இந்த கட்டுரை 4 தமிழ் மீடியா தளத்தில் சிறப்பு கட்டுரையாக இரண்டு பகுதியாக வெளியிடப்பட்டது.
" பா.ஜ.க போன்ற மதவாத கட்சி வேண்டாம். எங்களுக்கு காந்திஜி சொன்ன மிதவாதமாக இருக்கும் காங்கிரஸே போதுமானது "
பிடிவாதமாக இரண்டாவது முறையாகவும் காங்கிரஸை அரியணையில் அமர வைத்த இந்தியர்களின் தலையில் விழுந்து கொண்டிருப்பது அடியல்ல. இடியாக விழுந்து கொண்டிருக்கிறது.
‘பொருளாதார புலி’ மன்மோகன் சிங்கின் சமீப பரிசு சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் 51 சதவிகித முதலீடு.
அதாவது சில்லறை வணிகத்தில் (multi brand retail) அன்னிய முதலீட்டை 51 சதவீதமும், ஒரு பொருளின் சில்லறை வணிகத்தில் (single brand retail) அன்னிய முதலீட்டை 100 சதவீதமும் இந்திய அரசாங்கம் அனுமதித்துள்ளது
சமீபத்தில் ஹர்விந்தர் சிங் எனும் வாலிபர் தேசியவாத காங்கிரஸ் தலைவரும் இந்தியாவின் விவசாய அமைச்சருமான சரத்பவாரை ஒரு அறை தான் கொடுத்தார். ஆனால் மன்மோகன் சிங் 120 கோடி இந்தியர்களின் வயிற்றில் ஒரே அடியாக அடித்துள்ளார்.
மன்மோகன் சிங் பல விதங்களிலும் நன்மைகள் தான் செய்து கொண்டிருக்கிறார். எவருக்கும் புரிந்தபாடில்லை.
“எங்கம்மா தெருவோர காய்கறி கடை வச்சு தான் என்னை படிக்க வச்சாங்க”
இனி எந்த நடுத்தர வர்க்க மாணவனும் சொல்ல முடியாது. காரணம் இனிமேல் தெருவோர கடைகள் இருந்தால் தானே பிரச்சனை?
மொத்தமாக ஒரு ஊருக்கு ஒரு வால்மார்ட், கே மார்ட், டெஸ்கோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களை உள்ளே கொண்டு வந்து விட்டால் நமக்கு பிழைக்க வழி பிறந்து விடாதா?
ஏன் வேகாத வெயிலிலும், மழையிலும் துன்பப்பட வேண்டும்?
வேலை தேடுபவர்களுக்கும், விவசாயிகளுக்கும் ஆத்மார்த்தமாக உதவி செய்ய இந்த பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இருக்கிறார்கள். நாம் எதற்காகவும் அலைய வேண்டிய அவசியமிருக்காது. கருவேப்பிலையை கூட குளு குளு வசதி கடையில் போய் வாங்கி வரலாம்.
காரணம் நம் பொருளாதார மேதைகள் இந்த நிறுவனங்கள் தாங்கள் கொள்முதல் செய்யும் பொருட்களில் 30 சதவிகிதத்தை இந்தியாவில் தான் வாங்க வேண்டும் என்று சொல்லி இந்தியர்களின் வாயில் பாலூற்றி இருக்கிறார்கள்?
பன்னாட்டு நிறுவனங்கள உள்ளே வந்து விட்டால் நாட்டின் அந்நிய செலவாணி நிரம்பி வழியும். என்னவொன்று நாளுக்கு நாள் உள்ளூரில் பஞ்சம் பிழைக்க முடியாமல் நடுத்தர வர்க்கமும் அவதிபட, களவாணிகளும் பெருகிக் கொண்டே தான் இருப்பார்கள்.
இதைத்தான் நமது பொருளாதார மேதைகள் இப்போது செய்துள்ளார்கள்.
