அஸ்திவாரம்

Monday, September 12, 2011

தீண்டத்தகாதவர்கள்--மேட் இன் இந்தியா


மேலைநாடுகளில் இருந்த அடிமை முறைகளுக்கும், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இருந்த அடிமை தனத்திற்கும் முக்கியமான வேறுபாடு ஒன்று உண்டு.  ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட கருப்பின மக்களை வெள்ளையர்கள் உழைப்பிற்காக பயன்படுத்திக் கொண்டனர். 

தங்களின் வேலைக்காக அவர்களை கொடூரமாக நடத்தினர். ஆனால் அவர்களை தீண்டத்தகாதவர்களாக நடத்தவில்லை.  ஆனால் தமிழகத்தில் இருந்த அடிமைகள் இந்த தீண்டா அடிமையாக காலம் முழுக்க இருந்தனர்.  உழைப்பையும் உறிஞ்சிக் கொண்டு கேவலமாகவே நடத்தினார்கள்.


அவர்கள் பார்த்தால், பழகினால், தொட்டால் தீட்டு என்பதாக குறிப்பிட்ட இனங்களையே ஒதுக்கி வைத்திருந்ததும் இங்கே தான் இருந்தது.

தமிழர்களின் தொன்மை வரலாற்றை நமக்கு காட்டும் குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை என்பதாகட்டும் பின்னால் வந்த சங்க காலமாக இருந்தாலும் நாம் இவற்றின் மூலம் உண்ரந்து கொள்வது மேற்கித்திய நாடுகளைப் போல இங்கே எந்த தொழில் வளமும் மிகப் பெரிய மாற்றங்களை உருவாக்கவில்லை.  அதற்கான எந்த ஏற்பாடுகளும் இங்கே இல்லை. 

ஏதென்ஸ் நகரில் இருந்த குடிமக்களின் எண்ணிக்கை நாற்பதாயிரம் பேர்கள்.  ஆனால் இவர்களிடம் இருந்த அடிமைகளின் எண்ணிக்கை எண்பதாயிரம் பேர்கள். ரோம், கிரேக்க நாடுகளைப் போல தமிழ்நாட்டில் அடிமைகளாக வாழ்ந்தவர்கள் எந்த தொழிற்சாலைகளிலும் பணிபுரியவில்லை.  விவசாயம் சார்ந்த பணிகளையே பார்த்தனர். 

மேலும் சங்க கால பாடல்களில் நாம் காணும் ஏற்றுமதி பொருட்களான மிளகு, அகில், சந்தனம், முத்து, பவளம் போன்றவைகள் சேகரிக்கப்பட்ட பொருட்களே அன்றி உருவாக்கப்பட்ட பொருட்கள் அல்ல.

இதன் காரணமாகவே அடிமைகளாக இருந்தவர்கள் கோவில்களில், வீடுகளில், மற்றும் விவசாய பண்னை ஆட்களாக இருந்தனர். முதல் ஒன்பது நூற்றாண்டுகளில் நிலவிய அடிமைத்தனத்தை சோழர்களின் ஆட்சி காலத்தில் கிடைக்கப் பெற்ற கல்வெட்டுகளில் மூலம் நாம் அதிகம் உணர்ந்து கொள்ள முடிகின்றது. இதே காலகட்டத்தில் நிலவுடைமை வளர்ச்சியடைந்து அடிமைகளின் உழைப்பு அதிக அளவு உறிஞ்சப்பட்டு இருக்கிறது. 

இதே காலகட்டத்தில் பிரமாணர்களும், வேளாளர்களின் வாழ்க்கை வளர்ச்சியடைந்து நிலத்தை வைத்து ஆதிக்கம் செலுத்தும் அமைப்பும் உருவானது.   இதுவே தான் பிராமணர், பிராமண அல்லாதோர் என்று பிரிவாக பிரிந்தது. 

