அஸ்திவாரம்

Friday, February 18, 2011

களம் இறங்கினால் கணக்குகள் மாற்றப்படும்

இந்த தோள் சீலை போராட்டமென்பது வெறுமனே நாடார் இன மக்களின் அடிப்படை வாழ்வியல் உரிமைக்கான முன்னேற்பாடுகளாக மட்டும் தெரியவில்லை.  இதன் மூலம் கண்களுக்கு தெரியாத பல வலைபின்னல்கள் உண்டு.  ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு உரிமையைக்கூட அனுமதிக்கக்கூடாது என்பதில் ஆதிக்க சாதியினர் எத்தனை கவனமாக இருந்தார்களோ அதே அளவிற்கு நாங்களும் சரிசமம் என்று தான் போராடத் தயாராய் இருந்த நாடார் இன மக்களை இங்கே நினைவு கூர்ந்தே ஆக வேண்டும்.

உரிமையை நிலைநாட்டுதல் என்பது வெறும் எழுத்து பேச்சு என்பதோடு மட்டும் இருந்து விட்டால் அதற்குப் பெயர் வாய்ச்சொல்லில் வீரரடி. .  இந்த இடத்தில் வேறொன்றையும் நாம் பார்க்கலாம். இந்த காலகட்டத்தில் வாழ்ந்த பெரும்பான்மையான நாடார் இன மக்களுக்கு முறைப்படியான கல்வியறிவு கூட இல்லை.  ஆனால் 'கலகம் பிறந்தால் தான் நியாயம் பிறக்கும்' என்பதில் உறுதியாக இருந்தனர். பின்னால் நாம் பார்க்கப் போகும் இந்த மக்களின் சமூக வாழ்க்கை என்பது பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். எவர் ஒருவருக்கு பொருள் சேர்க்க வேண்டும் என்றும் அதற்காக நாம் முறைப்படியான உழைப்பை கொடுத்தே ஆக வேண்டும் என்று தோன்றுகிறதோ அவரின் ஜாதி என்பது இரண்டாம் பட்சமாகத் தான் ஆகிவிடுகின்றது என்பதை இவர்களின் வரலாற்று காலடித் தடங்கள் நமக்கு உணர வைக்கின்றது. 


இன்று வரைக்கும் நாயர், நம்பூதிரிகளின் ஆச்சாரங்கள் அனைவரும் அறிந்ததே. இப்போது உள்ள கேரளா மாநிலங்களில் அதிகப்படியாக வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களின் வாழ்க்கையில் இன்று வரையிலும் கடைபிடிக்கும் தனிப்பட்ட கொள்கைகள் வித்யாசமானது.  இவர்களின் ஆதிக்கம் நிறைந்த பழைய திருவிதாங்கூர் பகுதியில் வாழ்ந்த நாடார்களின் வாழ்க்கை என்பது மிக அவலமாகத்தான் இருந்துள்ளது. ஆனால் இந்த அவல வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வர முக்கிய காரணமாக இருந்தது இந்த பகுதியில் ஊடுருவிய கிறிஸ்துவமே. மதமாற்றம் என்று எளிதாக சொல்லிவிட்டு நகர்ந்தாலும் இதுவே நாடார்களின் சமூக வாழ்வில் உருவாக்கிய மாற்றங்கள் எண்ணிலடங்காதது. அடிமைப்புத்தியும், முரட்டு சுபாவமும் கொண்ட நாடார் இன மக்களை அத்தனை எளிதாக மாற்றுவதும் அத்தனை சுலபமாய் இல்லை என்பதும் உண்மை தான். தாங்கள் வாழ்ந்து வந்த மூதாதையர்களின் வாழ்க்கையை விட்டு விட்டு வெளியே வர மனம் ஓப்பாமல் ஒவ்வொருவரும் தாங்கள் போட்டுக் கொண்ட கோட்டுக்குள் தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

