அஸ்திவாரம்

Wednesday, March 12, 2014

கடற்கரைச் சாலை - பயணக்குறிப்புகள்

ஆசான் என்ற யோகா மாஸ்டர் திரு. கிருஷ்ணன் அவர்களைப் பற்றிக் குறும்படம் எடுக்கத் திட்டமிடுதலுக்காகச் சென்று வந்த ஊர்களின் பார்வையும் சந்தித்த மனிதர்கள் தந்த தாக்கமும் குறித்த என்னுடைய எண்ணத்தைச் சில பதிவுகளில் எழுதி வைத்து விடுகின்றேன்.  

இதற்காக நான் பயணித்து வந்த தூரம் ஏறக்குறைய 1400 கிலோமீட்டர். சென்னையில் இருந்து கடற்கரைச் சாலை வழியாகத் தனுஷ்கோடி. அங்கே இருந்து மீண்டும் கடற்கரைச் சாலை வழியாகப் பட்டுக்கோட்டை. இதன் தொடர்ச்சியாகக் கும்பகோணம் அருகே உள்ள திருவாவாடுதுறை. அங்கேயிருந்து திருப்பூர்.

நான் இன்னமும் தமிழ்நாட்டிற்குள் பார்க்க வேண்டிய ஊர்கள், பயணம் செய்ய நினைக்கும் ஊர்கள் பல பட்டியலில் இருந்தாலும் இந்தப் பயணத்தின் மூலம் அதுவரையிலும் பத்திரிக்கைகளில் மட்டுமே படித்த பல ஊர்களைப் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை என்ற நவீன வசதிகள் கொடுத்த சுகமான பயணத்தை, பயத்தை நேரிடையாக உணரும் வாய்ப்புக் கிடைத்தது. 

சென்னை 

ஒவ்வொரு முறையும் சென்னைக்குச் சென்று திரும்பி வரும் போது ஏராளமான ஆச்சரியங்கள் மற்றும் பாடங்களைக் கற்றுக் கொண்டு வருவதுண்டு. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தொழில் நகரத்தின் அவசர வாழ்க்கையை விடப் பெருநகர அவசரங்கள் மனிதர்களைப் படிப்படியாக யோசிக்கவே முடியாத அளவுக்கு எந்திரமாக மாற்றி வைத்து விடுகின்றது. இது போன்ற பெரு நகரங்களில் சராசரி வருமானம் மற்றும் சராசரிக்கும் கீழே உள்ள அன்றாடம் காய்ச்சி நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வாழ்க்கையும், அவர்கள் சந்திக்கும் அவஸ்த்தைகள் தான் எனக்கு அதிக ஆச்சரியத்தை உருவாக்குகின்றது. 

இந்த வர்க்கத்தினர் இதனையே விரும்பி ஏற்றுக் கொண்டு வாழ்கின்றார்கள். வேறு எந்த மாற்று ஏற்பாடு குறித்தோ, வேறு இடங்களில் உள்ள வாய்ப்புகளைக் குறித்தோ யோசிக்க மனமில்லாது வாழ்பவர்கள் தான் என் பார்வையில் சாதனையாளர்களாகத் தெரிகின்றார்கள். பெருநகரங்கள் ஒவ்வொரு மனிதர்களையும் காந்த பூமி போல இழுத்து வைத்துள்ளது. 

பெரிய வீடுகள், வசதியான வீடுகள் என்று எப்படி இருந்தாலும் சென்னையில் கூவம் நதி ஓடும் பாதையில் மற்றும் அதன் அருகே உள்ள வீடுகளிலும் மாலை ஆறு மணி முதல் அதிகாலை ஐந்து மணி வரையிலும் வாழ்வதும் உறங்குவதும் தனிப்பட்ட பயிற்சி எடுத்தால் மட்டுமே சாத்தியப்படும் போலத் தெரிகின்றது. கொசுக்களின் ரீங்காரம் தான் இந்தப் பகுதிகளில் வாழ்பவர்களின் தேசிய கீதமாக உள்ளது. கொசுக்கள் இரவில் வந்து நம்மைக் கடிப்பது இயல்பானது. ஆனால் இரவில் கொசுப்படைகளின் மத்தியில் வாழ்வதும், கட்டியிருக்கும் கொசு வலையைச் சுற்றிலும் இடைவிடாது போராடி பணி செய்யும் கொசு பகவான்களின் கருணையே கருணை. 