தூய்மை என்ற சொல்லும் தீட்டு என்பதும் உருவாகி சமூகத்தை பிளவு படுத்தியிருந்து. இதன் மூலமாகத்தான் தமிழகத்தில் பறையர்,பள்ளர், சக்கிலியர் போன்ற குறிப்பிட்ட இனம் சார்ந்த மக்கள் தாங்கள் மட்டுமல்லாது தங்களின் வாரிசுகளையும் இந்த அடிமைதனத்திற்குள் வைத்திருக்க வேண்டியதாகி விட்டது.. ஒருவன் தீண்டாத் தகாத ஜாதியில் பிறந்தவனாக இருந்தால் அவன் மட்டுமல்ல அவன் வாரிசுகளும் இதே அடிமைத்தனத்தில் தான் இருந்தாக வேண்டும்.

தீண்டத்தகாதவர்கள் அனுபவிக்க வேண்டிய அத்தனை துன்பங்களையும் வாரிசுகளும் அனுபவித்தே ஆக வேண்டும். இதில் எந்த மாற்றமும் இருப்பதில்லை. இதிலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது ஒன்று உண்டு. 

எந்த அடிமைகளும் குறிப்பிட்ட தொழில் சார்ந்த நுணுக்கங்களை கற்றுக் கொள்ள முடியாதபடி இறுக்கமான வரையறைக்குள் வைத்திருந்த காரணத்தால் கடைசி வரைக்கும் வெறும் உழைப்பை கொடுக்கும் உயிருள்ள எந்திரமாகவே வாழ முடிந்துள்ளது.

மேற்கத்திய நாடுகளில் இருந்த அடிமைகள் என்பவர்கள் சொத்துக்கு சமமானவர்கள்.  இதற்கென்று சிறப்பு சட்டங்கள் கூட இருந்தது.  ரோமபுரியில் உள்ள அடிமைகள் சதுப்புநிலங்களிலோ, தொற்று நோய் பரவக்கூடிய இடங்களிலோ பணிபுரிய வைக்கக்கூடாது என்று உடைமையாளர்களுக்கு அறிவுரை கூறப்பட்டிருந்தது. 

ஆனால் தீண்டாமை என்ற வடிவில் வேலை வாங்கிய தமிழகத்தில் இது போன்ற எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதைவிட மகா கேவலமாகத்தான் நடத்தப்பட்டனர்.

தமிழக மன்னர்களின் ஆட்சியில் ஒவ்வொரு செயல்பாடுகளுக்குப் பின்னாலும் சமயம் சார்ந்த விசயங்களே முக்கிய இடத்தை பிடித்து இருந்தன. இதன் காரணமாகவே கடவுளின் அடிமைகள் என்பதாக மாற்றி எந்த வகையிலும் எழுந்திருக்க முடியாத அளவில் வலைபின்னலுக்குள் இந்த அடிமை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப்பட்டு வந்து கொண்டிருந்தது.

கோவில்களில், கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலங்களில், கோவிலைச் சார்ந்த மடங்கள் இதனைத் தொடர்ந்து நிலங்களை அதிக அளவில் வைத்திருந்த நிலவுடைமையாளர்கள் என்று ஒவ்வொரு அடிமைகளுக்கும் உண்டான வேலையென்பது நிலத்தில் தொடங்கி அவன் உழைத்து ஓடாகி உயிர் பிரிந்து அந்த நிலத்திற்குள்ளே அடக்குவது வரைக்கும் வேறு எந்த தொழிலையையும் கற்றுக் கொள்ள வாய்ப்பில்லை.  இதன் காரணமாகவே அடிமைகள் அதிக அளவு தேவையில்லாமல் குறுகிய வட்டத்திற்குள்ளேயே இருக்கும்படி ஆனது. 

இவர்களைத் தான் பண்ணையடிமை என்றனர். 

ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு வந்து முறைப்படி சட்டமியற்றி இந்த அடிமைத்தனத்தை ஒழிக்கும் வரைக்கும் சகல இடங்களிலும் பரவியிருந்து.  ஆங்கிலேயர்கள் மூலம் ஒப்பந்தக்கூலி முறை அறிமுகமான போதிலும் ஜாதியின் பெயரால் அடிமைத்தனம் என்பது வெவ்வேறு வழியில் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. அதுவே தான இன்று பரமக்குடியில்  ஜாதிக் கலவரமாக தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது.  

