அஸ்திவாரம்

Wednesday, May 10, 2023

திண்டுக்கல் மாணவி பெற்ற 600/600

 

600 க்கு 600 மதிப்பெண்கள் வாங்கிய திண்டுக்கல் மாணவி குறித்து அதற்குப் பின்னால் உள்ள பல விசயங்களைப் பற்றி எழுதி இன்று இரவு வெளியிடலாம் என்று நினைத்திருந்தேன். மீ டூ புகழ் வைரமுத்து வாழ்த்த திண்டுக்கல் போகின்றேன் என்று உள்ளே வந்ததைப் பார்த்து மேலும் பயம் வந்து விட்டது. எனவே இனி இதனை இப்பொழுதே நீங்கள் படித்தே ஆக வேண்டும்.



()()()

நேற்று முழுக்க எனக்குப் பயம் ஒன்று வந்து கொண்டேயிருந்தது. 600 க்கு 600 எடுத்த மாணவியை இந்தத் திருட்டுக் கோஷ்டி கும்பல் எங்கள் குழந்தை என்று சொந்தம் கொண்டாடுவதும், சமூக தளங்களில் மாறி மாறி உச்சி முகர்வது போல எழுதிக் கொண்டு இருப்பதைப் பார்த்து ஏதும் தவறாகப் போய் விடப் போகின்றதோ என்ற கவலை வந்தது.

அனிதா என்ற மாணவியை செய்தது போல முடித்துக்கட்டி பாராளுமன்றத் தேர்தலுக்கு அச்சாரம் போட்டு பாவக் கணக்கை தொடங்கி விடுவார்களோ? என்ற அச்சம் இருந்தது. சிதம்பரம் உதயகுமார் முதல் நேற்றைய அனிதா வரை இவர்கள் சாதனை நீண்ட நெடியது. ஒரு சிறிய வாய்ப்பைக் கூட இவர்கள் தவறவிட மாட்டார்கள்.

()()()

வாழ்நாள் முழுக்க ஆதரிக்கும் கட்சி என்று எப்போதும் கங்கணம் கட்டி இன்றுவரையிலும் செயல்பட்டுக் கொண்டு இருக்கும் ஆசிரியர் கூட்டமைப்பில் உள்ள அனைத்து பிரிவுகளும் ஒன்று சேர்ந்து புலிகேசியை அழைத்து சிறப்புரை ஆற்றச் சொன்ன கூட்டத்தில் பாதிக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்தாள் பேசுவது பத்துக் காசுக்குப் பிரயோஜனப்படாது என்று கூட்டத்திலிருந்து கலைந்து சென்ற காட்சிகளை சமூக வலைதளங்கள் மட்டுமே தமிழ்கூறும் நல்லுலகத்திற்குக் கொண்டு போய் சேர்த்தது. காரணம் நடைமுறையில் சாத்தியம் இல்லாத வாக்குறுதிகளை கொடுத்து அம்பலப்பட்டு நிற்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படப் போவதில்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆசிரியர்கள் கூட்டத்திற்கு இம்மியளவு கூட நல்லது செய்யவில்லை என்பதனை நாம் சொல்லவில்லை. கொத்தடிமையாக தங்களை மாற்றிக் கொண்ட சங்கத்து ஆட்கள் வெளியே சொல்லவும் முடியாமல் எதிர்த்துப் பேச வழியில்லாமல் மனதிற்குள் அழுது கொண்டு இருக்கின்றார்கள்.

அரசு பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு இந்த நிலைமை எனில் அரசு உதவி பெறும் ஆசிரியர்களுக்கு இந்தக்கூட்டம் என்ன செய்து இருப்பார்கள் என்று நினைக்கின்றீர்கள்?

பரீட்சை எழுதிக் காத்திருப்பவர்கள் ஒரு பக்கம். நிச்சயம் நம்மை நிரந்தரமாக்குவார்கள் என்ற நம்பிக்கையில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றியவர்கள், பணியில் இருப்பவர்கள் ஒரு பக்கம். கட்சிக் காரனிடம் காசு கொடுத்து விட்டு ஏமாந்து போனவர்கள் மற்றொரு பக்கம். தேர்வு மூலம் தேர்ந்தெடுத்தால் காசு பார்க்க முடியாது என்பதால் எழுதிய தேர்வை தில்லுமுல்லாக மாற்றி அம்பலப்பட்டு அனைத்தும் இன்று அதோகதியாக உள்ளது. எல்லாமே திருடர் குல புகழ் கருணா கற்றுக் கொடுத்த பாதையிது.

