அஸ்திவாரம்

Sunday, March 09, 2014

யோகா கலையும் யோகக்காரர்களும்?


யோகா கலை - சில புரிதல்கள் 


ஆரோக்கியமான வாழ்க்கை, ஆரோக்கியமான உடம்பு என்பதைப் பற்றி முதலில் புரிந்து கொள்வோம். 

நாம் விரும்பும் அத்தனை வசதிகளும், விரும்பும் வாய்ப்புகளும் நம்மிடம் இருந்தால் இதனைத் தான் தற்பொழுது ஆரோக்கியமான சமூக வாழ்க்கை என்கிறார்கள். மற்றவர்களால் மதிக்கப்படும் வாழ்க்கையைத் தான் சிறப்பான "அங்கீகாரம்" என்றும் சொல்கின்றார்கள். இதைப் போலவே ஆரோக்கியமான உடம்பு என்பதனை வெளித் தோற்றத்தை வைத்து தான் மதிப்பிடுகின்றார்கள். 

ஒரு ஆண் அல்லது பெண் பார்க்க அழகாக, புஷ்டியாக, களையாகத் தோற்றப் பொலிவோடு இருந்தால் அவர்களை பார்த்தவுடன் விரும்புகின்றார்கள். கவர்ச்சியான மனிதர் என்றும் சொல்கின்றார்கள். இதற்கு மேலாகக் ஆண்களும், பெண்களும் கூடுதல் ஒப்பனைகளை சேர்த்துக் கொள்ளச் சமகாலத்தில் அழகுக்கு அழகு சேர்ப்பது என்று முலாம் பூசி உடம்பை கெடுத்துக் கொள்கின்றார்கள். கடைசியில் அனைவரும் இழந்து போன இளமையை நினைத்து அவஸ்த்தைப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இங்கே தான் பிரச்சனையும் தொடங்குகின்றது. இறப்பு நமக்கில்லை என்ற நம்பாத மனமும், இளமை என்பது மறையக் கூடியது என்பதனை ஏற்காத மனதையும் கொண்டவர்கள் ஆயுள் முழுக்க அவஸ்த்தைப்பட வேண்டியவர்கள். அவர்களைப் பற்றி நாம் பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை.

இது போன்ற சூழ்நிலையில் தான் ஆரோக்கியம் என்பதன் உண்மையான அர்த்தமும் மாறிவிடுகின்றது. 

அன்றாடம் நாம் செய்யும் உடற்பயிற்சிக்கும், யோகா கலைக்கும் அடிப்படையில் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. உடற்பயிற்சி என்பது உடலை வலுவாக்குவது. யோகா என்பதை மனதை அமைதிப்படுத்தி ஆன்மாவை இனம் காண வைப்பது. உடல் முழுக்க பரவியுள்ள சக்தி ரூபங்களை அடையாளம் காண உதவுவது.

இன்று தினசரி நடைப்பயிற்சி, அதிகமான தண்ணீர் குடித்தல் என்று ஒவ்வொருவரும் மருத்துவராக மாறி அறிவுரை வழங்கி பலரின் வயிற்றை கலக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இது தவிர வந்து கொண்டிருக்கின்ற பத்திரிக்கைகளும் மருத்துவர் போலவே அள்ளி வழங்கிக் கொண்டிருப்பதால் எது உண்மை? எது தேவை என்பதே எவருக்கும் தேவையில்லாமல் போய்விட்டது. 

விளம்பர மோகம் ஒரு பக்கம். விபரிதமான பழக்கவழக்கங்கள் மறு பக்கம். 

மொத்தத்தில் இன்று ஒவ்வொரு தனி மனிதர்களின் வாழ்க்கையிலும் வெளியே பகிர்ந்து கொள்ள முடியாத கரும்பக்கங்கள் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கின்றது. எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளாத மனம். ஆசையை குறைத்துக் கொள்ள முடியாத வாழ்க்கை சூழ்நிலை. இதனால் ஒவ்வொருவரும் அன்றாட வாழ்க்கையை அமைதியிழந்த மனதுடன் தான் வாழ வேண்டியதாக உள்ளது.

ஆனால் யோகா என்ற கலையின் தன்மையே வேறு. இது உடற்பயிற்சி அல்ல. உங்களின் சக்தியை, உங்களுக்கே தெரியாத சக்தியை உங்களுக்கே உணர்த்திக் காட்டும் வல்லமை உடையது. 

