அஸ்திவாரம்

Wednesday, November 09, 2011

''இங்கு நீதியுமில்லை; நேர்மையுமில்லை; யாருக்கும் மனசாட்சியுமில்லை!'' அற்புதம் அம்மாள் நேர்காணல்

07 நவம்பர் 2011, 22:22 க்கு Samanilai Samudhayamஆல்


''இங்கு நீதியுமில்லை; நேர்மையுமில்லை;
யாருக்கும் மனசாட்சியுமில்லை!''

அற்புதம் அம்மாள் நேர்காணல்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு கொடுஞ்சிறையில் வாடும் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள். எப்படியேனும் தனது மகனை தூக்கு மேடையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து போராடி வருகிறார். தனது பிள்ளை எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று உறுதியாக நம்பும் 64 வயதான இந்தத் தாய், கடந்த 20 ஆண்டுகளாக சட்ட ரீதியாகவும், பல்வேறு போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் வழியாகவும் நீதி கிடைக்க பாடுபட்டு வருகிறார்.

நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்களால் The Great Mother என்று பாராட்டப்பட்ட அவர், பல்லாயிரம் மைல்கள் பயணம் செய்து வாரத்தில் ஒருநாளேனும் தனது மகனைக் காண சிறைக்கூடம் செல்கிறார். தூக்குக் கயிற்றின் நிழலில் வாடும் தனது மகனுக்காக இந்தத் தாய் சந்தித்த வேதனைகளையும், கண்ணீர்க் கதையையும், நமது வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார். இது வெறும் நேர்காணல் அல்ல; கடந்த 20 ஆண்டுகளாக மகனுக்காக ஒரு தாய் நடத்திவரும் போராட்டத்தின் வரலாறு.

சந்திப்பும் உரையாடலும் : அனுஸ்ரீ

''விசாரணை நடத்திவிட்டு மறுநாளே அனுப்பிவிடுகிறோம் என்று உறுதியளித்ததன் பேரில், 1991 ஜூன் 11 ஆம் தேதி நீங்களும் அப்பாவும் சேர்ந்துதானே பேரறிவாளனை போலீஸிடம் ஒப்படைத்தீர்கள். ஆனால், அதன் பிறகு போலீஸ் அவரைக் கைது செய்ததாக பத்திரிகைச் செய்திகள் வந்தன. உண்மையில் அன்று என்னதான் நடந்தது?

ஜோலார்பேட்டையில் வசிக்கும் மிகச் சாதாரண குடும்பம் எங்களுடையது, எனது கணவர் அருகிலுள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். எங்களுக்கு அன்புமணி, பேரறிவாளன் (அறிவு), அருட்செல்வி என மூன்று பிள்ளைகள்.

1991 இல் எலக்ட்ரானிக்கில் டிப்ளமோ பெற்றபின், பார்ட் டைம் என்ஜினியரிங் படிக்க, அறிவு சென்னை சென்றான். எங்கள் குடும்பம் திராவிடர் கழகத்தின் தீவிர ஆதரவாளர்கள் என்பதால் தி.க.வின் சென்னை அலுவலகத்தில் அவன் தங்கி, விடுதலை நாளிதழில் வேலை பார்த்து வந்தான்.

1991, மே மாதம் 21 ஆம் தேதி நாட்டை உலுக்கிய அந்த துயரச் சம்பவம் நடந்தது. - ராஜீவ்காந்தி படுகொலை.  நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல; மகிழ்ச்சியோடும், குதூகலத்தோடும் வாழ்ந்துவந்த எங்கள் குடும்பத் திற்கும்கூட அந்த நாள்தான் ஒரு துயர நாள் என்று அன்றுவரை எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

1991, ஜூன் பத்தாம் நாள் இரவு 12 மணி இருக்கும்; முதன்முறையாக எங்கள் வீட்டுக்கு போலீஸ் வந்தது. யாரோ கதவைத்  தட்டும் சத்தம் கேட்டு நாங்கள் திறந்து பார்த்தபோது, வெளியே போலீஸ் அதிகாரிகள் நின்றிருந்தனர். ''நாங்க சென்னையிலிருந்து வர்றோம். உங்க வீட்டை சோதனையிட வேண்டும்'' என்றனர். இதைக் கேட்டு நாங்கள் திடுக்கிட்டோம். ''இந்த நடு ராத்திரியில எங்க வீட்டை சோதனை நடத்த வேண்டிய தேவை என்ன?'' என்று கேட்டபோது, உங்க வீடு மட்டுமல்ல; ஈழ ஆதரவாளர்கள் அனைவரது வீடுகளிலும் சோதனை நடத்தி வருகிறோம்'' என்று பதிலளித்தனர்.

முதலில் அவர்கள் டிவி மேலிருந்த பிரபாகரன் படத்தை எடுத்துப் பார்த்தனர். பிறகு எனது கணவரை விசாரித்தனர். அவருக்கு வந்த கடிதங்களையெல்லாம் எடுத்துப் பரிசோதித்தனர். அதில் பாக்கியநாதன் என்பவரின் கடிதத்தை நீண்டநேரம் ஆய்வு செய்தனர். பின்னர் ''பாக்கியநாதனுடன் உங்களுக்கு என்ன தொடர்பு'' என்று கேட்டனர். திராவிடர் கழகத்தின் நிகழ்ச்சிகளைப் புகைப்படம் எடுக்கவரும் சுபா சுந்தரம் என்பவரது நண்பர் என்ற முறையில் பாக்கியாநாதன் எங்களுக்கு அறிமுகமானார். மேலும், சுபா சுந்தரம் சொல்லி தான் பாக்கியநாதனுக்கு ஓர் அச்சகம் இருக்கிறது என்ற செய்தி எங்களுக்கே தெரியும்'' என்றோம்.

