அஸ்திவாரம்

Sunday, September 03, 2023

வெற்றி பெற்ற நாள்

இங்குள்ள ஒரு அரசு மகளிர் கல்லூரியில் முழுமையாக வேலை முடித்துத் திறக்காமலிருந்த வகுப்பறையைத் திறக்க வைக்க, கல்லூரி முழுமையும் ஒரே ஷிப்ட் ல் நடக்க என்று கடந்த நான்கு மாதம் அரசு சக்கரங்களின் உள்ளே சிதைந்து போராடி வெற்றி பெற்ற நாள் (01.09.2023) இன்று.




மூன்று வாரங்களுக்கு முன்பு வகுப்பறைகள் திறக்கப்பட்டது. இன்று முதல் கல்லூரி ஒரே ஷிப்ட் ல் செயல்படத் தொடங்கியுள்ளது. பகுதி நேர வேலை பார்க்கும் மாணவிகள் அனைவரும் நேற்று முதல் தங்கள் உறுதிப்பாடுகளைத் தெரிவித்தனர்.

ஆனால் அரசு பள்ளிக்கூடங்கள் போலவே (சில இடங்களில் பரவாயில்லை) அரசு கலைக்கல்லூரிகளின் கழிப்பறை முதல் சுகாதாரம் வரைக்கும் பெரிய கேள்விக்குறி. காரணம் மின்சாரக் கட்டணம் சரியான நேரத்தில் கட்டுவதில்லை என்பது முதல் குற்றச்சாட்டு. கழிப்பறை சுகாதாரம் மிகப் பெரிய கேள்விக்குறி. காரணம் தேவையான தண்ணீர் தொட்டியில் இருப்பதில்லை.

பேராசிரியர்கள் பற்றாக்குறை முதல் அடிப்படை கட்டமைப்பு வரைக்கும் உள்ளே சென்று பார்த்தால் தலை சுற்றுகின்றது. நிரந்தரமான பேராசிரியர்கள் மிக மிகக் குறைவு. பகுதி நேரமாக பணிபுரிகின்றவர்கள் கூட சுமாரான அளவில் தான் நியமித்து உள்ளனர். இதன் காரணமாக வகுப்பு எடுப்பது குறைகின்றது. யாருக்குத் திறமை இருக்கின்றதோ அவர்கள் படித்து மேலேறி வரலாம். காரணம் அரசு கலைக்கல்லூரிகள் கட்டணம் மிக மிகக் குறைவு. அரசு கலைக்கல்லூரிகள் என்றாலே நன்றாகக் கவனித்துப் பாருங்கள் எல்லா இடங்களிலும் 75 சதவிகிதம் பட்டியலின மாணவிகள் தான் படிக்கின்றார்கள். நடுத்தரவர்க்கம் அருகில் உள்ள தனியார் கல்லூரிக்கு தங்கள் மகள்களை அனுப்பி விடுகின்றார்கள். உயர் நடுத்தரவர்க்கம் பெரிய நகரங்களில் உள்ள பெயர் பெற்ற கல்லூரிகளுக்கு அனுப்பி விடுகின்றார்கள். 

நடுத்தர வர்க்கத்திற்கு அடுத்த கீழ் நிலையில் உள்ளவர்கள் திடீரென்று முளைத்துள்ள புதிய தனியார் கல்லூரிகளுக்குச் சென்று விடுகின்றார்கள். அனைவரும் பாஸ் என்பதற்குப் பின்னால் சூட்சமம் இது தான். அரசு கல்லூரிகளில் கிடைக்காத மாணவிகளைக் கல்லூரியின் வாசலில் ஒவ்வொரு காளான் கல்லூரிகளின் புரோக்கர்கள் கொத்தாக ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் சென்று விடுகின்றார்கள். சிக்கியவர்கள் சிதைந்தார்கள். பணம் கட்ட முடியாதவர்கள் பாதி கட்டியதை விட்டு விட்டு வீட்டுக்கு வந்து விடுகின்றார்கள். இவையெல்லாம் நான் கடந்த மூன்று வருடங்களாகப் பார்த்துக் கொண்டு இருக்கும் காட்சிகள். ஒவ்வொரு கல்லூரியின் பின்னாலும் ஒரு அரசியல் பின்புலம் உள்ளது.

மாணவிகளுக்கு, பெண்களுக்கு இலவசம் என்று பேருந்து சேவைக்குப் பின்னால் சிற்றுந்து முதலாளிகள் அடிக்கும் கூத்துகள் சொல்லி மாளாது. தினமலர் நிருபரை அழைத்துச் சென்று அதனைச் செய்தியாக வரவழைத்தும் மாற்ற முடியவில்லை. கல்லூரி முடிந்து ஒரு மணி நேரம் எந்த அரசு பேருந்தும் கல்லூரி பாதையில் வராது. அப்படித் திட்டமிட்டு கூட்டாகச் செயல்படுகின்றார்கள். மாணவிகள் அனைவரும் கட்டணம் கட்டி தான் தத்தமது இடத்திற்குச் செல்கின்றார்கள்.

என்னவோ பத்திரிக்கையுலகம் இது போன்ற விசயங்களை இப்போது தான் ஒவ்வொரு அரசுப் பள்ளியையும், கல்லூரிகளையும் எட்டிப் பார்த்து சமூகப் பொறுப்பு போல எழுதுகின்றார்கள்.

இவையெல்லாம் கடந்த நான்கு வருடங்களாகப் பார்த்ததும் படிப்பினைகளும் என்று எழுதி உள்ளேன். இங்கு எல்லாமே அரசியலாகப் பார்க்கப்படுகின்றது. அரசியலாக மாற்றப்படுகின்றது. பிரச்சனைகளுக்கு முடிவென்பது முக்கியமல்ல. எந்த கட்சிகளும் விதிவிலக்கல்ல.

ஆசிரியர்களும் பேராசிரியர்களும், தலைமையாசிரியர்களும், கல்லூரி முதல்வர்களும் வாயில் துணியைக் கட்டி யார் எதைக் கேட்டாலும் தெரியாது என்று பேசாமல் வாழ்ந்து விட்டால் போதும் என்று பயந்து வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் என்பது தான் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறையும் அடைந்த வளர்ச்சி. கர்ண கொடூரமாகப் பழிவாங்குகின்றார்கள்.

No comments:

Post a Comment

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.