யோகா என்ற கலையானது இந்திய நாட்டின் சிறப்பு அடையாளங்களின் ஒன்று. இதனை வெளியே இருந்து எவரும் இங்கு வந்து கற்றுத் தரவில்லை. இங்கே வாழ்ந்த சித்தர்கள் உருவாக்கிய கலையிது. 

ஒவ்வொரு காலகட்டத்திலும் வளர்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக இங்கே ஒவ்வொன்றையும் அறிவுத்தராசில் நிறுத்தி, எதனையும் சந்தேகக் கண்ணோடு பார்த்து நமக்கே உரித்தான பல பாரம்பரிய கலைகள் நம்மை விட்டுச் சென்று விட்டது. இதனை மேற்கித்திய சமூகம் "பிராண்ட்" பெயரோடு மறுபடியும் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் போது அதற்குத் தனி மரியாதையும் அங்கீகாரமும் கிடைத்து நாமும் அதனைத்தான் உண்மை என்று நம்பத் தொடங்குகின்றோம்.



யோகா என்ற வார்த்தை சமஸ்கிருத சொல்லாகும். தமிழில் யோகா என்பதன் அர்த்தம் "இணைதல்" என்பதாகும். ஒலி அலையின் வேகத்தை விட அதிகமானது மனித மனதின் வேகம். நம் மனதில் வேகத்தை ஒரே இடத்தில் நிறுத்துவது தான் இதன் முதல் கடமை. அதற்கான பயிற்சி தான் இந்த யோகா நமக்குக் கற்றுத் தருகின்றது. ஒவ்வொரு ஆசனமும் நமக்கு ஒவ்வொரு விதமாக உணர்த்துகின்றது. 

நம்முடைய மனம் அலைபாயுதலை நிறுத்தினால் தான் ஆரோக்கியம் என்ற வார்த்தையின் முதல் படியை நாம் தொட முடியும். அடுத்தடுத்த பயிற்சிகளின் மூலம் மேற்கொண்டு செல்ல முடியும். இதனைத் தான் சித்தர்கள் தங்கள் வாழ்க்கையின் மூலம், தாங்கள் படைத்த பாடல்களின் மூலம் நமக்குப் புரிய வைத்தனர். 

மனதை ஒரு நிலைப்படுத்த மூச்சுப் பயிற்சி அவசியம் தேவை. இதன் மூலம் மட்டுமே நம்மிடம் உள்ள அற்புத ஆற்றலை நாம் பெற முடியும். படபடப்பு, பரபரப்பு என்று வாழ்க்கை மாறிப்போன சூழ்நிலையில் நாம் மனதை ஒரு நிலைப்படுத்தாமல் யோகா மட்டுமல்ல எந்தக் கலையையும் முழுமையாகக் கற்றுக் கொள்ள முடியாது. 

இதனை ஒரு எளிய உதாரணத்தின் மூலம் பார்க்கலாம். 

நாம் ஒருவரை சந்திக்கும் பொழுது, அவர் படபடப்பாக வந்தாலும் சரி, பயத்தோடு வந்தாலும் சரி உடனே "வாங்க உட்கார்ந்து பேசலாம்" என்று தான் தொடங்குகின்றோம். உட்கார்ந்தால் மட்டுமே படபடப்பு குறையும், மனம் நிலைப்படும். அதன் பிறகே நம் உரையாடல் உணர்த்தும் உண்மைகளைப் பரஸ்பரம் புரிந்து கொள்ள முடியும். எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு காண முதலில் அமர வேண்டும். அதன் பிறகே மூளை அமைதியான நிலைக்கு வருகின்றது. யோகாவின் ஆரம்பமே அமர்தலில் இருந்தே தொடங்குகின்றது. 

இந்தக் கலையில் உள்ள ஒவ்வொரு ஆசனங்களின் மூலம் நமக்கு  பல்வேறு பரிணாமங்கள், பயிற்சிகள் மூலம் தொடர முடியும். தலை முதல் பாதம் வரைக்கும் உள்ள நரம்பு மண்டலங்களுக்கு நம்மால் புத்துணர்ச்சி அளிக்க முடியும். 

உடற்பயிற்சி என்பது உணவோடு சம்மந்தப்பட்டது. உங்கள் சக்தி குறைய மேலும் உணவு தேவைப்படும். உண்ட உணவு உடற்பயிற்சிகள் மூலம் எரிக்க மேலும் தேவைப்படுகின்றது. இது இடைவிடாத சுழல் போன்றது. 

