இந்தியர்களின் பக்தி மார்க்கத்தில் நிறைய ஆச்சரியங்களைக் கவனிக்க முடியும். காரைக்குடியில் இருந்து நினைத்தால் போய்வரக்கூடிய தொலைவில் உள்ள இராமேஸ்வரத்திற்கு இந்தப் பகுதியில் வாழ்பவர்களில், நான் பார்த்தவரைக்கும் இந்தக் கோவிலுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை வெகு சொற்பமே. ஆனால் இன்று வரையிலும் வடக்கே இருந்து வருபவர்களின் எண்ணிக்கை தான் அதிகம்.
அதேபோல உடம்பு ஒத்துழைக்காத பட்சத்திலும் "ஒரு தடவை காசிக்கு போயிட்டு வந்து செத்துடனும்" என்று சொன்னவர்களை அதிகம் பார்த்துள்ளேன். இன்று பிரபல்யமாக இருக்கும் பிள்ளையார்பட்டியை திருப்பூர் வந்த பிறகு யாரோ ஒருவரை அழைத்துக் கொண்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் தான் அந்த ஊரை நான் முழுமையாகப் பார்த்தேன். அது வரையிலும் போகிற போக்கில் அப்படியே கடந்து சென்றது தான்.
இந்த இடத்தில் நம்மவர்களின் அடிப்படை மனப்பான்மைகளையும், எப்போதும் "தூரத்துப் பச்சை" மேல் உள்ள ஈர்ப்பும் கவனிக்கக்கூடியது. அடுத்தச் சந்தில் இருக்கும் கோவிலுக்குச் செல்ல மனமில்லாமல் இருப்பவர்கள் சபரிமலை ஐயப்பனுக்கு ஜோராக விரதமிருந்து தங்கள் பக்தி சார்ந்த கடமைகளை நிறைவேற்றுவதில் தமிழருக்கு நிகரானவர்களை வேறு எங்குமே காணமுடியாது?
என்னுடைய குழந்தைப்பருவத்தில் குடும்பத்தினருடன் இராமேஸ்வரத்திற்கு ரயில் மார்க்கமாகச் சென்றது இன்றும் நினைவில் உள்ளது. ரயில் முழுக்கப் பரவியிருந்த கவுச்சி வாடையும், ஒவ்வொரு நிறுத்தங்களிலும் இறங்கி ஏறிக் கொண்டிருந்த மீன்கள் வைத்திருந்த ஓலைப்பாய் போன்றவைகள் கூட இன்றும் நினைவில் வந்து போகின்றது. பயத்தில் அம்மாவின் கைபிடித்துக் கொண்டு கடலை ஆச்சரியமாகப் பயத்தோடு பார்த்த இராமேஸ்வரத்திற்குக் கடந்த நாற்பது வருடங்களில் மொத்தமாக நாலைந்து முறை தான் சென்றுள்ளேன்.
ஒரு முறை கூட இந்த ஊரை நான் முழுமையாக உள்வாங்கியதில்லை. இந்த முறையும் அப்படித்தான் நடந்தது. ஆனால் இந்தப் பயணத்தின் மூலம் முதல் முறையாகத் தனுஷ்கோடி சென்றேன்.
இந்து,கிறிஸ்துவ,இஸ்லாமிய மதம் என்று கொள்கைகள், நோக்கங்கள் வெவ்வேறாக இருந்தாலும் பக்தியை ரசனையோடு அணுகும் நபர்கள் மிக மிகக் குறைவான எண்ணிக்கையில் தான் இருப்பார்கள்.
விரும்பும் கோவிலுக்குச் செல்ல வேண்டும். வணங்க வேண்டும். நேர்த்திக்கடனை செலுத்த வேண்டும். திரும்பி வந்து விட வேண்டும்.
அடுத்தப் பிரச்சனை தொடங்கும். அதற்கு உரிய கோவிலை தேர்ந்தெடுத்து அதற்காக விரதம் இருக்க வேண்டியது. இதுவொரு மாயச்சுழல்.