கிறிஸ்துவம் உருவாக்கிய மாற்றத்தின் முக்கிய காரணிகளில் முதன்மையான விசயம் ஒன்று உண்டு.  ஒருவன் எந்த குலத்தில் பிறந்து இருந்தாலும் அவனின் மன ரீதியான அழுக்குகளை, தங்களது தாழ்வு மனப்பான்மையை விட்டு வெளியே வர தூண்டுதல்.  இதற்காகத்தான் தொடக்கம் முதல் பாடுபட்டனர்.  காரணம் மற்ற தாழ்த்தப்பட்ட மக்களைப் போலவே நாடார் இன மக்களை மேலாடை அணிவதற்க்கு திட்டவட்டமாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த விசயத்தில் இப்போதுள்ள உள் ஒதுக்கீடு போலவே அப்போது வேறொரு வகையில் புதிய தத்துவத்தை உருவாக்கினார்கள். நாடார்களுக்கென்று பருமனான இழை கொண்ட தனித் துண்டொன்று ஒதுக்கப்பட்டு இருந்தது.   நாடார் சமூகத்தைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் அம்மாதிரியான துண்டுகளை முழங்காலுக்குக் கீழ் வராதபடியும், இடுப்புக்கு மேலே போகாமலும் அணிய வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டனர்.  

இது போன்ற சமயங்களில் கிறிஸ்துவம் உருவாக்கிய மாறற்ங்களினால் ஒன்றன் பின் ஒன்றாக மாறத் தொடங்கினர்.   மதம் மாறிய நாடார்களுக்கு கிறிஸ்துவ ஆலயங்கள் மூலம் பல விசயங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டன.  வெளி இடங்களில் ஒரு மனிதன் எப்படி தன்னை காட்டிக் கொள்ள வேண்டும் என்ற பாடங்கள் உருவாக்கிய புரிந்துணர்வு ஆதிக்க சாதியினரின் பார்வையில் தீயாய் கொழுந்து விட்டு எறிய ஆரம்பித்தது.. கிறிஸ்துவ பள்ளிக்கூடங்கள் மூலம் கல்வி அறிவு பெற்றவர்கள் வெளி இடங்களில் தங்களை சிறப்பாக வெளிப்படுத்த தலைப்பட பல மக்களின் அடிப்படை வாழ்க்கையில் மாறுதல்கள் உருவாக பிரச்சனைகளும் ஒன்றன் பின் வரத் தொடங்கியது.

உலகில் வாழும் மற்ற கிறிஸ்துவ மக்களைப் போல இங்குள்ள கிறிஸ்துவ பெண்களும் தங்கள் மார்பகங்களை ஆடைகளால் மறைத்துக் கொள்ளலாம் என்ற சட்டம் 1812 ஆம் ஆண்டு திருவிதாங்கூரில் வாழ்ந்து வந்த கர்னல் மன்றோ வழங்கினார். இதற்கான சுற்றறிக்கை 1814 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.  ஆனால் இந்த சட்டத்தை அத்தனை சுலபமாக நிறைவேற்ற முடியவில்லை.  இதற்கும் மாற்று ஏற்பாடுகளை கிறிஸ்துவ மதகுருமார்களின் மனைவியர் செய்தனர்.  இப்போது தான் தொள தொள ரவிக்கை அறிமுகமானது. இந்த மாற்றங்கள் நாயர்களின் ஒட்டு மொத்த கிளர்ச்சியை உருவாக்க 1822 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு தனிப்பட்டவர்களின் வாழ்விலும் ஏராளமான துன்பங்களை கொண்டு வந்து சேர்த்தது.  சாலையில் செல்லும் போது, சந்தையில், மற்ற பொது இடங்களில் கூடும் போது குறிப்பாக மதம் மாறிய கிறிஸ்துவ பெண்மணிகளை நோக்கி கிண்டலும் கேலியுமாக தொடங்கிய கிளர்ச்சி பெண்மணிகளில் ரவிக்கையை கிழித்து எறியும் வரையும் தொடர்ந்தது. 1823 ஆம் ஆண்டு பத்பநாபபுரத்தில் புறச்சமயத்தைச் சார்ந்த நாடார்கள் என்ற பெயரின் மீது கள்ளுக்கான வரிப்பாக்கி செலுத்தாதயும் நாடார் பெண்மணிகள் மேலாடைகள் அணிந்ததற்குரிய வரி செலுத்தாதையும் எதிர்த்துப் புகார்கள் செய்யப்பட்டன.