ஆனால் யோகா உங்கள் மனதோடு சம்மந்தபட்டது. உங்கள் உறுப்புகளை வலுவாக்குவதை விட எல்லாவிதமான உறுப்புகளுக்கும் புத்துணர்ச்சி அளிக்கவல்லது. இழந்த சக்தியை, உள்ளே உள்ள தெரியாத சக்தியை அடையாளம் காண வைப்பது. ஆசனங்கள் மூலம் மட்டுமே உடலும் மனமும் ஒரே சமயத்தில் சீராகும். 

உடல் ஆரோக்கியமாக உள்ளது. ஆனால் நாள்தோறும் கவலைகளால் மனம் அரித்துக் கொண்டே இருக்கின்றது என்றால் ஒருவரின் வாழ்க்கை எப்படி இருக்கும்?  "உள்ளே அழுகின்றேன். வெளியே சிரிக்கின்றேன்" என்ற கதையாகத் தான் வாழ்க்கை இருக்கும்.

அனைவருக்கும் தெரிந்த கூடு விட்டு கூடு பாயும் வித்தையைக் கற்று வைத்திருந்த திருமூலர் என்ற சித்தர் 84 லட்சம் யோகக்கலைகளை அறிந்தவர் என்று வரலாற்றுப் புத்தகங்கள் சொல்கின்றது. ஆனால் இங்கே மதம், கலைகள் என்ற இரண்டையும் ஒன்றோடு ஒன்று குழப்பிக் கொண்டு பலரும் திக்குத் தெரியாத காட்டில் உலாவும் மிருகங்கள் போல மனித ரூபத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். 

ஒரு பக்கம் எதைப் பார்த்தாலும் சந்தேகம். எப்போதும் அவநம்பிக்கை. 

மற்றொரு பக்கம் எதைப் பார்த்தாலும் புனிதம். தாங்கள் பின்பற்றும் மதக் கொள்கைகள் தான் பிரதானம் என்று மனிதர்கள் இரு கோடுகளாகப் பிரிந்து வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். 

ஆசான் திரு. கிருஷ்ணன் ஒரு சமயம் உரையாடலின் மூலம் தெரிவித்த கருத்து எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது. அவருக்கு மொத்தம் 2800 ஆசனங்கள் தெரியும் என்றார். ஆனால் நடைமுறையில் கைவிரல்களுக்குள் அடங்கக்கூடிய ஆசனங்களை வைத்தே பலரும் காசு சம்பாரிக்கப் பிழைப்பு வாதிகளாக மாறிவிட்டனர் என்று வருத்தத்துடன் சொன்னார். 

நம் சிந்தனையில் தெளிவு இருந்தால் மட்டுமே அன்றாட வாழ்வில் அமைதி கிட்டும். 

நாம் உருவாக்கிக் கொள்ளும் அமைதியே நம்மை எல்லா நிலைகளிலும் வழி நடத்தும். 

உங்களுக்கு மதம், மார்க்கம், தத்துவஞானிகள் சொல்லிய கருத்துக்களை விட உங்களை உணர்ந்து கொள்வது மிக முக்கியம். நம்மை நாம் உணர்ந்து கொண்டால் மட்டுமே பெரிய சாதனையாளர்களாக வர முடியாவிட்டால் கூட அன்றாட வாழ்க்கையை அமைதியான முறையில் வாழ முடியும். 

அதற்கு உங்களுக்குப் படிப்படியான பயிற்சி முக்கியம். எந்தப் பயிற்சி தேவை? அதுவும் எப்போது தேவை என்பதனை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்? 

முந்தைய பதிவு     ஆசான் திரு.கிருஷ்ணன்.

18 comments:

  1. தெளிவான விளக்கம் + காணொளிகள் நன்றி...

    இங்கு(ம்) நன்றாக காசு பார்க்கும் மாஸ்-டர்கள் உருவாக்கி விட்டனர்... செல்லும் ஆட்களும் தெரியும்... ஒரு வருடமோ, சில மாதங்களோ கழித்து அவர்களைப் பார்த்தால் அடையாளமே தெரியவில்லை... அடேங்கப்பா...! +10 வயது...! கைத்தறி நெய்பவர்கள் -10 வயது...! என்னத்த சொல்ல...?

    ReplyDelete
    Replies
    1. புரிகின்றது தனபாலன்

      Delete
  2. தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. அனைத்தும் வியாபாரம் ஆன் பின் யாரிடம் யோகா கற்பது என தெரியவில்லை. நடைப் பயிற்சியே உத்தம்ம் ஆகும்.

