியாய அநியாயங்களை முடிச்சுகளை த்னது நம்பிக்கை அறிவால் அவிழ்த்து ,அதன் பலனையும் விளைவையும் விவரித்து  சொல்லி இருகிறார் . 

இங்கு பல கம்பெனிகளில் பணிபுரிபவர்களுக்கு சில வெளிநாட்டிலிருந்து ஆர்டர்  கொடுக்கும் கம்பெனிகளில் வார மற்றும் மாதாந்திர தொழிலாளர் சட்ட உரிமைகளாவது இருக்கிறது ஆனால் அந்த கம்பெனியில் பணிபுரியும் அழுவலக (Staffs) பணியாளர்கள் நிலைமை முற்றிலும் அடிமையானது .மனித உரிமைகள் இங்கு காசுக்காக பிழியப் படுவது பற்றி அவர் ஏனோ மிக குறைவாகவே சொல்லி இருக்கிறார் என்பது ஆதங்கம் .

பதினைந்து வருடமாக இந்த ஊரின் அலை வேகத்தோடு பயணித்து கொண்டு இருக்கும் நான் இந்த பதிவுகளை பற்றி சொல்வது மிக பெரிய விசயமாக இருக்காது. 

ஆனால் திருப்பூருக்கு சம்பந்தமில்லாமல் இந்த பதிவுகள் மூல மட்டுமே 20 வாரங்கள் வலைத்தமிழ் மூலம் படித்து பயணித்தவர்கள் சொல்லும் கருத்தே இங்கு ஆசிரியர் இந்த பதிவுக்களுக்காக எடுத்துக் கொண்ட முயற்சியின் வெற்றியின் எல்லைக் கோடாக இருக்கும் .