அஸ்திவாரம்

Friday, March 14, 2014

கடற்கரைச் சாலை - பயணக்குறிப்புகள் 2


சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்வதற்குப் பயன்படும் கடற்கரைச் சாலையைப் பற்றித் தெரிந்த அளவுக்குச் செங்கல்பட்டிலிருந்து இராமநாதபுரம் செல்ல பயன்படும் கடற்கரைச் சாலையைப் பற்றி எனக்கு அதிகம் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் இருந்தது. அந்தக் குறை இந்தப் பயணத்தின் வாயிலாக நீங்கியது. 

கீழக்கரை, சாயல்குடி, ஏர்வாடி, போன்ற ஊர்கள் பக்கம் பயணித்தது இதுவே முதல் முறை. இதில் ஒரு மகத்தான் ஆச்சரியம் என்னவென்றால் இந்தச் சாலையில் எந்த இடத்திலும் சுங்கவரி தொந்தரவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு மேலாக மூச்சு முட்டும் போக்குவரத்து நெரிசலும் இல்லை. நகரமயமாக்கலின் விளைவாக இரண்டு பக்கமும் உருவாகிக் கொண்டிருக்கும் வளர்ச்சி என்ற பெயரில் உள்ள திடீர் நகர்ப்புற வீக்கங்களும் கூட இல்லை. சுகமான பயணம் என்று சொல்வதை இந்தச் சாலையில் பயணித்த போது உணர்ந்து கொண்டேன். 



கடற்கரை ஓரமாக நம் வசதிக்காக உருவாக்கியுள்ள இந்தச் சாலைகளைப் பற்றிப் பேசும் போது நாம் சிலவற்றைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். நமக்கு ஓரளவுக்கேனும் தெளிவாகத் தெரிந்த இரண்டாயிரம் ஆண்டுக் காலத் தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகளில் மாறாத ஒரே இனம் மீனவ இனம். பரதவர் என்றழைக்கப்படும் இந்த மக்களின் வாழ்க்கையும், பண்பாடு கலாச்சாரமும் முழுக்க முழுக்கக் கடலில் தொடங்கிக் கடற்கரையோடு முடிந்து போய் விடுகின்றது. காலம் காலமாக அதைத்தாண்டுவதே இல்லை. மீனவனாகப் பிறந்து கடைசி வரையிலும் மீனவனாகவே வாழ்ந்து முடிவதோடு அவனது தலைமுறையும் இதே தொழிலிலே நுழைந்து விடுவதால் வெளியுலக வாழ்க்கைக்கும் அவர்களும் பல காத தூரம். 

ஆனால் காலமாற்றத்தை உள்வாங்கிக் கொள்ளாமல், மாறிப்போன நவீன வளர்ச்சியைக் கருத்தில் கொள்ளாமல் தங்களின் பராம்பரிய பழக்கவழக்கங்கள், தொழில் முறைகள் என்று வளர்ந்த மீனவர்களின் வாழ்க்கை கடந்த முப்பது ஆண்டுகளில் மிகப் பெரிய சிக்கலில் மாட்டி விழி பிதுங்கிப் போய் உள்ளனர். 

ஒரு பக்கம் "எல்லை தாண்டாதே" என்கிறார்கள். மறுபுறம் "இந்தப் பகுதியில் சாலைகள் வருகின்றது காலி செய்து கொடுத்து விடு" என்று துரத்தி அடிக்கப்படுகின்றார்கள். இரண்டு பக்கமும் சிக்கி எலிப்பொறிக்குள் மாட்டியவர்கள் போல அன்றாட வாழ்க்கையைக் கூட வாழ முடியாத அளவுக்கு உள்நாட்டுக்குள் அகதி போலவே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 

மீனவர்களின் கையில் இருந்த கடல் சார்ந்த தொழில்கள் இன்றைய சூழ்நிலையில் காசிருப்பவர்களின் கைக்கு மாறிக் கொண்டேயிருக்கின்றது. இன்று மீன்பிடி தொழிலில் என்பது சர்வதேச நிறுவனங்களின் கைப்பிடிக்குள் அடக்கமான வலை போல மாறியுள்ள காரணத்தால் ஒவ்வொரு மீனவ குடும்பமும் வறுமை என்ற வலைக்குள் சிக்கிக் கொண்டு தவிக்கின்றனர். இந்தச் சாலையில் பயணிக்கும் போது இது சம்மந்தபட்ட பல மாறுதல்களை உள்வாங்கிக் கொள்ள முடிந்தது. 