    ReplyDelete
    Replies
    1. அதிகமான நடைப்பயிற்சியும் பல சமயங்களில் மூட்டு வலியை பலருக்கும் உருவாக்கத்தான் செய்கின்றது பரமசிவம்.

      Delete
  3. ரொம்பவே மெனக்கெடுறீங்க போலவே ஜோதிஜி!
    நீங்கள் கூறுவதை போல எதை நம்புவது என்ற சந்தேகம் இருந்துக்கொண்டுதான் இருக்கிறது.
    LIFE IS SIMPLE
    DONT MAKE IT TERRIBLE
    என்பதை உணர்ந்தால் பலன் கிடைக்கும்.
    இங்கோ உணர்தலே இல்லாமலல்லவா ஓடிக்கொண்டிருக்கிறோம்.
    "இன்றைக்கான" தேடலுக்கே technology-யும் உதவுகிறது. இதைக்கொண்டு "நாளைக்கான" அனைத்தையும் கெடுத்துக்கொண்டிருக்கின்றோம்.
    மீண்டும் ஒருமுறை உங்களின் புதிய அவதாரத்தை போற்றி வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா. என்ன செய்வது? வாழ்க்கை முழுக்க இது போன்ற முயற்சிகள் வெற்றிகள் தோல்விகள் தான் அமுதவன் சொன்னது போல ஒவ்வொரு நாளும் நம்மை புதுப்பித்துக் கொண்டே இருக்க வைக்கின்றது.

      Delete
  4. யோகம் என்பது கற்றுக்கொள்ளத் துவங்கியவுடன் உங்களுக்கு கிடைக்க இருக்கும் நற்பேறு, உயர்ச்சி, ஊக்கம் என்ற நன்மைகளை சார்ந்தது. தொடங்கினால் மட்டுமே உய்த்துணரக்கூடிய வாய்ப்புகள் அவை. யோகம் என்றால் அதிர்ஷம் என ஓர் அர்த்தமும் உண்டு.
    லட்சுமணன்

    ReplyDelete
    Replies
    1. முற்றிலும் உண்மை. உணர்ந்தவர்கள் பாக்கியவான்கள்.

      Delete
  5. அருமையான அறிமுகக் கட்டுரை! எனக்கு தற்போது அவசியமாக தேவையானதும் கூட. மனமும் உடலும் சோர்ந்து போயிருக்கிறது. ஒருவித சலிப்பும் மேலோங்குகிறது. எல்லாம் நோயுள்ள வாழ்க்கை தரும் பரிசு. கடந்த ஆண்டு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்று தெரியவந்தது முதல் மனமும் உடலும் படுகிற அவஸ்தைகள் சொல்லிமாளாது. சிலவற்றை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவும் முடியாது. தங்களின் கட்டுரை மூலமும், ஆசானின் மூலமும் எனது பிரச்னைக்கு தீர்வு கிடைக்கிறதா என்று பார்ப்போம்.

    தங்களின் இந்த வரிகளை நிஜமாய் நான் உணர்கிறேன். //மொத்தத்தில் இன்று ஒவ்வொரு தனி மனிதர்களின் வாழ்க்கையிலும் வெளியே பகிர்ந்து கொள்ள முடியாத கரும்பக்கங்கள் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கின்றது. எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளாத மனம். ஆசையை குறைத்துக் கொள்ள முடியாத வாழ்க்கை சூழ்நிலை. இதனால் ஒவ்வொருவரும் அன்றாட வாழ்க்கையை அமைதியிழந்த மனதுடன் தான் வாழ வேண்டியதாக உள்ளது. \\

    ReplyDelete
    Replies
    1. உங்களின் நேர்மையும் உண்மையும் என்னை உலுக்கி விட்டது. ஒரு தனிப்பதிவாக இது குறித்து எழுதுகின்றேன் ஞானசேகரன்.

      Delete
  6. எல்லாம் வியாபாரம் ஆகிவிட்டது உண்மைதான்! சிறப்பான விளக்கமுடன் நல்லதொரு பதிவு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. பெயரும் புகைப்படமும் மாறிவிட்டதே

      Delete
  7. இரண்டு பதிவுகளையும் படித்தேன். நாளுக்கு நாள் நீங்கள் உங்களைப் புதுப்பித்துக் கொள்வதோடு, நீங்கள் உணர்ந்ததை மற்றவர்களுக்கும் - குறிப்பாக உங்களைத் தொடர்ந்து வருகிறவர்களுக்கும் பகிர வேண்டும் என்ற குறிக்கோளோடு நடைபோடுவது போற்றுதற்குரியது. 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதின் ஒரு சிறு துளிதான் இதுவும்.