1828 ஆம் ஆண்டு கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர்கள் மேல் முறைப்படியான வன்முறைகள் உருவாகத் தொடங்கியது. கிறிஸ்துவ ஆலயங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.  உருவாகியிருந்த கல்வி கூடங்களை தீயிடத் தொடங்கினர். பள்ளிகளின் உள்ளே நுழைந்து புத்தகங்களை கிழித்து எறிந்தனர். மார்புச் சேலை அணிந்து வந்தவர்களை குறி வைத்து தாக்கத் தொடங்கினர். பொதுவிடங்களில் பெண்கள் அவமானப்படுத்தப்பட்டனர். அச்சுறுத்தல்களும் அவமானங்களும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையின் அன்றாட நிகழ்ச்சியாக மாறத் தொடங்கியது.  இந்த இடத்தில் மற்றொரு விசயத்தையும் பார்க்க வேண்டும்.  இது வெறுமனே மார்ப்புச் சேலை அணிவது சம்மந்தப்பட்ட விசயங்கள் மட்டுமல்ல.  இதற்குப் பின்னால் பொருளாதார விசயங்களும் உண்டு.  இது தான் இந்த கலவரத்தை உருவாக்க தொடர்ச்சியாக நடத்திச் செல்லவும் காரணமாக இருந்தது.  கிறிஸ்துவம் உருவாக்கிய மாற்றத்தினால் ஒவ்வொருவரும் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். உரிமைகளைப் பற்றி பேச் தொடங்கினர். சம்பளமின்றி வேலை செய்ய மறுத்தனர். வரி கட்ட மாட்டோம் என்றனர். கிறிஸ்துவம் துணை கொண்டு தங்களின் சமூக மதிப்புகளை உயர்த்திக் கொள்கின்றனர் என்ற ஆதிக்க சாதியினரின் கோபமே இது போன்ற அச்சுறுத்தல்கள் உருவாக காரணமாக இருந்தது.

1829 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 அன்று திருவிதாங்கூர் அரசாங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

நாடார்களுக்கும் நாயர்களுக்கும் சில குழப்பங்கள் உருவாகியுள்ளது.  நாடார் பெண்மணிகள் சட்டத்திற்குப் புறம்பாகவும் பழங்கால பழக்க வழக்கங்களுக்கு மாறாகவும் மேலாடை அணிந்ததாலும் நாடார்கள் ஏனைய நபர்களைப் போன்று பொதுவாக அரசாங்கத்திற்குத் தேவையான தொண்டு செய்ய மறுத்ததாலும் உருவாகியது. 

எனவே கீழ்க்கண்ட பேரறிக்கையை வெளியிடுகின்றோம்.

முதலாவதாக நாடார் பெண்மணிகள் மேலாடை அணிவது நியாயமற்றதாகும். இது தடை செய்யப்படுகின்றது. வருங்காலத்தில் மேற் குறிப்பிட்டப்படி நாடார் பெண்மணிகள் இடுப்பின் மேல் பகுதியை மேல் துண்டால் மறைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஏற்கனவே 1814 ஆம் ஆண்டு நாடார்களின் உரிமைகள் என்று வெளிவந்த அறிக்கைக்கும் இப்போது வந்துள்ள முரணனான அறிக்கைக்கும் உள்ள வேறுபாடுகளைப் பார்த்த நாடார்கள் ஒன்று சேரத் தொடங்கினர். இதில் மற்றொரு தில்லாலங்கடி வேலையும் உண்டு.  கிறிஸ்துவ மத மாற்றத்தில் உள்ளவர்களும் தாங்கள் ஏற்கனவே இருந்த குல வழக்கப்படிதான் செயல்பட வேண்டும் என்று அந்த அறிக்கை எச்சரித்திருந்தது.

இந்த வர்க்கப்பேத வர்ணாசிரம பாகுபாடுகளால் உருவான கோபங்கள் கலவரமாக மாறத் தொடங்கியது.  தொடங்கியதும் நாடார்கள் அல்ல. 1859 ஆம் ஆண்டு கிராம சந்தையொன்றில் நின்று கொண்டுருந்த சிறிய நிலையில் உள்ள  அதிகாரி அங்கே வந்து போய்க் கொண்டிருந்த நாடார் பெண்மணிகளை குறிவைத்து அவர்கள் அணிந்திருந்த மேலாடைகளை அரசாங்கம் கிழிக்கச் சொல்லி உத்திரவு இட்டுள்ளது என்று கருமமே கண்ணாக செயலில் காட்டத்  தொடங்கினார். இது இருபது நாட்கள் தொடர்ச்சியாக கலவரக் காடாக மாற்ற உதவியது. மற்ற மாவட்டங்களுக்கும் பரவத் தொடங்கியது. 1858 ஆம் ஆண்டு நாகர்கோவில் அருகே உள்ள கிறிஸ்துவ ஆலயங்களை தீயிட கொளுந்து விட்டு பரவ ஆரம்பித்தது.  ஒன்பது கிறிஸ்துவ ஆலயங்களும், மூன்று பள்ளிகளும் முழுமையாக அழிக்கப்பட்டது. 1858 ஆம் ஆண்டு இராணுவம் வரவழைக்கப்பட்டது. இந்த போராட்டங்களின் விளைவால் கீழ்க்கண்ட அறிக்கை 1859 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 26ந் தேதி வெளிவந்தது.