இந்த சில்லறை வியாபாரத்தை நம்பி நேரிடையாக மறைமுகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை மட்டும் ஏறக்குறைய 20 கோடி பேர்கள். இதன் மூலம் 25 லட்சம் கோடி பணம் புழங்குகின்றது. இவர்களின் அன்றாடங்காய்ச்சி முதல் அகாயசூரர்கள் வரைக்கும் உண்டு. தெருமுனையில் வண்டியில் வந்து விற்பவர் முதல் அண்ணாச்சி நடத்தும் மொத்த கொள்முதல் வரைக்கும் உண்டு.
இதில் தான் இப்போது காங்கிரஸ் அரசாங்கம் கை வைத்துள்ளது. கைக்கு ஓட்டுப் போட்டவர்கள் கண்ணீர் விட்டு கதற முடியாது.
2014 வரைக்கும் பொறுமையாகத் தான் இருக்க வேண்டும்.
இந்தியாவில் ஜனதா அரசாங்கம் இருந்த போது விரட்டியத்த பெப்ஸி கோக் நிறுவனங்களை தாரை தப்பட்டை முழங்க வரவேற்றவர்களும் நம் தலைவர்களே. ஆனால் இவர்கள் தான் இப்போது ஆளுக்கொரு பக்கமாய் நின்றுகொண்டு முதலைக் கண்ணீர் விடுகிறார்கள். இப்போதல்ல எப்போதுமே இந்தியாவில் ஒன்றல்ல? ஓராயிரம் பூதங்கள் உண்டு. ஆனால் மன்மோகன் பதவிக்கு வந்ததும் பன்னாட்டு பூதங்கள் அத்தனைக்கும் வலிமையான பலம் கிடைக்க ஒன்றன் பின் ஒன்றாக உள்ளே வந்து தங்கள் சேவைகளை இந்தியாவுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் இருபது வருடங்களுக்கு முன்னால் பெயரளவில் பெப்ஸி,கோக் குளிர்பானங்கள் இருந்தது. ஆனால் இன்றோ இதுவொரு கௌரவம் சார்ந்த விசயம் பொருளாக மாற்றப்பட்டுள்ளது. தொடக்கத்தில் மூன்று ரூபாய்க்கு கடையில் கிடைத்தது. அவ்வாறு விற்றால் கடைக்காரருக்கு 80 பைசா கிடைக்கும். ஆனால் இன்று அதன் விலை 12 ரூபாய்.
3000 அடிக்கு மேலாக ஆழ்குழாய் கிணறுகள் மூலம் உறிஞ்சப்பட்ட நம்முடைய நிலத்தடி நீரை எடுத்து ஜாலக்கு வித்தை சேர்த்து இன்று நாம் 12 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். விளம்பரங்கள் செய்யும் மாயவித்தைகளால் நாமும் மதிமயங்கி நாகரிக மனிதராக நம்மை காட்டிக்கொண்டிருக்கிறோம்.
எல்லா வியாபாரிகளும் லாபத்தை நோக்கி தானே ஓடுவார்கள்?
இப்போது தமிழ்நாட்டில் தயாராகும் ஒரு சிமெண்ட் மூட்டை (50 கிலோ) யின் விலை ஏறக்குறைய 300 ரூபாய்க்கு விற்பனையாகின்றது. ஆனால் இதன் லாபத்தோடு கூடிய அடிப்படை விலையென்பது இதில் பாதிக்கு பாதி. கடந்த முறை திமுக அரசாங்கம் விலை குறைப்பை வலியுறுத்திய போதும் எவரும் குறைக்கத் தயாராய் இல்லை என்பது தான் இதில் மிகப் பெரிய ஆச்சரியம். அடுத்த ஜெ அரசாங்கமும் வந்து விட்டது. ஆனால் அதே விலை. காரணம் அரசியல்வாதிகள் போகும் கட்டிங் என்றுமே நிரந்தரம்.
இதே சிமெண்ட் விலை பக்கத்து மாநிலத்தில் வேறொரு விலை. அங்கிருந்து இங்கே கொண்டு வர முடியாத அளவுக்கு சிண்டிகேட் வைத்து தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இறக்குமதி சிமெண்ட் என்பது இன்னமும் மலிவானது. யாருக்கு பாதிப்பு?.
விலை உயர்வால் கதறியழுவது திருவாளர் பொதுஜனமே.