எனது கணவர் கவிதைகள் எழுவார். அந்தக் கவிதைகளை நான் பதிப்பித்து வெளியிடுகிறேன் என்று அவரேதான் எங்களிடம் கேட்டார். அன்றுவரை ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நளினியின் அண்ணன்தான் இந்த பாக்கியநாதன் என்பது எங்களுக்கே தெரியாது. எனது கணவரின் கவிதைகளைப் பதிப்பிப்பது தொடர்பாக வந்த கடிதங்களைத்தான் அதிகாரிகள் பரிசோதித்தனர். நாங்களும் போலீஸாரிடம் அந்த கடிதங்களை வாசிக்குமாறு கேட்டுக்கொண்டோம். வாசித்துப் பார்த்தபோது கடிதத்திலும் அந்த செய்திதான் இருந்தது என்று அவர்களுக்குப் புலப்பட்டது. ''இந்தக் கடிதங்களை நாங்க எடுத்துச் செல்லட்டுமா'' என்று அவர்கள் கேட்டபோது, நாங்களும்  சரி என்றோம். ஆனால், இன்று இவ்வளவு பெரிய வழக்குகள் எங்கள் தலையில் இடியாய் வந்து இறங்குமென்றும், இக்கடிதங்களும் அதற்கு ஓர் ஆதாரமாகு மென்றும் நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை.

அதன் பிறகு ''உங்கள் மகன் எங்கே'' என்று கேட்டனர். இதைக் கேட்டவுடன் எங்களுக்குள் ஒருவித அச்சம் தொற்றிக்கொண்டது. ''பயப்படாதீங்க! சும்மா சில விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளத்தான்''  என்று அவர்கள் சொன்னதை நாங்கள் நம்பினோம்.

அவன் சென்னையில் உள்ள தி.க. அலுவலகத்தில் இருப்பதாக நாங்கள் கூறினோம். ''நாளை அறிவையும் அழைத்துக்கொண்டு அவன் அம்மா வருவாங்க.  எங்கு வரவேண்டும் என்று சொல்லுங்க'' என என் கணவர் கேட்டபோது, 'மல்லிகை' யின் முகவரியைத் தந்தனர். மல்லிகை என்பது ராஜீவ் கொலை வழக்கை விசாரித்து வரும் எஸ்.ஐ.டி.யின்  தலைமையகம் ஆகும். ''அவனையும் அழைத்துக்கொண்டு நாளை நாங்கள் அங்கு வந்து விடுகிறோம்'' என்று என் கணவர் அதிகாரிகளிடம் கூறினார்.

மறுநாள் காலையிலேயே அறிவை அழைத்து வருவதற்காக நான் சென்னை புறப்பட்டேன். ஆனால், அன்றும் எஸ். ஐ.டி. அதிகாரிகள் ஜோலார்பேட்டையில் உள்ள எங்கள் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் 11 பேர் இருந்தனர். அந்த சமயத்தில் வீட்டில் எனது சிறிய மகள் மட்டுமே இருந்தாள். அவளிடம் எதுவும் கூறாமல் வீட்டை சோதனையிடுவதாகச் சொல்லி மொத்த வீட்டையும் கலைத்துப்போட்டனர்.

அதிகாரிகளுக்கு வீட்டிலிருந்து எதுவும் கிடைக்கவில்லை. பயந்துபோன மகள் ஓடிசென்று எனது கணவரை அழைத்து வந்தாள். இதையெல்லாம் கண்டபோது அவருக்கும் ஏதோ ஒருவித அச்சம் ஏற்பட்டது. அப்போதே அதிகாரிகளுடன் அவரும் சென்னை வந்தார். இந்த சமயத்தில் நான் தி.க. அலுவலகத்திற்கு வந்து அறிவிடம் நடந்த விஷயங்களைச் சொன்னேன்.

''நாளை நீங்கள் மல்லிகை அலுவலகம் சென்று வந்தால் போதும்'' என்று அலுவலக நண்பர்களும் கருத்துத் தெரிவித்தனர். அப்படியானால் விசாரணை நடத்திவிட்டு அன்று மாலையே அனுப்பிவிடுவார்கள் என்று நினைத்து நானும் அறிவும் கடைவீதிக்குச் சென்று ஷாப்பிங் பண்ணினோம். நாங்கள் திரும்பி வரும்போது தி.க. அலுவலகத்தில் எனது கணவர் இருந்தார். கூடவே போலீஸ் அதிகாரிகளும் இருந்தனர்.

அப்பாதான் அறிவை போலீஸாருக்கு அறிமுகம் செய்து வைத்தார். உடனே ''நாங்க இன்று அறிவை மல்லிகை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்கிறோம். அவனிடம் சில விஷயங்களை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். நாளை காலை நீங்கள் வந்து அவனை அழைத்து செல்லலாம்'' என்று போலீஸார் கூறினர். "இங்கேயே வைத்து விசாரிக்கலாமே'' என்று தி.க. அலுவலகத்தில் உள்ளவர்களும் கேட்டனர்.

ஆனால் அறிவிடம் எந்தவித பயமும் தெரியவில்லை. ''நாளை காலை நீங்கள் அழைத்துச் செல்ல வந்தால் போதும்'' என்று அவன்தான் எங்களைச் சமாதானப்படுத்தினான். இதெல்லாம் நடந்தது, ஜூன் 11 தேதி. பின்னர் ஜூன் 18 ஆம் நாள் அவனைக் கைது செய்திருப்பதாக எஸ்.ஐ.டி. அதிகாரிகள் அறிவித்தனர்.

மறுநாள் நீங்கள் மல்லிகை அலுவலகம் சென்றபோது அவர்கள் எவ்வாறு நடந்துகொண்டனர்?

அதிகாரிகள் சொன்னதை நம்பி, மறுநாள் அறிவை அழைப்பதற்காக நாங்கள் மல்லிகை அலுவலகம் சென்றோம். ஆனால், அவனைச் சந்திக்கக் கூட எங்களை அவர்கள் அனுமதிக்கவில்லை. ''இன்னிக்கு விட்டுவிடுவோம் என்று சொல்லித்தானே அவனை அழைத்துச் சென்றீர்கள்'' என்று நாங்கள் அதிகாரிகளிடம் கேட்டபோது, ''இன்னும் விசாரணை முடியல; நாளைக்கு முடிஞ்சுடும்'' என்று பதில் சொன்னார்கள். மறுநாளும் போனோம். ஆனால், அவனைச் சந்திக்கக் கூட முடியவில்லை.

இறுதியில், போலீஸார் ''நீங்க ஏதாவது வக்கீலை அழைத்துக்கொண்டு வாருங்கள்'' என்று சொன்னபோது, நாங்கள் உண்மையிலேயே பலத்த அதிர்ச்சியடைந்தோம். ''விசாரித்துவிட்டு உடனே அனுப்பிவிடுகிறோம் என்று சொல்லித்தானே அவர்கள் அறிவை அழைத்துச் சென்றார்கள். இப்போது ஏன் வழக்கறிஞரை அழைத்து வாருங்கள்'' என்று சொல்கிறார்கள் என அப்போது எங்களுக்கும் புரியவில்லை.