வாழ்க்கையின் கடைசி வரைக்கும் பக்தியின் அர்த்தமும் புரியாமல் மனம் அமைதி பெறும் வழியையும் அடையப்பெறாமல் வாழும் நாள் முழுக்க முனங்கிக் கொண்டே வாழ்ந்து முடிப்பதே நம்மவர்களின் கொள்கையாக உள்ளது.
இந்தப் பக்தி மார்க்கத்தைப் பற்றி இந்த இடத்தில் லேசாகப் பார்த்து விடலாம்,
"இப்படி இருப்பதற்கு நீ தான் காரணம்" இது பௌத்தம் சொல்லும் தத்துவம்.
"தன்னுடைய கர்மத்தை செய்து இறைவனை அடைவது கர்ம மார்க்கம்"
"அறிவைப் பயன்படுத்தி இறைவனை அடைவதற்குப் பெயர் ஞான மார்க்கம்"
ஆனால் இந்த இரண்டையும் விட எளிய பாமரத்தனமான பக்தி மார்க்கத்தையே தான் மத வேறுபாடுகள் இன்றி அனைவரும் விரும்புகின்றார்கள். ஆலயத்திற்குள் சென்று அனைத்தையும் கொட்டி விட்டு விட்டால் போதும் என்று நினைக்கின்றார்கள்.
இதைத்தான் "ஆத்ம திருப்தி" "பூரண மகிழ்ச்சி" என்கிறார்கள். பக்தி மார்க்கத்தைக் கடைபிடிக்கத் தொடங்கிய பிறகு மூட நம்பிக்கைகள் அணிவகுக்கக் தொடங்கியது.
வலிக்காத சிந்தனைகளில் இருந்து எங்கேயாவது வழி பிறந்து பார்த்து இருக்கின்றீர்களா? ஏன் தமிழர்கள் மற்ற இன மக்களை விடத் தனித்துவமாக இருப்பதன் காரணத்தை இதன் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
இராமநாதபுரத்தில் இருந்து பாம்பன் பாலத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்த முறை பாம்பன் தரைப் பாலத்தில் சற்று நிதானமாக நின்று கடலையும் பாலத்தையும் ரசிக்க வேண்டும் என்று மனதில் வைத்திருந்தேன். பாலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நின்று ரசித்தோம். அப்போது பெருமை மிகு இந்தப் பாலத்தின் லட்சணத்தை முழுமையாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. பராமரிப்பு என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்கும் அளவுக்கு ஒவ்வொரு பகுதியும் பயமுறுத்துவதாக இருந்தது.
இந்திரா காந்தி அவர்களால் அடிக்கல் நாட்டி (1974) ராஜீவ் காந்தி அவர்களால் (1988) அவர்களால் திறக்கப்பட்ட பாலத்திற்குள் நுழைய சுங்கவரி எதுவும் வசூலிக்கவில்லை. அப்போது கீழே தெரிந்த ரயில் பாலத்தை அதன் விஸ்தீரணத்தை ரசிக்க முடிந்தது. பல வரலாற்று நிகழ்வுகள் ஒவ்வொன்றாக மனதில் வந்து போய்க் கொண்டிருந்தது.
நாங்கள் சென்ற போது (2014 ஜனவரி) நூற்றாண்டு விழா காணப்போகும் (பிப்ரவரி) பாம்பன் ரயில் பாதை விழா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. இந்தியாவில் முதல் முறையாக 2.3 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்ட இரண்டாவது மிகப் பெரிய இந்த ரயில் பாலத்தை 146 தூண்கள் தாங்கி நிற்கின்றன. 2006 ஆம் ஆண்டு முதல் அகல ரயில் பாதையாக மாற்றம் பெற்ற பின்னரே இதன் உண்மையான பயன்பாடும், பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகத் தொடங்கியது.
ராமேஸ்வரம் என்பது வடக்கே உள்ள காசி போலப் புனிதத்தலம் என்கிற ரீதியில் தான் நம் மக்களின் பார்வையும் மதிப்பும் உள்ளது. ஆனால் வாழ்க்கையைத் தேடிச் சென்றவர்களுக்கும், வாழ முடியாமல் திரும்பி வந்தவர்களுக்கும் சரணாலயம் போல இன்று வரை காட்சியளித்துக் கொண்டிருக்கும் அவலத்தின் சாட்சியான இடமும் கூட.