சென்னை முதல் கன்னியாகுமரி வரைக்கும் உள்ள மீனவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் அவர்களின் பலம் நமக்கு ஆச்சரியத்தை அளிக்கும். ஆனால் இந்த மீனவர்களிடம் உள்ள பிரிவினைகளை யோசித்துப் பார்த்தால் எப்படி இவர்களுக்கு அவஸ்த்தைகள் உருவாகின்றது என்பதையும் புரிந்து கொள்ள முடியும். 

இதன் காரணமாகவே இன்று வரையிலும் இந்த இன மக்களில் இருந்து ஒரு தலைமைப்பண்பு உள்ள எவரும் உருவாகவே இல்லை. இதுவே ஒவ்வொரு சமயத்திலும் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கடைபிடித்துக் கொண்டு வரும் தமிழ்நாட்டின் இரண்டு கழகக் கட்சிகளுக்கும் மத்தி மீன் சுவையைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. அறிக்கை வாயிலாக லாவணிக் கச்சேரி நடத்த வசதியாகவும் உள்ளது. 

பாம்பன் பாலம் 

பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது பள்ளியிலிருந்து இராமேஸ்வரத்திற்குச் சுற்றுலா என்ற பெயரில் அழைத்துக் கொண்டு வந்தனர். அப்போது (1984) தற்போதுள்ள பாம்பன் பாலத்தின் தொடக்க வேலைகள் நடந்து கொண்டிருந்தது. கடலுக்குள் படிப்படியாக ஒவ்வொரு தூண்களுக்குக் கீழே உள்ள (பீம்களும்) அமைப்புகளின் வேலைகளும் நடந்து கொண்டிருந்தது. இயற்பியல் ஆசிரியர் நாராயணன் படகில் வைத்து அழைத்துக் கொண்டு அந்தத் தூண்கள் கட்டப்பட்டுக் கொண்டிருந்த பகுதிக்கு அழைத்துச் சென்றார். அந்தப் பீம் பகுதியில் ஏறி அது எப்படிக் கட்டப்படுகின்றது என்பதை விளக்கினார். இயற்பியல் விதி, கடல் அரிப்பு, தாங்கும் திறன், எதிர்காலப் பயன்பாடுகள் என்று என்னவோ சொல்லிக் கொண்டிருந்தார். 

ஆனால் எனக்கோ எங்கே மீன் சுட்டு விற்கின்றார்கள்? என்பதே ஒரே தேடுதலாக இருந்தது. பக்கதில் இருப்பவனிடம் தொடர்ந்து நச்சரித்துக் கொண்டே இருந்தேன். அவன் ஓரளவுக்கு மேல் தாங்க முடியாமல் "சார் இவனுக்கு மீன் பொறிக்கும் இடம் தெரியனுமாம்? அப்படியே ப்ரெஷ்ஷா கிடைக்குமாம். அதை முதலில் போய்ப் பார்த்து விடலாம்" என்று சொல்ல இருவருக்கும் அடுத்தடுத்து பளார் பளார் என்று அறை விழுந்தது. அப்படி அடிவாங்கிய ஏதோவொரு பீம் பகுதியுடன் இணைக்கப்பட்ட அந்தப் பாலத்தின் மேல் 30 வருடங்களுக்குப் பிறகு இப்போது நின்று கொண்டிருக்கின்றேன். 

பயணிப்போம்...........

தொடர்புடைய பதிவுகள்





22 comments:

  1. போட்டுக் கொடுத்த நண்பரின் நட்பு தொடர்கிறதா...? ஹிஹி...

    கவிஞர் வாலி அவர்களின் பாடல் என்றும் பொருந்துமோ...?

    கடல் நீர் நடுவே பயணம் போனால்...
    குடிநீர் தருபவர் யாரோ...?
    தனியாய் வருவோர் துணிவைத் தவிர
    துணையாய் வருபவர் யாரோ...?
    ஒரு நாள் போவார்... ஒரு நாள் வருவார்
    ஒவ்வொரு நாளும் துயரம்...(2)
    ஒரு ஜாண் வயிரை வளர்ப்பவன் உயிரை
    ஊரார் நினைப்பது சுலபம்...!
    ஊரார் நினைப்பது சுலபம்...!

