கண்டி என்பது இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதி. கிபி 14 ஆம் நூற்றாண்டு காலம் முதல் தனி ராஜ்யமாகவே மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது. ஆண்டு கொண்டுருந்தவர்கள் சிங்கள தமிழ் மன்னர்களாக இருந்தாலும் இரு இன மக்களும் ஒன்றாகத்தான் வாழ்ந்தார்கள்.
இதே நிலைமை தான் மொத்த தீவுப் பகுதியிலும் இருந்தது. பெரும்பான்மை சிறுபான்மை என்ற வார்த்தைகள் பின்னால் வந்தவர்கள் தங்கள் வசதிகளுக்காக உருவாக்கியது.
ஆதிக்கம் செலுத்த விரும்பியவர்கள், இறுதியில் அதில் ஜெயித்து வருவர்களும் தானே ஆட்சியில் அமர முடியும்.
சிங்களர்களின் கடைசி மன்னராக கண்டிப்பகுதியில் இருந்தவர் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கே. இவருடைய உண்மையான பெயர் கண்ணுச்சாமி. சிங்களராக மாறியவர்.
இவர் மன்னராக வருவதற்கு முன்பு முந்தைய மன்னராக இருந்தவர் ஸ்ரீ ராஜாதி ராஜசிங்க. இவரும் தென்னிந்தியாவிலிருந்து சென்றவர். ஆழ்ந்த புலமையும், சிறந்த அறிவுடன் இருப்பவர்களுக்கு ஏதோ ஒரு குறை இருப்பது தானே உலக நியதி. குழந்தை பாக்யம் இல்லாத ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கேவின் மரணம், எப்போதும் ராஜா ராணி கதைகளில் வருவது போல் அங்கு அதிகாரப் போட்டியும் ஆரம்பமாகியது.
மன்னர் இறக்கும் தருவாயில் தனக்குப் பிறகு வரவேண்டியவரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை தலைமை அமைச்சராக இருந்த பிலிமத்தலாவிடம் ஒப்படைத்திருந்தார்..
வாரிசு யாரென்று தேர்ந்தெடுக்கும் படலம் ஆரம்பமான போதே உள்ளே குடுமிபிடி சண்டையும் தொடங்கியது. இறந்த மன்னரின் மனைவி உபேந்திரம்மாவின் சகோதரர் கோதாவில் குதித்தார்.
ஆனால் தலைமை அமைச்சர் இறுதியாக மன்னராக தேர்ந்தெடுத்தது கண்ணுச்சாமி என்ற மேலே சொன்ன ஸ்ரீ விக்கிரம ராஜ சிங்கேவை.
இவர் தென்னிந்தியாவில் இருந்த நாயக்கர் இனத்தைச் சேர்ந்தவர். எப்போதும் போல பட்டம் சூட்டியதும் தனது பெயரை மாற்றிக்கொண்டு முழுமையான சிங்களராக மாறினார்.
இவரின் அதிர்ஷ்ட கதவுகள் திறந்த போதே அவஸ்த்தைகளும் ஜன்னலின் வழியாக சூறைக்காற்றாக உள்ளே வரத் தொடங்கியது.
ஆட்சி காலம் முழுக்க சதிகளுடன் ஓரே ஓயாத போராட்டங்கள் தான்.
வாய்ப்பு கிடைக்காதவர்கள் ஒரு பக்கம். இவரின் வம்சக் கோளாரை ஆராய்ந்து அவஸ்த்தை கொண்டவர்கள் மறுபக்கம்.
கல்வி முதல் கலை வரைக்கும் மொத்தத்தில் புத்திசாலியாகவே வாழ்ந்த இவருக்கும் சதிகாரர்களை வெல்லும் அளவிற்கு சந்தர்ப்ப சூழ்நிலைகள் சாதகமாக அமையவில்லை. போதாத குறைக்கு அப்போது பிரிட்டிஷ் வேறு முடியாட்சியை முடித்துக் கட்டும் நோக்கத்தில் அலைந்து கொண்டுருந்தனர்..
இவரை கவிழ்த்தே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிகொண்டுருந்த எலப்போலா என்பவரின் பின்னால் இருந்த சிங்கள கூட்டங்களை வேறு சமாளிக்க வேண்டும்.
மன்னரை முடித்துக்கட்ட வேண்டும் என்ற வாய்ப்புக்காக காத்துக் கொண்டுருந்தவர்களின் வாசல் கதவின் அருகே வந்து நின்றார்கள் ஆங்கிலேயர்கள்.
ஆங்கிலேயர்களுடன் எலப்போலா கூட்டணி அமைக்க மன்னர் தலைமறைவாகி கண்டி காடுகளுக்குள் தஞ்சம் புகுந்தார்.
எலப்போலாவின் நாசகாரப்படைகள் மன்னரின் மனைவியை கண்டு கொள்ள இறுதியில் மன்னரும் சரண் அடைய தமிழ்நாட்டு வேலூர் சிறையில் சாகும் வரைக்கும் அடைக்கப்பட்டார். இவர் உருவாக்கிய சிங்கம் பொறித்த கொடி தான் இன்று வரையிலும் இலங்கை அரசாங்கத்தின் தேசியக் கொடி.