21 comments:

  1. அருமை,
    இதுதான் விஷயம்.அவனை விட நான் உயர்ந்தவனாக கற்பிதம் செய்யப்பட்டு இருப்பதால் நான் உயர்ந்தவன்.இத்னை யோசிக்காத வரைக்கும் சாதியில் இருந்து விடுபட முடியாது.
    /ஜாதியின் பெயரால் அடிமைத்தனம் என்பது வெவ்வேறு வழியில் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது/
    சாதி பற்று போக போக அதிகரிக்கிறதே தவிர குறைந்த பாடில்லை.
    தொடருங்கள்.

    ReplyDelete
  2. இன்னும் இந்த பாழாபோன ஜாதி பேய் மனிதனை விட்டு அகலவே இல்லை...வேரூண்றிபோயுள்ளது...

    ReplyDelete
  3. தமிழ்நாட்டில் எப்போதுமே சாதி இல்லாமல் இல்லை. அது பார்ப்பன வெள்ளாளர் கையோங்கிய இந்துமத மறுமலர்ச்சிக் காலத்தில் அடிமைமுறை என்கிற அளவுக்கு வழக்கத்தில் இருந்தது. ஆங்கிலேயர்கள் வந்து அடிமைமுறை வழக்கத்தை ஒழித்தாலும் சாதிப் பாகுபாடு இருந்துகொண்டே இருக்கிறது என்கிற வரலாற்றுப் பார்வை எல்லாம் சரிதான். ஆனால் இதன் பின் விளைவாகப் பரமக்குடிக் கலவரத்தை முடிச்சுப் போடுவது, தென்னைமரத்தைப் பற்றி எழுதுவதற்கு மாட்டைப் பற்றி எழுதி, அது தென்னை மரத்தில் கட்டப் பட்டிருந்தது என்று முடிப்பது போலாகும்.

    தீண்டாமை என்றால், மறவர்களுக்கும் பறையர்கள்/ சக்கிலியர்களுக்கும் இடையில் கூடக் கலவரம் வரவேண்டும் அல்லவா? அல்லது நாய்க்கர், செட்டியார், நாடார், முதலியார், வன்னியர், கவுண்டர் சம்பந்தப் பட்டெல்லாம் கலவரம் வரவேண்டும் அல்லவா? இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில்தானே இருக்கிறார்கள்?

    'நாம் குற்றப் பரம்பரை அல்ல; வீரப் பரம்பரை' என்று ஓரினத்தையே உணர்ந்து எழச் செய்த ஒரு தலைவரை (பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்) வழிபடுகிறவர்களுக்கும், அதே தலைவருக்கு எதிராகச் சாட்சி சொல்லிக் கொலையுண்ட ஒருவரை (இமானுவேல் சேகரன்) தம் இனத்தின் தலைவராக முன்னிருத்துபவர்களுக்கும் இடையில் உண்டான கலவரம் என்று கூட இதைச் சொல்ல முடியாது. ஜெயலலிதா, தான் முழுக்க முழுக்க மறவர்கள் பக்கமாக்கும் என்று கூத்துக் காட்டவும், இடைக்காலத்தில் மு.க. அழகிரி பக்கம் சாய்ந்துவிட்ட தென்தமிழ்நாட்டு மறக்குலத்தை மீட்டு எடுக்கவும் அரங்கேற்றப் பட்ட கலவரம் இது.

    எச்சரிக்கை: முருகன், சாந்தன், பேரறிவாளனைத் தூக்குக்குக் கொடுக்கிற அளவுக்கு 'தேவர் குரு பூஜை'யைக் கலவரமாக்கி நம்மைத் திசை திருப்பி விடப் போகிறார்கள்.

    அரசியல் ஆட்டத்தைச் சாதிக் கலவரம் ஆக்காதீர்கள், அருள்கூர்ந்து.

    (தமிழ்நாட்டில்தான் சாதி; இந்தியாவில் எங்கும் இல்லை என்கிற கள்ளக்குரல் தொனிக்கிறதாகவும் தோன்றுகிறது உங்கள் கட்டுரையில்.)