    தரை மேல் பிறக்க வைத்தான் - எங்களைத்
    தண்ணீரில் திளைக்க வைத்தான்...
    கரை மேல் இருக்க வைத்தான் - பெண்களைக்
    கண்ணீரில் குளிக்க வைத்தான்...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். தனுஷ்கோடியில் வாழ்ந்தவர்களிடம் மனம் பேசிய போது இந்த வரிகளின் உண்மையை உணர்ந்து கொண்டேன்.

      Delete
  2. திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்கள்
    எடுத்துக் காட்டியுள்ள, கவிஞர் வாலி அவர்களின் பாடலைப் போலவே
    இன்றும் அவர்கள் வாழ்வு அப்படியே தொடர்வது மிகவும் வருந்தத் தக்கது ஐயா.
    எண்ணிக்கையில் அதிகம் பேர் இருந்து பயனென்ன, ஒற்றுமை இல்லையே,

    ReplyDelete
    Replies
    1. தனபாலன் கலக்கிட்டாரோ?

      Delete
  3. நவீன மயமாக்கல் கொள்கை வந்த பின் மீனவர்களுடன் படிப்பறிவு இல்லா மலை ஜாதி மக்களும்தான் பாதிக்கப் பட்டுள்ளனர்..அவர்களையும் விரட்டிக் கொண்டிருக்கிறது இவர்களின் தாராளமயமாக்கல் !
    பன்னாட்டு நிறுவனங்களின் பகாசூர பசிக்கு நம் வளங்கள் கொள்ளைப்போகின்றன !

    ReplyDelete
    Replies
    1. பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் கொஞ்சம் நல்லது. நிறைய கெட்டதும் உண்டு, இந்த கலவை தான் எல்லா நாடுகளிலும்.

      Delete

  4. //ஒரு பக்கம் "எல்லை தாண்டாதே" என்கிறார்கள். மறுபுறம் "இந்தப் பகுதியில் சாலைகள் வருகின்றது காலி செய்து கொடுத்து விடு" என்று துரத்தி அடிக்கப்படுகின்றார்கள். இரண்டு பக்கமும் சிக்கி எலிப்பொறிக்குள் மாட்டியவர்கள் போல அன்றாட வாழ்க்கையைக் கூட வாழ முடியாத அளவுக்கு உள்நாட்டுக்குள் அகதி போலவே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். //

    இது ஓரளவு மலை வாழ் மக்களுக்கும் பொருந்துமோ?!! நமது பண்டைய சிறு தானியங்களான, வரகு, சாமை, தினிய, குதிரைவாலி, பனிவரகு, இன்னும் பல இடையில் அழிந்து அம்மக்களின் வாழ்வியல் பாதிக்கப்பட்டு, அவை எல்லாம் உடல் இளைக்கவும் ஆரோக்கியதிற்கும் நல்லவை என்று ஏதோ அரிய, பெரிய கண்டுபிடிப்பைக் கண்டுபிட்த்தது போல மவுசு கூடி, நகரத்தார்களால் தீண்டப்படாமல் இருந்தவை, இன்று பல பெரிய முதலாளிகளால், அதே தானினயங்கள், இன்று பாக்கெட்டுகளில் சாமானிய மக்களுக்கு எட்டாத விலையில் விற்கப்படுகின்றன! மலை வாழ் மக்கள் பாவம்!


    //அவன் ஓரளவுக்கு மேல் தாங்க முடியாமல் "சார் இவனுக்கு மீன் பொறிக்கும் இடம் தெரியனுமாம்? அப்படியே ப்ரெஷ்ஷா கிடைக்குமாம். அதை முதலில் போய்ப் பார்த்து விடலாம்" என்று சொல்ல இருவருக்கும் அடுத்தடுத்து பளார் பளார் என்று அறை விழுந்தது. அப்படி அடிவாங்கிய ஏதோவொரு பீம் பகுதியுடன் இணைக்கப்பட்ட அந்தப் பாலத்தின் மேல் 30 வருடங்களுக்குப் பிறகு இப்போது நின்று கொண்டிருக்கின்றேன். // ஹா ஹா அருமையான நினைவுகள்!!!!

    அருமையான ரசிக்கவைத்த தொகுப்பு! பகிர்வு!

    ReplyDelete
    Replies
    1. தெளிவான விமர்சனம். நன்றி.

      Delete
  5. கடலும் கடல் சார்ந்த இடங்களும் மீது எனக்கு தனியொரு ஈர்ப்பு உண்டு..