பின்னாளில் இலங்கை சுதந்திரம் பெற்ற போது எந்தக் கொடியை இலங்கைக்கு பயன்படுத்துவது என்ற கேள்வி எழுந்த போது இந்தக் கொடியை சிங்களத் தலைவர் பிரதமராக வந்த சேனநாயகா சுட்டிக் காட்டினர்.
மூன்று இனங்களுக்கும் பொதுவான சின்னம் பொதித்த கொடி வேண்டுமென்ற ஆலோசனையை புறக்கணித்ததோடு,இப்போது இந்தக் கொடியை ஏற்றிக்கொள்வோம். பிறகு மற்ற வேண்டியதைப் பற்றி யோசிப்பபோம் என்றார். அதற்கு அப்போது ஒரு சப்பைக்கட்டு வேறு சொன்னார்கள்.
கடைசி கண்டி மன்னர் சிங்களராக வாழ்ந்தாலும் அடிப்படையில் அவர் ஒரு தமிழர் தானே என்பதாகச் சொல்லி விரும்பியதை சாதித்துக்கொண்டார்கள்.
கண்டி மன்னர் மீது பிரிட்டிஷ் இராணுவ நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்த பத்து பேர்களில் நம்மால் அடையாளம் காணக்கூடிய ஒருவர் உண்டு. அவர் பெயர் ரத்வட்டே.
பின்னாளில் சிங்கள தலைவராக வரப்போகும் சந்திரகா குமார துங்காவின் கணவர் வழி பாட்டனார். ஆங்கிலேயர்களுக்கு உதவும் போதே இந்த நேசக்கூட்டணி கொடுத்துருந்த நாசகார பத்து கட்டளைகள் மறைமுக புரிந்துணர்வை சிங்களர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் உருவாக்கியதாக இருந்தது.
ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கேவை கண்டி மன்னர் பதவியில் இருந்து நீக்கப்படுவது,
அவருக்குப் பின் யாரும் அந்த உரிமை கோராமல் இருப்பது,
மன்னர் சார்ந்த அத்தனை பேர்களையும் நாடு கடத்தப்படுவது,
இதற்கெல்லாம் மேல் கண்டியின் உள்ளே வாழ்ந்து கொண்டுருக்கும் மொத்த தமிழர்களை வெளியேற்றுவது,
அவர்கள் மறுபடியும் திரும்பி உள்ளே வந்தால் அபதாரம் விதிப்பது
என்று ஏசுநாதரின் கட்டளைகள் போல் போய்க்கொண்டுருக்கிறது.
ஆனால் இதற்கெல்லாம் மேலாக இவர்கள் கட்டளைகளுடன் சொல்லியிருந்த புத்தமதத்தை அரசாங்க மதமாக அங்கிகரிப்பது என்ற கருப்பு வார்த்தைகள் தான் பின்னாளில் இலங்கை என்பது நிலமெல்லாம் ரத்தமாக மாற்றப்போகிறது என்பதை அன்று உணர்ந்தவர் யாருமில்லை.
அன்றைய தினம் ஆங்கிலேயர்களின் பார்வையென்பது இனி இலங்கைக்குள் முடியாட்சி என்று எவரும் வாய் திறக்கக்கூடாது.
சிங்களர்களுக்கோ ஆங்கிலேயர்கள் ஆண்டாலும் பரவாயில்லை. இந்த நாடு சிங்கள நாடு. மதம் என்பது எப்போது பௌத்தம் என்பதாக இருக்க வேண்டும் என்ற அக்கறை.
வினை விதைத்தவன் எதை அறுக்கமுடியும்?
புத்திசாலி ஆங்கிலேயர்களுக்கு உதவிய எலப்போலா எதிரியாக மாற்றம் பெற உள்ளேயே அப்போது உருவான ஒரு கலவரம் காரணமாக இருந்தது.
உருவான கலவரத்தால் இந்த எலப்போலா நாடு கடத்தப்பட்டு மொரிஷியஸ் தீவில் அடைக்கப்பட்டு, கடைசியில் மீளாத் துயரில் போய் சேர்ந்தார்.
ஏற்கனவே உள்ளே வந்த போர்த்துகீசியர்களும், ஹாலந்து ஆட்சியாளர்களும் உள்ளேயிருந்த செல்வ வளத்தை தங்கள் நாட்டுக்கு கொண்டு போகத்தான் நினைத்தார்களே தவிர ஆங்கிலேயர்கள் போல் நீண்ட கால திட்டங்கள் எதுவும் வைத்திருந்தார்களா என்பது தெரியவில்லை.
ஆனால் வெள்ளையர்கள் அப்போது பிடித்த நாடுகளில் எழுதிக்கொண்டுருந்த கருப்பு பக்கங்களை இங்கேயும் முயற்சிக்க உருவானது தான் பிரித்தாளும் சூழ்ச்சிகளும் பின்னால் உருவான இனங்கள் சார்ந்த எழுச்சியும்.