கனவுத் தொழிற்சாலை 

கடந்த இருபது வருடங்களில் சென்னைக்குச் சென்று வரும் போது அங்கே தனிப்பட்ட நட்பு வட்டத்தில் நான் சந்தித்த பத்துப் பேர்களில் ஒருவராவது திரைப்படத்துறை சம்மந்தபட்டவர்களாக இருந்திருக்கின்றார்கள். 

சென்ற மாதம் வரைக்கும் இது தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது. 

அவரவர் கண்கள் முழுக்க மாறாத அதே கனவு. லட்சிய வேட்கை. இடைவிடாத முயற்சி. தனக்குத்தானே சமாதானம். 

பறிபோன இளமை. அன்றாடச் செலவுக்கே தகிங்ணத்தோம் என்று வாழ்க்கை இருந்தாலும் அந்த மாயச் சூழலில் இருந்து வெளியே வர முடியாதவர்களைப் புரட்டப் புரட்ட வந்து கொண்டேயிருக்கும் பெரிய புத்தகத்தைப் போலவே தெரிகின்றார்கள். 

நாளை விடிந்து விடும். அடுத்த நாள் உலகம் முழுக்க நம்மைப் பற்றிப் பேசப் போகின்றார்கள் என்ற இந்த வார்த்தைக்குள் தங்களை அடகு வைத்துக் கொண்டு அல்லாடிக் கொண்டிருக்கின்றார்கள். 

குடும்பம், உறவுகள் அனைத்தும் மறந்து, துறந்து தனி மனிதராகப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். 

மாறிப் போன சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளாமல் தாங்கள் வைத்திருக்கும் கனவுகளை அடை காத்துக் கொண்டிருக்கின்றார்கள். அருகே அமர்ந்து ஆறுதலாகவும் பேச முடியவில்லை. அவரவர் படுகின்ற துன்பங்களைக் காணச் சகிக்க நமக்குத் தைரியமும் போதவில்லை. 

தமிழ்நாட்டு தேசிய நெடுஞ்சாலைகள் 

சென்னையிலிருந்து காலை ஆறு மணிக்குக் கிளம்பினால் சற்றுத் தப்பித்துச் சென்னைக்கு வெளியே வந்து விடலாம். அலுவலக நேரம் தொடங்கும் போது சாலையில் பயணிக்க நமக்கு அவசியம் தியான மன நிலை வேண்டும். ஒவ்வொரு இடங்களில் உள்ள தடைகளும், சாரை சாரையாக வந்து போய்க் கொண்டிருக்கும் மக்கள் படைகளைத் தாண்டி செங்கல்பட்டு வந்து சேர்ந்தாலும் விடாது துரத்தும் கருப்பு போலவே போக்கு வரத்து நெரிசல் நம் விழிகளைப் பிதுங்கிப் போக வைக்கின்றது. 

குளிரூட்டப்பட்ட வசதியான வாகனங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் மணிக்கு நூறு கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் போது விமானப் பயணம் போலவே உள்ளது. ஆனால் நாங்கள் பயணித்த 1400 கிலோமீட்டர் பயணத் தூரத்திற்குச் சுங்கவரியாக மட்டும் 1700 ரூபாய் செலவளிக்க வேண்டியுள்ளது. மதுரையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் ஒரு இடத்தில் அதிகாரபூர்வமற்ற முறையிலும், பகல் கொள்ளை ரீதியாகக் கட்டண வசூல் செய்கின்றார்கள். 

செங்கல்பட்டில் இருந்து இராமநாதபுரம் செல்ல ஒட்டுநர் தேர்ந்தெடுத்த கடற்கரைச் சாலை என்பதையும், இப்படி ஒரு சாலை வழியாகச் செல்லமுடியும் என்பதனையும் அப்போது தான் முதல் முறையாக அறிந்தேன். 

