எனக்கு நேரமில்லை என்று யாராவது என்னிடம் சொன்னால் வியப்புடன் அவர்களைப் பார்பபதுண்டு. காரணம் தொடர்ச்சியாக 18 மணி நேரம் வேலை செய்துவிட்டு மறுநாள் அதே சுறுசுறுப்புடன் அதே வேகத்துடன் பணிபுரிபவர்களுடன் கடந்த 20 வருடங்களாக ஓடிக் கொண்டுருப்பதால் + பார்த்துக் கொண்டிருப்பதால் சொல்பவரின் இயலாமையை மனதிற்குள் குறித்துக் கொள்வதுண்டு.
ஆனால் கடந்த இரண்டு வாரத்தில் எழுத வேண்டும் என்று நினைத்து வைத்திருந்த ஏராளமான விசயங்களை சற்று கோடிட்டு காட்டவே இந்த பதிவு.
வரலாறு முக்கியம் அமைச்சரே.
++++++++++++++++++++++++++++++++++++++++++++
சென்னையில் மத்திய அரசு பணியில் உள்ள பள்ளித் தோழன் என்னுடைய டாலர் நகரம் புத்தகத்தை படித்து முடித்தவுடன் முக்கியமான ஒரு அறிவுரையைச் சொன்னான்.
"உனது புகைப்படம் போட்டு புத்தகம் வந்துவிட்டது. இனி தான் நீ கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக எதிரிகளை வளர்த்துக் கொண்டு விடாதே" என்றான். எனக்கு அப்போது அது பெரிதாக தெரியவில்லை.
அவன் சொன்னதன் உள்ளர்த்தம் ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொருவரின் மூலமும் பாடங்களாக கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
கடந்த நாலைந்து வருடங்களாக என் மனோநிலையில் ஏராளமான மாறுதல்கள் வந்துவிட்டதால் வேகம் குறைந்து, மற்றவருடன் பேசக் கூடிய வார்த்தைகள் கூட அளவோடு தான் வருகின்றது.
விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை.
+++++++++++++++++++++++++++++++++++++++++++
எது நடக்கக்கூடாது என்று நினைத்து இருந்தேனோ அது நடந்தே விட்டது.
இந்த புத்தகம் வெளியீட்டு விழா தொடர்பாக அழைப்பு விடுக்க பலரையும் சந்தித்த போது தான் நான் எழுதுவது என்பது திருப்பூரில் தொழில் சார்ந்த நண்பர்கள் பலருக்கும் தெரிய வந்தது. ஆனால் தற்போது எனது அலுவலகம் வரைக்கும் என் புத்தகம் குறித்த தகவல்கள் வந்து சேர்ந்து விட்டது. முதலில் என்னிடம் கேட்க தயங்கிக் கொண்டு அலுவலகம், தொழிற்சாலை என்று சுற்றி வந்ததை பலரின் மூலம் என் காதுக்கு வந்த போது ஏதும் எதிர்வினையை கொண்டு வந்து சேர்க்குமோ? என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் இதன் மூலம் புதிய பொறுப்புகள் வந்து சேர்ந்தது தான் ஆச்சரியம்.
நம்மிடம் உள்ள மற்ற கலையார்வங்கள் எந்த பணியில் நாம் இருந்தாலும் அது பயன் உள்ளதாக இருக்கும் என்பதை கடந்த ஒரு வாரத்தில் நடந்த பல சம்பவங்கள் எனக்கு உணர்த்திக் காட்டியுள்ளது.
நம் கலையார்வம் நம்மை வளர்க்கும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இவனிடம் கிரியேட்டிவிட்டி இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட நிர்வாகம் ஆடைத் தொழிலின் அடி முதல் கடைசி வரைக்கும் உள்ள நிகழ்வுகளை ஆவணமாக்கும் பொறுப்பை வழங்கியது.
கடந்த 20 வருடங்களாக இந்த தொழிலில் இருந்தாலும் முழுமையாக ஒரே சமயத்தில் தற்போது எனக்கு கிடைத்த வாய்ப்பு போல வேறு ஒருவருக்கு அமையுமா? என்று தெரியவில்லை. ஒவ்வொரு நிலையிலும் (பஞ்சு முதல் ஆடைகளை பெட்டி போட்டு ஏற்றுவது வரைக்கும்) என்னை நானே ஆவணமாக்கிக் கொண்ட வாய்ப்பு எதிர்பாராத நிலையில் அமைந்தது. நானும் இந்த தொழிலில் இருந்தேன் என்பதற்கு ஒரு சாட்சியாக ஒரே ஒரு படத்தை இந்த இடத்தில் பகிர்ந்து கொள்கின்றேன்.
