இலங்கைத் தீவில் ஆங்கிலேயர்கள் பதினேழாம் நூற்றாண்டின் முடியும் தருணத்தில் தான் உள்ளே நுழைந்தனர்.
தொடக்கத்தில் கிழக்கிந்திய நிறுவனம் தான் உள்ளே நுழைகின்றது. இந்தியாவிற்குள் வந்தது போல் எதிர்பாரதவிதமாய் அல்ல.
சொர்க்கத்தீவின் வளமையை புரிந்து கொண்டவர்கள் காத்திருந்து கச்சிதமாக காய் நகர்த்தி உள்ளே வந்தார்கள்.
இந்தியாவின் அருகேயிருந்த பசுவைத்தீவில் நடந்துகொண்டுருந்த ஒவ்வொரு நிகழ்வையும் கவனித்துக்கொண்டுருந்தனர். உள்ளே நுழைந்தாலும், முறைப்படி இலங்கை என்பது பிரிட்டனின் மன்னரின் சாம்ராஜ்யத்திற்குள் உண்டான ஒரு பகுதி என்பதாக அவர்கள் அறிவிக்க உள்ளே இரண்டு ஆண்டுகளை எடுத்துக்கொண்டனர்.
இவர்களுக்கு முன்னால் இலங்கைத் தீவின் அந்நிய முதல் வருகையாளர் என்ற பெருமையை தட்டிக்கொண்டு செல்வபவர்கள் போர்த்துகீசியர்கள்.
பதினைந்தாம் நூற்றாண்டின் (1505) தொடக்கத்தில் போர்த்துகீசியர்கள் இலங்கையில் கால் வைத்தது ஒரு எதிர்பாரத திருப்புமுனை.
டான் லுரன்கோ டி அல்மெடியா தலைமையில் வந்த அந்த கப்பல், எதிர்பாரதவிதமாக அடித்த புயல்காற்றில் சிக்கி தவித்து
இந்திய பெருங்கடலுக்குள் நுழைந்தது. அவர்கள் செல்ல வேண்டிய பயணத் திட்டத்தை முற்றிலும் மாற்றிய சம்பவம் இது. அப்போது அவர்கள் பயணம் செய்து வந்த கப்பல் இலங்கைத் தீவு இருந்த பக்கம் நகர போர்த்துகீசியர்களின் வணிக பயணம் என்பது இலங்கையின் வரலாற்றுப் பக்கங்களில் இடம் பிடிக்கத் தொடங்கியது.
இவர்களின் கப்பல் வந்து நின்ற இடம் இலங்கை வரைபடத்தின் கீழ்பகுதியில் நெற்றிப்புருவம் போலிருக்கும் காலி என்ற பகுதி.
வரலாற்று ஆசிரியர் மார்கோ போலா என்பவர் வர்ணித்த வார்த்தைகளின் படி இலங்கை என்பது பூமியின் சொர்க்கத் தீவு. ஆனால் இவர்களின் நுழைவுக்குப் பிறகு வழிபாடுகளை, அன்றாட வாழ்க்கைப் பாடுகளையும் பார்த்துக்கொண்டு வாழ்ந்த மொத்த இனக்குழுவும், அவர்களை ஆளுமையில் வைத்திருந்த குறுநில மன்னர்களின் வாழ்க்கையும் வேறு திசையில் பயணிக்கத் தொடங்கியது.
எட்டாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வந்தவர்களுக்கு இதுவொரு எதிர்பாராத திருப்புமுனை,
உள்ளேயிருந்த அத்தனை பேர்களின் அடிப்படை வாழ்க்கை முறைகளையே இவர்கள் திசை திருப்பப் போகின்றார்கள் என்பதை அன்று உணர்ந்தவர் எவரும் இருந்துருப்பார்களா என்பது சந்தேகமே?
சிங்களர்கள், தமிழர்கள் என்று இரு வேறு திசையாக, வெவ்வேறு கலாச்சாரங்களுடன் முகத்தை திருப்பிக்கொண்டு ஒற்றுமையில்லாமல் குழுக்களாக வாழ்ந்து கொண்டுருந்தவர்களைப் பார்த்ததும், பாதி பயணத்தில் இவர்கள் உள்ளே வந்து இறங்கியதும் போர்த்துகீசியர்களின் அதிர்ஷ்ட நாட்கள்.