பயணிப்போம்...

தொடர்புடைய பதிவுகள்




27 comments:

  1. சென்னை எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்து விடும்...!

    ReplyDelete
    Replies
    1. கூடவே மனதளவில் மிருகமாகவும் மாற்றி வைத்து விடும்.

      Delete
  2. தொடர்ந்து தங்களுடன் பயணிக்கக் காத்திருக்கிறோம்

    ReplyDelete
  3. உங்கள் இனிய பயணத்தில் நானும் தொடர்கிறேன் சுவராஸ்யமான பதிவு.

    ReplyDelete
  4. எனக்கேற்ற சிறிய பதிவு ஹீ.ஹீ வரு முன் யோசித்தேன் தலைவர் பதிவை படிக்க போகிறோமே பஸ் பயணம் போல நிறைய நேரம் எடுத்து கொள்ளுமோ என்று ஆனால் நீங்கள் ஜெட் வேகத்தில் கொண்டு சென்று இருக்கிறீர்கள். நன்றி

    ReplyDelete
    Replies
    1. நாங்க திருந்திட்டோம். உங்களை மாதிரி ஆளுங்க என்னை திருத்தி விட்டார்கள். இனி வரும் பதிவுகள் எல்லாமே இப்படித்தான். ஹேப்பி அண்ணாசசி.

      Delete
  5. வாஜ்பாயின் பெயரையும் டி.ஆர்.பாலுவின் பெயரையும் சேர்த்துச்சொல்லும் தங்க நாற்கரச் சாலைகளில் பயணிப்பதன் சுகம் ஒரு பக்கம் இருந்தபோதிலும், அழகழகான ஊர்களையும், ஊருணிகளையும் , கோவில்களையும், கடைத்தெருக்களையும், மனிதர்களையும் முற்றிலும் இழந்துதான் தூரங்களைத் துரத்த வேண்டியவர்களாக இருக்கிறோம். சரி, 'விரைவில் போக வேண்டுமே என்பதற்காக விமானத்தில் பயணம் செய்கின்றோமே அப்போது இவையெல்லாம் கூடவே வருகின்றனவா என்ன?' என்பதுபோல் நமக்கே ஏதாவது சமாதானம் செய்துகொள்ள வேண்டியதுதான். சிலவற்றைப் பெறுவதற்காகச் சிலவற்றை இழந்துதான் தீரவேண்டும் என்பதுதான் எத்தனை உண்மை.
    விரைந்த வேகமான மற்றும் சுகமான பயணம் என்பதில் ஆங்காங்கே நிறுத்திவைத்து கட்டணம் கட்டிவிட்டுப் போகவைக்கும் நிர்ப்பந்தம் இருக்கிறது பாருங்கள் - இவற்றையெல்லாம் 'பரிபாலனம்' செய்வதற்கு இந்த வசூல்கூடச் செய்யக்கூடாதா என்ற எதார்த்தங்களையும் தாண்டி வலுக்கட்டாயமாக நமது பாக்கெட்டில் கையைவிட்டுப் பணம் பறித்துக்கொள்கிறார்களோ என்ற எண்ணம் வந்துசெல்வதைத் தவிர்க்க முடியவில்லை .
    தங்கள் பயண அனுபவங்களைத் தெரிந்துகொள்ள ஆவல்.

    ReplyDelete
    Replies
    1. குறிப்பிட்ட சில பதிவுகளுக்கு மட்டுமே நீங்கள் விமர்சனம் அளித்தாலும் உங்களின் உள்வாங்கல் எனக்கு நிறைய கற்றுத் தந்து கொண்டிருக்கின்றது. உங்களுக்கு கொஞ்சம் நேரம் கிடைத்தால் இதை படித்துப் பாருங்க. நீங்க எழுதியது இதில் வந்துள்ளது.

      http://deviyar-illam.blogspot.com/2012/06/blog-post_10.html

      Delete
  6. தங்களின் பயண அனுபவங்களை விரிவாக எதிர்பார்க்கிறேன். எப்படித்தான் இதற்கெல்லாம் நேரம் கிடைக்கிறதோ தெரியவில்லை. நெடுஞ்சாலைகளினால் சில கிராமங்களே உருத்தெரியாமல் அழிந்துபோயிருக்கின்றன. ஆனாலும் மாற்றம் அவசியம்தானே.

