திருப்பூர் பனியன் தொழிலில் தான் நுழைந்தது முதல் சந்தித்து வரும் பல்வேறு நிகழ்வுகளை, அந்த நகரம் பிறமாவட்டங்களிலிருந்து புலம் பெயர்ந்து வரும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை உள்வாங்கிக் கொண்டு வாழவைப்பதை, வாழ்ந்தவர்கள் வீழ்ந்ததை, ஏற்றுமதி மிகுதியினால் அந்நிய செலாவணி மிகுந்திருப்பதைத் தனது டாலர் நகரம் புத்தகத்தில் எழுதியிருந்தார்.
வலைதமிழ் என்ற இணைய இதழில் தொடராக எழுதி வந்து தற்போது மின்நூலாக வந்திருக்கும் ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் அதன் இரண்டாம் பாகம் என்றும் சொல்லலாம்,
வலைதமிழ் என்ற இணைய இதழில் தொடராக எழுதி வந்து தற்போது மின்நூலாக வந்திருக்கும் ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் அதன் இரண்டாம் பாகம் என்றும் சொல்லலாம்,
பின்னலாடை தொழிலோடு இணைந்து அதில் உழலும் முதலாளிகள் முதல் அடிமட்ட தொழிலாளி வரை உள்ள மனிதர்களை வாசித்த வரலாறு என்றும் சொல்லலாம்.
திருப்பூர் எனது சொந்த ஊர். நான் 4 வகுப்பு வரை அங்குக் கொங்கு நகர் நகராட்சி பள்ளியில் படித்துவிட்டு, பின்னர்த் திண்டுக்கல்லில் பள்ளிக் கல்வியைத் தொடர்ந்தாலும், வருடந்தோறும் விடுப்பிற்குத் திருப்பூர் வந்து கொங்குநகர், பன்சிலால், தனலட்சுமி மில் ரோடு, யூனியன் மில் ரோடு, கஜலெட்சுமி தியேட்டர், டைமண்ட் தியேட்டர் பகுதி, ராயபுரம், ஏற்றுமதியில் நிராகரிக்கப்பட்டு 2ம் தரம் (செகண்ட்ஸ்) உலாவரும் காதர்பேட்டை எனச் சுற்றிச் சுற்றி வந்தது, முன்சீப் சீனிவாசபுரம் (தற்போதைய திருப்பூர் திருப்பதி கோவில் தெரு) ல் உள்ள பஞ்சாலை தொழிலாளர் சங்க தலைவர்களின் நடவடிக்கைகளைப் பள்ளிப்பருவத்திலிருந்தே கண்காணித்து வந்தது போன்ற வற்றால், நண்பர் ஜோதிஜியின் தொடரின் ஒவ்வொரு அத்தியாயம் வெளி வந்த போதும் நுனிப்புல் மேய்வது போல் சில வரிகளை மட்டும் படித்துவிட்டு அறிவாளி திரைப்படத்தில் எஸ்.வரலட்சுமி நடிகைக்குச் சப்பாத்தி செய்யத் தங்கவேலு சொல்லிக் கொடுக்கும் போது ஒவ்வொரு நிலையிலும் அதுதான் எனக்குத் தெரியுமே என்பது போல் நான் அருகில் இருந்து சுவாசித்த பனியன் தொழிலின் சில விபரங்களை அதுதான் எனக்குத் தெரியுமே என்று நகர்ந்திருக்கிறேன்.
ஆனால் முழுத் தொடரும் முடிந்து நண்பர் மின்நூல் வடிவில் பதிவேற்றியபிறகு பதிவிறக்கம் செய்து ஒரு விடுப்பு நாளில் தொடர்ந்து படித்த போது விறுவிறுப்பும், சுவாரசியமும் தொற்றிக் கொண்டது என்றால் அது மிகையல்ல.
தனியார் தொழிலில் ஒரு நிறுவனத்தை விட்டு மற்றொரு நிறுவனத்திற்குத் தொழிலாளிகள் மாறுவது என்பது யதார்த்தமாக நிகழக் கூடிய ஒன்றே. அந்த வகையில் ஒரு நிறுவனத்தின் நிர்வாகப் பிரிவில் பணியாற்றி வந்த ஜோதி கணேசன் மனித வள மேம்பாடு மற்றும் நிர்வாகத்திறன் இணைந்த ஒரு பொறுப்பில் புதிய நிறுவனம் ஒன்றில் உள் நுழைந்தது முதல் அங்குள்ள பிரச்சனைகளை ஆழ்ந்து உணர்ந்து படிப்படியாக அவற்றைக் களைந்து வெற்றி கண்ட கதையைத் தொடர் அருமையாகப் படம் பிடித்துக் காண்பிக்கிறது.
பொதுவாக ஒரு தொடரை, அல்லது அது தொகுப்பாகப் புத்தகமாக வெளிவருகையில் அதை வெளியிடும் நிறுவனத்தைச் சார்ந்தவர் தன்னுடைய வணிகமும் அதில் இணைந்துள்ளது என்கிற சுயநலத்தில் அந்தத் தொடரைப் பற்றி, புத்தகத்தைப் பற்றி உயர்வாக ஒன்றிரண்டு பக்கங்கள் பதிப்புரை எழுதுவது இயல்பு.