இது சிமெண்ட் துறையில் மட்டுமல்ல. அனைத்து துறைகளிலுமே இது போன்று இந்திய தொழிலதிபர்கள் அவரவர்களுக்கு வசதிப்படி சிண்டிகேட் அமைத்து செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் அமைக்கப் போகும் சிண்டிகேட் என்பது இவர்களின் டவுசர் கழன்று போய்விடும் அளவுக்கு இருப்பது தானே முறையாகும். அது தான் இனிமேல் நடக்கப் போகின்றது. இந்திய தொழில் அதிபர்களுக்கே சவாலாக இருந்தால் சாதாரண பொதுஜனத்தின் பாடு?
பன்னாட்டு நிறுவனங்கள் அதிலும் சற்று வித்யாசனமானவர்கள்.
லாபத்தை போலவே லாபத்துக்கு இடைஞ்சலாக இருப்பவர்களையம் ஒழித்துக் கட்டுவது.
இன்று தமிழ்நாட்டில் குடிசைத் தொழிலாக இருந்த காளிமார்க், டொரினோ போன்ற உள்நாட்டு குளிர்பான தயாரிப்புகள் ஏறக்குறைய இறுதி மூச்சு வாங்கிக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு பெட்டிக்கடையிலும் பெப்ஸியும், கோக்கும், இவர்கள் கொடுக்கும் குளிர்சாதன பெட்டி தானே நம்மை வரவேற்றுக் கொண்டிருக்கிறது. விலையை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றியதோடு மற்றொரு காரியத்தையும் தவறாமல் செய்து கொண்டிருந்தார்கள். உள்ளூர் குளிர்பான பாட்டில்களையும் கைப்பற்றி உடைத்து நொறுக்கிக் கொண்டே வர இன்று பாட்டில் இல்லாத உள்ளூர் நிறுவனங்கள் விழி பிதுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் இத்தனை நாளும் மறைமுகமாக பலவகையிலும் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். இனி முன்வாசல் வழியாகவே உள்ளே வரலாம் என்று மன்மோகன் சிங்கிள் மேன் ஆர்மியாக செயல்படுத்தி சாதித்திருக்கிறார்.
"உலகத்தோடு ஒத்து வாழ்" என்ற முதுமொழியை கடைபிடிப்பதில் மன் மோகன் சிங்கிற்கு முதல் தகுதியுண்டு. காரணம் இந்திய பிரச்சனைகளை தீர்ப்பதற்கே வருடத்தில் பாதி நாட்கள் உலகம் சுற்றும் வாலிபனாக சுற்றிக் கொண்டிருக்கிறார்.
பறந்து பறந்து தாக்குவதை படத்தில் தான் பார்த்துருப்பீங்க. நம்ம பிரதமரும் கூட அப்படித்தான். இந்தியப் பிரச்சனைகளையே விமானத்தில் தான் பேட்டியாக கொடுத்து விட்டு அடுத்த நாட்டுக்கு பறந்து போய்விடுகிறார்.
இவர் மூளையில் உதித்த ஒவ்வொரு கொள்கைகளும் எந்த இந்தியனும் மறக்க கூடாத ஒன்றாகும்.
இந்தியாவில் உள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இனி அரசாங்கத்தை சார்ந்து இருக்க வேண்டியதில்லை. 15 நாளைக்கு ஒரு முறை தங்கள் விலையை தாங்களே நிர்ணயம் செய்து கொள்ளலாம். இதன் விளைவாக காங்கிரஸ் முதன் முறையாக பதவிக்கு வந்தது முதல் இன்று வரைக்கும் பெட்ரோல் விலை நூறு சதவிகிதம் உயர்ந்துள்ளது.