    திருநெல்வேலி, குற்றாலம், நாகர்கோவில் என்றொரு பயணம்......அங்கிருந்து வந்ததும், அச்சுக்குப் போகவேண்டிய ரெய்கி பற்றிய புத்தகத்தின் இறுதிக்கட்டப் பணிகள் என்று கொஞ்சம் விடுவித்துக்கொள்ள முடியாத பணிகள்....அதனால் இணையத்திற்கு வருவதற்கான நேரம் குன்றிப் போய்விட்டது.

    ஒரு நல்ல - உண்மையிலேயே பெரிய மனிதரைப் பற்றிய தகவலை நிறையப்பேர் அறிந்துகொள்ளச் செய்திருக்கிறீர்கள். பெரும்பாலும் புகைப்படங்களை வைத்தே காணொளிக் காட்சியினை உருவாக்கியிருக்கிறீர்கள். 'லைவ்வாக' இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்ற எண்ணம் தோன்றாமலில்லை. உங்களின் அடுத்தடுத்த முயற்சிகள் இதை நோக்கி இருக்ககூடும்.
    அதிலும் இரண்டாவது காட்சியிலும் கால்வாசி ஆனதும் முதல் காணொளியில் பேசிய பேச்சே மறுபடியும் ஒலிக்கத்துவங்குகிறது. (நல்ல வேளை உங்களை நிறையப் புகைப்படங்கள் வாயிலாகப் பார்க்க முடிந்தது). முக்கால்வாசியானதும்தான் அவருடைய பேச்சின் தொடர்ச்சி முந்தைய காணொளியில் இல்லாத புதிய விஷயங்களைப் பேசுகிறது. அவரது ஆசனப் போஸ்கள் அபாரம். அதிலேயே வாழ்க்கையைப் பிணைத்துக்கொண்டிருப்பவர் என்பதால் அவருக்கான வயதை அவர் உடம்பு காட்டாமல் இன்னமும் இளமையாகவும் வலிமையுடையவராகவும் இருக்கிறார்.

    படபடப்போடும், பரபரப்போடும் வருபவரை உட்கார்ந்து பேசலாம் என்று சொல்வதன் மூலம், அவரை உட்கார வைப்பதன் மூலம் படபடப்பையும் பயத்தையும் குறைக்கலாம் என்று சொல்லியிருப்பது அருமையான உதாரணம்.

    உடற்பயிற்சிக்கும் யோகாவுக்கும் மூச்சுப் பயிற்சிக்கும் என்ன வித்தியாசம் என்பதைப் பற்றி நான் அடிக்கடி சொல்வேன். ஒரு உடற்பயிற்சி செய்து முடித்தீர்கள் என்றால் மூச்சு வாங்கும். சாதாரண நிலைக்கு வருவதற்கே சில வினாடிகளோ சில நிமிடங்களோ ஆகும். ஆனால் அதே நேரம் நீங்கள் ஒரு குறிப்பிட்ட ஆசனம் செய்கிறீர்கள் என்றால் மூச்சு வாங்காது. உங்கள் உடல் தளர்ந்து போகாது. மூச்சுப் பயிற்சி செய்கிறீர்கள் என்றால் மூச்சு வாங்காது. உடல் தளர்ந்துபோய் துவளாது.

    காரணம் என்னவென்றால் உடற்பயிற்சி செய்யும்போது சக்தி வீணாகிறது.

    யோகா செய்யும்போதோ, மூச்சுப் பயிற்சி செய்யும்போதோ நம் உடம்பிலிருக்கும் சக்தி வீணாவதில்லை. இது ஒரு முக்கியமான அடிப்படை.
    தங்களின் 'தேடுதல்' தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஆசான் குறும்படம் குறித்து எடுக்க நான் பயணம் செய்த பயணத்தைப் பற்றி சில பதிவுகளைக எழுத நினைத்துள்ளேன். உங்களின் ஆழ்ந்த அக்கறை குறித்து அதில் சிலவற்றை பதிவு செய்ய விருப்பம். மிக்க நன்றி.

      Delete
  8. திரு ஜோதிஜி அவர்களின்
    யோகா கலையும் யோகக்காரர்களும்?
    அற்புதமான பதிவு, காணொளிக்காட்சிகளுடன். எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
    நன்றி திரு ஜோதிஜி.

    ReplyDelete
  9. அருமையான தொகுப்பு. அழகான எழுத்து. மகிழ்வாயுள்ளது.
    - மலைநாடான்

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.