ஆனால் வலைதமிழ் இணைய நிறுவனத்தினர் நண்பர் ஜோதி கணேசனின் தொடருக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்பினை கண்டு திக்கு முக்காடி, மின்நூலுக்கு எழுதியிருக்கிற நெடிய பதிப்புரையிலிருந்தே தொடரின் வெற்றியை நாம் உணர முடிகிறது.
என் தம்பி ஒருவன் இன்று மிகப்பெரும் நிறுவனமாக வளர்ந்து நிற்கின்ற ஒரு பனியன் நிறுவனத்தில் படிப்படியாக வளர்ந்து பொதுமேலாளராக அந்த நிறுவனத்தில் ஒரு அங்கமாக வளர்ந்து ஏறக்குறைய ஒரு நாளைக்கு 14 முதல் 16 மணி நேரம் அந்த நிறுவனமே கதியென்று இருக்கிறான். அவனது முதல் மனைவி அந்த நிறுவனம், 2 வது மனைவிதான் இல்லற வாழ்விற்குத் தேர்வுசெய்து மணம் முடித்துக் கொண்ட மனைவியும், குழந்தைகளும். அத்தகைய dedicated அர்ப்பணிப்பான உழைப்புத்தான் இந்த உயரத்திற்கு அவனைக் கொண்டு வந்திருக்கிறது.
அது போல திருப்பூர் பின்னலாடை தொழிலோடு ஐக்கியமாகிவிட்ட ஜோதிஜியின் அர்ப்பணிப்பை அவருடைய விவரிப்புகளிலிருந்து உணர முடிகிறது. அன்றாடம் வேலை தேடி வருபவர்கள், வேலையின் உள் நுழைந்து சூட்சுமங்களைப் புரிந்து கொண்டு காலூன்றி வெற்றி பெறுபவர்கள், சோம்பேறித்தனத்தால் பாதியில் விட்டு விட்டுத் தோற்பவர்கள், சம்பாதிப்பதில் பெரும்பகுதியை டாஸ்மாக் கில் இறைப்பவர்கள், நிறுவனத்தில் பணியில் இருந்து கொண்டே நிறுவனத்திற்குத் துரோகம் இழைப்பவர்கள் இப்படிப் பலரைப்பற்றி விவரித்துச் செல்கிறது தொடர்.
பஞ்சிலிருந்து நூலாகி, நூல் துணியாகி, துணி வெள்ளைக்கப்பட்டு, அதில் கலர்கள் சேர்க்கப்பட்டு, பல வடிவங்களில் வெட்டப்பட்டு, ஓரிடத்தில் தைக்கப்பட்டு, ஓரிடத்தில் தரம் பிரிக்கப்பட்டு, ஒரிடத்தில் பெட்டியில் அடுக்கப்பட்டு வணிக மையத்திற்குச் செல்லும் வரை பல உப தொழில்கள் அதைச் சார்ந்துள்ளது. அந்த விபரங்களைப் புரிந்து கொண்ட பல சாதாரணத் தொழிலாளிகள், சில வருடங்கள் தொழில் பழகிவிட்டு, தனக்குத் தெரிந்த மேற்சொன்னவற்றில் ஏதேனும் ஒன்றை உப தொழிலாகத் துவங்கிக் கொண்டு, தான் முன்னர்ப் பணி புரிந்த நிறுவனத்திலிருந்தே ஆர்டர்கள் பெற்று வெற்றிப் படியை தொட்டவர்கள் ஏராளம்.
தொழில் சார்ந்த நிர்வாகவியலில் நண்பரின் தொடரை ஒரு பாடமாகவே வைக்கலாம். அத்தனை நெளிவு, சுளிவுகளை விவரித்துள்ளார். ஏற்றுமதி தொடர்பாகப் பையர் என்று சொல்லப்படுகிற வெளிநாட்டுப் பிரதிநிதிகள், அல்லது அவர்களின் முகவர்கள் வந்து பார்த்து, (சாம்பிள்) மாதிரி வாங்கி அனுப்பி, ஆர்டர் ஏற்கப்பட்டு மிகுந்த எதிர்பார்ப்போடு பலரின் கடுமையான உழைப்பை செலுத்தி தயார் செய்து இறுதிநிலை வருவதற்குள் நெய்தலில், சாயமேற்றுவதில், ஆடை வடிவமைப்பில், பட்டன் அமைப்பதில், ஜிப் அமைப்பதில், அளவில் இப்படி ஏதேனும் ஒரு விஷயத்தினால் சிறு தவறு நேர்ந்தாலும் ஒட்டு மொத்த ஆர்டரும் ரத்தாகி அடிமாட்டு விலையில் காதர்பேட்டையை வந்தடைந்துவிடும்.