    ReplyDelete
  4. தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்கு கொடுக்கப்படும் அரசு சலுகைகளைப் பலர் பயன்படுத்தி முன்னேறியுள்ளனர். ஆனால் அவர்கள் தங்கள் இன மக்களிடமிருந்து பிரிந்து விடுகின்றனர். நியாயமாக அவர்கள் முன்னேறாத தங்கள் இனத்தவருக்கு ஆதரவு கொடுத்து அவர்களையும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லவேண்டும்.

    ReplyDelete
  5. ராஜ சுந்தர் ராஜன்

    ஜெயலலிதா, தான் முழுக்க முழுக்க மறவர்கள் பக்கமாக்கும் என்று கூத்துக் காட்டவும், இடைக்காலத்தில் மு.க. அழகிரி பக்கம் சாய்ந்துவிட்ட தென்தமிழ்நாட்டு மறக்குலத்தை மீட்டு எடுக்கவும் அரங்கேற்றப் பட்ட கலவரம் இது...........


    வாய்ப்பிருந்தால் இதைப்பற்றி இங்கே சற்று விரிவாக எழுதுங்களேன். அணைவரும் தெரிந்து கொள்ளட்டும்.


    (தமிழ்நாட்டில்தான் சாதி; இந்தியாவில் எங்கும் இல்லை என்கிற கள்ளக்குரல் தொனிக்கிறதாகவும் தோன்றுகிறது உங்கள் கட்டுரையில்.)


    நீங்கள் சொல்வது சரிதான். இந்த கட்டுரையை எழுதி முடிந்ததும் இடையில் இந்தியாவில் என்றொரு சில வார்த்தைகள் வாசகங்களை சேர்த்து எழுதியிருந்ததை அழித்து விட்டேன். காரணம் அதற்குப்பின்னால் உள்ள தரவுகளை கோர்த்துக் கொண்டு சென்ற போது வலிமையுட்ன் இன்னும் பல தரவுகளை கொடுக்க வேண்டி இருக்கும். கட்டுரை மிக நீளமாக போய்விடக்கூட சூழ்நிலை. மேலும் எழுதுபவனுக்கு எதைப்பற்றி நன்றாக தெரிகின்றதோ அதைப்பற்றித் தான் எழுத முடியும்.

    இது மொத்த இந்தியாவிலும் இருந்த கேவலமான நிலை. பாகிஸ்தான் கலவரம் உருவான போது இதைப் பற்றி பல புத்தகங்களில் படித்துள்ளேன். அடிமைகள் என்பதை சுட்டிக்காட்டி எழுதும் போது இந்த சாதியின் மூலம் அடிமையாக்கப்பட்டவர்களை சுட்டிக்காட்டுவதே என் நோக்கம்.

    ReplyDelete
  6. கந்தசாமி அயயா

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. சென்ற வாரம் கிறிஸ்துதாஸ் ஐ.ஏ.எஸ் கொடுத்துள்ள பேட்டியை வைத்து தனியாக ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று நினைத்து இருந்தேன். நேரமின்மையால் எழுத முடியவில்லை.

    ReplyDelete
  7. அழகா சொல்லி இருக்கீங்க நன்றி நண்பா!

    ReplyDelete
  8. வரலாற்றுப் பார்வையோடு தற்கால நடப்பையும் ஒப்பிட்டு சற்று விரிவாக எழுதினால் மேலும் பயனளிக்கும். வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. மிக அருமையான - தேவையான - அறிந்துகொள்ளவேண்டிய செய்திகளை அழகாக பதிவிட்டு வருகிறீர்கள்.

    பல உண்மைகளை அறிந்துகொள்ள முடிகிறது.

    தொடருங்கள்.

    ReplyDelete
  10. மேற்கத்திய சாயல் உள்ள நாடுகளில் தற்போதைக்கு அடிமை முறை இல்லை. அவர்களை உடல் உழைப்பாளிகள் என்று அறிவித்து சமமாகத் தான் நடத்துகிறார்கள். உள்ளூரில் கக்கூஸ் கழுவாத இந்தியர்கள் வெளிநாட்டில் செய்யத் தயங்காததற்குக் காரணம் அங்கு உழைப்போ, தொழிலோ இழிவு செய்யப்படுவதில்லை.

    ReplyDelete
  11. ஆழமாக விஷயங்களை அலசிப் போகும் விதம் அழகு
    இன்றைய நிலைக்கு எது காரணம் என புரிந்து கொள்ள முடிகிறது
    மிகத் தேவையான அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய
    தரமான பதிவு.தொடர வாழ்த்துக்கள் த.ம 8

    ReplyDelete
  12. ஆற்று பாசனம் செய்யும் தஞ்சாவூர்,நெல்லை மாவட்டங்களில் ஜமீந்தார் முறை எப்படி ஆங்கில் ஆட்சியினையும் மீறி,அதன் பிறகு சுதந்திரம் அடைந்ததையும் மீறி இன்றளவும் சொத்து சேர்த்து வைத்துள்ளார்கள் என்பது நான் ஆச்சரிய படும் விஷயங்களில் ஒன்று.

    ReplyDelete
  13. ராஜசுந்தரராஜன் கூற்றுக்கள் மறுப்பதற்கில்லை.

    தமிழகத்தின் தென்மாவட்ட சாதிக்கலவரங்கள்:ஏன்? எதற்கு? எப்படி?

    http://www.4tamilmedia.com/index.php/special/news-review/566-paramakudijhon-pandiyan

    இந்தத் தொடரில் விபரம் காணலாம்

    ReplyDelete
  14. /ஜெயலலிதா, தான் முழுக்க முழுக்க மறவர்கள் பக்கமாக்கும் என்று கூத்துக் காட்டவும், இடைக்காலத்தில் மு.க. அழகிரி பக்கம் சாய்ந்துவிட்ட தென்தமிழ்நாட்டு மறக்குலத்தை மீட்டு எடுக்கவும் அரங்கேற்றப் பட்ட கலவரம் இது...........


    வாய்ப்பிருந்தால் இதைப்பற்றி இங்கே சற்று விரிவாக எழுதுங்களேன். அனைவரும் தெரிந்து கொள்ளட்டும்./

    இந்தப் பிரச்சனை குறித்த இன்னொரு பதிவில் பின்னூட்டமிட்டிருந்த ஒருவர், /இது பஞ்சாயத்துத் தேர்தலில் வாக்கு வாங்குவதற்காகத் தி.மு.க. அரங்கேற்றிய நாடகம்/ என்று எழுதியிருந்தார். இந்தப் பார்வை கூட எனக்கு உடன்பாடே. ஆனால் தீண்டாமையைக் காரணம் காட்டுவது உடன்பாடில்லை.

    கவிதை, கதைகளுக்குத் தவிர, பொதுவாக, நான் பின்னூட்டம் இடுவதில்லை. இந்தப் பரமக்குடித் துப்பாக்கிச் சூடு பற்றிப் பதிவு இட்ட பத்ரி சேஷாத்ரி, இதை தலித் Vs மறவர் இடையிலான தீண்டாமைப் பிரச்சனையாக்கி எழுதி இருந்தார். 'பார்ப்பனர்கள் அல்லவே பிற்படுத்தப்பட்டவர்கள்தாமே தாழ்த்தப்பட்டவர்களிடம் தீண்டாமை பாராட்டுகிறார்கள்' என்னும் இக் கருத்து, இதுபோலப் பிரச்சனைகள் எழும் போதெல்லாம், உயர்த்திக்கொண்ட சாதியரிடம் இருந்து தவறாமல் வெளிப்படும். அதனால் பத்ரிக்கு மறுப்புச் சொல்லிப் பின்னூட்டம் இடவேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியே உங்களுக்கு இட்ட பின்னூட்டமும்.

    கவனியுங்கள், இராமநாதபுரம் மாவட்டத்தில் மறவர் x பள்ளர், தூத்துக்குடி மாவட்டத்தில் நாடார் x பள்ளர் அல்லது நாடார் x பரவர் (மீனவர்) இப்படித்தான் கலவரம் வருகிறது. இச் சாதிகளின் குலத் தொழிலைப் பாருங்கள்: தீண்டாமை பாராட்டுவதற்கு அப்படி என்ன அசிங்கம் இருக்கிறது?

    எனவே, இது அவ்வப் பகுதிகளில் நிகரப் பெரும்பான்மை உள்ளவர்களின் பொறாமையால் (intolerance) மூளுகிற சண்டை.

    'தேவர் ஜெயந்தி' (பிறகு 'குருபூஜை' என்று பெயர்மாற்றப்பட்டு) பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கொண்டாடப்பட்டு வருகிறது. 'இமானுவேல் சேகரன் நினைவு தினம்' கடந்த நான்கு ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னெடுத்தவர்கள் அ.தி.மு.க.வைச் சார்ந்த/ விடுதலைக்குப் பிறகு ஜான் பாண்டியனால் ஊக்குவிக்கப்பட்ட பள்ளர்கள் என்று தெரிகிறது (என்னிடம் தரவுகள் இல்லை). இந்த முறை கூட்டம் கூடுவதற்கு முன்பே கலெக்டரும் காவல் துறையினரும் ஜான் பாண்டியனைத் தடுத்திருக்கலாம். இப்படி நிறைய ...லாம் போட விருப்பமில்லை. சட்டம் ஒழுங்கு என்று தற்புகழுகிற ஜெயலலிதாவுக்கே வெளிச்சம்.

    அ.தி.மு.க.வைச் சார்ந்த பள்ளர் தலைவர்களுக்கு மட்டும் இந்த ஆண்டு திருமண விழாக்களுக்குப் போகவேண்டிய கட்டாயம் வந்துவிட்டதும் உண்மை.

    அரசியலை அரசியலாகவும் சமூக அவலத்தை அப்படியாகவும் பார்ப்போம்.

    ReplyDelete
  15. பயனுள்ள பதிவு.
    வழக்கம் போல் உங்கள் பதிவில் பின்னூட்டங்கள் நிறைய விபரங்கள் வருகின்றன.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. தீண்டாமை என்பது ஆண்டாண்டு கால கொடுமை. இன்றைய கால கட்டத்தில் வெளிப்படையாக இதன் கோர தாண்டவங்கள் தெரிவதில்லையாயினும் ஆங்காங்கே மனிதத்திற்கெதிரான செயல்பாடுகள் தொடர்ந்தவண்ணமாகவே இருக்கின்றன என்பது வெள்ளிடை மலை. ஆழ்மனதில் நங்கூரமிட்டிருக்கின்ற சாதீய, இவர்களாய் ஏற்படுத்தியிருக்கிற ஏற்றத்தாழ்வு உணர்வுகள் அடியோடு தொலைந்தால்தான் ஒடுக்கப்பட்டோருக்கு விடிவுகாலம் பிறக்கும். இதற்கு அறிவை, ஞானத்தை, பகுத்தறிவை மேம்படுத்துகிற கல்வி மற்றும் தொடர் பயிற்சிகள் அவசியம் என்பது என் தாழ்மையான கருத்து.
    boscop.blogspot.com (பயணி)

    ReplyDelete
  17. சமூகத்தின் ஆதிமூல,(தற்போதைய) ”ஆணிவேர்” பிரச்சனைகளை பதிவும் பின்னூட்டங்களும் அலசியுள்ளது,தொடருங்கள்.

    ReplyDelete
  18. //தங்களின் வேலைக்காக அவர்களை கொடூரமாக நடத்தினர். ஆனால் அவர்களை தீண்டத்தகாதவர்களாக நடத்தவில்லை.//

    ஜோதிஜி நான் அப்படி நினைக்கவில்லை. சமீபத்தில் கூட ஒரு ஆங்கிலப்படத்தில் ஒரு கறுப்பின பெண் தன் மகளை தொட்டதற்காக ஒரு வெள்ளையினப் பெண் அடி பின்னி எடுத்தார். இது போல சம்பவங்கள் உலகில் நடந்து இருக்கின்றன. இதற்க்கு யாரும் விதிவிலக்கல்ல.

