அஸ்திவாரம்

Tuesday, November 22, 2011

விழா தரும் போதை


விழாக்கள் என்பது உறவுகளை ஒரே இடத்தில் கூடுவதற்காகத் தான் இருந்து வருகின்றது. அது ஊர் சம்மந்தப்பட்ட விழாவாக இருந்தாலும் சரி அல்லது தனிப்பட்ட குடும்ப விழாக்களாக இருந்தாலும் தமிழர்களின் வாழ்வில் மட்டுமல்ல மொத்த சமூகத்திலும் இப்படித்தான் இருந்தது.  ஆனால் இப்போது விழாக்களின் முகம் முற்றிலும் மாறிவிட்டது. 

ஊரில் திருவிழா என்றால் அது உற்சாகம் பெருகெடுத்து ஓடும் நாள். 


ஆன்மீகம் சம்மந்தப்பட்டதாக மட்டுமல்ல அத்தனை உறவுகளையும் இதன் காரணமாக ஒன்று சேர்க்க உதவியது. தமிழர்களின் கலை, பண்பாட்டு, கலாச்சாரத்தையும் வளர்க்க உதவியது. தெருக்கூத்து, நாடகம் என்று தொடங்கி அடித்தட்டு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்க உதவியது.  

அய்யனார், மாடசாமியை நட்டு வைத்து கல் வடிவத்தில் வணங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு கற்சிலை அறிமுகமாக அத்தனையும் மாறத் தொடங்கியது. இதில் தெய்வங்கள் உள்ளே நுழைந்து மனிதர்களின் எண்ணங்களை மாற்றியது கற்சிலையில் புகுத்தபட்ட சாஸ்திர சம்பிரதாய ரூபங்கள் மனிதர்கள் அணைவரும் சமம் என்பதையும் மாற்றியது. 

கோவில் கட்ட உதவியர்கள் அத்தனை பேர்களும் உழைக்க பிறந்தவர்கள் என்று மாற்றம் பெற வீதியில் நின்று வணங்கி அவர்களின் அடிப்படை கலாச்சாரத்தையே வேறறுத்து வெட்ட வெளியில் நிறுத்தியது.  மன்னர்கள் காலம் முதல் இன்று ஆட்சி செய்யும் மடையர்கள் காலம் வரைக்கும் விழாக்கள் என்பது தனிமனித துதிகளைத்தான் முன்னிறுத்துகிறது.  சமூகம் நம்மை புறக்கணித்து விடும் என்று விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மனிதர்களும் ஆட்டுமந்தையாக இதன் வழியே வந்து கொண்டேயிருகிறார்கள்.

அமைதியை உருவாக்க வேண்டிய தத்துவங்களில் அவரவர்களின் சுயநலங்கள் கலந்து போக இன்றைய சூழ்நிலையில் மொத்தமாக மாறி வன்முறைகளை வளர்க்க உதவும் ஒரு களமாக மாறியுள்ளது. மதம் என்ற சொல்லில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லாத காரணத்தால் அதுவே பிரிந்து பிரிந்து இன்று ஜாதியாக மாறியுள்ளது.  அதுவும் இன்றும் பிரிந்து கொண்டே செல்கின்றது.  ஒவ்வொரு நிலையிலும் யாரோ ஒருவர் இதை தெளிவாக புரிந்து கொண்டு குறிப்பிட்ட மக்களை தங்கள் பிடியில் வைத்துக் கொண்டு மெதுமெதுவாக இறுக்கிக் கொண்டேயிருக்கிறார்கள்.  புரிந்து கொள்ள முடியாமலே அவர்களை பின்பற்றி சென்று கொண்டேயிருக்கிறார்கள். 

எந்த நாளும் கொண்டாடப்பட வேண்டிய நாளாக இருக்க வேண்டியதே என்பதை உணர்ந்து கொள்ள விருப்பமில்லாமல் நாம் குறிப்பிட்ட நாளுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறோம்.  அடுத்த மாதம் மகளுக்கு பிறந்த நாள், அடுத்த வாரம் மனைவிக்கு பிறந்த நாள் என்று ஒவ்வொரு நாளுக்கும் தவமாய் தவமிருக்கின்றோம். குறிப்பிட்ட நாளில் அதீத அன்பும் தொடர்ந்து வரும் நாட்களில் புரிதல் இல்லாத வாழ்க்கையுமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நமது நாகரீகம் தான் நல்ல நாகரிகம்?