அந்த ஆர்டருக்காக உழைத்த முதலாளி எழுந்து நிற்க பல வருடங்களாகிவிடும் என்பதை அருமையாகச் சொல்லியிருக்கிறார் தொடரின் ஆசிரியர்.
காரைக்குடி நகரில் படிப்பை முடித்துப் பிழைப்பிற்காகத் திருப்பூர் புலம் பெயர்ந்து, நுழைந்ததிலிருந்து இது தான் தனது பிழைப்பிற்கான ஊன்றுகோல் என்று பின்னலாடை தொழிலை நேசித்து, அதன் ஒவ்வொரு அணுவையும் சுவாசித்து, வெற்றியடைந்ததை, இடையில் 30 ஆண்டுகளாகச் சந்தித்த இடைஞ்சல்களை, காயங்களை, அதிலிருந்து மீண்டு எழுந்து நின்றதை மிகச் சரியாக ஆவணப்படுத்தியிருக்கிறார் நண்பர் ஜோதி கணேசன்.
ஒரு தொழிற்சங்க நிர்வாகியான எனக்கு ஒரே ஒரு நெருடல், குழந்தை தொழிலாளர்- உழைப்புச் சுரண்டல், தொழிலாளர் நலச்சட்டங்களைப் பல நிறுவனங்கள் பின்பற்றாமலிருப்பது, உரிமைகள் கோர ஒன்றிரண்டு பேர் ஒன்றிணைந்தால் அவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்வதைக் காட்டிலும் அவரை உடனே வெளியேற்றுவது என்கிற முதலாளித்துவம் ஆகியவையும் இந்த நகர் முழுவதும் நிறைந்திருப்பதை விரிவாகச் சொல்லியிருக்கலாம் என்று எண்ணினேன்.
மற்றபடி இந்தத் தொடருக்கு விமர்சனம் எழுதிய அனைவரும் பல விபரங்களைச் சுட்டிக் காண்பித்தாலும், இறுதியில் இது தொழிலாளியாக, முதலாளியாக, நிர்வாகியாக எவ்வாறாகிலும் இந்தப் பின்னலாடை தொழிலில் நுழைபவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்று சொல்லியிருப்பதோடு நானும் உடன்படுகிறேன்.
நிச்சயமாக அவரின் தொழிலில் உள்ள stress, tension ஆகியவற்றிலிருந்து விடுபட நிச்சயம் அவரின் எழுத்து அவருக்கு உதவியாக உடனிருக்கும். ஜோதிஜி இன்னும் பல வெற்றிப்படிகளைக் கடக்க வாழ்த்துக்களுடன்
தோழமையுடன்
எஸ்.சம்பத். மதுரை.
தொடர்புடைய பதிவுகள்
வெற்றியின் சிகரத்தை அடைய என்னுடைய வாழ்த்துக்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் ஐயா
ReplyDeleteஇந்தத் தொழிலுக்கும் தமக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாமல் எங்கோ தொலை தூரத்திலிருந்து படித்துவிட்டு அந்த வாசிப்பனுபவமும், அது தந்த உணர்வுகளும் காரணமாக உங்கள் எழுத்தைப் பாராட்டி அல்லது சிலாகித்து எழுதுபவர்கள் ஒருபுறமிருக்க - உங்கள் தொழிலோடு ஏதோ ஒருவகையில் தொடர்புடையவர்கள் உங்கள் எழுத்துக்களைப் படித்துவிட்டு மனதார அவர்களுடைய உணர்வுகளை எந்தவித பாசாங்குகளும் இன்றி வெளிப்படுத்துகிறார்கள் என்றால் அவர்களுடைய நல்லெண்ணம் புரியும் அதே வேளையில் உங்கள் எழுத்தின் வீர்யமும் வசீகரமும் சேர்ந்தே புரிகிறது.
ReplyDeleteதிரு சம்பத்திற்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
திரு. அமுதவன் ஐயா அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன்.
ReplyDeleteஎமது வாழ்த்துகளும்...
ReplyDeleteஅன்புடன்
கில்லர்ஜி
வாழ்த்துக்கள்...
ReplyDeleteநல்ல விமர்சனம் அண்ணா...
ReplyDeleteவெற்றிகளைக் குவிக்க வாழ்த்துக்கள்.
நன்றி திரு அமுதவன்- நண்பர் ஜோதிஜி
ReplyDeleteமிக நல்ல பதிவு...உங்களுக்கு வெற்றி கிடைக்க என்னுடைய வாழ்த்துக்கள்....பகிர்வுக்கு மிக்க நன்றி...
ReplyDeleteமலர்
வணக்கம்
ReplyDeleteஐயா
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ.
http://blogintamil.blogspot.com/2015/02/blog-post_15.html?showComment=1423961203036#c2363193222159569920
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இன்றைக்கு உங்களின் வலைத்தளம் வலைச்சரத்தில் சிறப்பிக்கப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கும்போது வாருங்கள்.
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2015/02/blog-post_15.html
எமது வாழ்த்துக்களையும் இங்கு பதிகின்றோம்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇதை அழகாக எழுதிய திரு சம்பத் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDelete