அஸ்திவாரம்

Sunday, February 20, 2011

உழைப்புடன் கொஞ்சமல்ல நிறைய ஒற்றுமை

ஆங்கிலேயர்களுக்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. எந்த திட்டமானாலும் அவர்களுக்கு என்ன லாபம் என்பதைவிட அது நீண்ட காலதிட்டத்திற்கு பயன் உள்ளதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பர். காரணம் நம் இந்தியாவைப் போலவே பக்கத்தில் உள்ள ஈழத்திற்குள் நுழைந்த ஆங்கிலேயர்கள் வெறுமனே ஆட்சி அதிகாரம் என்பதில் மட்டும் கவனம் செலுத்தவில்லை. அங்கு ஏற்கனவே இருந்த டச்சு போர்த்துகீசியர்களைப் போல இல்லாமல் தொடக்கம் முதலே நீண்ட கால முன்னேற்பாடுகளில் கவனம் செலுத்தி காய் நகர்த்தினார்கள். ஆங்கிலேயர்கள் ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் வந்தார்கள் வென்றார்கள் இதைப் போலவே நீண்ட காலம் நிலைத்தும் நின்றார்கள்,  ஆங்கிலேயர்கள் இதன் அடிப்படையில் ஈழத்தில் உருவாக்கியதுதான் காபி மற்றும் தேயிலைத் தோட்டங்கள். இதைப் போலவே  தென் மாவட்டத்திற்குள் காலடி வைத்த போது பல அடிப்படை விசயங்களில் தான் முதன் முதலில் கவனம் செலுத்தினர்.

ஆங்கிலேயர்கள் உள்ளே நுழைந்த போது தென்மாவட்டங்களில் பல பகுதிகளின் சாலை வசதிகள் அந்த அளவிற்கு மோசமாக இருந்தது என்பதை விட அப்படி ஒரு வசதி உண்டா என்று தேடிப்பார்க்கும் நிலையில் தான் இருந்தது. . அதில் தான் முதலில் கவனம் செலுத்தினர். இது தான் இன்று நாம் காண்கின்ற நாடார்களின் தொழில் வாழ்க்கைக்கு தொடக்கத்தில் நலல ஆதார வசதிகள் உருவாக காரணமாக இருந்தது. இதே இந்த தென்மாவட்டங்களில் எல்லா இனங்களும் தான் இருந்தார்கள். ஆனால் மற்றவர்களை விட இவர்களுக்கு மட்டும் ஏன் இத்தனை சிறப்பம்சம்.  பின்னால் பார்க்கப்போகும் செட்டியார்கள் முடிந்தவரைக்கும் சிங்கப்பூர், மலேசியா, பர்மா போன்ற நாடுகளில் வட்டித் தொழிலில் கவனம் செய்து அங்கங்கே பொருளீட்டத் தொடங்கினர். ஆனால் நாடார் இனத்தை பொறுத்தவரையிலும் உள்ளூரிலேயே வெற்றிக் கொடி நாட்டினர். இன்று நாடார்கள் பொருளாதார ரீதியாக மிகப் பெரிய இடத்தை பெற்றுள்ளார்கள் என்று நாம் எளிதாக சொல்லிவிட்டு நகர்ந்து விடலாம்.  ஆனால் இவர்களின் உழைப்பு எங்கிருந்து எப்படி தொடங்கியது?


19 ஆம் நூற்றாண்டுகளில் திருநெல்வேலியின் கிழக்கு பகுதியில் வாழ்ந்த நாடார்கள் அனைவருமே பனைப் பொருட்கள் மூலமே தங்கள் வாழ்க்கையை படிப்படியாக வளமாக்கிக் கொண்டனர். கருப்பட்டி என்று சொல்லப்படுகின்ற கருப்பு கட்டிகளை சேகரித்து தங்களுடைய மாட்டு வண்டி மூலம் தங்கள் வணிகத்தை வளர்த்தனர்.  ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்க நகர நகர பல பொருளாதார வாய்ப்புகளும், தொழில் ரீதியான சிந்தனைகளில் பல மாறுதல்களும் உருவானது. தொழில் ரீதியான பல வாய்ப்புகள் உருவாகத் தொடங்கியது. இத்துடன் கருவாடு, உப்பு போன்றவற்றையும் சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்கத் தொடங்கினர்.  