எங்களிடம் அவர்கள் உண்மையைச் சொல்லவில்லை. எதை எதையோ சொல்லி எங்களை ஏமாற்றினர். ஏமாந்துபோன நாங்கள் பின்னர் பத்திரிகைச் செய்தி வழியாகத்தான் விபரங்களை தெரிந்துகொண்டோம். அதன் பிறகு மல்லிகை அலுவலகம் சென்றபோதெல் லாம் எங்களை உள்ளே விடாமல் வாசலிலேயே தடுத்து நிறுத்தினர்.

அதன் பிறகு உங்களுக்குக் கிடைத்த சட்ட ஆலோசனைகள் என்னென்ன?

திராவிடர் கழகத்தின் வழக்கறிஞர் துரைசாமிதான் இந்த வழக்கிற்குப் பொறுப்பேற்றார். அவரைத் தவிர எங்களுக்கு வேறு யாரையும் தெரியாது. தி.க. தலைவர் கி. வீரமணி அப்போது அமெரிக்காவில் இருந்தார். அவர் வரும்வரை காத்திருக்குமாறு வழக்கறிஞர் துரைசாமி எங்களைக் கேட்டுக்கொண்டார். ஒருவாரம் முடிந்தது. கண்ணீரோடும், மன வேதனையோடும் எப்படியோ அந்த வாரத்தைக்  கடத்தினோம்.

அதன் பிறகு அமெரிக்காவிலிருந்து வீரமணி திரும்பி வந்தார். எல்லாவற்றையும் அவரிடம் ஒப்படைத்துவிட்டு ''நம்ம பிள்ளை எப்படியும் திரும்பி வந்துவிடுவான்'' என்ற நம்பிக்கையில் நாங்கள் காத்திருந்தோம். ஆனால், ஒன்றுமே நடக்கவில்லை. கோர்ட்... கேஸ்… வக்கீல் என்று எங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதையே எங்களால் யூகிக்க முடியவில்லை.

அறிவு மீது தடா சட்டம் பாய்ந்திருப்பதாகவும், அதனால் நீதிமன்றத்தால் கூட எதுவும் செய்ய இயலாது என்றும் துரைசாமி சென்னார். வழக்கறிஞர் சொல்வதையெல்லாம் நம்பி நாங்களும் தலையாட்டிக்கொண்டிருந்தோம். இதை தவிர வேறொன்றும் எங்களுக்குத் தெரியாதே. எல்லாவற்றையும் வீரமணி பார்த்துக்கொள்வார் என்று நாங்களும் நம்பியிருந்தோம்.

அதேநேரம், மற்றொருபுறம் எங்கள் பிள்ளை கொடிய துன்புறுத்தலுக்கும், சித்தரவதைகளுக்கும் ஆளாகிக்கொண்டிருந்தான். அவனைக் கட்டாயப்படுத்தித்தான் அவனிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெற்றனர் என்று அவனது நூலில் எழுதியுள்ளான். அறிவு எழுதிய புத்தகத்தை வாசித்து இதுவரை யாரும் மறுப்புத் தெரிவிக்கவில்லை. அப்படியானால் அவன் சொல்வதெல்லாம் உண்மை என்றுதானே பொருள்.

உன் குடும்பத்தைப் பற்றி மோசமாக சித்தரிப்போம் என்றும், சகோதரிகளை அவமானப்படுத்துவோம் என்றும் அதிகாரிகள் மிரட்டி வந்தார்களாம். அவன் என்ன செய்வான் பாவம்? 19 வயது சின்னப் பையன் அல்லவா? அங்கு அவனுக்கு போலீஸாரைத் தவிர வேறு யாரும் கண்ணுக்கும் தென்படவில்லை. கூடவே சித்தரவதைகள் வேறு. என் குழந்தை என்னமா கஷ்டப்பட்டிருப்பான் (அழுகிறார்).

''உனக்குத் தெரிஞ்சதெல்லாம் சொல்லிவிடு. உன்னை சும்மா விட்டுறோம்'' என்று அவர்கள் சொல்லி வந்தார்களாம். ''எனக்கு எதுவுமே தெரியாது'' என்று அவன் சொல்லும்போதெல்லாம் அவன் கடுமையாக துன்புறுத்தப்பட்டுள்ளான். இவ்வாறு மிரட்டியும் அச்சுறுத்தியும், துன்புறுத்தியும்தான் அதிகாரிகள் அவனிடமிருந்து கையொப்பம் வாங்கியுள்ளனர். இவ்வாறு ஒரே இரவில் 17 பேரிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலம் என்ற பெயரில் வெற்றுத்தாளில் அதிகாரிகள் கையொப்பம் வாங்கியுள்ளனர். இந்த விஷயங்களையெல்லாம் ரொம்ப வருடங்களுக்கு பிறகுதான் அவன் என்னிடம் சொன்னான்.

அதன் பிறகு எப்போது அறிவைச் சந்தித்தீர்கள்?

சென்னையிலேயே தங்கியிருந்து எந்தப் பயனும் இல்லை என்பதை புரிந்துகொண்டு நாங்கள் ஜோலார்பேட்டைக்கே திரும்பினோம். அறிவை முதல் தடவை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் என்பதை பத்திரிகை வழியாகத்தான் நாங்கள் அறிந்தோம். எங்கள் வழக்கறிஞருக்குக் கூட தெரிவிக்கப்படவில்லை. இரண்டாவது முறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது வழக்கறிஞரிடம் தெரிவித்தனர். அவரும் எங்களுக்குத் தெரிவித்தார்.

