அஸ்திவாரம்

Sunday, May 14, 2023

பிறந்த ஊருக்குச் சென்று வந்தேன் 12.05.2023

 

கடந்த வாரம் பிறந்த ஊருக்குச் சென்று வந்தேன். என் பார்வையின் வழியாக 2023 தமிழ்ச் சமூகம் எப்படியுள்ளது? என்பதனை ஒவ்வொரு பகுதியாக அறியத் தருகிறேன்.

முதலில் ரயில்வே துறையைப் பற்றி….




தற்போது ரயில்வே துறை என்பது பொதுத்துறை என்றாலும் அது முழுக்க முழுக்க பணம் காய்ச்சி மரமாக மாற்றப்பட்டுள்ளது. காரணம் எத்தனை கோடி வரவாக வந்தாலும் அது போதாது என்கிற அளவுக்கு 1952 முதல் படிப்படியாகச் செய்து வர வேண்டிய ரயில்வே மாற்றங்கள், சீர்திருத்தங்கள் எதுவுமே இங்கே நடக்காத காரணம் மக்களுக்கு வலித்தாலும் உறிஞ்ச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் முதல் திருச்சி டிக்கெட் விலை 125 ரூபாய். ஆனால் இணையம் வழியே ரொக்க அட்டை மூலமாக எடுத்தால் 25 ரூபாய் அதிகம். இதே போல ஐந்தில் ஒரு மடங்கு தொகை கட்டணத்தை உயர்த்தாமல் வசூலிக்கப் படுகின்றது. மின் வழிப்பாதை, காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை உருவாகிக் கொண்டு இருக்கும் தடங்கள், சீரமைப்பு என்று என்னளவில் சமாதானம் செய்து கொண்டு இது இயல்பான கட்டணம் தான் என்று நினைத்து இருந்தேன்.

மாநிலத்தில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் திருப்பூர் என்ற ஊர் தேர்தல் சமயங்களில் வசூல் செய்வதற்குரிய ஊராகவே இன்று வரையிலும் வைத்துள்ளனர். மற்றபடி இங்குள்ள கட்டமைப்பு குறித்து எவரும் கவலைப்படுவதில்லை. இங்கு இருக்கும் முக்கிய பிரமுகர்களே ஏதாவது வந்து விடப் போகின்றது என்ற பதற்றத்தில் இருப்பார்கள். அவரவர் ஆதிக்கம் தளர்ந்து விடக்கூடாது என்பதில் தான் 1990 முதல் இன்று வரை மிகுந்த அக்கறை காட்டி ஊரைப் பாதிக்கும் கீழே (செய்ய வேண்டிய வியாபாரத் தொகையில்) இருக்கும்படி பார்த்துப் பக்குவமாக வாழ்ந்து வருகின்றனர்.

மோடி பிரதமராக வந்த பின்பு ரயில்வே துறை புலிப்பாய்ச்சலில் ஓடத் தொடங்கியது. பலமுறை நானே எழுதியுள்ளேன். ஆனால் இந்த முறை பார்த்த விசயங்கள் உணர்த்திய விதம் வேறுவிதமாக இருந்தது.

நாலைந்து முறை திருப்பூர் ரயில் நிலையத்தில் பார்த்துவிட்டேன். நாய்கள் நடைமேடையில் கூட்டம் கூட்டமாக உலாவுகின்றது. பெரிய கூட்டத்திற்குள் கூச்சமில்லாமல் பயமில்லாமல் திரியும் நான்கு கால் பிராணிகளுக்கு சர்வ சுதந்திரத்தை நம் ரயில்வே துறை வழங்கியுள்ளது.

ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் சுகாதார பராமரிப்பு அடிவாங்கி கொண்டு இருக்கின்றது. இன்னமும் மோசமான எல்லைக்குள் நுழையவில்லை. இந்த முறை நான் பார்த்த காட்சிகள் விரைவில் அதற்குள் பழைய (காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்தது போல) காலம் போல மாறிவிடும் என்றே எனக்குத் தோன்றியது.