ஆனால் இவர்களின் இந்த உழைப்புக்குண்டான பலன்கள் கூட அத்தனை எளிதாக கிடைத்துவிடவில்லை.  பெரும்பாலும் தாமிரபரணி ஆற்றின் வட பகுதியிலேயே இந்த வியாபார பரிவர்த்தனைகள் நடந்து கொண்டிருந்தது.  காரணம் படு மோசமான சாலைவசதிகள், அடிக்கடி சண்டை நடந்து கொண்டிருக்கும் பாளையக்காரர்கள் என்பதோடு கள்வர் பயம் படாய்படுத்திக் கொண்டிருந்தது.. ஒவ்வொரு பாளையக்காரர்களும் தங்கள் பகுதிகளுக்குள் வரும் வண்டிகளுக்கு அவரவர் உருவாக்கி வைத்திருக்கும் வரிகளை கட்டி விட்டுத்தான் நகர வேண்டும்.  இதன் காரணமாகவே உள்நாட்டு வர்த்தகம் முடங்க ஆரம்பித்தது. ஆனால் இந்த பிரச்சனைகள் அத்தனையையும் முடிவுக்கு கொண்டு வந்தவர்கள் ஆங்கிலேயர்கள்.  வரி விதிப்புகளை தடை செய்தனர். சாலை வசதிகளை மேம்படுத்தினர். 

ஒவ்வொரு பகுதியிலும் உள்ள நாடார்கள் தாங்கள் செல்லும் இடங்களில் காணும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டனர்.  திருநெல்வேலியிலிருந்து நகர்ந்து அம்பாசமுத்திரம், தென்காசி என்று மெதுமெதுவாக பரவி தங்கள் ஆதிக்கத்தை உருவாக்க ஆரம்பித்தனர்.ஒவ்வொருவரும் பயன்படுத்தும் மாட்டு வண்டிகளின் எண்ணிக்கைகள் அதிகமானது. வாய்ப்புகளை தேடிப் போக ஆரம்பித்தனர். வெறும் பனைபொருட்கள் மட்டுமல்லாது திருச்செந்தூர் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த இஸ்லாமியர்கள் தயாரிக்கும் ஆடைவகைகள், இதற்கு மேலும் பருத்தி விதை, புகையிலை என்று ஒவ்வொன்றாக சேர்த்துக் கொண்டு தங்கள் வியாபாரங்களை பெரிதாக்கத் தொடங்கினர். 

பேட்டை என்றொரு வார்த்தை ஒவ்வொரு சிறிய நகர்புறங்கங்களிலும் உண்டு. கிராமப்பகுதியில் வாழ்ந்து வந்தவர்களுக்கு இது குறித்து நன்றாகவேநன்றாக்த் தெரியும்.  இந்த பேட்டைகளை இந்த நாடார் இன மக்கள் தங்கள் தொழில் ரீதியாக செல்லும் நகரங்களில் அங்கங்கே உருவாக்கியதற்கு வேறொரு முக்கிய காரணம் உண்டு. பின்னால் நாம் பார்க்கப்போகும் முக்குலத்தோரில் ஒரு பிரிவில் உள்ள மறவர்கள் அதிகம் வாழ்ந்து கொண்டிருந்த பகுதியில் எவரும் எங்கும் எளிதில் தொழில் செய்துவிடமுடியாது. வண்டி சென்றால் வண்டி மட்டும் தான் இருக்கும். சில சமயம் அதுவும் அவர்கள் கைவசம் போய்விடும். வண்டியில் உள்ள பொருட்களும் காணாமல் போய்விடும். அவர்களை எதிர்க்கவும் முடியாது.  இதன் காரணமாக அந்தந்த இடங்களில் நாடார்கள் பேட்டைகளை அமைத்தனர்.