ஆனால் இந்தப் பாலத்தின் வாயிலாக ஈழத்திற்குச் சென்ற, வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களைப் பற்றிப் பாலத்தில் நின்று கொண்டிருந்த அந்த அரை மணி நேரத்தில் அதிக நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன்.
எத்தனை லட்சம் குடும்பங்கள் இந்த ரயில் பாதை வழியே தங்கள் வாழ்க்கையைத் தேடி கடந்த ஒரு நூற்றாண்டில் பயணப்பட்டு இருப்பார்கள்? ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சியின் போது உருவாக்கிய வசதிகளையும் அதற்குப் பின்னால் உள்ள வஞ்சகம், சூழ்ச்சி, மனிதாபிமானமற்ற செயல்பாடுகளையும் யோசித்த போது கடற்காற்றில் மிதந்து வந்த உப்புத் தன்மையைப் போல மனமெங்கும் இனம் புரியாத பிசுபிசுப்பு உருவானது.
#எத்தனை லட்சம் குடும்பங்கள் இந்த ரயில் பாதை வழியே தங்கள் வாழ்க்கையைத் தேடி கடந்த ஒரு நூற்றாண்டில் பயணப்பட்டு இருப்பார்கள்? #
ReplyDeleteஅந்தபாலம் வழியே முதலில்... சென்ற நம்மவர்களுக்கு மட்டுமல்ல ,வந்த ஈழத் தமிழர்களுக்கும் பொருந்தும் படியான வார்த்தை !
//அந்தபாலம் வழியே முதலில்... சென்ற நம்மவர்களுக்கு மட்டுமல்ல ,வந்த ஈழத் தமிழர்களுக்கும் பொருந்தும் படியான வார்த்தை !///
Delete1913 இல் தான் பாம்பன் பாலம் கட்டத் தொடங்கப்பட்டது ஆனால் லட்சக்கணக்கான இந்தியர்கள் (தமிழர்கள் மட்டுமல்ல மலையாளிகள், தெலுங்கர்கள், ஹிந்தியன்கள் பலரும்) அதற்கு முன்பே இலங்கைக்கு பஞ்சம் பிழைக்க வரத் தொடங்கி விட்டார்கள். பெரும்பான்மையினர் தோணிகள் மூலம் தான் ராமேஸ்வரத்தையும், அங்கிருந்து இலங்கையையும் அடைந்தனர். ஈழத் தமிழர்கள் இந்தியாவில் வாழ்க்கையைத் தேடி வரவில்லை, இனக்கலவரங்கள் தொடங்கிய பின்னர் தமது உயிரைப் பாதுகாக்க வந்தார்கள். இந்தியாவில் அவர்கள் வாழ்ந்த/வாழ்கின்ற வாழ்க்கையை விட வளமான வாழ்க்கை இலங்கையில் அவர்களுக்கு இருந்தது. எந்த இலங்கையனும் இலங்கையில் வேலையில்லை, உண்ண உணவில்லை என்ற காரணத்துக்காக இந்தியாவுக்குப் போனதில்லை.
ஈழ தமிழர்களுக்காக பரிதாபப்படும் சாதாரண தமிழன் ஏழைதான் தோணிகளில் பஞ்சம் பொளைக்க அங்கு போனவன்தான் ,ஆனாலும் வந்தாரை வழ வைப்பவன் .இவனுக்கு இன்னும் வேண்டும!