ஆடைத் தொழிலின் தொடக்கம் என்பது வெளிநாட்டுக்காரனுடன் பேசி ஒப்பந்தம் உருவாக்குவ்து. இது தான் ஷோரூம் அல்லது பையர் ஹால் அல்லது மீட்டிங் ஹால் என்று பலவாறு அழைக்கப்படுகின்றது.
நேயர்களின் விருப்பத்திற்கேற்ப ஒவ்வொரு படமும் சில ஆடைத் தொழில் சார்ந்த செய்திகளும் விரைவில் வெளிவரும்.
கூடவே நம்மோட மொகறையும்.
வவ்வால் போன்றவர்கள் ஒப்பனை அதிகமோ என்று பொறாமைப்பட வேண்டாம்.
எல்லாமே லென்சு தான் காரணம்.
புண் பட்ட மனதை தண்ணீர் விட்டு ஆற்று.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இவர்களுக்கு புத்தக வாசிப்பு என்பது சாத்யமில்லை என்று கருதிக் கொண்டவர்கள் பலரின் பார்வையிலும் டாலர் நகரம் புத்தகம் பட்டுள்ளது என்பது ஆச்சரியமாக உள்ளது.
அலுவலகத்தில் என்னுடன் பணிபுரிபவர்கள், தொழிற்சாலையில் உள்ளவர்கள் என்று எப்படியோ இந்த புத்தகம் கண்ணில் பட்டு சற்று தயக்கத்துடன் நீங்க தானே ஜோதிஜி என்று கேட்கும் போது உள்ளூற உருவாகும் படபடப்பு மற்றும் இனம் புரியாத நடுக்கம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.
இவர்கள் படிக்க மாட்டார்களா? என்று யோசித்த பலரும் ஏமாற்றத்தை தந்துள்ளனர். ஆனால் டைலர் படித்து விட்டு கை குலுக்கும் போது சற்று வியப்பாக உள்ளது. தற்போது இருக்கும் பதவிக்கும் புத்தகத்தில் உள்ள முரண்பட்ட தகவல்களையும் ஒன்றாக வைத்துக் கொண்டு எப்படி இவர்கள் நம்மை பார்ப்பார்கள்? என்ன மாதிரியான உள்வாங்கல் இவர்களுக்குள் இருக்கும் என்று பலவிதமான யோசனைகள் குறுக்கும் நெடுக்கும் தினந்தோறும் ஓடிக் கொண்டேயிருக்கின்றது.
கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பிரபல்யம், புகழ்ச்சி போன்றவற்றை கடந்த இரண்டு மாதமாக பலவாறாக யோசித்துக் கொண்டு இருக்கின்றேன். பலரின் நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனித்துக் கொண்டு இருக்கும் போது இந்த பதிவு எதார்த்தமாக என் கண்ணில் பட்டது. என் மனதில் உள்ள பலவற்றை அப்படியே படம் பிடித்து காட்டியுள்ளது.
சில கல்லூரிகளில் பேச வாய்ப்பு வந்த போது மறுத்த காரணங்கள் இதை படித்த போது சரியெனவே பட்டது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கடந்த இரண்டு மாதங்களில் என்னைச் சுற்றிலும் நடக்கும பல சம்பவங்களின் மூலம் நடுத்தரவர்க்க மக்களின் மனோபாவங்களை அதிகமாக உள்வாங்கிக் கொண்டிருக்கின்றேன். தற்கால வாழ்க்கை முறைகளில் மாறிப் போன பல விசயங்கள் கண்ணில் உறுத்தலாகவே தெரிகின்றது. நிச்சயம் இதைப் பற்றி எழுதுவேன்.
வயதின் கோளாறா? இல்லை ஒத்துப் போகாதா தன்மையா?
++++++++++++++++++++++++++++++++++++++++++++
எனது பள்ளிக்கூட தினங்களில் ஒவ்வொரு வருட கோடை விடுமுறை தொடங்கும் போது சட்டையை அப்படியே கழட்டி போட்டு விட்டு வெற்று உடம்போடு பொட்டை வெயிலில் டவுசரோடு ஓடிதிரிந்த நாட்கள் இப்போது நினைவுக்கு வந்து போகின்றது. காரணம் தேவியர்கள் கடைசி பரிட்ச்சை எழுதி முடிந்து வீட்டுக்குள் நுழைந்த அந்த மதியம் நேரம் இன்னும் மனதில் நிழலாடிக் கொண்டு இருக்கின்றது. வந்த மூவரும் அப்படியே தனது பைகளை தூக்கி எறிந்து விட்டு அப்பாடா என்றார்கள்.