எதிர்கால வளமான இந்தியாவிற்கு மின்சாரம் அவசியமாகும். எனவே கூடங்குளம் திட்டம் இந்தியாவிற்கு தேவை. ஆனால் இதற்கு தேவைப்படும் தரமான யுரேனியம் எளிதில் கிடைக்கும் கனடாவை விட்டு அமெரிக்கா மூலம் பெறுவதே எப்போதும் சிறப்பானதாகும். தேவைப்படும் யுரேனியமும் ஒரே சமயத்தில் அமெரிக்கா கொடுக்காது. அவ்வப்போது நடைபெறும் திட்ட செயலாக்கத்தின்படி வழங்கப்படும். எதிர்காலத்தில் விபத்து ஏற்பட்டாலும் அதற்கு இந்தியா மட்டுமே பொறுப்பு. ஆனால் நிர்வாக கட்டுப்பாடு எப்போதும் அமெரிக்காவின் கைகளில் இருக்கும். அமெரிக்காவுக்கு திடீரென்று சந்தேகம் வந்தால் எவர் வேண்டுமானாலும் எந்த அனுமதியின்றி இங்கே வந்து பரிசோதனை செய்து கொள்ளலாம். சந்தேகம் என்றால் அப்துல்கலாமை தேட மாட்டார்கள். இழுத்து மூடிவிட்டு போய்க்கிட்டே இருப்பார்கள்.
முன்பேர சந்தைக்கு அனுமதி (ஆன் லைன் வர்த்தகம்) கொடுத்தன் விளைவாக நாட்டில் உள்ள அடிப்படையான அத்தனை பொருட்களுக்கும் செயற்கை தட்டுப்பாடு உருவாக்கி விலைவாசி உச்சத்தில் போய்விட்டது. குறிப்பாக இந்த முன்பேர சந்தையை கட்டுப்படுத்தும் பார்வேர்டு மார்க்கெட்ஸ் கமிஷன் (எப்.எம்.சி.) கொடுத்துள்ள தகவலின்படி இந்தியாவில் மட்டும் அதிகாரப்பூர்வமாக 23 நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டுருக்கிறது.
இந்த நிறுவனங்கள் அதிகளவில் தங்கம், வெள்ளி போன்ற சந்தையிலும் அடுத்தபடியாக விவசாயம் சார்ந்த விளைபொருட்களிலும் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரைக்கும் இந்த நிறுவனங்களின் செயல்பாடு 99 லட்சத்து 16 ஆயிரத்து 52 கோடி ரூபாய். ஏறக்குறைய 100 லட்சம் கோடியை அட்டகாசமாக கடந்துள்ளது. பாடுபட்டு உழைப்பவன் ஒரு பக்கம். ஆனால் ஏதோவொரு மூலையில் குளிர்சாதன அறைக்குள் உட்கார்ந்து கொண்டு நோகாமல் நோம்பி கொண்டாடுபவர்களை உருவாக்கி விட்டவரும் நம்முடைய பொருளாதாரப் புலியே.
ஆன் லைன் வர்த்தகத்தை அனுமதித்ததே போதே இந்தியாவில் அன்றாடங்காய்ச்சிகளின் எண்ணிக்கை அதிகமாகத் தொடங்கியது.
உலகில் ஏதோவொரு மூலையில் இருந்து கொண்டு இங்கே கொட்டாம்பட்டியில் விளையும் பயிறுக்கு விலை நிர்ணயம் செய்யும் கொடுமை இந்த ஆன் லைன் யுக பேரத்தில் நடந்து கொண்டிருப்பதால் விளைவித்தவனுக்கு எந்த பிரயோஜனமும் இல்லாமல் விரலை சூப்பிக் கொண்டிருக்க வேண்டியதாகி விட்டது. ஒவ்வொரு வருடத்திலும் எந்த துறையில் பற்றாக்குறை வரும் என்பதை கணக்கில் எடுத்துக் கொண்டு அதற்கு பேரம் மூலம் விலையை நிர்ணயம் செய்யும் போது எல்லாமே தலைகீழாகப் போய்விடுகின்றது.
இந்த யுக பேரங்களுக்கு பின்னால் இருக்கும் அத்தனை பேர்களும் வெளிநாட்டு முதலீட்டார்களே.
அவர்களுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் நம்முடைய அரசியல்வாதிகள். எவருக்கோ லாபமாக கடல் கடக்கும்
இந்த லாபங்கள் நாட்டில் விலைவாசியாக மாறி சாதாரண மனிதன் தலையில் வந்து விழுகின்றது.