மாட்சிமை தாங்கிய மன்னரின் கோரிக்கையை ஆங்கிலேய அரசாங்கம் ஏற்றுக் கொண்டது.  நாங்கள் இதனால் தெரிவிப்பது என்னவென்றால் கிறிஸ்துவ நாடார் பெண்மணிகளைப் போன்று ரவிக்கை அணிந்து கொள்வதில் அல்லது அனைத்து மதங்களையும் சார்ந்த நாடார் பெண்மணிகளைப் போன்ற பருமையான இழைய கொண்ட ஆடைகளை நாடார் பெண்மணிகள் இணிந்து கொள்வதில் எவ்வித ஆட்சேபணையும் இல்லை.  மேலும் அப் பெண்மணிகள் முக்குவச்சிகளைப் (கீழ் சாதி மீனவப் பெண்கள்) போன்று அல்லது வேறெந்த மாதிரியிலும் தங்கள் மார்பை மூடிக் கொள்ளுவதிலும் எவ்வித ஆட்சேபனையும் இல்லை.   ஆனால் உயர் சாதி பெண்களைப் போன்று மட்டும் ஆடைகள் அணியக் கூடாது.

இதிலிருந்து கிடைத்த படிப்படியான வெற்றி தான் நாம் இன்று கண்டு கொண்டிருக்கும் நாடார் இன மக்களின் பல சமூக மாறுதல்கள்.   மானத்திற்கு மறைக்க வேண்டிய ரவிக்கை இன்று தான் விகாரமாக மாறி சகல இனத்திலும் வேறு விதமாக மாறி வந்து நிற்கிறது.  நிலைப்படி, கதவு, ஜன்னல் மற்றும் முக்கால் நிர்வாண ரவிக்கைகள் வரை பெண்களின் சுதந்திரம் இன்றைய சூழ்நிலையில் கொடிகட்டி பறக்கிறது,

மற்றொன்றையும் இப்போது பேசியாக வேண்டும். சமூகத்தில் நாம் காணும் மதமாற்றம் என்பது ஒரு வகையில் வினோதமான மாறுபாடே ஆகும். முதல் நாள் இரவு வரைக்கும் தான் வணங்கிக் கொண்டிருக்கும் சாமி படங்களை தூக்கி எறிந்து விட்டு மறுநாள் காலையில் எல்லாமே ஏசு தான் என்று சொல்ல வைக்கும் ஆச்சரய நிகழ்வு. ஆனால் இப்போது படித்துக் கொண்டிருக்கும் கிறிஸ்துவ குருமார்களின் சேவையையும் தற்போது நடந்து கொண்டிருக்கும் மதமாற்றங்களையும் உங்கள் கணக்கில் கொண்டு வந்து விடாதீர்கள். தொடக்கத்தில் உருவான ஒவ்வொரு மதமாற்றத்திற்கும் பின்னாலும் ஒரு இனத்தின் நல்வாழ்வு ஏதோவொரு வகையில் பூர்த்தி செய்யப்பட்டது. குறிப்பிட்ட இன மக்களின் சமூக அந்தஸ்த்தை பொருளாதார வாழ்க்கையை உயர்த்த உதவியது. ஆனால் இப்போது நடந்து கொண்டிருக்கும் மதமாற்றம் என்பது தனிநபர்களின் ஆதாயத்திற்காக, வெளிநாட்டு நிதிகளுக்காக என்ற நோக்கத்தில் மேன்மேலும் இந்த ஒடுக்கப்பட்ட மக்களின் அவலவாழ்க்கையை பந்தயக்குதிரை போலவே மாற்ற உதவிக் கொண்டிருக்கிறது.  

காரணம் தொடக்க கால ஈழ வரலாற்றில் யாழ்பாணத்தில் வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்களை இந்த மதமாற்றம் எந்த அளவிற்கு சமூகத்தில் உயர்த்தி வைத்திருந்தது என்பதை ஈழவரலாற்றை முழுமையாக படித்தவர்களுக்கு புரிந்த ஒன்றாகும். இரண்டு தலைமுறை முடிவதற்குள் 80 சதவிகித மக்கள் இலங்கை அரசாங்கத்தின் முக்கிய பதவிகள் அத்தனையிலும் அமர்ந்திருந்தனர். ஏறக்குறைய அங்கு நிலவிய முன்னேற்றங்களைப் போலவே இந்த நாடார் இன மக்களின் வாழ்க்கையிலும் இந்த கிறிஸ்துவம் பல மாறுதல்களை உருவாக்கியது.  கிறிஸ்தவ மதகுருமார்கள் மதமாற்றத்தில் ஈடுபட்ட அளவிற்கு நாடார் இன மக்களின் சமூக வளர்ச்சியிலும் அதிக அக்கறை காட்டியுள்ளனர்.  மற்ற இந்துக்களுடன் கூடிய தொடர்பினை வளர்த்த காரணமாகவும், அவரவர் வியாபாரங்களுக்கு உதவக் கூடிய வகையில் உருவாக்கிய பல நல்ல திட்டங்களினாலும் ஒவ்வொரு கிறிஸ்துவ சபைக்குட்ட பல்வேறு கிராமங்கள் ஒன்றிணைக்கப்பட்டது.  இது போன்ற பல கிறிஸ்துவ சபையின் காரணமாக பல் வேறு இடங்களில் பரவியிருந்த நாடார்கள் ஒன்று சேர்க்கப்பட்டனர். ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் கூட்டங்கள் வழியாக பல புதிய மக்கள் கிறிஸ்துவத்திற்கு மாறத் தொடங்கினர். பல குடும்பங்களின் குழந்தைகள் கிறிஸ்துவ பள்ளிக்கூடங்களில் படிக்கத் தொடங்க அதுவும் மதமாற்றத்திற்கு பல்வேறு வகையில் உதவத் தொடங்கியது.

மேலாடை அணிவது குறித்து உண்டான எழுச்சியும் களத்தில் இறங்கிய போராடிய விதமுமே தான் இந்த நாடார் இனமக்களின் அடுத்த கட்ட சமூக வாழ்க்கையில் பெற வேண்டிய உரிமைக்கான வழித் தடத்தை அமைக்க காரணமாக இருந்தது. இந்த எழுச்சி இவர்களின் ஒற்றுமையை பேணிக்காத்தது போலவே தங்களது கலாச்சாரத்தின் மகிமையை உணர காரணமாகவும் இருந்தது.

ஒரு வெற்றி என்பது வெறும் ஒற்றுமையால் மட்டும் வந்துவிடுவதில்லை.எதற்காக ஒன்றுபடுகின்றோம் என்பதில் தான் தொடங்குகிறது.

30 comments:

  1. அருமையான கட்டுரை... அனைத்து இன மக்களும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று...

    ReplyDelete
  2. மிகவும் பெருமையாக உள்ளது,அப்போது ரவிக்கையே அணியக்கூடாது என உரிமை மறுக்கப்பட்ட பெண்கள் இப்போது விலையுயர்ந்த கச்சைஉடை அணிந்து அமெரிக்கா சென்று கோலோச்சுகின்றனர்.வாழ்க நாடார் சமுதாயம்.இது நிகழ நூற்றாண்டு பிடித்திருக்கிறது. நான் கன்வெர்ட்டுகளை ஆதரிக்கிறேன்.

    ReplyDelete
  3. long live jesus christ! :) காட்டுமிராண்டிகளின் கண்களை திறக்க சிலுவை தேவைப்பட்டிருக்கிறது. நடு ரோட்டில் வைத்து ரவிக்கை கிழிப்பது அட அட என்ன நாகரீகம்!! விசயம் அப்படியாக இருக்கும் போது மதமாற்றம் ஒரு குடும்பமாக, கிராமமாக, ஊராக, நாடாக ஆகியிருந்தாலே ஆச்சர்யப்படுவதற்கில்லை என்றே தோன்றுகிறது.

    இன்று டிசைனர் ரவிக்கைகள் அணிவது அவர்களின் (பெண்களின்) சுய சிந்தனையை வெளிப்படுத்துவதாக இருக்கும் பொழுது நம் சமூகத்தில் இன்று இந்த விசயத்தில் காட்டுமிராண்டித்தனம் மட்டுபட்டு இருப்பதையே வெளிக் கொணரும் நல்ல விசயந்தானே! இல்லேன்னா, பின்னே நாமும் ரவிக்கை கிழிக்க சட்டம் கொண்டு வருவோம் ;-)...

    இதெல்லாம் படிச்சு தெரிஞ்சிக்கும் போது நமக்கும் ஆஃப்ரிக்காவிற்கு நெருங்கிய தொடர்பு இருந்திருக்கின்னு தெரியுது... ஒரு நாகரீகமா!

    ReplyDelete
  4. ஒரு வெற்றி என்பது வெறும் ஒற்றுமையால் மட்டும் வந்துவிடுவதில்லை.எதற்காக ஒன்றுபடுகின்றோம் என்பதில் தான் தொடங்குகிறது.

    ...golden words

    ReplyDelete
  5. சுமார் இருநூறு வருடங்களுக்கு முன், பெண்களுக்கென்று - அவர்கள் எந்த ஜாதியை இருந்தால் என்ன - ஏற்பட்ட இந்த இழிநிலையைக் கண்டு வருத்தமும் கோபமும் வராமல் இல்லை.... இந்த வரலாற்று சம்பவங்கள் தெரியாமல் தானே, நாம் எத்தனையோ விஷயங்களை, we take for granted. ஆண்களும் பெண்களும், சுயமரியாதையுடன் வாழ போராடி பெற்ற சுதந்தரத்தின் மதிப்பை உணர்ந்து கொள்ளாமல் விட்டு விடுகிறோம்.

    ReplyDelete
  6. எங்கிருந்து சார் புடிக்கறீங்க இத்தனை விசயங்களை, ரொம்ப பிரமிப்பா இருக்குது, இவ்வளவு நடந்திருக்கானு!!!

    ReplyDelete
  7. நன்றி திரு ஜோதிஜி
    நல்ல பதிவு. பின்னூட்டங்களிலிருந்து நிறைய செய்திகள் வருகின்றன.
    பொன்னீலனின் 'மறுபக்கம்' படித்தீர்களா.
    உங்களது நாடார் பற்றிய அனைத்து பதிவுகளையும் படித்து விட்டு விரிவான பின்னூட்டம் எழுதுகிறேன் (அதற்கு நானும் நிறைய படிக்க வேண்டியதிருக்கிறது). அல்லது தொலைபேசியில் தங்களுக்கு வசதிப்பட்ட நேரத்தில் பேசுகிறேன்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. இது வரை எனக்கு தெரியாத தகவல்கள். உங்கள் வாசிப்பு திறனுக்கு ஒரு சபாஷ் ஜி !

    ReplyDelete
  9. ஆனால் உயர் சாதி பெண்களைப் போன்று மட்டும் ஆடைகள் அணியக் கூடாது.//

    எவ்வளவு கொழுப்பு இருந்திருக்கு?.. இன்னும் குறையலையே அந்த கொழுப்பும் திமிரும் னு நிரூபிச்சிகிட்டேதான் இருக்காங்க..

    இப்பவே இப்படின்னா , அந்த காலம் நினைத்துகூட பார்க்க முடியலை..

    இப்ப அதே திமிர் ஆணாதிக்கம் என்ற வடிவிலும் இருக்கிறது... இதுவும் விரைவில் அழியும்..:)

    ReplyDelete
  10. ஆனால் இப்போது நடந்து கொண்டிருக்கும் மதமாற்றம் என்பது தனிநபர்களின் ஆதாயத்திற்காக, வெளிநாட்டு நிதிகளுக்காக//

    மறுப்பதற்கில்லை..

    ReplyDelete
  11. மிகச்சிறந்த பதிவு..

    ReplyDelete
  12. "வெற்றி என்பது வெறும் ஒற்றுமையால் மட்டும் வந்துவிடுவதில்லை.எதற்காக ஒன்றுபடுகின்றோம் என்பதில் தான் தொடங்குகிறது."

    வைரவரிகள் அன்பின்ஜோதிஜி.
    பல பல ஆச்சரியங்களையும் அதிர்ச்சிகளையும் உள்ளடக்கிய ஒன்றாக தங்களுடைய பதிவு.

    இதில் உள்ளடங்கியுள்ள தங்களுடைய உழைப்புக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

    ReplyDelete
  13. //வெற்றி என்பது வெறும் ஒற்றுமையால் மட்டும் வந்துவிடுவதில்லை.எதற்காக ஒன்றுபடுகின்றோம் என்பதில் தான் தொடங்குகிறது.//

    முக்கியமான வரிகள்.சிறப்பாக கொண்டு செல்கிறீர்கள்.

    ReplyDelete
  14. நல்லதொரு ஆவணப்பதிவு ஜோதிஜி !

    ReplyDelete
  15. நாடார்கள் இன்று பிற்படுத்தப் பட்டவர்கள் என்ற பட்டியலில் இருக்கிறார்கள்.ஆனால் அவர்களை ஒடுக்கிய சாதிகள் சில மிகவும் பிற்படுத்தப் பட்டியலில் இருக்கிறார்கள். ஏன் இந்த முரண்பாடு ?

    ReplyDelete
  16. அருமையான கட்டுரை... அனைத்து இன மக்களும் அறிந்து கொள்ள வேண்டியது இது...

    ReplyDelete
  17. கலக்குறீங்க ஜி! வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  18. சிறப்பு!
    வாழ்த்துகள்!

    ReplyDelete
  19. இப்படி தரமான பதிவுகளும் தமிழ்மணத்தின் டாப் லிஸ்டில் வருவது மிகுந்த நம்பிக்கை அளிக்கிற சேதி.
    அதிர்ச்சியான சேதியும் கூட.நான் படிக்க தெரிந்துகொள்ள ஆசைப்பட்ட இரண்டு நிகழ்வுகளில் ஒன்றைத்தேடி அடைந்த திருப்தி. இன்னொன்று புரட்சிக்காரன் நேசமனி பற்றியது. நன்றி தோழரே.கல்வி,கோவில்,வியாபாரம் ஆகியதுறைகளில் திட்டமிட்டு நுழைந்து பொருளாதார வலுவைச் சாத்தியமாக்கிய இனம் குறித்த அருமையான பதிவு.தனித்த தமிழ் அடையாளத்தை கையகப்படுத்திக்கொண்ட மக்கள் திரள் பற்றிய பெருமிதப்பதிவு.
    ஜாதி இரண்டாம் பட்சம் என்பது மட்டும் பொருட்பிழை.
    அது இல்லை.சங்கர மடத்துக்கு போய்விட்டு திரும்பிவந்த ஒரு பெரும் பணக்காரர் விட்ட கண்ணீரை நான் நேரடியாகப் பார்த்தவன்.(வருஷம் 2010ல்).தமிழர் இறையாண்மை மாநாட்டுப்போஸ்டர் ஒட்டியதற்காக ஒரு ஊர் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் நடந்தது 2011 ஜனவரியில்.
    எண்பது சதமான இந்தியா இன்னும் கிராமங்களில் மட்டுமே இருக்கிறது அங்கே ஜாதி அப்படியே கெட்டுப்போகாமல் பாதுகாக்கப்பட்டுவருகிறது.ஒரு சின்ன முன்னேற்றம் இருப்பதை அவதானித்தாலும்.புற உலக வளர்ச்சியின் சதமானத்தில் அது பெரிதில்லை.
    ஜாதி ஒரு பொருட்டு இல்லை என்கிற சொல் கட்டபொம்மன் படத்தில் சிவாஜி சொல்கிற ’ இல்லை பெரியப்பா ஜெயிக்கிறேன்’ என்கிற மிகை நடிப்புக்கும் வசனத்துக்கு ஒப்பாகும்.
    இது மாறலாம்,மாறனும்,மாறாமல் போகாது,தீராது.
    எப்போது ?
    ஒடுக்கப்பட்ட எல்லா இனங்களுக்கும் தோல் சீலை போராட்டம் ஒரு உந்துசக்தியாக்கப்படும் போது?

    ReplyDelete
  20. நல்ல பதிவு. பல விடயங்களை அறியத்தருகிறது.

    ReplyDelete
  21. சங்கர மடத்துக்கு போய்விட்டு திரும்பிவந்த ஒரு பெரும் பணக்காரர் விட்ட கண்ணீரை நான் நேரடியாகப் பார்த்தவன்//////

    எழுத்தாளர் அனுராதா ரமணன் பல விசயங்களை புரியவைத்தார். அதன்பிறகே மொத்த தில்லாலங்கடி வேலைகளும் புரிந்தது. பல நபர்களின் மூலம் எந்த அளவிற்கு அரசியல்வாதிகளின் கருப்பு பணம் ஆன்மீகத்தில் உள்ள அறக்கட்டளைக்கு வந்து சேர்கின்றது என்பதை புரிந்து கொண்டேன். சிறப்பான விமர்சனம் காமராஜ்

    ReplyDelete
  22. இதெல்லாம் படிச்சு தெரிஞ்சிக்கும் போது நமக்கும் ஆஃப்ரிக்காவிற்கு நெருங்கிய தொடர்பு இருந்திருக்கின்னு தெரியுது... ஒரு நாகரீகமா!

    தெகா நாம் இன்னமும் குரங்கு தான்.

    அரசியல்வாதிகள் தாவுவதற்கு
    மக்கள் அத்தனையும் உர் என்று வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதற்கு
    அதிகார வர்க்கம் பழத்தை மட்டும் குறிவைத்து செயல்பட்டுக் கொண்டிருப்பது.

    நிறைய சொல்லமுடியும்.

    சித்ரா இந்த முறை ஆழ்ந்த படித்து இருப்பது புரிந்தது,

    ReplyDelete
  23. இப்ப அதே திமிர் ஆணாதிக்கம் என்ற வடிவிலும் இருக்கிறது... இதுவும் விரைவில் அழியும்..:)

    என்ன சாந்தி? சாபம் போல கொடுக்குறீங்க(???)

    நாடார்கள் இன்று பிற்படுத்தப் பட்டவர்கள் என்ற பட்டியலில் இருக்கிறார்கள்.ஆனால் அவர்களை ஒடுக்கிய சாதிகள் சில மிகவும் பிற்படுத்தப் பட்டியலில் இருக்கிறார்கள். ஏன் இந்த முரண்பாடு ?

    என்ன செந்திலான் இப்படி கேட்டு விட்டீங்க, எண்ணத்தில் எல்லோருமே நாங்கள் உயர்ந்த ஜாதி. ஆனால் அரசாங்கத்திடம் சலுகை கேட்கும் போது மட்டும் பிச்சைகார ஜாதி.

    ReplyDelete
  24. கும்மி, விந்தைமனிதாக நீங்க கிளப்பிய கௌப்பலில் ஒரு பெரிய நிர்வாகத்தின் கதவு திறந்து அழைப்பு வரும் வரைக்கும் உண்டாக்கி விட்டுட்டீங்க. (???) சந்தோஷம் தானே?

    தவறு.

    விமர்சன கலக்கல்.

    குமார், மாதேவி, வேடந்தாங்கல், சண்முகவேல், ஹேமா, எல்போர்ட்,இரவு வானம், திருப்பூர் மணி, எல்லோருமே ஒரே மாதிரியாக வஞ்சகம் இல்லாம புகழ்ந்து தள்ளீட்டிங்க. நன்றிங்கோ.

    ReplyDelete
  25. ரத்னவேல் அய்யா

    நான் வாழ்ந்த வாழ்க்கையை யோசித்துப் பார்க்க இன்று உங்கள் இனத்தின் வாழ்க்கைக்குள் நுழைந்து.... உண்மை தான் நீங்க சொன்ன மாதிரி நம்ம பயபுள்ளைங்க தாக்க தாக்க ஒவ்வொன்னனா தேடி தேடி அலைந்து எழுத வேண்டியதாக உள்ளது. நீங்க இந்த பயபுள்ளைங்களுக்குத்தான் நன்றி சொல்லனும்.

    ReplyDelete
  26. சாமி உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  27. சங்கவி நீங்க சொன்னது முற்றிலும் உண்மை. ஒவ்வொரு இன மக்களுமே இதைப் போன்ற விசயங்களை அறிந்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  28. மண்டைக்காடு கலவரத்தை மையமாக வைத்தும், பொன்னீலன் எழுதிய ‘மறுபக்கம்’ நூலுக்கு மறுபக்கமாகவும் வழக்கறிஞர் ஜோ.தமிழ்ச்செல்வன் எழுதிய ‘மறுபக்கத்தின் மறுபக்கம்’ நூல் அருமை. படித்துவிட்டீர்களா? தொடர்புக்கு ஆதாம் ஏவாள் பதிப்பகம் 9487187193 ரூபாய் 20/- பக்கம் 58.

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.