திருப்பூரிலிருந்து இந்தியாவின் சகல பகுதிக்கும் ஒரு ரயில் மூலம் பயணிக்க முடியும். ஆனால் இன்று வரை அதன் அடிப்படைத் தேவைகளில் கால் பங்கு கூட நிறைவேற்றப்படவில்லை. பிரதமரின் சிறப்பு திட்டத்தில் திருப்பூர் ரயில் நிலையமும் உண்டு என்றார்கள். ஆனால் சுற்றுச்சுவர்களுக்கு வண்ணம் பூச யார் சிக்குவார்கள் என்று அதிகாரிகள் ஆவலாய் பறக்கின்றார்கள். காரணம் கேட்டால் எங்களுக்கு நிதி எதுவும் வரவில்லை என்கிறார்கள். அப்படியாயின் வெளியே நாம் பார்க்கும் படிக்கும் லோலாக்கு விளம்பரங்கள் நமக்கு எதைச் சொல்கின்றது?

கடந்த ஆறு மாதங்களில் நான் பயணித்த வேகம், மிக வேகம் போன்ற அனைத்து ரயில்களும் குறைந்தபட்சம் அரை மணி நேரம் முதல் ஐம்பது நிமிடங்கள் வரை தாமதமாகத்தான் வந்து சேர்கின்றது.

ஒரு ரயில்வே நிலையம். ஒரு பொருள் என்ற மத்திய அரசின் திட்டம் வெளியே இருந்து பார்க்கும் சிறப்பானதாகத்தான் உள்ளது. ஆனால் நான் கவனித்த வரைக்கும் (திருச்சியில் உள்ள கடையில் பேசினேன்) செல்ப் எடுக்கவில்லை. மக்கள் தின்பண்டங்களுக்கு மட்டும் தான் ஆவலாய் பறக்கின்றார்கள். பயணத்தின் தொடக்கம் முதல் இறுதி வரைக்கும் கண் வலித்தாலும் திறன்பேசியை விடுவதே இல்லை. காது நொய்ங் என்ற சப்தம் வந்தாலும் கவலையில்ல. ப்ளு டூத் யை கழட்ட விரும்புவதே இல்லை. திருச்சி போன்ற பெரிய ரயில் நிலையங்களில் கூடப் பத்திரிக்கைகள், வார இதழ்கள் உள்ள கடைகள் இல்லை. இளையர்கள் மட்டுமல்ல கிழடுகள் கூட மொத்தமாக ஐரோப்பிய வாழ்க்கை முறைக்கு மாறிவிட்டனர். பயணங்களின் போது மக்களின் வாசிப்பு என்ற வழக்கம் அடியோடு ஒழிந்துவிட்டது.

அஸ்வினி போன்ற புத்திசாலி அமைச்சர்கள் போன்றவர்கள் கையில் மக்களின் அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடைய இரண்டு பெரிய துறைகளான ரயில்வே மற்றும் தொலைத்தொடர்பு கொடுத்து இருக்கவே கூடாது என்றே தொடக்கம் முதல் சொல்லி வருகின்றேன். அவர் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் காட்டும் ஆர்வமும், செயலர் பதவிக்குண்டான செயல்பாடுகளும் இந்தத் துறைகளை வேறு விதமாக வளர்க்கும் என்பதில் யாதொரு ஐயமும் இல்லை. அது சத்தியமாகச் சாதாரண மக்களுக்குத் துளியும் பலன் இருக்காது என்பதனை பலவிதங்களில் பயணத்தின் போது பார்த்தேன்.