சிறுபான்மை சமூகம் சார்பாகச் செயல்பட்டுக் கொண்டு இருக்கும் பள்ளிக்கூடங்கள் அனைத்தும் அவர்கள் கேட்ட பெரும்பாலான கோரிக்கைகளைச் சப்தம் இல்லாமல் நிறைவேற்றிக் கொடுத்து உள்ளனர். குறிப்பாக கன்யாகுமரி மாவட்டத்தில் செயல்படும் அனைத்துச் சிறுபான்மையினர் என்ற பெயரில் நடத்தும் பள்ளிகளில் யாராவது உங்களுக்குத் தெரிந்தவர்கள் இருந்தால் கேட்டுப் பாருங்கள்.

()()()

திண்டுக்கல் அண்ணாமலையார் மில்ஸ் என்பது1990 முதல் நூல் சந்தையில் தரம் மிகுந்த நூல் என்ற பெயர் பெற்றது. அவர்கள் பள்ளியில் படித்த மாணவி என்றவுடன் நான் புரிந்து கொண்டேன். காரணம் அவர்கள் தொழிலில் காட்டிய நிர்வாக முறையை நான் முழுமையாக அறிந்து இருக்கும் காரணத்தால் அவர்கள் பள்ளி எப்படி செயல்படும் என்பதனை புரிந்து கொள்ள முடியும் தானே? அதே போல உடுமலை ஜிவிஜி பள்ளிக்கூடமும். இதே போல ஒவ்வொரு மாவட்டத்திலும் யாரோ ஒரு புண்ணியவான் தானதர்மம் செய்து இடம் கொடுத்து, கட்டிடம் கட்டிக் கொடுத்து என்று பலவிதங்களில் தாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாக மாற்றி இன்னமும் பல ஆயிரம் குடும்பங்களின் நினைவுகளில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர். திருப்பூர் ஒரு குஜராத்தி தன் மனைவி இறக்கும் தறுவாயில் வேண்டு கோள் விடுத்தபடி உருவாக்கிய பள்ளியில் தான் இன்று 6500 மாணவிகள் படிக்கின்றார்கள்.

()()()

கடந்த இரண்டு வருடத்தில் என்ன தான் பள்ளிக்கல்வித்துறையில் இவர்கள் சாதித்தார்கள்?

நீட் க்கு பயிற்சி கொடுப்பதை அறவே நிறுத்தினார்கள். பயிற்சி கொடுப்பதாக இப்போது வரைக்கும் பாவ்லா காட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்.

மடிக்கணினி ஒப்பந்தப்புள்ளி விடுவதில் பேரம் படியாத காரணத்தால் அப்படியே நிறுத்தி விட்டனர்.

பலரும் அறிக்கை மேல் அறிக்கை விட்டவுடன் வேண்டா வெறுப்பாக மிதி வண்டி வழங்கினர். கிராமத்து மாணவர்களுக்குப் பலன் உள்ள இந்தத் திட்டம் நகர்ப்புற மாணவர்கள் சந்தையில் ஆயிரம் ரூபாய்க்கு விற்று விடுகின்றனர்.

24 மாதங்களில் இவர்கள் படப்பிடிப்பு போலவே பள்ளிக்கல்வித்துறையை கையாண்டு வருகின்றனர்.

()()()

சர்வதேச பள்ளிகள், உண்டு உறைவிடப் பள்ளிகள், கேவி பள்ளிகள், நவோதயா பள்ளிகள் இவர்கள் கற்பிக்கும் விதம் கையாளும் விதம் என்பது முற்றிலும் வேறானது. இங்கிருந்து பள்ளிக்கல்வியை முடித்து விட்டு வெளியே வரும் மாணவர்களின் மனநிலை என்பது நடுத்தர வர்க்க மனநிலையிலிருந்து யோசிப்பது கடினம்.