தங்கள் மாட்டு வண்டிகளை பாதுகாப்பாக நிறுத்த ஒரு இடம் வேண்டும். இதே இடத்தில் தாங்கள் கொண்டு வரும் பொருட்களையும் விற்க இதனைச் சுற்றி அரண் போல் பல கடைகளையும் உருவாக்க புத்தியால் ஜெயிக்கத் தொடங்கினர். இது போல உருவாக்கப்பட்ட பேட்டைகள் தான் திருநெல்வேலி தொடங்கி தென்காசி என்று இறுதியில் இராமநாதபுரம் மாவட்டம் வரைக்கும் பரவலாக உருவாகத் தொடங்கியது. இப்படித் தொடங்கியது தான் நாடார் இன மக்களின் ஆறு நகரங்கள் என்றழைக்கப்படும் சிவகாசி, விருதுநகர், (இது தான் தொடக்கத்தில் விருதுப்பட்டி என்று அழைக்கப்பட்டது) திருமங்கலம், சாத்தங்குடி, பாலைய்ம்பட்டி, அருப்புக்கோட்டை ஆகிய நகரங்களை அடிப்படையாக் கொண்டு குடியேறினர்.

இதன் தொடர்ச்சியாக கமுதியைச் சுற்றியுள்ள சிறு நகர்புறங்களிலும் நாடார்கள் குடியேறத் தொடங்கினர். 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலேயே தங்களை பொருளாதார ரீதியாக முன்னேற்ற சமூகமாக மாற்றத் தொடங்கினர். வர்த்தகர்களாக, வட்டிக்கு கடன் கொடுப்பவர்களாக, தரகர்களாக என்று மேலே சொன்ன ஆறு நகரங்களிலும் சொத்து சேர்த்து தனிப் பெரும்பான்மையாக மாறத் தொடங்கினர். 1821 ஆம் ஆண்டு நாடார்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு நகராக சிவகாசி மாறத் தொடங்கியது.

வியாபாரத்தில் இரண்டு விசயங்கள் முக்கியமானது.  சந்தைப்படுத்துதல், லாபம்.  இதனைத் தொடர்ந்து அப்போது நிலவும் சூழ்நிலையில் தாக்குப் பிடித்து முன்னேற வேண்டும்.

கடைசியாக ஒவ்வொரு காலகட்டத்திலும் தொழில் விரிவாக்கம். சொல்லிவைத்தாற் போல நாடார்களுக்கு இது எல்லாமே சாதகமாக இருந்தது.  உள்ளூர் சந்தைகளை குறிவைத்து செயல்பட்டுக் கொண்டிருந்தவர்கள் அருகில் உள்ள திருவாங்கூர் மாநிலத்தில் தங்களின் புகையிலைப் பொருட்களை அனுப்ப ஏராளமான மாட்டு வண்டிகளை வைத்திருந்தனர். ஏறக்குறைய இந்த காலகட்டத்தில் 2000 மாட்டு வண்டிகள் இந்த வணிகத்திற்காகவே செயல்பட்டுக் கொண்டுருந்தன.ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை கூடும் சந்தையில் பருத்தி, நூல், நெல், கருப்புகட்டி, கருவாடு, மூங்கில் கூடைகள், நெய்,மீன்வலைகள், பழவகைகள் போன்ற ஏராளமான பொருட்கள் இதைத்தவிர பண்டமாற்று முறையில் மண்பானைகள் போன்றவைகளும் வியாபார பரிவர்த்தனைகளில் இருந்தது.