நடப்பு நிதியாண்டில் ஜனவரி முதல் செப்டம்பர் வரைக்கும் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியாவிற்குள் வந்த அந்நிய முதலீடுத் தொகை 2,550 கோடி டாலர். (1 லட்சத்து 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) கடந்த 2010 ஆம் ஆண்டை விட 41 சதவிகிதம் அதிகம். ஆனாலும் இந்திய ரூபாயின் விலை வீழ்ச்சியை நிறுத்தமுடியவில்லை. காரணம் நவம்பர் 22 அன்று வரலாறு காணாத அளவுக்கு அமெரிக்கன் டாலரின் மதிப்பு இந்திய ரூபாய்க்கு 52.30.
ஏனிந்த குளறுபடி?
இன்றைய சூழ்நிலையில் இந்தியா வைத்துள்ள வெளிநாட்டுக் கடனின் அளவு 31,960 கோடி டாலர் (15 லட்சத்து 98 ஆயிரம் கோடி ரூபாய்)
நான் வளர்கிறேனே அம்மா என்பதாக நம் நாட்டின் கடன் தொகையும் மாதத்திற்கு மாதம் எகிறிக் கொண்டேயிருகிறது.
அமெரிக்காவில் ஓபாமா பதவியேற்றதும் வீட்டு வசதி கடனில் சிக்கிய வங்கிகள் பட்டபாடுகள் உலகம் முழுக்க எதிரொலித்தது.
அமெரிக்க வங்கிகளுக்கான தர வரிசை குறியீட்டை மாற்றியதும் உலகத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கு தும்மலும் சளியும் வந்த கதை நம் அணைவருக்கும் தெரிந்தது தானே. அதைப்போலவே இந்தியாவிலும் நடந்தது.
ஆனால் எத்தனை பேர்களுக்கு தெரிந்துருக்கும்?.
இயல்பாகவே இந்தியர்களின் சேமிப்பு பழக்கம் அணைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் வங்கியில் போடப்படும் பணமும் கிடைக்கும் சொற்ப வட்டி என்றாலும் இன்று வரையிலும் இந்தியர்களுக்கு பொதுத்துறை வங்கிகளின் மேல் உள்ள மோகம் குறைந்தபாடில்லை.
ஆனால் வங்கிகளின் செயல்பாடுகள் அத்தனையும் வருடத்திற்கு வருடம் வராக்கடனாகவே போய்க் கொண்டிருக்கிறது.
உலகளவில் இந்தியாவில் உள்ள வங்கியின் தரமென்பது ‘எத்தகு இடர்பாடுகளையும் தாண்டி வரக்கூடியது’ என்கிற நிலையில் சர்வதேச சமூகம் கணக்கில் வைத்திருந்தது.
2004 ஆம் ஆண்டு மூடிஸ் நிறுவனம் பி.ஏ.ஏ 3 என்ற தரக்குறியீட்டை வழங்கியது. ஆனால் வருடந்தோறும் வசூலிக்க முடியாத கடன்களின் அளவை வைத்து அண்மையில் இந்த குறியீட்டை ஒரு படி குறைத்து ‘இடர்பாடு காண வாய்ப்புள்ளதாக’ மாற்றியுள்ளது. சென்ற செப்டம்பர் வரைக்கும் வசூலிக்க முடியாத கடன் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட தொகையென்பது 1.07 லட்சம் கோடி.
நம்முடைய தலைவர்கள் சொல்லும் மற்றொரு கருத்தையும் இப்போது எடுத்துக் கொள்வோம்.
உற்பத்தி அளவுக்கும் நம்முடைய தேவைக்கும் மிகப் பெரிய இடைவெளி இருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளே வந்தால் இரண்டு வகையில் இந்தியாவிற்கு நல்லது.
ஒன்று இந்திய பண் மதிப்பின் நிலை ஸ்திரமாக இருக்கும்.
அதே சமயம் இந்திய நுகர்வோர் சந்தையில் பணப்புழக்கம் இன்னும் அதிகமாகும். இதற்கு மேலாக தேவைப்படும் பொருட்கள் தாங்கள் விரும்பும் இடங்களுக்கே வந்து சேரும் என்பதே.