தனியார் பள்ளிகள் நடத்தும் சிபிஎஸ்சி, மெட்ரிக் பள்ளிகள் என்பது இரண்டாவது படிநிலையில் வருகின்றது. குறிப்பிடத்தக்கச் சில சிபிஎஸ்சி பள்ளிகள் தவிர தமிழகத்தில் நான் அறிந்தவரையில் மனப்பாடம் செய்வது எப்படி என்பதாகத்தான் தற்போதைய கல்வித்திட்டத்தின் படி மாணவர்களை வழி நடத்துகின்றார்கள்.

இதற்குப் பிறகு வருவது தான் அரசு உதவி பெறும் பள்ளியும் அரசு பள்ளிக்கூடங்களும்.

தனியார் நடத்தும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் நிர்வாக கட்டமைப்பு, கண்டிப்பு போன்ற அனைத்தும் இன்னமும் பெரும்பாலும் உள்ளது. காரணம் அவர்கள் தொழில் ரீதியாகவும் தங்களைப் பலப்படுத்தியிருப்பால் மாபியா கூட்டம் அவர்களை கை வைக்க முடியாது. ஆனால் அரசு பள்ளிக்கூடம் என்பது மனசாட்சி உள்ள ஆசிரியர்களுடன் மனசாட்சி என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் ஆசிரியர்கள் கலந்து இருப்பதால் பொதுமக்கள் பார்வையில் வேறு விதமாகப் பார்க்கப்படுகின்றது.

ஆனால் தற்போதைய சூழலில் கல்வி கற்கும் இடங்கள் பணத்தின் அடிப்படையில் இத்தனை விதமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கல்வி கற்றுக் கொடுக்கும் விதமும் அதன் தரமும் பல விதமாகப் பிரிக்கப்பட்டுள்ளது என்ற போதிலும் மாணவர்களின் அறிவுத்திறன் குறித்து எவரும் யோசிப்பதில்லை. (எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் கற்பூர புத்தி, கரிப்புத்தி, வாழைமட்டை புத்தி என்பார்கள்)

அம்பானி நடத்தும் சர்வதேச பள்ளியில் என் பிள்ளையைக் கொண்டு போய் சேர்த்தால் அவன் பில்கேட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றத் தயார் ஆகி விடுவான் என்ற பொதுப்புத்தி நம்மவர்களிடம் உள்ளது.

ஒரு மாணவருக்கும் வைக்கப்படும் பரிட்சை என்பது மூன்று விதங்களில் அந்த மாணவரின் அறிவுத்திறன் வளர்ந்துள்ளதா என்பதனை அறிய மட்டுமே?

Critical, analytical, theoretical mind என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகின்ற வார்த்தைகளின் அடிப்படையில் பார்த்தால் திண்டுக்கல் மாணவி தியரிட்டிக்கல் என்ற பிரிவில் வருவார். 90 சதவிகித தமிழக மாணவர்கள் இதன் கீழ் தான் வரக்கூடும்.

இரண்டு காரணம்.

மொத்த பள்ளிக்கூட ஆசிரியர்களில் பத்து சதவிகித ஆசிரியர்கள் தான் தெளிவான உணர்ந்து புரிந்து மாணவர்கள் அளவுக்குக் கீழ் இறங்கி பாடம் நடத்தத் தெரிந்தவர்கள்.

மற்றவர்கள் வாசித்து விட்டுச் செல்பவர்கள்.

வாசிக்கும் போது உங்களுக்கு எரிச்சலாக வரும். நான் இதனை நேரிடையாகவே பார்த்து வருகின்றேன். ஆசிரியர்கள் எவரும் செய்தித்தாள்கள் வாசிப்பதில்லை. வெளியுலகம் தெரியாது. சமூகவியல், மாணவ உளவியல், நவீன தொழில் நுட்பத்தில் உருவாகியுள்ள, உருவாகிக் கொண்டு இருக்கும் மாற்றங்கள் போன்ற எதுவும் தெரியாது. தான் ஒரு வருடம் நடத்திய வேதியியல் பாடத்தை அடுத்த வருடம் இன்னமும் எளிமையாக எப்படி மாணவர்களுக்கு நடத்த முடியும் போன்ற பரீட்சார்த்த விசயங்களில் கவனம் செலுத்தக் கூடிய ஆசிரியர்கள் 100 ல் மூன்று பேர்கள் இருக்க வாய்ப்புண்டு. மற்ற அனைவரும் தத்தமது பொருளாதார வளர்ச்சி குறித்துத் தான் அதிகம் கவலைப்படுகின்றார்கள். கூடவே உடம்பு முழுக்க வைத்திருக்கும் நோய்கள் அவர்களைச் செயல்பட விடாமல் தடுக்கின்றது.