தங்கள் நாட்டில் இருந்து கிளம்பியவர்களின் தூர தேச வணிக நோக்க பயணத்தில் இந்த தீவு பட்டியலில் இல்லை.
1498 ஆம் ஆண்டு கடல்பயணத்தின் மூலமாக வாஸ்கோடகமா கண்டுபிடித்த இந்தியாவை இனம் கண்டு கொண்டதற்குப் பிறகுதான் உலகமெங்கம் அன்றைய காலகட்டத்தில் தேசங்களின் வணிக வரலாறு வேறு திசையில் சென்றது.
எவரிடமிருந்தோ வாங்கி விற்பவர்களின் வணிக நோக்கங்களின் அடுத்த கட்டமாக நேரிடையான கொள்முதல் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு நாட்டினரையும் கடல் கடக்க வைத்தது. முடிந்தவர்கள் கடல் கடந்து சென்று தாங்கள் விரும்பியதை சாதித்துக்கொண்ட காலகட்டமிது.
கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவிற்குள் வந்ததும் இதைப்போல நேரிடையான வர்க்கத்திற்கே.
ஆனால் போர்த்துகீசியர்களுக்கு அதிர்ஷ்ட பரிசு போல் எதிர்பாரதவிதமாய் அமைந்து விட அப்போது இலங்கையில் பிரபல்யமாக இருந்த லவங்கப்பட்டை உற்பத்தி செய்து கொள்ள கொழும்புவை ஆண்டு கொண்டுருந்த சிங்கள மன்னரான வீர பராக்கிரமபாஹ உடன் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கிக் கொண்டனர்.
மொத்தமாக உள்ளேயே இதற்கென்று ஒரு தொழிற்சாலையை உருவாக்கிக்கொள்வது. அதே சமயம் உள்நாட்டுக்கு தேவைப்படும் இலவங்கப்பட்டையையும் அளிப்பது என்பது தான் இருவர் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின் சராம்சம்.
அதிர்ஷ்டக் காற்று இன்னும் பலமாக மன்னர் இறப்பு மூலம் உருவானது.
மன்னருக்கு பிறகு யார் ஆள்வது என்பதில் மன்னரின் இரண்டு மகன்களுக்குத் தோன்றிய வாரிசுப் போரை போர்த்துகீசியர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர்.
ஏற்கனவே போட்டுருந்த ஒப்பந்தத்தை மறுபடியும் மாற்றி அமைத்து உள்ளே நுழைந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு (1518) இலங்கையின் கடலோரப்பகுதி மொத்தத்தையும் தங்கள் ஆளுமையில் கொண்டு வந்தனர்.
வர்த்தக மேலாண்மைக்கு என்று சொல்லிக்கொண்டு கொழும்புவில் ஒரு கோட்டையையும் கட்டிக் கொண்டனர்.
உள்நாட்டு குழப்பங்களை மிகத் தெளிவாக புரிந்து கொண்டு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட போர்த்துகீசியர்களின் கவனம் யாழ்பாணத்தின் மேல் விழுந்தது.
முதலில் கிறிஸ்தவ கத்தோலிக்க மதத்தை பரப்புவதற்காக கிபி 1544 ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் இருந்து பிரான்சிஸ் சேவியர் என்ற பாதிரியாரை யாழ்பாணத்திற்கு வரவழைத்தனர். முதலில் இவர்கள் யாழ்பாணத்தில் உள்ள மன்னாரில் பல குடும்பங்களை மதம் மாற்றத் தொடங்க அப்போது ஆண்டு கொண்டுருந்த சங்கிலி மன்னன், மாறிய அத்தனை பேர்களுக்கு மரண தண்டணை விதித்தான்.
இதைக் காராணமாக வைத்துக்கொண்டு கோவாவில் இருந்து வந்த படைகளின் துணையோடு மன்னார் பகுதியையும், இறுதியாக யாழ்பாணம் முழுமையையும் தங்களுடைய ஆளுமைக்குள் கொண்டு வந்தனர்.
1591 ஆம் ஆண்டு அண்ட்ரே பர்டாடோ தலைமையில் நடந்த போரின் இறுதியில் தங்கள் சார்பாக ஒரு பொம்மை சிங்கள மன்னனை உருவாக்கி ஆட்சி புரிய வைத்து மொத்தமாக தைரியமாக கிறிஸ்துவ மத மாற்றத்தை செயல்படுத்தினார்கள்.