பிறந்த நாள், இறந்த நாள், நினைவு நாள் என்று போய்க் கொண்டிருந்த இந்த கொண்டாட்டங்கள் இன்று அப்பா தினம், அம்மா தினம் என்று மாறி ஒவ்வொன்றுக்கும் ப்ளக்ஸ் போர்டு கலாச்சாரமாக மாறியுள்ளது.  இன்று எதற்கெடுத்தாலும் விளம்பரம் தேவை என்பதாக கருதிக் கொண்டு நாம் நம்மை அவசரமாக மாற்றிக் கொள்ள ரொம்பவே அவசரப்படுகின்றோம். அடுத்த சந்துக்கு அரசியல்வாதிகள் வருவதைக்கூட அலங்காரமாக காட்டிக் கொள்ள விரும்புவதால் தினந்தோறும் கொண்டாட்டங்களின் காலமாக உருமாறியுள்ளது. நாமும் நம் அளவுக்கு அவர்களுடன் போட்டி போடவே விரும்புகின்றோம்.

ஆனால் தங்களுடைய பிறந்த நாளை அரசியல்வாதிகள் வசூலிக்கும் நாளாக மாற்றவிடுவதில் வல்லவர்கள். ஆனால் எந்த அதிகாரி வர்க்கமும் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை.  அதற்குப் பதிலாக குழந்தைகளின் பிறந்த நாள், புதுமனை புகுவிழா என்று தொடங்கி ஒவ்வொன்றுக்கு ஒரு காரணத்தைத் தேடி கொண்டாடும் மனநிலைக்கு மாறியள்ளார்கள். 

சமீபத்தில் ஒரு மாசுகட்டுப்பாட்டுத் துறையில் பணியாற்றும் மூத்த அதிகாரி வேறெரு வகையில் ஒரு சிறப்பான நாளை கொண்டாடினார். அவரின் மூத்த மகளின் வளைகாப்பு நிகழ்ச்சியை சென்னையில் ஏற்பாடு செய்து இருந்தார்.  இதன் மூலம் வசூலித்த தொகை உத்தேசமாக திருப்பூர் சாயப்பட்டறை சங்கங்கள் மூலம் வசூலித்த தொகை மட்டும் 13.25 லட்சம். 

இது தவிர மற்ற தங்க காசு சமாச்சாரங்கள் தனி. மொத்தத்தில் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காரணம் உண்டு.  எந்த காரணமாக இருந்தாலும் அத்தனைக்குள்ளும் பணம் உண்டு. உங்கள் தகுதியை நிரூபிக்க இது போன்ற விழாக்கள் உதவும்.  நீங்கள் செல்லும் இடங்கள் உங்கள் சமூக அந்தஸ்த்தை மற்றவருக்கு புரியவைக்கும்.  சமூகத்தில் உங்கள் பழக்கவழக்கங்கள் எந்த அளவுக்கு உள்ளது என்பதை உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டியவர்களுக்கும் உணர்த்தும்.

அப்பாவுக்கு அறுபதாம் கல்யாணத்துக்கு முந்திய வருடத்தில் பிள்ளையார் பட்டியில் ஒரு விழாவை ஏற்பாடு செய்திருந்தார்கள். அறுபதாம் வயது திருமண நிகழ்ச்சியை இராமேஸ்வரத்தில் நடத்தினார்கள். அநேகம் பேர்கள் ஆசிர்வாதம் வாங்கினார்கள். அம்மா அன்று கூட அமைதியாகத்தான் இருந்தார். காரணம் நான் பார்த்தவரைக்கும் அம்மாவின் அந்த அளவுக்கு அதிகமான அமைதியே அப்பாவின் முரட்டுத்தனத்தை ஈடு செய்வதாக இருந்தது. அடங்கியே வாழ்ந்தவருக்கு சமூகம் சூட்டியிருந்த பெயர் சௌந்தரம் அமைதியானவள் என்பதே. ஏறக்குறைய மூளை ஒரு குறிப்பிட்ட விசயத்திற்கு பழகி விட்டால் இது இறப்பது வரைக்கும் மாறாது போல. 

இப்படியே பழகிப்போனவரின் வாழ்க்கை இன்று வரைக்கும் தைரியத்தின் அருகே கூட செல்லமுடியாமல் ரொம்ப வேகப்படாதடா என்பதே அவர் பேசும் தராக மந்திரமாக உள்ளது. 

பலமுறை யோசித்துள்ளேன். 

ஒவ்வொரு வருடத்தில் வரும் அவரின் திருமண நாளும் அம்மாவுக்கு தெரியுமா? அன்றாவது அவர்கள் இருவருக்கும் உண்டான புரிதலை மேம்படுத்துவார்களா? என்று யோசிப்பதோடு நிறுத்திக் கொள்வதுண்டு. 