19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாடார்களின் ஆறு நகரங்களில் பொருளாதார பலமிக்கவர்களாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் மறவர்கள் அதிகமாக வாழ்ந்து கொண்டிருந்த இராமநாதபுர மாவட்டத்தில் நாடார்களை எதிரிகளாக பார்க்கப்படும் சூழ்நிலையில் ஏராளமான பிரச்சனைகள் உருவாகத்தொடங்கியது.  கிறிஸ்துவர்களாக மாறிய நாடார்கள் தாங்கள் உருவாக்கிய சங்கங்கள் மூலம் ஒரே அணியில் நின்றனர்.  பொருள் சேர்க்கும் ஆர்வத்தில் வேகமாக முன்னேறிக் கொண்டுருந்தார்களே தவிர தங்களின் ஒற்றுமை இல்லாத காரணத்தால் உருவாகிக் கொண்டிருக்கும் பிரச்சனைகளை நீக்க வேண்டும் என்பதில் முனைப்பாக செயல்பட உருவானது  நாடார்களின் சங்கங்கள். நாடார்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து கொண்டிருந்த ஆறு நகரங்களை அடிப்படையாகக் கொண்டு சங்கங்களை உருவாக்கத் தொடங்கினர். தமது இன மக்களின் சமூக நலன்களை கருத்தில் கொண்டு அரசாங்க அதிகாரிகளோடு நல்ல புரிந்துணர்வை உருவாக்கி வளர்க்க அதுவே இவர்களின் பல புதிய செயல்பாடுகளை உருவாக்க காரணமாக இருந்தது..  மகமை என்று ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் வசூலிக்கப்படும் வரி மற்றும் உறவின் முறைகளும் பல திட்டங்கள் உருவாக  ஒவ்வொன்றும் இவர்களின் பொருளாதார வாழ்க்கையை மேன்மேலும் பலமுள்ளதாக மாற்றத் தொடங்கியது. .


தாங்கள் உருவாக்கிய பேட்டைகள் மூலம் வசூலிக்கப்படும் மகமைத் தொகை மூலம் புதிய பேட்டைகள் அமைத்தனர்.   ஒவ்வொரு வியாபாரியும் தங்களது வருமானத்தில் ஒரு பகுதியை அளிக்க பொதுநல நிதி உருவானது. நாடார்கள் கருவூலநிதியில் சேர்க்கப்பட்டு பல விசயங்களுக்கு உதவத் தொடங்க இவர்களின் முன்னேற்றம் முன்பை விட பலமடங்கு வேகமாகத் தொடங்கியது. இதுவே தமிழ்நாட்டிலும் திருவிதாங்கூரிலும் சேர்ந்து 96 நகரங்கள் கிராமங்களை உள்ளடக்கி சிவகாசி நாடார் குல மக்கள் பேட்டைகளை அமைத்தனர். இவர்களின் உறவின் முறை அமைப்பு 20 ஆம் நூற்றாண்டில் வலிமையானதாக மாறினாலும் இதன் அடித்தளம் 19 ஆம் நூற்றாண்டில் முடிவில் ஆழ அகலமாய் வலுவாய் இருந்தது என்பது இவர்களின் உழைப்பின் ஆதாரமே.

19 comments:

  1. அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..
    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  2. கருவாடு, உப்பு விற்கத் துவங்கியபோதே முன்னேற்றத்தில் கவனம் ஏற்பட்டுவிட்டதென்று பொருள் .தனது குலத் தொழிலில் இருந்து அப்போதே வெளியே வந்தது திருப்பம்தான்.

    ReplyDelete
  3. நாடார்களின் வரலாறு அருமையாக எடுத்துக் கொடுத்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நல்ல பதிவு.
    தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  5. சக மனிதர்களிடம், சக சாதியினரிடம் கற்று கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. அந்த வகையில் நாடார்களிடம் கற்று கொள்ள, இங்கு குறிப்பிடாத இன்னும் பல நல்ல விஷயங்கள் உள்ளன. நமக்கு நல்ல முன்னுதாரணங்கள் அவர்கள்.

    ReplyDelete
  6. சக மனிதர்களிடம், சக சாதியினரிடம் கற்று கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. அந்த வகையில் நாடார்களிடம் கற்று கொள்ள, இங்கு குறிப்பிடாத இன்னும் பல நல்ல விஷயங்கள் உள்ளன. நமக்கு நல்ல முன்னுதாரணங்கள் அவர்கள்.

    ReplyDelete
  7. ரொம்ப அருமையா செல்கிறது தொடர்! நிறைய தகவல்கள்!

    ReplyDelete
  8. இது போன்ற பதிவுகளை விடுமுறை தினத்தில் போடுவதால் ஓட்டும் ஹிட்ஸூம் குறைகின்றன.