அந்நியர்கள் எவரும் இல்லை.
உள்ளே இருந்தது கடைசி சிங்கள முடியாட்சியையும் முடித்தாகி விட்டது.
காட்டிக் கொடுப்பதற்கும், கவிழ்த்து விடுவதற்கும் வேறு தீவிலா போய்த் தேட வேண்டும்?
கடைசியில் காட்டிக்கொடுத்தவர்களும் கண்ணீர் விட்டுக்கொண்டே தனிமைச் சிறையிலிருந்து போய்ச் சேர்ந்தார்கள்.
சிங்கள பக்கங்களுக்கு மங்களம் பாடியாகி விட்டது.
அடுத்து மூத்தகுடி ஒன்று பாக்கி உள்ளதே? அவர் தான் தமிழ் மன்னர் பண்டார வன்னியன்.
இலங்கையில் உள்ள வன்னிப்பகுதியின் மற்றொரு பெயர் அடங்காப்பற்று, நல்ல மாப்பாணான் (1790) என்ற மன்னனுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர் தான் பண்டார வன்னியன்.
வெள்ளையர்கள் (1803) கண்டி சிங்கள மன்னரின் மேல் படையெடுத்த போதே இவர் மேலேயும் தங்கள் படையெடுப்பை நிகழ்த்தினர்.
ஆனால் அந்த சமயத்தில் படையெடுப்பை சமாளித்து வெற்றி கொண்டதோடு மட்டுமல்லாமல் அப்போது ஆனையிறவு,இயக்கச்சிபைல், வெற்றிலைக்கேணி ஆகிய கோட்டைகளையும் கைப்பற்றி மொத்தத்தில் வந்தவர்களுக்கு பீதியூட்டி வைத்துருந்தார்.
ஆங்கிலேயர்களுக்கு முன்னால் வந்தவர்களுக்கும் இந்த கதிதான் நடந்தது.
ஆளைவிட்டால் போதும் என்ற நோக்கத்தில் அன்று அவர்கள் காத்த அமைதி, இப்போது உள்ள ஆங்கிலேயர்களிடம் செல்லுபடியாகுமா?
தமிழர்களின் மொத்த வரலாற்றில் கடைசி பாண்டிய ராஜ்யங்கள் வரைக்கும் ஆள்காட்டி தானே மொத்த தமிழன சரித்திர பக்கங்களை தரித்திர பக்கமாக மாற்றியுள்ளது.
காக்கை வன்னியன் என்பவனால் காட்டிக்கொடுக்கப்பட்டு (1811) உடையாவூர் நேரிடைப் போரில் பண்டார வன்னியன் கொல்லப்பட்டார்.
ஆட்டம் இப்போது முடிவுக்கு வந்து விட்டது.
எதிர்ப்பவர்கள் யாருமில்லை. எதிரிகளைக்கூட ஏறக்குறைய ஒழித்தாகி விட்டது.
இப்போது முடியாட்சி இல்லை. முனங்குபவர்கள் கூட யாருமில்லை. ராஜா, ராணி, மந்திரி என்று மொத்தப் பொறுப்பும் சூரியன் அஸ்தம்பிக்காத நாட்டின் ஆளுமைக்குள் வந்து விட்டது.
ஆனாலும் இவர்கள் தொடக்கத்தில் கோட்டை அரசு, யாழ்பாண அரசு, கண்டி அரசு என்று பிரித்து வைத்துக்கொண்டு அப்போதைய சென்னையின் மகாண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து ஆட்சி புரிந்தனர்.
தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் (1797)ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒரு கலகம் உருவானது.
ஒவ்வொன்றும் சென்னை மகாண கவர்னர் உத்திரவுக்காக காத்துருப்பது பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்துவிட இலங்கையை காலணி நாடு என்ற அந்தஸ்து கொடுத்து தனி ஆளுநரைக் கொண்டு ஆள்வது என்று முடிவெடுத்தனர்.
இலங்கையின் முதல் ஆளுனராக (1798) பிரைடெரிக் நார்த் என்பவர் கீழ் தென்னைத்தீவின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறத் தொடங்கியது.
தொடக்க அத்தியாயங்கள்
நல்ல தொரு முயற்சி .உங்களைப்போன்றவர்கள் எழுதினால் நிறையப்பேர் படிப்பார்கள்
ReplyDeleteவரலாற்றினை எழுதாமல் விட்டதும் ,வந்தவரை எல்லாம் வரவேற்று இடம் கொடுத்ததும் தான் தமிழர்களின் இன்றைய அவல நிலைக்கு காரணம்
உங்கள் புத்தகம் இன்னும் படிக்க முடியவில்லை இங்கு கிடைக்குமா தெரியவில்லை ?எப்படியாவது படிப்பேன் .
உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்
கரிகாலன்
விவரங்களை அறிந்து கொள்ள அருமையானதொரு பகிர்வு அண்ணா...
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteநன்றி.