நகர்புற வாழ்க்கையில் தான் இந்த கொண்டாட்டங்கள் பெரிதாக எண்ணப்படுகின்றதோ என்று நினைத்துக் கொளவ்துண்டு. ஒருவரின் பிறந்த நாள் முக்கியம்.  அதைவிட அவரின் வயதும் அதற்கேற்ற எண்ண வளர்ச்சியம் அதைவிட முக்கியம்.  ஆனால் தற்போது இவை முக்கியமல்ல.  இந்த நாளை எப்படி எங்கே கொண்டாடுவது? என்பது தான் மிக முக்கியமாக இருக்கிறது.  கவலைக்கு ஒரு சரக்கு.  உற்சாகத்திற்கு மற்றொரு சரக்கு. 

மொத்தத்தில் நுகர்வு கலாச்சாரத்தில் மனிதனே ஒரு கடைச்சரக்கு தானே.

குழந்தைகளின் பிறந்த நாளைப் போல வளர்ந்தவர்கள் கொண்டாடப்பட வேண்டிய நாள் திருமண நாள்.  காரணம் இரு வேறு துருவமாக எங்கங்கோ பிறந்த வளர்ந்து, எண்ணங்களாலும் செயல்களாலும் மாற்றுக் கருத்துக் கொண்டு நாம் இனி இணைந்தே வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் சேரும் பந்தம் இந்த திருமணம்.  சமகாலத்தில் எந்த அளவுக்கு இதற்கு மதிப்பு இருக்கிறது என்பதை விட இந்த உறவுக்கு நாம் எப்படி மதிப்பளிக்கின்றோம் என்பதில் தான் நம்முடைய குழந்தைகளுக்கு நாம் முன்னுதாரணமாக இருக்கின்றோம். 

நம்மால் சிலவற்றை மாற்றிவிட முடியாது என்பது எத்தனை உண்மையோ நாம் பலவிசயங்களுக்காக நம்மை மாற்றிக் கொள்ள முடியும் என்பதும் உண்மைதானே. 

நுகர்வு கலாச்சாரத்தை நமது கலாச்சாரமாக நம்மை மாற்றிக் கொள்ளும் இப்போதுள்ள சூழ்நிலையில் நம்முடைய அடிப்படையான கலாச்சாரம் மெதுமெதுவாக செல்லறித்துக் கொண்டிருக்கிறது.  மகன் ஒரு பக்கம். மகள் வேறொரு பக்கம்.  விருப்பத்தை நிறைவேற்றாத கணவன்,. வரவேற்க விரும்பாத மனைவி. 

நான்கு முனை சுவர்களைப் போல யாருக்கு யார் உறவு? என்பதாக மாறியுள்ளது. 

அப்பா,கணவன் என்ற பாத்திரத்திற்குள் தேங்கிய தண்ணீராக கண்ணீருடன் பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். குடித்தே அழிப்பவனை அன்றாடம் சமாளித்து ஜெயித்தாலே இன்றைய சூழ்நிலையில் பல பெண்களுக்கு தினந்தோறும் திருவிழாவாகத்தான் இருக்கிறது. 


நினைத்து அடைந்தால் சமூக அங்கீகாரம்.  இல்லாவிட்டால் பிழைக்கத் தெரியாதவன் என்கிற மாயவலைக்குள் சிக்கி நமக்கு என்ன தேவை என்பது கூட தெரியாத அளவுக்கு மனரீதியான உளைச்சலுடன் பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

பரஸ்பரம் வாழ்த்துகளை கூட நம்மால் பரிமாறிக் கொள்ள முடியவில்லையோ என்று நினைத்துக் கொள்வதுண்டு.  நீண்ட நேரம் எவருடனும் பேச முடியவில்லை. அவசரமாய் ஓடிக் கொண்டேயிருக்கின்றோம். பல சமயம் பேசுவதற்கு ஒன்றுமே இல்லாமல் போய்விடுகின்றது.  பேசினாலும் அர்த்தம் இல்லாதவைகள் தான் உரையாடலில் வந்து விழுகின்றது.  

தெளிந்த நீராக வெளியே தெரிந்தாலும் கசடுகளை மறைத்துக் கொண்டே வாழ பழகிக் கொண்டிருக்கின்றோம்.  

18 comments:

  1. "எந்த நாளும் கொண்டாடப்பட வேண்டிய நாளாக இருக்க வேண்டியதே என்பதை உணர்ந்து கொள்ள விருப்பமில்லாமல் நாம் குறிப்பிட்ட நாளுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறோம்"

    உழைப்பை நேசிக்க/விரும்ப கற்றுக் கொண்டால் எல்லா நாட்களும் மகிழ்ச்சிக்குரிய நாட்களே. உழைப்பை உதாசீனப்படுத்தும் போதுதான் நாம் மகிழ்ச்சியை இழக்கிறோம். இழந்த மகிழ்ச்சியை மீட்க விழா நாட்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம்.

    விழா முடியும் வரை மகிழ்ச்சி நீடிக்கும். விழா முடிந்தால் மீண்டும் மற்றொரு விழா தேவைப்படும்.விழா போதைக்கும் சாராய போதைக்கும் வேறுபாடு கிடையாது.

    விழாக்கள் தேவைதான். அவை சமூக இழிவுகளுக்கு முடிவு கட்ட அழைப்பு விடுக்கும் விழாக்களாக மட்டுமே இருக்க வேண்டும்.

    பல நாட்களாக என் எண்ணங்களில் ஓடிக் கொண்டிருந்த பலவற்றை எழுதியுள்ளீர்கள்.

    வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. ஜோதிஜி,

    ரொம்ப தத்துவார்த்தமாக எழுதி இருக்கிங்க, விழாக்கள் ஸ்டேட்டஸ் சிம்பலாக இருப்பது உண்மையே!

    ReplyDelete
  3. அருமை!
    - நட்புடன்
    மலைநாடான்

    ReplyDelete
  4. பரஸ்பரம் வாழ்த்துகளை கூட நம்மால் பரிமாறிக் கொள்ள முடியவில்லையோ என்று நினைத்துக் கொள்வதுண்டு. நீண்ட நேரம் எவருடனும் பேச முடியவில்லை. அவசரமாய் ஓடிக் கொண்டேயிருக்கின்றோம். பல சமயம் பேசுவதற்கு ஒன்றுமே இல்லாமல் போய்விடுகின்றது. பேசினாலும் அர்த்தம் இல்லாதவைகள் தான் உரையாடலில் வந்து விழுகின்றது.//

    என்னுள்ளும் இதே ஆதங்கம் தான்...

    ReplyDelete
  5. இடுகை நன்று! பாராட்டு விழாவுக்கு இசைவு தெரிவிக்க வேண்டுகிறோம்.

    ReplyDelete
  6. மாறிவரும் திருவிழாக்களின் முகங்களை
    மிக அழகாக பதிவு செய்துள்ளீர்கள்
    நாமும் அதற்கேற்றார்போல
    மாறித்தான் ஆகவேண்டியிருக்கிறது
    மனமில்லை என்றாலும் கூட
    மனம் கவர்ந்த அழகான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. என்மனதிலும் உள்ள ஏங்கங்களை அழகாக விளங்கியுள்ளீர்கள்.
    வாழக் வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  8. //பரஸ்பரம் வாழ்த்துகளை கூட நம்மால் பரிமாறிக் கொள்ள முடியவில்லையோ என்று நினைத்துக் கொள்வதுண்டு. நீண்ட நேரம் எவருடனும் பேச முடியவில்லை. அவசரமாய் ஓடிக் கொண்டேயிருக்கின்றோம். பல சமயம் பேசுவதற்கு ஒன்றுமே இல்லாமல் போய்விடுகின்றது. பேசினாலும் அர்த்தம் இல்லாதவைகள் தான் உரையாடலில் வந்து விழுகின்றது. //

    Very true.

    :(((

    ReplyDelete
  9. அன்பின் ஜோதிஜி நடைமுறை உண்மைகள் நாகரீகம் வளர்கிறது.

    ReplyDelete
  10. மலைநாடன் முதன் விமர்சனத்திற்கு நன்றி.

    ஊரான், வேலன்

    உங்கள் மனதிற்குள் இருக்கும் எண்ணத்தை எழுத்தில் படித்த மகிழ்ச்சியை புரிந்து கொண்டேன்.

    மோகன் குமார், தவறு வருக

    தவறு சற்று மாற்றிப் பார்க்கலாம்

    இயல்புக்கு மீறிய நடைமுறை வாழ்க்கை உண்மையில்லாத நாகரிகத்தை வளர்க்கிறது. சரியா?

    வருக ரமணி.

    பழமைபேசி நாங்க ரெடி? நீங்க ரெடியா?

    நன்றி வவ்வால்.

    ReplyDelete
  11. சரியா சொன்னீங்க அன்பின் ஜோதிஜி ..!!

    ReplyDelete
  12. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. ஜீ,.. ஒரு மெயில் அனுப்பியுள்ளேன் பார்த்து சொல்லுங்க..

    அப்புரம் ஒரு புது முயற்சி..

    http://mydreamonhome.blogspot.com

    இதையும் பாருங்க...

    ReplyDelete
  14. பிறந்த நாளும் தெரியாது..மண நாளும் தெரியாதவஙக் தான் அதிகமுஙங்க..அவகளுக்கு நோன்பி (பண்டிகை) தெரியும்.

    ReplyDelete
  15. The Mullai Periyar DAM Problem Hidden Truths & Solutions
    http://vimeo.com/18283950

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.