    ReplyDelete
    Replies
    1. சனி ஞாயிறு 36 மணி நேரம் கிடைத்து விடுகின்றதே.

      Delete
  7. கூவம் நதிக்கரை வாழ் சென்னை வாசிகள் நிலை பரிதாபம்தான்! சுங்கவரி தான் இப்போது நெடுஞ்சாலையில் மிகப்பெரிய கொடுமை! சுவாரஸ்யமான பகிர்வு! தொடர்கிறேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் விரும்பியே வாழ்கின்றார்கள். அது தான் ஆச்சரியம்.

      Delete
  8. பயணம் என்றாலே இனிப்பு சாப்பிடுவது போலத்தான்..தொடர்கிறேன்...தொடர் சற்று நீளமாக வரும் என நினைக்கிறேன்..வரவேற்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. இல்லை சிவா. சில பதிவுகள் மட்டுமே.

      Delete
  9. சுங்கவரிக் கொள்ளை சற்றுக் கூடுதல்தான்!

    நல்ல தொகுப்பு! சுவாரஸ்யமாக உள்ளது!

    ReplyDelete
  10. பயணம் தொடரட்டும் அண்ணா.... நாங்களும் சேர்ந்து பயணிக்கிறோம்...

    ReplyDelete
  11. Replies
    1. Phonetic - முறையில் டைப் செய்யும்போது சில எழுத்துப் பிழைகள். எனவே நீக்கி விட்டேன்.

      Delete
  12. உங்களுக்கு பயணம் செய்வதில், ஊர் சுற்றுவதில் இருக்கும் ஆர்வத்தைப் பார்க்கும் போது எனக்கு ராகுல சாங்கிருத்தியாயன் என்ற எழுத்தாளர்தான் நினைவுக்கு வந்தார். அவரை பயண இலக்கியத்தின் தந்தை என்று சொல்லுவார்கள். ”ஊர் சுற்றிப் புராணம்’ என்று கூட ஒரு நூல் எழுதி உள்ளார். அவரது சில நூல்களின் தமிழாக்கத்தை படித்துள்ளேன். உங்களது பயண இலக்கியத் தொடர் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

    இந்த கட்டுரையில் நீங்கள் சொன்ன

    // நாளை விடிந்து விடும். அடுத்த நாள் உலகம் முழுக்க நம்மைப் பற்றிப் பேசப் போகின்றார்கள் என்ற இந்த வார்த்தைக்குள் தங்களை அடகு வைத்துக் கொண்டு அல்லாடிக் கொண்டிருக்கின்றார்கள். //

    என்ற வரிகள் மிகவும் அழுத்தமானவை. இதுபோன்ற ஆட்களை நானும் சந்தித்து இருக்கிறேன். ”பாலும் பழமும்” படத்தில் ”போனால் போகட்டும் போடா” என்ற பாடலின் துவக்கத்தில் குறிக்கப்படும் லட்சியவாதிகள் அவர்கள்.





    ReplyDelete
    Replies
    1. அந்தவிமர்சனத்தையும் படித்தேன். பெரிதாக சொல்லும் அளவிற்கு பிழை ஏதுமில்லை.

      கருத்துக்கு நன்றிங்க.

      Delete
  13. பயணங்கள் சிறப்பாகவும்
    சிந்தனை கோர்ப்பாகவும் இருக்க
    பயணிப்போம்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி பாண்டியன்

      Delete
  14. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  15. "மாறிப் போன சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளாமல் தாங்கள் வைத்திருக்கும் கனவுகளை அடை காத்துக் கொண்டிருக்கின்றார்கள்"

    இது தான் உண்மையில் பாவம்.

    பயணம் எனக்கு ரொம்பப் பிடித்தது அதனால் தான் நீங்கள் மொத்தமாக முடிக்கும் வரை காத்து இருந்தேன். சீராகப் படிக்க.

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.