இதைப் பார்த்துக்கொண்டுருந்த சிங்களர்களுக்கு இரண்டு விதத்தில் பயத்தை உருவாக்கியது.
சிங்களர்களை பௌத்த மதத்தில் இருந்தது கிறிஸ்துவத்திற்கு மாற்ற என்ற காரணங்களை வைத்துக் கொண்டு துன்புறுத்தத் தொடங்கினர். மேலும் இவர்களிடம் இருந்த நவீன ரக ஆயுதங்களைப் பார்த்து வேறு பயந்து கொண்டு இனி இவர்களை இங்கிருந்து எப்படி நகர்த்துவது என்று யோசிக்கத் தொடங்கினர்.
அவர்களின் முழுமையான சக்தியை உணராமலிருந்தவர்கள், வானத்தில் இருந்து யாராவது வந்து குதித்து நம்மை காக்க வரமாட்டார்களா? என்று காத்துக்கொண்டுருந்தவர்களுக்கு அந்த நாளும் வந்தது. வந்தது
தேவகுமாரன் அல்ல. டச்சு கடற்படை தளபதி வடிவில்.
போர்த்துகீசியர்கள் இலங்கையின் உள்ளே நுழைந்த போது உள்ளே ஆண்டு கொண்டுருந்த தமிழ் மன்னரின் பெயர் சங்கிலி குமரன்.
அந்நியர்கள் உள்ளே வருவதற்கு முன்பே இலங்கை என்பது கப்பல் மூலம் செய்யும் வாணிபத்தில் அட்டகாச பாதையில் பயணித்துக்கொண்டுருந்தது.
கிபி 1344 பயணியாக வந்த மேல்நாட்டு பயண அறிஞர்கள் அப்போது இலங்கையின் உள்ளே வெகு சிறப்பாக நடந்து கொண்டுருந்த கப்பல் வணிகத்தை பாராட்டி எழுதியுள்ளனர். அவர் எழுதிய பயணக்குறிப்புகளின்படி 100 கப்பல்கள் அணிவகுத்து வந்து போய்க்கொண்டுருப்பதாக குறிப்பிடும் அளவிற்கு இலங்கையின் ஒவ்வொரு கால கட்ட வளர்ச்சிக்கும் கடல் வணிகம் பல சிறப்புகளை உருவாக்கிக் கொடுத்துக் கொண்டு இருந்தது.
இறுதியில் வண்ணார் பொன்னை என்ற இடத்தில் நடந்த போரில் கைக்கூலியின் காட்டிக்கொடுப்பு காரணமாக சங்கிலி குமரன் போர்த்துகீசியர்களிடம் தோற்றார்.
உள்ளே வந்து இறங்கியது முதல் ஏறக்குறைய 150 ஆண்டுகள் போர்த்துகீசியர்கள் இலங்கையை தங்கள் ஆளுமைக்குள் வைத்து இருந்தனர்.
இங்கே ஆட்சி புரிந்த கரிகாற்பெருவளத்தான் தொடங்கி, ராஜராஜசோழன், அதற்குப் பின்னால் பாண்டிய மன்னர்கள் என்ற மொத்த தமிழ் மன்னர்கள் இலங்கையில் உருவாக்கிய காலத்தால் அழிக்க முடியாத கலைப் பொக்கிஷங்களையும், ஆலயங்களையும் போர்த்துகீசியர்கள் அழித்ததோடு மட்டுமல்லாமல், அழிக்கப்பட்ட இடிபாடு பொருட்களை வைத்து தங்கள் நிர்வாகத்திற்கு தேவையான கோட்டைகளையும் உருவாக்கிக் கொண்டனர்.
வரலாற்றுச் சுவடுகள் இருந்தால் வந்த பாதையை நினைத்து ஏங்குவார்கள் அல்லவா? வீணாக ஏன் பழையவற்றை நினைக்க வைக்க வேண்டும் என்ற நல்லெண்ணமாக இருந்துருக்கலாம்.
உள்ளே வந்த மன்னர்கள் கஷ்டப்பட்டு கப்பல் மூலம் கொண்டு வந்து சேர்த்த பொருட்களால் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு கலைச்சின்னங்களையும் இவர்கள் இஷ்டப்பட்டு அழித்து சிக்கனமாய் சிறப்பாய் தங்களுக்கு தேவையானவைகளை உருவாக்கினார்கள்.
சிங்களர்களர்களின் பௌத்த ஆலயங்களும் அழிக்கப்பட்டது.
தொடர்ச்சியாக மற்றொருபுறம் கட்டாய மத மாற்றம்.
கிறிஸ்துவ கத்தோலிக்க மதத்திற்கு மாறாதவர்களை துன்புறுத்த தொடங்க சொர்க்கத்தீவின் மக்கள் வாழ்க்கை முறையில் நரகம் எட்டிப்பார்க்கவும் தொடங்கியது.
இந்த மத மாற்றத்திற்கு மற்றொரு காரணம் அப்போது இந்தியாவில் கோவா பகுதியில் போர்த்துகீசியர்கள் ஆட்சி புரிந்து கொண்டுருந்தனர்.
அங்கு நடந்து கொண்டுருந்த மதமாற்றங்கள் இங்கும் வரத் துவங்க தமிழர், சிங்களர், பின்னாளில் வர்த்தகம் மூலம் வந்த இஸ்லாமியர்கள் என்ற மூன்றாவது இனத்திற்குப்பிறகு கிறிஸ்துவம் என்பது நான்காவது திசையாக மாறத் தொடங்கியது.
மக்களின் வாழ்க்கையும் நாறத் தொடங்கியது.
பெரும்பான்மை இனக்குழுவான சிங்கள தமிழர்கள் என்று இரண்டு வேறு கூறாக அவரவர் திசையில் அப்போது பிரித்து வாழ்ந்து கொண்டுருந்தாலும், இந்த இரண்டு கூறுகளையும் பல கூறுகளாக வைத்து விளையாடிக் கொண்டுருந்த போர்த்துகீசியர்களை வெளியேற அடுத்து உள்ளே நுழைபவர்கள் டச்சு.
இவர்களை இன்று வரைக்கும் இலங்கையின் வரலாற்றுப் பக்கங்கள் ஓக்லாந்தர் (ஹாலாந்து) என்று அழைக்கின்றது.
1602 ஆம் ஆண்டு டச்சு நாட்டு கப்பல் படைத்தளபதி ஜோரிஸ் ஸ்பில்பெர்க் தான் கொழும்பு கடற்கரையின் உள்ளே நுழைந்தவர்,
இவர்கள் நுழைந்த போது யாழ்பாணம் மற்றும் கோட்டை அரசு முழுமையாக போர்த்துகீசியர்களின் வசம் இருந்தது. அதனை உணர்ந்து கொண்டு அப்போது அவர் நேரிடையாக கண்டி வந்து ஆண்டு கொண்டுருந்த மன்னரை சந்தித்தனர்.
கண்டி மன்னர் விண்ணப்பத்தின் பேரில் டச்சுப் படைகள், உள்ளே இருந்த போர்த்துகீசியர்களுடன் மோதத் தொடங்கினர். போர்த்துகீசியர்களின் மோதி வென்ற பகுதிகளை ஒப்பந்தப்படி கண்டி மன்னரிடம் கொடுக்காமல் தாங்களே வைத்து ஆளத் தொடங்கினர்.
ஏறக்குறைய 138 ஆண்டுகள் (கிபி 1658 முதல் கிபி 1796 வரை) யாழ்பாண கோட்டையை ஹாலந்து தங்கள் வசம் வைத்து இருந்தனர்.
இவர்களுக்கு முன்னால் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்ட சதுர வடிவ கோட்டைகளை இடித்து விட்டு ஐங்கோண வடிவில் கோட்டைகளை யாழ்பாணத்தில் கட்டினார்கள். இந்த காலகட்டத்தில் இந்தப் பகுதி முழுவதும் தமிழர்களின் ஆளுமையில் இருந்தது.