ஆனால் ஒரு கிராமத்து விவசாயி தனக்கு அருகே உள்ள சந்தையில் கொண்டு போய் காய்கறிகளை விற்று விட்டு அடுத்த ஒரு மணி நேரத்தில் லாபமோ நட்டமோ என்று நடையைக் கட்டி விட்டு வந்து விடலாம். ஆனால் நிறுவன பாங்கில் செயல்படப் போகும் பன்னாட்டு சட்டதிட்டங்கள் எத்தனை விவசாய சிந்தனைகளை மாற்ற முடியும்?
சில்லறை வணிகமென்பது அது வெறும் வியாபாரம் மட்டுமல்ல. கிராமத்து மக்களின் நலவாழ்வு என்று தொடங்கி, நாட்டின் உணவு பாதுகாப்பு வரைக்கும் வந்து நிற்கின்றது. ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து கலாச்சார பாதுகாப்பு முதல் அந்தந்த ஊர் அமைதி வரைக்கும் கொண்டு போய் சேர்க்கக்கூடியது. இயல்பாகவே இந்திய கிராம மக்கள் அமைதிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர்கள். இது போன்ற அடிப்படை கிராமங்களின் மேல் கையை வைத்து விட்டால் வேறென்ன வேண்டும்.
தொடக்கத்தில் 30 சதவிகிதம் வாங்க வேண்டும் என்று உத்திரவு போட்டுள்ள அரசாங்கத்தின் காற்றில் பறக்கும். காரணம் இங்குள்ள விலையை விட சீனப் பொருட்கள் குவியத் தொடங்கும்.
வேறென்ன வேண்டும்?
சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர்கள் இந்தியர்களின் பருத்தி விவசாயத்தை ஒழித்துக் கட்டியதைப் போலவே இப்போது சில்லறை வணிகத்தின் மூலம் இந்திய சமூக கட்டமைப்பை செல்லறிக்கப் போகின்றார்கள்.
இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் தான் இருக்கிறது என்று சொன்ன காந்தி தாத்தா சொன்ன வாசகம் டெல்லியில் இருப்பவர்களுக்கு எட்டவில்லை போதும். ஆனால் இவர்களின் நோக்கம் அத்தனையும் கிராமப் பொருளாதரத்தை அழிப்பதிலே குறியாகவே இருக்கிறது. அதன் இறுதிக்கட்டம் தான் இப்போது முடிவெடுத்துள்ள அந்நிய நிறுவனங்களுக்கு அனுமதி.
கிராமப்புறங்களும் விவசாயமும் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகும். மாற்றுப் பொருளாதார சிந்தனைகளைப் பற்றி செயல்படுத்த வேண்டாம். குறைந்தபட்சம் அதை யோசிக்கக்கூட நம் தலைவர்களுக்கு மனமில்லை. கந்து வட்டிக்காரனிடம் சிக்கிய நடுத்தரவர்ககத்தினைப் போலவே ஏறக்குறைய இந்தியாவும் இப்போதுள்ள சூழ்நிலையில் இருக்கிறது.
பொருளாதார கொள்கைகளை விவசாயம் சார்ந்து மாற்றியமைக்காத வரை இந்தியாவால் இந்தச் சரிவிலிருந்து முழுமையாக மீள்வது சாத்தியமேயில்லை.
இந்தியா மட்டுமல்ல உலகம் முழுக்க கொள்கைகளை தீர்மானிப்பவர்கள் கார்ப்ரேட் கணவான்களே. இது பணம் படைத்தவர்களுக்கான உலகம். உண்பது, குடிப்பது முதல் அணியும் உடைகள் வரைக்கும் எவரோ ஒருவரால் தீர்மானிக்கப்படுகின்றது.
அதிலும் இந்திய அரசியல் என்பது அடிவருடிகளின் உலகமாக இருப்பதால் வெற்றிகரமாக இந்தியாவின் முதல் பணக்காரர் என்ற தகுதியை நான்காவது ஆண்டாக முகேஷ் அம்பானி (2,260 கோடி டாலர்) யும், இரண்டாவது இடத்தில் இரும்பு மனிதர் ( என்ன பட்டம்டா சாமி?) லஷ்மி மிட்டல்(1,920 கோடி டாலர்) மூன்றாவது இடத்தில் அசீம் ப்ரேம்ஜி (1,300 கோடி டாலர்) பெற்றுள்ளனர்.