    அப்புறம் நீங்கள் கூறிய தீண்டத்தகாதவர்கள் பற்றிய சம்பவம் எங்கள் சமூகத்திலேயே (தற்போதும்) நடந்து கொண்டு இருக்கும் ஒன்று தான். கிராமத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் இது தெரியும். எங்கள் குடும்பத்திலேயே நடக்கிறது. இவை மாற பல காலம் எடுக்கலாம். முன்பு எங்கள் பண்ணையில் கூலி வேலை செய்தவர்கள் மகன்கள் தற்போது மேம்பட்ட நிலையில் உள்ளார்கள். நானே அவங்க அப்பாவை வா போ என்று பேசி பேசுகிறேன், இருக்கிறேன் ஆனால் மகன்களை வாங்க போங்க என்று தான் பேசுகிறேன். இதுவே தலைமுறை இடைவெளி மாற்றங்கள்.

    என்னுடைய அம்மா நிலையில் உள்ளவர்களுக்கு அவர்கள் கடைசி வரை இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் காரணம் அப்படியே வளர்ந்தவர்கள். என்னை போல உள்ளவர்கள் மதில் மேல் பூனையாக உள்ளார்கள். இந்த பக்கமும் முழுதாக வர முடியவில்லை அந்த பக்கமும் முழுதாக போக முடியவில்லை. என்னோட பையன் காலத்தில் இதில் ஒரு தெளிவான நிலை கிடைக்கும் அல்லது என் பேரன் காலத்தில்.

    இந்த நேரத்தில் இன்னொன்றையும் கூற விரும்புகிறேன். இதை என்னுடைய தளத்தில் எழுத நினைத்தது அதற்க்கு முன் இதில் கூறுகிறேன். எங்கள் ஊரில் தாழ்த்தப்பட்டவர்கள் அருகில் அமர மாட்டார்கள் (இது எங்கும் பொருந்தும்). பேருந்தில் கூட. நான் இதைபோல செய்தது இல்லை காரணம் அது அவர்களுக்கு எவ்வளவு கஷ்டமானது என்பதை உணர்ந்து இருக்கிறேன்.

    சிங்கப்பூரில் வயதானவர்கள் அதிக அளவில் ரேசிசம் பார்ப்பார்கள். ஒருமுறை பேருந்தில் நான் ஒரு சீனர் அருகில் அமர்ந்த போது அவர் வெறுப்புடன் தள்ளி உட்கார்ந்த போது.... நான் என்ன நினைத்து இருப்பேன் என்று யோசித்துக்கொள்ளுங்கள். பல்வேறு எண்ணங்கள் கலவையாய் தோன்றியது. அதில் ஒன்று நமக்கு வலிப்பது போலத்தானே அவர்களுக்கும் இருக்கும் என்று.

    தலைமுறை இடைவெளி மட்டுமே இந்த எண்ணத்தை குறைக்கும் (நிறுத்தாது) மற்றபடி இது பல தலைமுறைகளுக்கு இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

    இதை நான் வெளிப்படையாக கூறி விட்டேன்.. மற்றவர்கள் முற்போக்கு வாதியாக மட்டுமே தங்களை காட்டிக்கொண்டுள்ளார்கள் தாங்கள் செய்த செய்யும் தவறுகளை பற்றி வாய் திறப்பதில்லை.

    ReplyDelete
  19. கிரி

    என் நெஞ்சம் தொட்ட விமர்சனம். என் மனசாட்சி போல இருந்தது.

    மாறும். எல்லாமே ஒரு நாள் மாறும். நம்பிக்கை வைப்போம். இந்த நிமிடம் வரைக்கும் என் குழந்தைகளுக்கு ஜாதி என்ற வார்த்தை தெரியாது. ஆனால் இன்னும் எத்தனை நாளைக்கு என்று தெரியாது. பள்ளியில் நடக்கும் மற்ற நிகழ்ச்சிகள் மூலம் மூன்று மதங்கள் உள்ளது என்பதை புரிந்து வைத்துள்ளார்கள்.

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.