    பரதவர் என்றொரு இனமுண்டு என்று குறிபிட்டுள்ளீர்களே, இன்னமும் இருக்கிறார்களா என்ன ? பெர்னாண்டசாக மாறி அல்லது மாற்றபட்டுள்ளார்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் விமர்சனத்தைப் பார்த்து மனதிற்குள் சிரித்துக் கொண்டேன். இதனைப் பற்றி வெளிப்படையாகப் பேசினால் மத வாதிகள் மோடியின் அடிப்பொடி என்று அடிக்க வருவார்கள். ஏன் வம்பு?

      Delete
  6. \\சென்னை முதல் கன்னியாகுமரி வரைக்கும் உள்ள மீனவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் அவர்களின் பலம் நமக்கு ஆச்சரியத்தை அளிக்கும். ஆனால் இந்த மீனவர்களிடம் உள்ள பிரிவினைகளை யோசித்துப் பார்த்தால் எப்படி இவர்களுக்கு அவஸ்த்தைகள் உருவாகின்றது என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.

    இதன் காரணமாகவே இன்று வரையிலும் இந்த இன மக்களில் இருந்து ஒரு தலைமைப்பண்பு உள்ள எவரும் உருவாகவே இல்லை. இதுவே ஒவ்வொரு சமயத்திலும் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கடைபிடித்துக் கொண்டு வரும் தமிழ்நாட்டின் இரண்டு கழகக் கட்சிகளுக்கும் மத்தி மீன் சுவையைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.\\

    மீனவர்களின் வாழ்க்கையைப் பற்றி உள்ளார்ந்த வலியுடன் பேசியிருக்கிறீர்கள். சென்ற வருடம் கன்னியாகுமரி போய்விட்டுத் திரும்பும் வழியில் உள்ளூர் மீனவ கிராமம் ஒன்றிற்குச் சென்றிருந்தபோது நானும் இப்படித்தான் யோசித்தேன். அந்த வாழ்க்கையை விட்டு யாரும் வெளியில் வரத் தயாராக இல்லை என்றும் தோன்றிற்று.
    மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்களில் திரு வலம்புரி ஜான் (அவரிடம் நிறையப் பழகியிருந்தபோதிலும் அவர் எந்தச் சமுதாயம் என்பது தெரியாது. மீனவ சமுதாயமாக இருக்கவேண்டும் என்பது என்னுடைய யூகம்தான்.) அரசியல் உலகிலும் இலக்கிய உலகிலும் குறிப்பிடத்தகுந்தவராக வந்தார். ஆனால் அவரிடமிருந்த 'சலனப்பட்ட மனம்' அவரைப் பெரிய அளவுக்கு உயர்த்தாமல் தன்னுடைய சுற்றம் சூழலை மட்டும் உயர்த்திக்கொள்ளும்படிப் பார்த்துக்கொண்டது என்றே நினைக்கிறேன். தன்னைச் சரியான நேரத்தில் உயர்த்தித் தூக்கிப்பிடித்த யாருக்கும் அவர் சரியான விசுவாசியாகவும் இருக்கவில்லை என்றும் நினைக்கிறேன். இம்மாதிரியான பலவீனங்கள் மட்டும் இல்லாமல் போயிருந்தால் பெரிய தலைவராக வந்திருக்கவேண்டியவர்களில் ஒருவர்தான் அவர்.

    \\அடுத்தடுத்து பளார் பளார் என்று அறை விழுந்தது. அப்படி அடிவாங்கிய ஏதோவொரு பீம் பகுதியுடன் இணைக்கப்பட்ட அந்தப் பாலத்தின் மேல் 30 வருடங்களுக்குப் பிறகு இப்போது நின்று கொண்டிருக்கின்றேன். \\

    சரியான சிந்தனைகளுடன் உள்ள ஒருவருக்கு ஏற்படும் இவ்வகைத் தாக்கங்கள்தாம் பெரிய எதிர்வினைகள் ஆற்றும் சிந்தனைகளைத் தரும்.

    எதிர்பார்க்கிறேன்.

    \\கவிஞர் வாலி அவர்களின் பாடல் என்றும் பொருந்துமோ...?\\ - திண்டுக்கல் தனபாலன்.