பாசஞ்சர் என்ற வகையை நிறுத்தி அதனை ஃபாஸ்ட் பாசஞ்சர் என்று நாமகரணம் சூட்டி 65 ரூபாய் கட்டணம் என்றால் 130 ரூபாய் என்று மாற்றியுள்ளனர். ஆனால் வேகத்திற்கும் ரயிலுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. திருப்பூர் முதல் திருச்சிக்கு ஐந்து மணி நேரம் பயணச் சாதனை நிகழ்த்துகின்றார்கள். அலுவலகங்களில் பணிபுரிகின்றவர்கள், கல்லூரி மாணவர்கள், தத்தமது வியாபாரத்திற்காகப் பொருட்களுடன் வந்து போய்க் கொண்டு இருக்கும் வியாபாரிகள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பீகானிர் (ராஜஸ்தான்) முதல் மதுரை வரைக்கும் வந்து சேர்கின்ற நவீன ரயிலைப் பார்த்த போது வியப்பாக இருந்தது. படு சுத்தம். உள்ளே ஆச்சரியப்படத்தக்க வகையில் ஏற்பாடு மற்றும் கவனிப்பு. நான் புரிந்து கொண்டது நீண்ட தூரம் கட்டணம் அதிகம் உள்ள ஒவ்வொரு ரயிலின் வருமானம் தான் ரயில்வே துறைக்குக் குறியாக மாற்றப்பட்டுள்ளது. காரணம் தற்போது சரக்கு போல அனைத்து ரயில் மண்டலங்களும் நல்ல லாபத்துடன் இயங்கி வருகின்றது.

மோடி அவர்கள் கட்டாயம் ஜிஎஸ்டி யை மீண்டும் ஒரு கவனத்துக்குள் எடுத்து இன்னும் அடுக்குகளை மாற்ற வேண்டும். டிக்கெட் கேன்சல் செய்தால் பாதிக்குப் பாதி என்பதெல்லாம் என்ன கணக்கு? அதிலும் ஜிஎஸ்டி போன்ற பல விசயங்களை இனியாவது கொஞ்சம் சீர்திருத்தப் பாதைக்குக் கொண்டு வரலாம்.

தண்டக்கரு மாந்திரத்திற்காக வேறு வழியே தெரியாமல் வைத்திருக்க வேண்டிய ரயில்வே தடம் (காரைக்குடி முதல் மயிலாடுதுறை தடத்தை அப்படித்தான் வைத்து உள்ளனர். ரயில்வே கேட் மூட ரயில் டிரைவர் இறங்கி வந்து மூடி விட்டு ரயிலை ஓட்டிச் செல்ல வேண்டும். புதுக்கோட்டை காரைக்குடி ரயில்வே தடத்தில் கூட கோட்டையூர் ரயில் நிலையத்தில் ஒப்பந்தக் கூலி முறையில் டிக்கெட் கொடுப்பவர் உள்ளார். அவருக்கு காய்ச்சல் என்று வராமல் இருந்தால் அங்கிருந்து பயணம் செய்ய நினைப்பவர்கள் காரைக்குடிக்குத்தான் நேராகச் செல்ல வேண்டும்.

நான் புரிந்து கொண்டது. சுற்றுலாத்தலங்கள் பாதையில் இருக்க வேண்டும் அல்லது அதனை நோக்கி தடம் செல்ல வேண்டும். கோவில் தலமாக இருக்க வேண்டும். மக்கள் தொடர்ந்து வரவழைக்கக்கூடிய இடமாக இருந்தால் அதன் மீது கவனிப்பு என்பது வேறு. மற்றபடி தொழில் நகரம் என்பது கூட இரண்டாம் பட்சமாகவே உள்ளது.

மத்திய ரயில்வே துறை செய்யக்கூடிய மற்றொரு கொடுமையான விசயம் என்னவெனில் அரை மணி நேரத்தை மாற்றி அமைத்தால் இணைப்பு ரயில் பயணிப்பவர்களுக்குக் கிடைக்கும். கோவையிலிருந்து திருச்சி சென்று அங்கிருந்து பேருந்து வழியே காரைக்குடி அல்லது இராமேஸ்வரம் செல்ல வேண்டும். இந்த இணைப்பு ரயில் விசயமாக மோதிப் பார்த்தாகிவிட்டது. பாராளுமன்ற உறுப்பினர்கள் தான் பேச வேண்டுமாம்.

தமிழகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 120 கோடி வேண்டும்? நான் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு இருக்கின்றேன்.

No comments:

Post a Comment

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.