    ReplyDelete
  9. ஆனால் இழப்பு உங்களுக்கல்ல. இதை படிக்காதவர்களுக்கே.. அருமை சார்

    ReplyDelete
  10. செந்தில் என்ன இப்படி சொல்லிட்டீங்க. இதுவொரு ஆவணம். ஓய்வு இருக்கும் போது வந்து படிப்பவர்களுக்காக உதவக்கூடிய தளம். இந்த ஹிட்ஸ், பெரபல்யம், ஓட்டு போன்றவைகள் இதில் வராது. ஆனால் நண்பர்கள் ஆர்வம் மற்றும் அக்கறையின் காரணமாக இதை ஏதோவொரு வழியில் நகர்த்திக் கொண்டு இருக்கிறார்கள். வேறென்ன வேண்டும் செந்தில்?

    ReplyDelete
  11. சுவாரஸ்யமான தகவல்கள் வரலாற்றுகுறிப்புகள்: கருத்து செறிவுள்ள பதிவு

    ReplyDelete
  12. பதிவுலகில் தினசரி பல தளங்களை பார்வையிடுபவர்கள் கூட இது ஓட்டுக்காகவும், ஒருவரை மற்றவர் புகழ்வதற்காகவும் என தவறாக எண்ணி விடுகின்றனர். அதற்கு காரணம் பல தளங்கள் குப்பை கொட்டும் தொட்டிகளாக இருப்பதால். நிதானமாக படிக்கட்டும், பலா் மறுமொழியிடவில்லையெனினும் விபரங்கள் தெரிந்து கொள்ளட்டும். மாற்றுக் கருத்து இருப்பின் நாகரிகமாக பதிவு செய்யட்டும். அப்பொழுதுதான் தமிழ் எழுத்துக்கள் வளரும். கருத்துப் பரிமாற்றம் நன்கு தொடரும். - சரித்திரங்களுக்குள் நுழைந்திருக்கிறீர்கள், எழுதத் துவங்கும் முன் பல விபரங்களை சேகரித்துக் கொண்டு தொடர்கிறீா்கள் - வாழ்த்துக்கள். பனியன் தொழில் சாயப்பட்டரை விவகாரத்தால் திருப்பூர் எனும் இயந்திர உலகு நகரம் டேப்ரிக்கார்டரில் பாஸ் பட்டனை அழுத்தியது போல் தற்காலிகமாக நிற்பதால் அடிக்கடி ஜோதியின் பதிவுகளை காணமுடிகிறது. தொடரட்டும் நல்ல தகவல் பரிமாற்றம்

    ReplyDelete
  13. பனியன் தொழில் சாயப்பட்டரை விவகாரத்தால் திருப்பூர் எனும் இயந்திர உலகு நகரம் டேப்ரிக்கார்டரில் பாஸ் பட்டனை அழுத்தியது போல் தற்காலிகமாக நிற்பதால் அடிக்கடி ஜோதியின் பதிவுகளை காணமுடிகிறது

    வியந்து போய் நிற்கின்றேன் சம்பத்.

    நன்றி சதிஷ். குமார். எஸ்கே. ரத்னவேல், தமிழ்உதயம். (நீங்க சொன்னது உண்மையே) சரவணன், வேடந்தாங்கல்.

    ReplyDelete
  14. அருமையான பதிவு நண்பரே..
    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  15. நுனுக்கமான செய்தி தொகுப்பு..பாராட்டுக்கள்...ம்..சீக்கிரம்..அடுத்து ஆவலோடு.

    ReplyDelete
  16. "எந்த திட்டமானாலும் அவர்களுக்கு என்ன லாபம் என்பதைவிட அது நீண்ட காலதிட்டத்திற்கு பயன் உள்ளதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பர்."
    நீங்கள் சொல்வது மிக சரி .
    அவர்களின் அரசியல் சட்டமாகட்டும் சமூக சட்டமாகட்டும் எல்லாமே தொலைநோக்கு பார்வை உடையதுதான் .
    அவர்களிடம் இருந்து கற்றுகொள்ளவேன்டியாதுமாகும்

    --

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.