உடனே நாங்கள் ஏராளமான உறவினர்களுடன் நீதிமன்றத்திற்கு வந்தோம். நீதிமன்றத்தில் வைத்து அறிவைப் பார்க்கவோ, பேசவோ அனுமதிக்கவில்லை. முகத்தில் கறுப்புத் துணி அணிவித்த நிலையில் அவன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டான். நேராக மேலே உள்ள நீதிமன்ற அறைக்குப் போலீஸார் அவனைக் கொண்டுசென்றனர். வெளியே நின்றிருந்த
நாங்கள் அனைவரும் அறிவு! அறிவு!' என்று சப்தமாக அழைத்தோம். சிலர் கூச்சல் போட்டனர். சிலர் கதறி அழுதனர். ஆனால், போலீஸார் எதையும் கண்டுகொள்ளாத மாதிரி அவனை வேகமாக அழைத்துச் சென்றனர். ராபர்ட் பைஸ், அறிவு, கோடிகரை சண்முகம் இவர்கள் மூவரைத்தான் அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நாங்கள் அறிவு என்று நினைத்து சப்தம் போட்டது, கோடிகரை சண்முகத்தைப் பார்த்துத்தான் என்பதை பின்னர்தான் தெரிந்துகொண்டோம். ஏனெனில், முகத்தில் கறுப்புத் துணி போடப்பட்டிருந்ததால் யார் அறிவு என்று எங்களுக்குச் சரியாகத் தெரியவில்லை.

எப்படியாவது அறிவைச் சந்திக்க வேண்டும் என்று வழக்கறிஞரிடம் நான் மன்றாடினேன். வக்கீல் சொன்னபடி மல்லிகைக்கு சென்று அவனைப் பார்க்க அனுமதி கிடைத்தது. நாங்கள் மல்லிகை சென்றோம். வாசலிலேயே துப்பாக்கி ஏந்திய போலீஸார் நின்றிருந்தனர். அச்சமூட்டும் சூழல்... திடீரென, ஆக தளர்ந்த நிலையில் எனக்கு முன்னால் அறிவு கொண்டுவந்து நிறுத்தப்பட்டான். எத்தனையோ மாதங்களுக்குப் பிறகு நடைபெறும் சந்திப்பு அது. நான் அவனது கைகளைப் பிடித்தேன். அந்த ஸ்பரிசம் வழியாக அவனுக்குள் இருந்த பயம், அச்சம், நடுக்கம் அனைத்தையும் நான் உணர்ந்து கொண்டேன்.

அவனுக்கு ஏற்பட்ட சித்தரவதைகள் பற்றி அவன் எங்களிடம் எதையுமே சொல்லவில்லை. ஏனெனில், சுற்றிலும் போலீஸார் நின்றிருந்தனர். அனைத்தையும் அவன் எழுதிய புத்தகம் வழியாகத்தான் நான் அறிந்து கொண்டேன். 'தைரியமா இருங்க' என்று மட்டும்தான் அன்று அவன் என்னிடம் சொன்னான். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் அன்றைய பத்திரிகைகள் மிக மோசமாக எழுதி வந்ததைக் கண்டு நாங்கள் மிகவும் வேதனைப்பட்டோம். எங்களால் எதிர்க்கவோ, மறுப்புத் தெரிவிக்கவோ முடியவில்லை. ஏனெனில், நாங்கள் எந்த எதிர்ப்பைத் தெரிவித்தாலும் உடனே 'தடா' என்ற வார்த்தையைச் சொல்லி எங்கள் வாயை அடைத்துவிடுவர்.

பிறகு வழக்குகள் எப்படி நடந்தன?

பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்றன. சிறையிலிருந்தே நேரடியாக நீதிமன்றத்திற்கு வர முடியும். பூந்தமல்லி சிறைக்கு உள்ளேயே நீதிமன்றமும் இயங்கி வந்தது. அங்கு செல்ல யாருக்கும் அனுமதி கிடைக்கவில்லை. ''அறிவு என்ன தப்பு செய்தான் என்று எங்களுக்குத் தெரிய வேண்டும். ஆகையால் நீதிமன்ற நடவடிக்கைகளை நேரில் காண எங்களை அனுமதிக்க வேண்டும்'' என்று புலனாய்வுத்துறை அதிகாரி ரகோத்தமனிடம் நான் கோரிக்கை வைத்தேன். ''அதெல்லாம் நடக்காது. இது தடா கோர்ட். உங்க வக்கீலுக்கு மட்டும்தான் நீதிமன்றத்திற்கு வர அனுமதி கிடைக்கும்'' என்று அவர் மறுத்துவிட்டார்.

ஏறக்குறைய 8 ஆண்டுகள்… விசாரணை நடைபெற்ற ஆரம்ப நாட்களில் அவனைச் சந்திக்க மிகவும் சிரமப்பட்டோம். ஆனாலும், எப்போதெல்லாம் அவனைப் பார்க்க வேண்டுமென்று தோன்றுகிறதோ அப்போதெல்லாம் நான் சிறைக்குச் செல்வேன். பல சந்தர்ப்பங்களில் அவனைச் சந்திக்கவே இயலாது. அவனைப் பார்த்துவிட்டுத்தான் போவேன் என்று பிடிவாதமாக நான் அங்கேயே இருப்பேன். சில நாட்களில் கூச்சல் போடுவேன். அடம்பிடிப்பேன். அழுவேன்; அவர்களைத் திட்டுவேன். ஆனால், விசாரணை நடைபெறும் நாட்களில் அவனைக் காண இயலாது. ஜோலார்பேட்டையிலிருந்து புறப்பட்டு, பலமுறை சென்னை வந்தும் அவனைக் காண முடியாமல் மன பாரத்தோடும், கவலையோடும் திரும்பிச் சென்ற சந்தர்ப்பங்கள்தான் அதிகம்.

திராவிடர் கழகத்தின் தரப்பிலிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லையா?

இந்த விஷயத்தில் தி.க. தரப்பிலிருந்துதான் எங்களுக்கு பலத்த அடி கிடைத்தது. தி.க. எந்த ஒத்துழைப்பும் தரவில்லை. எந்த உதவியும் செய்யவில்லை. பேரறிவாளனுக்கும், திராவிடர் கழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லையென்று கி.வீரமணி விடுதலையில் தலையங்கமே எழுதினார்.

எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. எனது கணவர் 8 வயது முதல் தி.க.வில் இயங்கிவருகிறார். எங்கள் திருமணத்திற்குப் பிறகு நானும் தி.க.வில் இணைந்து பணியாற்றிவந்தேன். வீரமணியும், அவரது துணைவியார் மோகனாவும்தான் எங்கள் திருமணத்தையே நடத்திவைத்தனர். எனது மூத்த மகளுக்கு அன்புமணி என்று பெயர் சூட்டியதே தந்தை பெரியார்தான்.

அறிவின் தந்தை மட்டுமல்ல; எங்கள் குடும்பமே தி.க.வின் தீவிர தொண்டர்களாக இயங்கிவந்தோம். நாங்கள் கழகத் தலைமையிடம் எங்கள் பிரச்சினைகளையெல்லாம் எடுத்துச்சொன்னோம். ஆனால், அறிவுக்கு ஆதரவாகப் பேசினால் அமைப்பைத் 'தடை' செய்துவிடுவார்கள் என்பதே அவர்களது ஒரே பதிலாக இருந்தது. நாங்கள் மிகுந்த மனவருத்தம டைந்தோம். ஒரு நெருக்கடியான சூழலில் இப்படி தனித்து விடப்பட்டோமே என்று எங்களது கையறு நிலையை எண்ணி வருந்தினோம்.

கழகத்தின் பிரச்சார நிகழ்ச்சிகளுக்கெல்லாம் நாங்கள் சென்றுவருவது வழக்கம். கன்னியகுமரி முதல் திருத்தணி வரை தி.க. மேற்கொண்ட பிரச்சார ஊர்வலத்தில் தொடக்கம் முதல் இறுதிவரை நானும், கணவரும் பங்கெடுத்திருந்தோம். 'பேரறிவாளன் வழக்கு நிதி' என்ற பெயரில் அவனது வழக்கை நடத்துவதற்காக பலரும் நன்கொடை வழங்கினர். ஆனால், எனது மகனுக்காக ஒரு பைசா கூட செலவழிக்கப்படவில்லை. ஆனாலும், ஒட்டுமொத்த கழகமும் அவனுக்குப் பின்னால் இருப்பதாகவும் அவனுக்கு எதுவும் நேராது என்றும் நாங்கள் உறுதியாக நம்பினோம். ஆனால், அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை.

அறிவு கைது செய்யப்பட்ட பின்னரும் தொடர்ந்து 4 வருடங்கள் நாங்கள் கழகத்திலேயே தொடர்ந்தோம். ''கழகத்திற்கு பொதுமக்களின் ஆதரவும் தேவை அல்லவா? அதனால்தான் இந்த வழக்கில் தலைமை தீவிரமாக ஆர்வம் காட்டுவதில்லை'' என்று எனது கணவர் அடிக்கடி ஆறுதல் சொல்வார். மேலும், ''தந்தை பெரியார் கடும் தியாகங்களைச் சந்தித்து கழகத்தை வளர்த்தார். உங்கள் மகனின் பிரச்சினையால் அவரது முயற்சிகள் வீணாகிவிடக் கூடாதே'' என்று தலைவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு, 'ஆமாம்! ஆமாம்!' என்று நாங்கள் தலையாட்டுவதைத் தவிர, எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை.

வழக்கு வலுவாக வலுவாக… கழகம் பின்வாங்கிக் கொண்டே இருந்தது. அதன் பிறகு அறிவின் அப்பா பற்றியும் அவதூறு பரப்பினர். அவர் கழகத்திற்கு எதிராகச் செயல்படுகிறார் என்பது அவர்களது பிரதான குற்றச்சாட்டு. கடைசியில் நாங்களாகவே கழகத்திலிருந்து வெளியேறிவிடுவோம் என்று அவர்கள் நினைத்திருக்கக் கூடும்.

இவ்விஷயத்தில் கழகம் எங்களுக்குப் பெரும் துரோகம் இழைத்துவிட்டது. இப்பிரச்சனையில் நாங்கள்  தலையிட்டு எந்த இடையூறும் செய்ய மாட்டோம் என்று அவர்கள் விசாரணை அதிகாரிகளுக்கு பச்சைக்கொடி காட்டி வந்தனர் என்பதே உண்மை.

தொடர்ந்து இந்த வழக்கை முன்னெடுத்துச் செல்வதற்கான தைரியமும், துணிச்சலும் உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது?

என் பிள்ளையிடமிருந்துதான். அவன் எந்தத் தப்பும் செய்யவில்லை என்று நாங்கள் உறுதியாக நம்பினோம். ஏனெனில், அவனால் ஒரு சின்ன தவறுகூட செய்ய இயலாது. யாரிடம் பேசும்போதும் முகம் கோணும் விதமாக நடந்துகொள்வதை அவன் விரும்ப மாட்டான். யாருடைய முகமும் வாடிப்போவதை அவன் சகித்துக்கொள்ள மாட்டான். யாருக்கும் எந்த தொந்தரவும் தரக் கூடாது என்று அவன் எப்போதும் எங்களிடம் சொல்வான்.

நான் ஒரு சாதாரண குடும்பப் பெண்மணி. கணவர் மற்றும் குழந்தைகளுக்குச் சமைத்துப்போடுவதை தவிர எனக்கு வேறொன்றும் தெரியாது. இப்படியொரு வழக்கை சந்திக்கும் வரை நான் தனியாக எங்கும் பயணித்ததில்லை. இப்போது தமிழகத்தின் பல இடங்களுக்கும் குறிப்பாக, சென்னையில் வழக்குத் தொடர்பாக தன்னந்தனியாக அலைகிறேன். ஒவ்வொருவரிடமும் வழிகேட்டு அந்தந்த இடங்களுக்குப் போய் சேருகிறேன். பல்வேறு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் என எல்லா இடங்களுக்கும் நான் தனியாளாகவே சென்று வருகிறேன். எனக்கும் வேறு வழி தெரியவில்லை. நாங்கள் பணக்காரர்கள் அல்லவே? நாங்களும் வாழணும் இல்லையா? அதனால் அறிவின் அப்பா வேலைக்குப் போகிறார். அவரால் விடுப்பு எடுத்து என்னைப்போல் அலைய முடியாது என்பதால், வழக்கு தொடர்பாக நானே தனியாக எல்லா இடங்களுக்கும் சென்று வருகிறேன். அம்மாவின் இந்த தனிமனிதப் போராட்டத்தை எப்படி முன்னெடுத்துச் செல்கிறீர்கள்?

இந்த 20 வருடங்களில் பல்வேறு தரப்பிலிருந்தும் வரும் விமர்சனங்களையும், தாக்குதல்களையும் எவ்வாறு எதிர்கொண்டீர்கள்?

திராவிடர் கழகம் தவிர அனைவரும் எங்களுக்கு உதவினர். பொதுமக்களிடமிருந்து நாங்கள் எந்த நிதியுதவியும் பெறுவதில்லை. மற்ற அனைத்து உதவிகளையும் ஏற்றுக்கொண்டோம். பிற வழிகளில் உதவி செய்ப வர்களையும், செய்து கொண்டிருப்பவர்களையும் எங்களால் ஒருபோதும் மறக்க இயலாது. முதல் அமைச்சர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி தவிர உள்ள தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து, எப்படியாவது என் பிள்ளையைக் காப்பாற்ற வேண்டும் என்று நான் மன்றாடி வருகிறேன். அவர்களில் பலரும் எனக்கு உதவியும் ஒத்துழைப்பும் நல்கினர்.

ஆனால், சிறப்பு புலானாய்வுத்துறை அதிகாரிகளோ யாரையும் எதையும் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் அனைத்து உண்மைகளையும் மூடி மறைத்தனர். அவர்கள் எழுதிய திரைக்கதையை ஏற்று நடித்தவர்களை மட்டுமே அவர்கள் ஏற்றுக்கொண்டனர். 'முன்னாள் பிரதமரை கொலை செய்த குற்றம்… தடா நீதிமன்றம்…' என்று சொல்லிச் சொல்லியே அவர்கள் எல்லோரையும் மிரட்டி வந்தனர்.

இவர்களைப் பார்த்து நான் ஒன்று கேட்க விரும்புகிறேன். முன்னாள் பிரதமரின் கொலை வழக்கை ஏன் நீங்கள் ஒரு திறந்தவெளி நீதிமன்றத்தில் நடத்தக் கூடாது? இவர்கள் செய்த குற்றம் என்னவென்று அனைவருக்கும் தெரியட்டும். எனது பிள்ளை என்ன தவறு செய்தான் என்பதை அறியும் உரிமை எனக்கும் உண்டல்லவா? திறந்தவெளி நீதிமன்றத்தில் விசாரணை நடத்துங்கள் என்பது மட்டுமே இப்போதைய எனது ஒற்றைக் கோரிக்கை.

அறிவை சந்திக்கவோ, பேசவோ முடியாமல் எத்தனை வருடங்கள் கழித்தீர்கள்? பின்னர் என்று முதல் மீண்டும் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது?

விசாரணை முடியும் வரை…  அதாவது எட்டு வருடங்கள். இத்தனை வருடங்களில் நாங்கள் எவ்வாறு நாட்களைக் கடத்தினோம் என்று எங்களுக்கே தெரியவில்லை. பல சந்தர்ப்பங்களில் அவனைக் காண முடியாமல்… நான் சுயநினைவு இழந்தவளைப்போல் நடந்துகொண்டுள்ளேன். அவனைக் காண சிறைக்குச் செல்லும்போதெல்லாம் எவ்வளவோ அவமானங்களைச் சந்தித்துள்ளேன். அந்த அவமானங்களையெல்லாம் என் பிள்ளைக்காக நான் சகித்துக்கொண்டேன்.

வரும்போது புத்தகங்கள் மட்டும் கொண்டுவந்தால் போதும் என்பான் அறிவு. ஆனால், நான் பழங்கள், பிஸ்கெட், மாத - வார இதழ்களையும் கொண்டுவருவேன். அதனை இரண்டு மூன்று முறை சோதனை போடுவார்கள். சிலர் கொடுத்து விடுகிறோம் என்பார்கள். சிலர் தர முடியாது என்று மறுத்துவிடுவார்கள்.

ஒவ்வொரு முறையும் சின்னச் சின்ன விஷயங்களுக்காகவெல்லாம் சிறை அதிகாரிகளோடு நான் சண்டை போடுவேன். சிலபோது சப்தமிட்டு அழுவேன்.  சோதனை முடிந்து, உள்ளே சென்று அறிவைப் பார்த்து விட்டுத் திரும்பி வரும்போது மீண்டும் சோதிப்பார்கள். நான் அப்படியே அவமானத்தால் கூனிக்குறுகிப் போய்விடுவேன்.

கைது செய்தவுடன் அவனை செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். அங்கேயே அறிவிற்கு சிறைக் கைதிகளுக்கான (convicted prisoners) உடை  தந்துவிட்டிருந்தனர்  (white and white). முதன் முறையாக அந்த உடையில் அவனைப் பார்த்தபோது என்னால் கண்ட்ரோல் பண்ண முடியவில்லை. என்னையும் அறியாமல் நான் அழுதுவிட்டேன். நான் சொன்ன பிறகுதான் இவ்விஷயம் எங்கள் வக்கீலுக்கே தெரியும். அதற்காக ஒரு வழக்கு தொடர்ந்த பிறகுதான் சாதாரண உடை அணிய அனுமதி கிடைத்தது. இவ்வாறு ஒவ்வொரு முறையும் சின்னச் சின்ன விஷயங்களுக்காக நான் நீதிமன்றத்தை நாட வேண்டியிருந்தது.

அதன் பிறகு அவன் பூந்தமல்லி சிறைக்கு மாற்றப்பட்டான். அங்கு அவனைக் காணச் சென்றபோது, பைபர் கிளாஸால் ஒரு தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டிருந்தது. மறுபக்கம் நின்றுதான் அவனைப் பார்க்க முடியும். முழுசா தெரியாது. நிழல் மட்டும்தான் தெரியும். தொலைபேசி வழியாகத்தான் இருவரும் பேச முடியும். வழக்கறிஞர் கூட தொலைபேசி வழியாகத்தான் பேசுவார். அதற்கும் ஒரு வழக்கு தொடுத்தோம். அப்போது பைபர் கிளாஸ் தடுப்புச் சுவரில் ஒரு சின்ன  துவாரம் போட்டார்கள். அது வழியாக ரொம்பவும் சிரமப்பட்டு, அவனது விரலை மட்டுமே என்னால் தொட முடிந்தது. மறுபடியும் கேஸ் கெடுத்தோம். அதன் பிறகு வழக்கறிஞர் மட்டும் நேரில் சந்தித்துப் பேசுவதற்கு அனுமதி கிடைத்தது.

செங்கல்பட்டு சிறையில் சிறை அதிகாரியின் அறைக்கு மேல்புறத்தில் உள்ள ஜன்னல் கம்பி வழியாக கீழே எட்டிப் பார்த்து என் பிள்ளை என்னிடம் பேசுவான். நான் எக்கி எக்கி மேலே அண்ணாந்து பார்த்து அவனுடன் பேசுவேன்.

எட்டு வருடங்களுக்குப் பிறகு...?

விசாரணைக்குப் பிறகு தீர்ப்பு வந்தது. எல்லா குற்றவாளிகளுக்கும் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதன் பிறகு அனைவரும் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். அப்போதுதான் ரிவ்யூ பெட்டிஷன் கொடுத்தோம். தீர்ப்பில் எந்த வித்தியாசமும் இருக்கவில்லை. குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்த அதே நீதிபதியிடம்தான் ரிவ்யூ பெட்டிஷனும் கொடுக்கப்பட வேண்டும். வேறொரு நீதிபதியிடம் மனு கொடுத்திருந்தால் ஒருவேளை  தீர்ப்பு மாறி வந்திருக்க வாய்ப்பு இருந்தது.

குண்டுவெடிக்கச் செய்ய சிவராசனுக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்தார் என்பதுதானே அறிவு மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. ஆனால், ரவிச்சந்திரன் என்ற மற்றொரு குற்றவாளியும் சிவராசனுக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால், ''ரவிச்சந்திரனுடையது அல்ல; அறிவு கொடுத்த பேட்டரிதான் குண்டுவெடிக்க பயன்படுத்தப்பட்டது'' என்பதை எவ்வாறு உறுதிப்படுத்தினார்கள்? ரவிச்சந்திரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அது ஏன் அறிவுக்குப் பொருந்தாதா? என்பதே எனது கேள்வி.

ரிவ்யூ பெட்டிஷன் கொடுக்கும்போதும், கருணை மனு கொடுக்கும்போதும் உங்களுக்கு எதிர்பார்ப்பு இருந்திருக்குமே? எல்லா தீர்ப்புகளும் அறிவுக்கு முற்றிலும் எதிராகத்தானே இருந்தன?

ஆறு முறை… இதுவரை ஆறு முறை அவன் தூக்குமேடைக்குச் சென்று திரும்பியுள்ளான். அவனுடைய மனு பரிசீலனைக்கு வரும் ஒவ்வொரு முறையும் நான் நம்பிக்கையோடு காத்திருப்பேன். முதன் முறையாக விசாரணை என்ற பெயரில் அவனை அழைத்துச் சென்ற அந்த நாள் முதல் இந்த நிமிடம் வரை நான் அவனுடைய விடுதலைக்காக போராடி வருகிறேன். என்னைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு தீர்ப்பும் எனக்கான மரண தண்டனைதான்.

இதோ இந்த நிமிடம்வரை நான் செத்துச் செத்துப் பிழைத்துக்கொண்டிருக்கிறேன். அறிவின் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போதெல்லாம் நான் பயங்கர மன உளைச்சலிலும், பதற்றத்திலும் தத்தளிப்பேன். ரிவ்யூ பெட்டிஷன் விசாரணைக்கு வரும் நாளில், எங்கள் வழக்கறிஞரின் தொலைபேசி அழைப்புக்காக ஆவலோடு காத்திருப்பேன். கடைசிவரை போன் வரவே இல்லை.

பொறுமையிழந்து நானே அவரை அழைத்தபோது, 'மனு தள்ளுபடி செய்யப்பட்ட'தாகச் சொன்னார். இதை எப்படி என்னிடம் தெரிவிப்பது என்று தயங்கித்தான் வாக்கறிஞர் கூட என்னை அழைக்காமல் இருந்திருக்கிறார். 'அடுத்த முறை பார்க்கலாம் என்று வக்கீல் சொல்லும்போதுதான் இந்த முறை நான் ஏமாற்றப்பட்டிருக்கிறேன்' என்பதே எனக்குத் தெரியும் (அழுகிறார்).

இப்படி எத்தனை முறை…? அந்த வேதனைகளையெல்லாம் என்னால சொல்லிப் புரியவைக்க முடியாதும்மா. சொன்னாலும் உங்களுக்குப் புரியாது. அனுப விச்சாதான் அந்த வலியும், வேதனையும் எவ்வளவு கொடூரமானது என்பது தெரியும்.

சமீபத்தில், வேலூர் மத்தியச் சிறையிலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், "செப்டம்பர் 9 ஆம் நாள், உங்கள் மகனைத் தூக்கிலிடப் போகிறோம். உடலை நீங்கள் வந்து பெற்றுக்கொள்ளுங்கள்'' என்று கடிதம் வந்தது. (பேச முடியாமல் அழுகிறார்)  "… உன்னைத் தூக்குல போடப் போறோம். உடலை யார் கிட்ட கொடுக்க வேண்டுமென்று'' அதிகாரிகள் அறிவிடம் கேட்டார்களாம். அவன்தான் "எங்க அம்மா கிட்ட கொடுத்துடுங்க'' என்று கையொப்பம் இட்டுள்ளான். (பேச முடியாமல் அழுகிறார்).

அழாதீங்கம்மா... அப்படியெல்லாம் ஒண்ணும் நடக்காது. ப்ளீஸ்... அழாதீங்க...

இல்லம்மா… 

எனக்கு இப்போ எதுலயும் நம்பிக்கை இல்லம்மா. இங்கு நீதியுமில்லை; நியாயமுமில்லை. யாருக்கும் மனசாட்சியும் இல்லை. 

நன்றி முகப்பு நூலில் பகிர்ந்த ராஜமாணிக்கம்.

11 comments:

  1. போலீஸ்ல விசாரணைக்கு கூப்பிடறாங்கன்னா அர்த்தம் அவங்க அந்த ஆளை அரெஸ்ட் பண்ணப்போறாங்க அப்படீங்கறதுதான். இது தெரியாம போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனா அம்போதான். நெறய சமயங்கள்ல அனுபவ வாயிலாக நான் தெரிஞ்சுகிட்டது இது.

    ReplyDelete
  2. சொந்த அனுபவம் ஒண்ணும் இல்லீங்க. மத்தவங்களப் பார்த்து தெரிஞ்சுக்கிட்டதுதானுங்க. நீங்க தப்பா கணக்குப் போட்டுடாதீங்க.

    ReplyDelete
  3. இதில் அற்புதம் அம்மாள், பேரறிவாளன் மற்றும் சம்மந்தப்பட்ட விசயங்களை விட இன மொழி உணர்வு என்று ஜல்லியடித்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளின் முகத்தினை தோல் உரித்துக் காட்டவே இந்த பதிவு. அதற்குப் பிறகு தான நாம் யோசிக்க வேண்டிய விசயங்கள் நீங்கள் சொல்லியுள்ள எதார்த்த உண்மைகள். இதற்குப் பின்னால் இன்னும் நிறைய விசயங்கள் உண்டு. நண்பர்கள் பதில் பார்த்து பகிர்ந்து கொள்கின்றேன்.

    ReplyDelete
  4. இதுல என்ன தப்பா கணக்கு போட வேண்டியிருக்கு அய்யா. இன்றைக்கு தேதியில நீங்க இது போன்ற அனுபவத்தினை பெறவில்லை என்றால் அநியாயத்திற்கு நீங்க நல்ல மனிதராக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். சரிதானே?

    ReplyDelete
  5. சாயம் வெளுக்க வைக்கும் நேர் காணல்...குறிப்பாய் அரசியல்வாதிகளின் நிலை வெளிப்படுகிறது இங்கே...

    நல்லதொரு படைப்பு...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. ஜோதிஜி,

    அரசியல் தலைவனை நம்பும் அப்பாவி தொண்டன் கதி இதான், அதனால் தான் இப்போதெல்லாம் பெரும்பாலும் தொண்டர்கள் , பொங்கிக்கொண்டு செல்வதில்லை, தலைவன்,கைதானாலும்,படை திறண்டு வா என்று கூப்பீட்டலும் செல்வதில்லை, செலவு செய்து திறட்டிக்கொண்டு போனால் தான் உண்டு.

    ஆனாலும் வறுமைக்கு வாக்கப்பட்ட மக்கள் இப்படி செய்வதால் இன்னும் செல்வாக்கு இருப்பதாக தலைவர்கள் ஆட்டம் போடுகிறார்கள்.

    வீரமணியின் வண்டவாளங்கள் எல்லாம் எனக்கு முன்னரெ தெரியும் , அவரை அனுகிப்பார்த்தால் அத்தனையும் சொத்தை.

    20 ஆண்டுகாலமாக சிறையில் இருக்கிறார்கள் அப்போதெல்லாம் இந்த வைகோ,சீமான்கள் என்ன கிழித்தார்கள், ஏன் இது வரை பரோல் ,ஜாமீன் பெற இயலவில்லை. தடாவுக்கு1 ஆண்டு தான் பின்னர் ஜாமீன் பெறலாம். மேலும் தடா சட்டமே பின்னர் காலாவதியாகிவிட்டது. அப்போதெல்லாம் ராம்ஜெட்மலானி இல்லையா? இப்போது வைகோ ,சீமான் செய்வதெல்லாம் விளம்பரத்திற்காகவே.ஆனால் அதையும் விட்டால் அவர்களுக்கு நாதி இல்லையே?

    மற்ற இருவரை விட பேரறிவாளன் கதை மிகவும் துயரமானது.

    ReplyDelete
  7. இங்கு நீதியுமில்லை; நியாயமுமில்லை. பெரியார் சேர்த்த சொத்தை அனுபவிப்பவர்களுக்கு மனசாட்சியுமில்லை.உண்மைதான்.

    ReplyDelete
  8. ஈழப்போர் எத்தனைபேரைக் கஸ்டப்படுத்துகிறது.ஆனால் முடிவேதுமில்ல !

    ReplyDelete
  9. நல்ல பகிர்வு. இந்த அம்மாளின் வலி எனக்குத் தெரியும்... 20 ஆண்டுகளைத் தொலைத்த இந்த இளைஞனை நினைத்தால் என் வயிரே எரிகிறதே, பெற்ற வயிறு எப்படி இருக்கும்?

    ReplyDelete
  10. அற்புதத்தம்மாள் வாழ்கை ரொம்ம பாவம்
    இருக்கட்டும்

    எனது பிளாக்கரில்
    பச்சோந்தி கி, வீரமணியைப்பற்றி வெகுவிரைவில் பதிவு போடுகிறேன்


    http://kenakkirukkan.blogspot.com/

    ReplyDelete
  11. எனக்கு உதவி செய்யும் தலைமை எலி டோடோருவின் நல்ல பணி குறித்த எனது சான்று இது .... நான் வட கரோலினா அமெரிக்காவைச் சேர்ந்த ஆன் எர்னிஸ். இந்த எழுத்துப்பிழை உதவியுடன், கடந்த 3 ஆண்டுகளாக என்னை விட்டு வெளியேறிய என் கணவர் திரும்பி வந்தார், இறுதியில் இந்த நபரை ஒரு வலைப்பதிவு தளத்தில் சந்தித்தேன், ஒருவரால் ஒருவர் உதவிக்காக வாடிக்கையாளர் இடுகையிட்டார், நான் அவருக்கு எல்லாவற்றையும் விளக்கினேன், அவர் என்னிடம் ஒரு பற்றி கூறினார் அவர் அறிந்த ஸ்பெல் கேஸ்டர் மற்றும் என் பிரச்சினைகளை அவரிடம் சொல்ல ஸ்பெல் கேஸ்டருக்கு எழுத அவர் தனது வாட்ஸ்அப்பை எனக்குக் கொடுத்தார். வெறும் 2 வாரங்களில், என் கணவர் என்னிடம் திரும்பி வந்தார். இந்த உண்மையுள்ள மற்றும் நேர்மையான எழுத்துப்பிழைக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன், ஐயா நீங்கள் என்னிடம் சொன்னதெல்லாம் நிறைவேறி வந்து நன்றி ஐயா. தயவுசெய்து நான் அவர்களின் பிரச்சினைக்கு எந்தவொரு தீர்வையும் எதிர்பார்க்கும் அனைவருக்கும் சொல்ல விரும்புகிறேன், தயவுசெய்து இந்த எழுத்துப்பிழை ஆலோசகரை அணுகவும், அவர் உண்மையானவர், அவர் சக்திவாய்ந்தவர் மற்றும் எழுத்துப்பிழை கேஸ்டர் என்ன சொன்னாலும் என்ன நடக்கும், ஏனென்றால் எழுத்துப்பிழை என்ன சொன்னது எல்லாம் வந்தது கடந்து செல்ல. தயவுசெய்து அவரை தொடர்பு கொள்ளலாம்: whatsapp +2349015088017

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.