குறிப்பாக வன்னிப் பகுதியில் வன்னியன் என்ற தமிழ் மன்னனின் ஆட்சி நடத்திக் கொண்டுருந்தார்.. போர்த்துகீசியர்களும், டச்சக்காரர்களும் தங்களை இந்த மண்ணில் நிலைநாட்டிக்கொள்ள சண்டையிட்டுக் கொண்டார்களே தவிர தங்கள் நாட்டுக்கு அனுப்பிக்கொண்டுருந்த இயற்கை வளங்களும், சூறையாடப்பட்ட செல்வங்களும் நாளுக்குக் நாள் அதிகமாகத் தான் இருந்தது.
அப்போது கூட இலங்கையின் உள்ளேயிருந்த முடியாட்சிக்கு உயிர் இருந்தது என்பது ஆச்சரியமே..
பதினேழாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் (1799) ஆங்கிலேயர்கள் உள்ளே வரும் வரைக்கும் டச்சு மக்கள் இலங்கையின் மொத்த மக்களையும் பிச்சு பந்தாடினார்கள்.
இவர்கள் உருவாக்கிய மதமாற்றம் ஒரு பக்கம். போர்த்துகீசியர்களை அடக்கவென்று தொடுக்கப்பட்ட போர்களின் கோரச்சுவடுகள்.
இறுதியில் டச்சுப் படைக்கு போர்த்துகீசியர்களே பரவாயில்லை என்கிற அளவிற்கு கொடூரமாக நடந்து கொண்டனர்.
தங்கள் மதத்தை தவிர வேறு எந்த மதத்தையும் இவர்களும் அனுமதிக்க தயாராய் இல்லை. பௌத்த, இந்து, முஸ்லீம் மக்கள் மீது இதற்கென்று சிறப்பு வரிகள் என்று போட்டனர்.
பேய்க்கு பயந்து பிசாக்கு வாக்கப்பட்ட சூழ்நிலை.
ஆனால் இவர்கள் காலத்தில் நடந்த மற்றொரு சிறப்பு,
ஏற்கனவே இறு வேறு கலாச்சாரத்தின், மொழியின் அடிப்படையில் வாழ்ந்து கொண்டுருந்த சிங்கள தமிழ் மக்களை (இனக்குழுக்கள்) எந்த வகையிலும் அடிப்படை கட்டுமாணத்தின் மேல் கை வைக்கவில்லை.
இவர்கள் உருவாக்கிய ஆட்சி முறைகள் கூட இரு வேறு மக்களுக்கென்று தனித்தனியாக உருவாக்கப்பட்டதாகவே இருந்தது. தங்களுடைய வணிகத்திற்காக, தங்கள் ஆளுமையை நிலைநாட்டிக்கொள்ள என்று அவர்களை வாட்டி வைத்தனரே தவிர அவர்களின் அடிப்படை உரிமைகளை எந்த வகையிலும் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் இறங்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அப்போது இவர்கள் உருவாக்கியது தான் இலங்கையின் மொத்த கடற்கரை ஓரப் பகுதிகளை ஆறு மாவட்டங்களாக பிரித்தது.
யாழ்பாணம், திருகோணமலை, மட்டக்கிளப்பு என்ற மூன்று பகுதிகள் தமிழர்களுக்கென்றும், கொழும்பு, புத்தளம், கற்பிட்டி என்ற இந்த மூன்று பகுதிகள் சிங்களர்களுக்கென்றும் பிரித்து வைத்து ஆண்டனர்.
முதல் மூன்றுக்கும் தலைநகரம் யாழ்பாணம்.
சிங்களப் பகுதிகளுக்கு கொழும்பு.
அப்போது இவர்கள் உருவாக்கியது தான் யாழ்பாணம் பகுதிக்கு மட்டும் தனியாக ஒரு கவர்னர், மற்றும் அதற்கென்று வித்யாசமான அரசியல் அமைப்பு.
இலங்கையை ஒட்டு மொத்தமாக நிர்வாகம் செய்ய கடலோரப் பகுதிகளை மூன்று பகுதிகளாக பிரித்தனர்.
கொழும்பு, யாழ்பாணம், கல்லெ என்று பிரித்து அதற்கென்று மூன்று துணை நிலை கவர்னர்களை நியமித்தனர்.
யாழ்பாணத்திற்கென்று உருவாக்கப்பட்ட சட்டங்கள் கொண்டு அந்த கவர்னர் தனியாக ஆளுமை செய்து கொண்டுருந்தார்கள்.
No comments:
Post a Comment
கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.