    நல்ல நல்ல பாடல்களைக் குறிப்பிடுகிறீர்கள். ஆனால் அவற்றை எழுதிய கவிஞர் யார் என்பதைக் குறிப்பிடாமல், அவர்களுக்கான அந்தப் பெருமையை வழங்காமல் விட்டுவிடுகிறீர்களே என்று அவருடைய பின்னூட்டத்தில் ஒருமுறை எழுதியிருந்தேன். அதற்கு பதிலளித்து கவிஞரின் பெயருடன் பாடல் வரிகளைக் குறிப்பிட ஆரம்பித்திருக்கும் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் நன்றி.



    ReplyDelete
    Replies
    1. அவரிடமிருந்த 'சலனப்பட்ட மனம்' அவரைப் பெரிய அளவுக்கு உயர்த்தாமல் தன்னுடைய சுற்றம் சூழலை மட்டும் உயர்த்திக்கொள்ளும்படிப் பார்த்துக்கொண்டது என்றே நினைக்கிறேன். தன்னைச் சரியான நேரத்தில் உயர்த்தித் தூக்கிப்பிடித்த யாருக்கும் அவர் சரியான விசுவாசியாகவும் இருக்கவில்லை என்றும் நினைக்கிறேன்.

      நான் பார்த்தைவரையிலும் வலம்புரி ஜான் போல மற்றொரு புத்திசாலியை பார்ப்பது மிக மிக அரிது. அவருக்குள் உள்ளே இருப்பது மனித மூளையா? இல்லை சிலிக்கான் சிப்பா? என்று கூட யோசித்தது உண்டு. ஆனால் எத்தனை நாகரிகமான வரிகளில் அவரின் மொத்த வாழ்க்கையையும் நாகரிகமாக சொல்லீட்டிங்க. உங்கள் விமர்சனத்தை பெறுவதற்கென்றே நிறைய எழுத வேண்டும் என்ற உந்துதல் உருவாகியுள்ளது.

      நன்றி.

      Delete
  7. "அதற்கு பதிலளித்து"- 'அதற்கு மதிப்பளித்து' என்றிருக்க வேண்டும்.

    ReplyDelete
  8. மீனவர்கள் தங்களுக்குள்ளேயே அடித்துக் கொள்வதால் இன்னும் முன்னேறாமலே இருக்கிறார்கள்! 84ல் நான் நாலாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். பாம்பன் பாலத்தை கட்டி முடித்தபிறகு 2005ல் தான் முதலில் தரிசித்தேன்! சுவையான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஆகா நான்காம் வகுப்பா?

      Delete
  9. உங்களுடைய அந்த வயதில் மீன் சாப்பிட ஆசைப்பட்டதில் தவறு ஒன்றுமில்லை.

    ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே! மீனவர்களிடையே மட்டுமல்ல; இன்னும் பல குழுவினரிடமும் இந்த ஒற்றுமை இன்மையைப் பார்க்கலாம்.

    வலம்புரி ஜான் பற்றிய திரு அமுதவன் எழுதியிருப்பது அவரது இன்னொரு பக்கத்தைக் காட்டுகிறது. வலம்புரி ஜான் மட்டுமல்ல பலரும் இப்படி சூழலுக்கு பலியாகிறார்கள்.
    நம் நடிகர்களும் கடற்கரையில் திரைப்படம் எடுத்து திருப்தி பட்டுவிடுகிறார்கள். மீனவர்களின் நல வாழ்விற்கு யார் பாடுபடப்போகிறார்கள்?
    பாம்பன் பாலத்தை இதுவரை பார்த்ததில்லை. சொல்லிக்கொள்ள சற்று வெட்கமாகவே இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆனா எனக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்க. ஆமா என்னைப் போல இங்கு பார்க்க வேண்டிய இடங்கள் அதிகமோ?

      Delete
  10. மீனவ சமுதாயத்திற்குள்ளும் உயர்வு தாழ்வு பிரிவினைகள் உண்டு. சுருக்கமாக முடித்து விட்டீர்கள். பாம்பன் பாலம் நினைவலைகள் படிக்க சுவாரஸ்யம்.

    ReplyDelete
    Replies
    1. எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆவணப்படுத்த, அதன் பொருட்டு அறிமுகம் செய்ய மட்டுமே சுருக்கமான பதிவுகள். வருகைக்கு நன்றி.

      Delete
  11. "மீனவர்களின் கையில் இருந்த கடல் சார்ந்த தொழில்கள் இன்றைய சூழ்நிலையில் காசிருப்பவர்களின் கைக்கு மாறிக் கொண்டேயிருக்கின்றது."

    விவசாயமும் இனி இப்படி தான்.

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.