Delete//இந்த இடத்தில் நம்மவர்களின் அடிப்படை மனப்பான்மைகளையும், எப்போதும் "தூரத்துப் பச்சை" மேல் உள்ள ஈர்ப்பும் கவனிக்கக்கூடியது. அடுத்தச் சந்தில் இருக்கும் கோவிலுக்குச் செல்ல மனமில்லாமல் இருப்பவர்கள் சபரிமலை ஐயப்பனுக்கு ஜோராக விரதமிருந்து தங்கள் பக்தி சார்ந்த கடமைகளை நிறைவேற்றுவதில் தமிழருக்கு நிகரானவர்களை வேறு எங்குமே காணமுடியாது?///
ReplyDeleteதமிழ்நாடு பழமை வாய்ந்த, புகழ்பெற்ற கோயில்களால் நிரம்பி வழியும் போது தமிழ்நாட்டிலிருந்து ஐயப்பன் கோயிலுக்குப் படையெடுப்பவர்களைப் பார்த்து நானும் இப்படி நினைத்ததுண்டு. ஈழத்தமிழர்கள் வெளிநாடுகளிலிருந்து போய் தமிழ்நாட்டில் கோயில், கோயிலாக அலைகிறோம் ஆனால் தமிழ்நாட்டுத் தமிழர்கள் கேரளத்துக் கோயில்களுக்குப் போகிறார்கள். நீங்கள் கூறுவது போல் தூரத்துப் பச்சை தான் போலிருக்கிறது.
இதற்குப் பின்னால் மற்றொரு உளவியல் காரணமும் உண்டு. தொடர்ந்து படித்து வரும் போது உங்களுக்கு இது குறித்து புரியக்கூடும்.
Deleteபக்தியின் அர்த்தம் மட்டுமல்ல ஐயா,பெரும்பாலானவர்கள் வாழ்வின் அர்த்தத்தைக் கூட புரிந்து கொள்ளாமல்தான், உழன்று கொண்டிருக்கிறார்கள்.
ReplyDeleteமிகச் சரியான வார்த்தைகள்.
Deleteதூரத்துப் பச்சை என்பது நூத்துக்கு நூறு உண்மை!
ReplyDeleteநான் மதுரையிலிருக்கும்போது நாயக்கர் மஹாலுக்கு பலதடவை சென்றுள்ளேன். அங்கு நடக்கும் ஒலி ஒளி காட்சி எனக்கு மிகவும் பிடித்தவொன்று! ஆனால் உள்ளூர்வாசிகளில் பலரும் அந்த மஹாலை லட்சியம்கூட செய்வதில்லை!
அதேபோல சென்னைவாசிகளில் எத்தனைபேர் எழும்பூரிலுள்ள அருங்காட்சியகத்தை பார்த்துள்ளனர்?
தமிழர்கள் அதிகம் செல்வது சபரிமலை என்றால் மலையாளிகள் அதிகம் வருவது பழனி முருகன் கோயில்.
மேலே "சி"கந்தர்
கீழே "சிறீ"கந்தர் என்பதை எத்தனை திருப்பரங்குன்றத்தில் வாழ்பவர்கள் அறிவர்?
தலைவரே அசத்துறீங்க.
Deleteஅடுத்தச் சந்தில் இருக்கும் கோவிலுக்குச் செல்ல மனமில்லாமல் இருப்பவர்கள் சபரிமலை ஐயப்பனுக்கு ஜோராக விரதமிருந்து தங்கள் பக்தி சார்ந்த கடமைகளை நிறைவேற்றுவதில் தமிழருக்கு நிகரானவர்களை வேறு எங்குமே காணமுடியாது? // மிக மிக சத்தியமே!
ReplyDelete/விரும்பும் கோவிலுக்குச் செல்ல வேண்டும். வணங்க வேண்டும். நேர்த்திக்கடனை செலுத்த வேண்டும். திரும்பி வந்து விட வேண்டும்.
அடுத்தப் பிரச்சனை தொடங்கும். அதற்கு உரிய கோவிலை தேர்ந்தெடுத்து அதற்காக விரதம் இருக்க வேண்டியது. இதுவொரு மாயச்சுழல். //
இதுதான் பெரும்பான்மையான மக்கள் செய்து கொண்டிருப்பது!
//எத்தனை லட்சம் குடும்பங்கள் இந்த ரயில் பாதை வழியே தங்கள் வாழ்க்கையைத் தேடி கடந்த ஒரு நூற்றாண்டில் பயணப்பட்டு இருப்பார்கள்? ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சியின் போது உருவாக்கிய வசதிகளையும் அதற்குப் பின்னால் உள்ள வஞ்சகம், சூழ்ச்சி, மனிதாபிமானமற்ற செயல்பாடுகளையும் யோசித்த போது கடற்காற்றில் மிதந்து வந்த உப்புத் தன்மையைப் போல மனமெங்கும் இனம் புரியாத பிசுபிசுப்பு உருவானது.//
மிக அருமையான கருத்து வெளிப்பாடு! ஒரு பயணத்தின் மூலம் இத்தனை ஆழ்ந்த கருத்துக்களைச் சிந்தித்துச் சொல்லியிருப்பது மிகவும் பாராட்டிற்கு உரியது!