இதை விட நமக்கு என்ன பெருமை வேண்டும்.
நம்முடைய நிதியமைச்சர் பிரணாப் இதைப் பற்றி தெளிவாகவே சொல்லியுள்ளார்.
“எந்த அரசாங்கமும் தொழில் அதிபர்களிடம் மென்மையான போக்கை கடைபிடிக்க வேண்டும் “
ஆனால் இவர்களைப் போன்ற இந்தியாவில் உள்ள கார்ப்ரேட் கணவான்கள் கொடுக்க வேண்டிய வங்கிக் கடன்களைப் பற்றி எந்த அரசியல்வாதிகளும் வாயே திறப்பதில்லை. உலகில் தற்போதும் பெட்ரோல் முதலான பல பொருட்களுக்கு டாலர் அடிப்படையிலான வியாபாரமே நடந்து வருவதால், இந்தியா தன்னுடைய டாலர் கையிருப்பைக் குறைக்கும்பட்சத்தில், வரும் காலத்தில் இந்தியாவில் எரிபொருள் முதலான வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் தாறுமாறாக ஏறும். இது இந்திய பொருளாதாரத்தைக் கடுமையாக சிதைக்கும்.
கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன் சார்ந்த பொருளாதார கொள்கையினை சீரமைக்காமல் இந்தச் சரிவிலிருந்து இந்தியா மீள்வது கடினம். நம்மை விட லஞ்சம் ஊழல் எண்ணிக்கையில் 86 நாட்கள் முன்ணணியில் இருக்கிறார்கள்.
சர்வதேச நிறுவனம் ஒன்ற கணக்கெடுத்துள்ளது.
இந்தியா 87வது இடத்தில் உள்ளதாம். அந்தஅளவுக்கு சந்தோஷப்பட்டுக் கொள்ளுங்க.
நடப்பு (2011 - 12) நிதியாண்டில் கடந்த செப்டம்பர் வரைக்கும் இந்தியாவின் நிதிப்பற்றாக்குறை 3 லட்சம் கோடி.
உங்களுக்கு வங்கியில் கடன் வாங்கி தொழில் செய்ய வேண்டுமென்றால் உங்கள் நினைப்பை மாற்றிக் கொள்ளுங்க.
அதுதான் பன்னாட்டு நிறுவனங்கள் வரிசையாக உள்ளே வரப்போகிறார்களே?
நமக்கு கூட்டிப் பெருக்குற வேலை கூட கிடைக்காத என்ன?
நம்முடைய பொருளாதார மேதைகளின் கூட்டல் கணக்கில் கடைசியாக நமக்கு கிடைக்கப் போவது இந்த பெருக்கிற வேலை தானே?.
சற்று முன் கிடைத்த செய்தி
எக்காரணம் இந்தியாவில் சில்லறை வணிகத்தில் அந்நிய மூதலீட்டை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.
கடைசி காலத்தில் இவருக்கு பிடித்துள்ள அமெரிக்கா பைத்தியத்தை எந்த மாரியத்தா கோவிலில் கொண்டு போய் குலையடித்து திருத்த முடியம்?
கவலைவிடுங்க ஸ்வீட் எடுங்க. கொண்டாடுங்க.
அடுத்த ஆட்சி வரும்.
இந்தியாவில் பாலாறும் தேனாறும் ஓடும் என்று நம்பிக்கை வைப்போம்.
எக்காரணம் இந்தியாவில் சில்லறை வணிகத்தில் அந்நிய மூதலீட்டை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.
கடைசி காலத்தில் இவருக்கு பிடித்துள்ள அமெரிக்கா பைத்தியத்தை எந்த மாரியத்தா கோவிலில் கொண்டு போய் குலையடித்து திருத்த முடியம்?
கவலைவிடுங்க ஸ்வீட் எடுங்க. கொண்டாடுங்க.
அடுத்த ஆட்சி வரும்.
இந்தியாவில் பாலாறும் தேனாறும் ஓடும் என்று நம்பிக்கை வைப்போம்.