தேமுதிக நிறுவனர் நடிகர் திரு. விஜயகாந்த் அவர்களின் (ஆகஸ்ட் 25 1952) 72 வயது தொடங்குகின்றது. சமகாலத்தில் பலவிதங்களில் நீங்கள் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டிய மனிதர்களில் ஒருவர்.
தன் உருவம் கண்டு எள்ளி நகையாடியவர்களை வென்று வந்தவர்.
கதாநாயகனாக அசைக்க முடியாத சக்தியாகத் தன்னை மாற்றிக் காட்டியவர்.
1980க்கு பிறகு வருடம் அதிகபட்சமாக 18 படங்கள் நடித்தவர்களின் முக்கியமானவர்.
திரையரங்கம், வினியோகஸ்தர்கள், தயாரிப்பாளர் என்று மூன்று சக்கரத்திற்கும் லாபத்தை அள்ளித் தந்தவர்.
தன்னுடன் படப்பிடிப்பில் பணிபுரிந்த அனைவருக்கும் உணவு முதல் வழங்கப்படும் மரியாதை வரைக்கும் சம உரிமை என்பதனை செயல்பாட்டில் நிகழ்த்திக் காட்டியவர்.
திரை உலகில் பணிபுரியும் வெளியுலக கண்களுக்குத் தெரியாமல் கடைசி வரைக்கும் வாழ்ந்து மடியும் அனைத்து துறை சார்ந்த ஊழியர்களுக்கும் நம்ப முடியாத அளவுக்குப் பலவிதங்களில் உதவிகள் செய்தவர்.
நடிகர் சங்கத்தைச் சீரும் சிறப்புமான இடமாக மாற்றிக் காட்டியவர்.
தமிழ்த் திரைப்பட உலகத்தில் ஒருவர் எந்த துறையிலிருந்தாலும் அவரிடம் விஜயகாந்த் குறித்துக் கேட்டு பாருங்கள். ஒரு வார்த்தை தவறாகப் பேசமாட்டார்கள். அவரும் ஏதோவொரு வகையில் பலன் பெற்று இருப்பார்.
பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் முதல் சாதாரண சிறிய நிறுவனங்கள் வரைக்கும் இன்று வரைக்கும் விஜயகாந்த் அவர்களைப் போற்றிக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.
எம்ஜிஆருக்குப் பிறகு பசி என்பதனை முழுமையாக உணர்ந்தவர். அணையா ஜோதி போலவே உணவு வழங்கியவர்.
திரைப்படக்கல்லூரி மாணவர்கள் என்றால் தீண்டத்தகாதவர்களாகப் பார்க்கப்பட்டதை முழுமையாக மாற்றி அங்கீகாரம் அளித்தவர்.
நிஜமான கருணையுள்ளமும் உண்மையான உதவிகள் செய்வதில் சலிப்பே இல்லாமல் வாழ்ந்து காட்டியவர்.
காவல்துறை கதாபாத்திரம் என்றால் விஜயகாந்த் க்கு முன் பின் என்று சொல்லும் அளவுக்குக் கனகச்சிதமாகப் பொருந்தியது. பலரும் இதே பாணியைப் பின்பற்றினர்.
நடிகர் விஜய் ன் திரைப்பட வாழ்வின் தொடக்கத்தில் மிகப் பெரிய சரிவுகளைக் கண்ட போது விஜயகாந்த் தான் உதவினார். விஜய் உடன் நடித்து அவரின் திரைப்பட வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போட்டுக் கொடுத்தார். நடிகர் விஜய் மறந்திருக்கலாம். ஆனால் அவர் தந்தை இயக்குநர் சந்திரசேகர் அவர்கள் மறந்து இருக்க மாட்டார். இல்லாவிட்டால் மகனை வைத்து படம் எடுத்து கையிலிருந்த சொத்துகளை அப்போதே விற்று தெருவிற்கு வந்து இருக்க வாய்ப்பு நிகழ்ந்திருக்கக்கூடும். மயிரிழையில் தப்பி விட்டார்.
ஆனால் விஜயகாந்த் இளைய மகன் சண்முக பாண்டியனை விஜயகாந்த் செய்தது போல உடன் நடித்து அவருக்காக மார்க்கெட் உருவாக்க விஜயகாந்த் மனைவி நேரிடையாக விஜய் இடம் சென்று கேட்டதாகச் செய்திகளை படித்தேன். விஜய் மனமிறங்கவில்லை. இன்று சண்முக பாண்டியன் நடிக்கும் படைத்தலைவன் என்ற படத்தின் போஸ்டர் அறிமுக விழாவும் நடிகர் விஜயகாந்த் தலைமையில் நடப்பதாக அறிவிப்புகள் வந்துள்ளது. விஜய் மறுத்து விட்டார் என்ற தகவல் கேட்டு விஜயகாந்த் வருத்தப்பட்டார் என்று சொல்லப் படுகின்றது.
அரசியலில் நுழைந்து பாமக கட்சிக்கு அவர் கொடுத்த மரண அடி என்பது மருத்துவர் அய்யா கடைசி வரைக்கும் மறக்கவே முடியாத அளவுக்கு இருந்தது என்றால் அது முற்றிலும் உண்மை.
திமுகவும் அதிமுகவும் அலறியதும் உண்மை.
அவர் உடல் நலம் திடீரென்று மாற அவர் வாழ்க்கையில் என்ன தான் நடந்தது என்பதனை இன்று வரையிலும் எவராலும் யூகிக்க முடியாத மர்மமாக இருப்பது ஆச்சரியமே.
தமிழக அரசியலில் பெரிய கோடு அதனை மாற்ற சின்ன கோடு என்ற தத்துவம் தான் செயல்படுகின்றது. தமிழர்கள் நிஜம் என்பதனையே ஏற்க மறுக்கின்றார்கள். எதார்த்தம் என்பதே உணர மறுக்கின்றார்கள். உதவி செய்தவர்களை மறந்துவிடுகின்றார்கள். உதவி செய்ய தயாராக இருப்பவர்களை ஏற்க மறுக்கின்றார்கள்.
நிஜமான ஆலோசனைகள் இவர்களுக்குத் தேவையில்லை. உண்மையான எதிர்காலம் குறித்து கவலைப்படுவதில்லை.
ஏதாவது ஒரு போதை தேவைப்பட்டுக் கொண்டேயிருக்கின்றது. படத்தில் லாஜிக் பார்க்காதே என்றாலே உன் மூளையைக் கழட்டி வைத்து விடு என்று அர்த்தம். அதாவது உன்னை எவன் ஏமாற்றி வாழ்வில் செழிக்கின்றானோ அவனை ஆதரி என்பதாகவே மாறியுள்ளனர்.
கூமுட்டைகளை ஆதரி. குறுக்கு வழி பற்றி பேசுகின்றவனை உச்சத்தில் ஏற்று.
சுயபரிசோதனை தேவையில்லை. உழைப்பில்லாத சுகவாசியாக வாழ வேண்டும் என்பதே இறுதி நோக்கம். இவர்களை நம்பி ஏமாந்த கடைசி மனிதர் விஜயகாந்த்.
அவருக்குப் பின்னால் எவரும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் வரவே இல்லை. நான் பணம் தருவேன். எனக்கு ஒட்டளி. சிம்பிள் டீலிங்.
இப்படித்தான் இங்கே அரசியல் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது.
அதிமுக மாநாட்டுக்கு வெறும் நூற்றி ஐம்பது ரூபாய்க்காக முன்னூறு கிலோ மீட்டர் பயணித்து வந்தார்கள் என்பதனை கேட்டு உள்ளமே ஆடிப் போய்விட்டது.
இவர்கள் தான் தமிழக அரசியலை இனி வரும் காலங்களில் தீர்மானிக்கப் போகின்றார்கள் என்பதற்குப் பின்னால் உள்ள ஆபத்துகளை யோசித்துப் பாருங்கள். பத்தாயிரத்தை கையில் வைத்திருந்தால் இந்த வார்டில் எழுபது ஓட்டுக்களை வாங்கி விடலாம் என்ற எண்ணம் வருமா? அடிப்படை வசதிகளை செய்து தருகிறேன் என்ற வாக்குறுதி கொடுக்க மனம் வருமா?
மனதளவில் சோர்வு வரும் போதெல்லாம் விஜயகாந்த் கடந்து வந்த பாதையையும் இப்போது அவர் உடல் நலம் இன்றி வாழ்ந்து கொண்டிருக்கும் நரக வாழ்க்கையையும் நினைத்துக் கொள்வதுண்டு.
தன்னை தக்க வைத்துக் கொள்ள தொடக்கத்தில் போராடினார்
தன் இடத்தை உறுதிப்படுத்திக் கொள்ள அதன் மூலம் மற்றவர்களுக்கு உதவ போராடினார்
அரசியல் மூலம் ஏதேனும் செய்து விட முடியும் என்று நம்பி போராடினார்.
இப்போது தன் ஆரோக்கியத்துடன் போராடிக் கொண்டு இருக்கின்றார்.
ஆனால் தன் குடும்பத்தினர் எதன் அடிப்படையில் அரசியலைப் பார்ப்பார்கள் என்பதனை யோசிக்க மறந்து விட்டாரோ என்று ஒவ்வொரு முறையும் நினைத்ததுண்டு.
No comments:
Post a Comment
கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.