களைப்பா? வெறுப்பா? .
+++++++++++++++++++++++++++++++++++++++++
எனக்கு 33 வயதில் தான் முறைப்படியான கணினி சார்ந்த அறிமுகம் உருவானது. அப்போது தான் தொழில் ரீதியான அவசிய தேவைகளும் ஏற்பட்டது. ஆனால் தேவியர்களின் வாழ்க்கையில் கணினி என்பது எட்டு வயதில் அறிமுகம் ஆனது. கடந்த இரண்டு வருடத்தில் என்னுடைய மடிக்கணினியை சமயம் கிடைக்கும் போதெல்லாம் தொடத் தொடங்கியவர்கள் படிப்படியாக அவர்களாகவே ஒவ்வொன்றாக கற்றுக் கொண்டு என்னை கதிகலக்க வைத்துக் கொண்டிருந்தார்கள்.
எதையும் நான் கற்றுக் கொடுத்ததே இல்லை. மடிக்கணினியில் அவர்கள் விருப்பப்படி சேமித்து வைத்திருந்த விளையாட்டுச் சமாச்சாரங்களில் அவர்களின் பயணம் தொடங்கியது.
திடீரென்று ஒரு நாள் கூகுளில் கேம்ஸ் என்று அடித்துப் பார்க்கச் சொன்னேன். வந்து விழுந்ததில் ஏதோவொன்றில் நுழைந்து தடம்புரிந்து இன்று விதவிதமான ஆன் லைன் கேம்ஸ் ல் தங்கள் திறமையைக் காட்ட என் நிலமை அதோகதியாகி விட்டது.
பொறுத்தாள்வார் பூமி ஆள்வார் என்று சொன்னதை நான் நம்பவில்லை.
காரணம் மூன்று பேர்களின் வரிசை முடிந்து என் கைக்கு வரும் போது நான் பாதி தூக்கத்தில் ஜீவசமாதி ஆகியிருப்பேன். ஆகா நம்மோட வாழ்க்கையை இவர்கள் பணயம் வைக்கின்றார்களே என்று கிடைக்கும் பணத்தை சேமித்து வைங்க. இந்த விடுமுறையில் ஒரு டெக்ஸ் டாப் வாங்கித் தருகின்றேன் என்று எதார்த்தமாக சொல்லி வைக்க அதுவும் எனக்கே எதிராக திரும்பியது. நான் கொண்டு வந்து வைக்கும் பணமெல்லாம் உரிமையுடன் கேட்டு வாங்கி அவரவர் உண்டியலில் போட்டு நிரப்ப ஆரம்பித்தனர். அவர்கள் நினைத்தபடியே நண்பரிடம் சொல்லி கணினியர் ஆகிவிட்டனர்.
இப்போது பெரிய திரை வசதியுள்ள டெஸ்க்டாப் ல் விளையாட்டுடன், அறிவியல் சார்ந்த யூ டியூப் சமாச்சாரங்களை பார்த்துக் கொண்டிருப்பவர்களிடம் ஏதோவொன்றை கேட்க நினைத்தாலும் "உங்களுக்கு அலுவலகத்திற்கு நேரமாகி விட்டது. கிளம்புங்க" என்கிறார்கள்.
இந்த அனுபவத்தை விரைவில் எழுதி வைத்துவிட வேண்டும்.
வயதாகும் போது சூதனமாக இருக்க வேண்டும் போல.
இன்னும் கொஞ்சமுண்டு...........................................
தொடர்புடைய பதிவுகள்
365 இரவுகள்
என் ஜன்னலுக்கு வெளியே
பாலைத்திணை
கடந்து போன நாட்கள்
வரலாறு கிலோ என்ன விலை?
கோடி கொடுத்து குடியிருந்த வீட்டையும் கொடுத்தவர்
டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி காலமானார்
தொடர்புடைய பதிவுகள்
365 இரவுகள்
என் ஜன்னலுக்கு வெளியே
பாலைத்திணை
கடந்து போன நாட்கள்
வரலாறு கிலோ என்ன விலை?
கோடி கொடுத்து குடியிருந்த வீட்டையும் கொடுத்தவர்
டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி காலமானார்