தங்கள் எழுத்து அபாரம்!
வாழ்த்துக்கள்!
உங்கள் விமர்சனத்தை ரசித்தேன்.
Deleteதூரத்து பச்சை கண்ணுக்கு இனிமை என்பது உண்மைதான்! இராமேஸ்வரம் குறித்த புதியபார்வை அருமை! தொடருங்கள்! நன்றி!
ReplyDeleteநன்றி
Delete”முனகுவது” - ரசித்தேன்.
ReplyDeleteதமிழிலில் வட்டார வழக்குச் சொல்லுக்கு உண்டான சக்திக்கு இணையானது வேறெதும் இருக்காது தானே?
Deleteவிரும்பும் கோவிலுக்குச் செல்ல வேண்டும். வணங்க வேண்டும். நேர்த்திக்கடனை செலுத்த வேண்டும். திரும்பி வந்து விட வேண்டும்.
ReplyDeleteஅடுத்தப் பிரச்சனை தொடங்கும். அதற்கு உரிய கோவிலை தேர்ந்தெடுத்து அதற்காக விரதம் இருக்க வேண்டியது. இதுவொரு மாயச்சுழல். = நிஜம் தான். அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி.
நன்றிங்க
Deleteசென்னையில் பல ஆண்டுகளாக இருந்தாலும் நிறைய இடங்களுக்கு நான் சென்றதில்லை.
ReplyDeleteசமூக அக்கறையுடன் தங்கள் பயணக் குறிப்புகளை பதிவு செய்கிறீர்கள் தொடரட்டும்
ஒவ்வொரு முறையும் சென்னையில் பயணித்த பார்த்த பழகிய சாலைகளே அடையாளம் தெரியாத புதிய இடங்களாக மாறிப்போகும் விந்தை நிறைய ஊர் சென்னை.
Deleteநான் சென்னையில் பார்த்ததைவிட கர்நாடகாவில் அதிகம் பார்த்திருக்கிறேன். நம்மூர் அருமை வெளியில் வந்தால்தான் தெரிகிறது! பாம்பன் பாலம் கட்டாயம் பார்க்க வேண்டிய லிஸ்டில் இருக்கிறது.
ReplyDeleteஅவசரங்கள் எதுவும் இல்லாமல் அமைதியாகச் சென்று அந்த பாலத்தின் தொடக்கம் முதல் கடைசி வரைக்கும் நடந்தே சென்று பாருங்கள். சொர்க்கம் கைக்கு எட்டும் தூரத்தில் தான் உள்ள து என்பதை உணர்ந்து கொள்வீர்கள்.
Deleteஇந்த பதிவைப் படித்து முடிந்ததும், எனது சின்ன வயதில் மண்டபம் என்ற ஊரில் எனது சித்தப்பா வீட்டிலிருந்து (ரெயில்வே குவாட்டர்ஸ்) கப்பல்கள் வரும்போதெல்லாம் இரண்டாகப் பிளந்து வழிவிடும் பாம்பன் பாலம் ஞாபகம் வந்தது.
ReplyDeleteநானும் தொடக்கத்தில் அந்த பாலத்தின் சிறப்பை நினைத்து பல கற்பனை குதிரைகளை தட்டி விட்டதுண்டு.
Delete"நான் பார்த்தவரைக்கும் இந்தக் கோவிலுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை வெகு சொற்பமே. ஆனால் இன்று வரையிலும் வடக்கே இருந்து வருபவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். "
ReplyDeleteஎப்போதுமே உள்ளூர் காரர்கள் அவர்கள் சார்ந்த இடத்திற்கு அதிகம் சென்ற இருக்க மாட்டார்கள். இது தான் உலகம் முழுக்க உள்ளது.