இவற்றை முறைப்படுத்த, இவர்களுக்குப் பயிற்சி அளிக்கத் தமிழக பள்ளிக் கல்வித்துறையில் இதுவரையிலும் சரியான அமைச்சர் வரவே இல்லை.

மாணவிகள் வறுமையில் இருந்தாலும் பெற்றோர்களின் கஷ்டங்களை புரிந்து கொள்ளக்கூடியவர்கள். ஓரளவுக்குப் படிக்கக்கூடிய அமைதியான சூழல் அமைந்து விட்டாலே போதுமானது. நிச்சயம் இந்த மாணவி போல ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் கூட விடாமல் படித்துக் கொண்டே இருப்பார்கள். பத்து மாதமும் சரியான ஆசிரியர்கள் வழிகாட்டலில் கடந்த காலத்தில் எவ்விதமான கேள்விகள் கேட்கப்பட்டன என்பதனை அறிவுறுத்திக் கூடுதல் கவனம் செலுத்திப் படிக்கும் போது நிச்சயம் நன்றாகவே எழுத முடியும். மனப் பாடம் செய்ததை எழுதுவது கடினம் அல்ல. அதுவொரு பயிற்சி. கவனச் சிதறல் இல்லாத அனைத்து மாணவ மாணவிகளும் இதனை இங்கே சாதிக்க முடியும்.

இந்த வருடம் தேர்வுத் தாள் திருத்துவதற்கு முன்பே ரசிகர் மன்றத் தலைவன் ஒரு பேட்டி அளித்து இருந்ததை நினைவு படுத்த விரும்புகின்றேன். எளிய முறையில் திருத்த வேண்டும் என்கிற அர்த்தத்தில் பட்டும் படாமல் மிரட்டியிருந்ததை வைத்து இப்போது ஒவ்வொரு வருடமும் கல்வி ரீதியாகப் பின்தங்கிய மாவட்டத்தில் உள்ள அத்தனை பள்ளிக்கூடமும் வெளுத்து வாங்கி உள்ளனர்.

அதாவது பள்ளிக்கல்வித்துறை செலவளிக்கும் 48 ஆயிரம் கோடிக்கு ப்ரேக் ஈவன் செய்து உள்ளனர். மாணவர்கள் ஒவ்வொருவரும் அடுத்த நான்கு வருடத்திற்கு குறைந்த பட்சம் நான்கு லட்சம் கல்வி என்கிற ரீதியில் செலவழிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தேர்ச்சி பெற்று விட்டாய் என்று அவர்களை ஆட்சியில் வந்து அமரும் ஒவ்வொருவரும் நல்லது செய்கின்றோம் என்ற நினைப்பில் களத்தில் இறக்கி விடுகின்றார்கள்.

மனப்பாடம் வழியே படித்து வந்து மதிப்பெண்கள் என்ற கீரிடம் சுமந்து கர்வத்துடன் கல்லூரி முடித்து வெளியே வந்து நிறுவனங்கள் மற்றும் உயர்படிப்புகள் எதிர்பார்க்கும் அனலிட்டிகல் மற்றும் கிரிட்டிகல் சார்ந்து வளர்த்துக் கொள்ள வேண்டிய அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ளாமல் வந்ததன் விளைவை இவர்கள் உணரும் போது தான் நான் கவலைப்பட்டு எழுதுவது புரியும்.

தவறு மாணவர்கள் மேல் அல்ல.

திண்டுக்கல் அண்ணாமலையார் பள்ளியை, அங்கு பணிபுரியும் அனைத்து ஆசிரியப் பெருமக்களையும் மாணவியை வாழ்த்துகிறேன்.

திருப்பூர் மாவட்டம் இரண்டு வருடத்திற்குப் பிறகு மீண்டும் சாதித்துள்ளது. வாழ்த்துகள்.

No comments:

Post a Comment

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.