அஸ்திவாரம்

Thursday, October 06, 2022

OPS.பன்னீர்செல்வம் சொத்துக்கள்.

பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுகையில் தனது சொத்தாக பன்னீர்செல்வம் மாநில தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்த சொத்துக்கள் ஒரு ஏக்கர் விவசாய நிலம்.  ஒரு டீக்கடை. 25 சவரன் தங்க நகை மற்றும் தன் மனைவி விஜயலட்சுமி பெயரில் உள்ள 7.61 லட்சம் மதிப்புள்ள வீடு.

2016 தேர்தலில் போட்டியிடுகையில் பன்னீர்செல்வம் வெளியிட்ட சொத்துக்கள்.   அசையும் சொத்துக்கள் 8.6 லட்சம்.  அசையா சொத்துக்கள் 33.20 லட்சம்.   கடன் 25 லட்சம்.   மனைவியின் சொத்துக்களாக 200 கிராம் தங்கம், 26.32 அசையும் சொத்துக்கள்,  26,32 லட்சம்.   27 ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் 2000 சதுர அடி வீடு ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.


2006ல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், உத்தமர் பன்னீர்செல்வம் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.    ஜெயலலிதா கூட சொத்துக் குவிப்பு வழக்கில் தப்பிக்க முடியவில்லை.  ஆனால் பன்னீர்செல்வம், சட்டத்தில் உள்ள நூதனமான ஓட்டைகளை பயன்படுத்தி லாவகமாக தப்பித்தார்.

லஞ்ச ஒழிப்புத் துறை, பன்னீர்செல்வம், அவர் மனைவி விஜயலட்சுமி, பன்னீர் மகன் ரவீந்திரநாத் குமார்,  அவர் சகோதரர் ஓ.ராஜா, ராஜாவின் மனைவி சசிகலாவதி, மற்றொரு சகோதரர் ஓ.பாலமுருகன் மற்றும் அவரது மனைவி லதா மகேஷ்வரி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தது.  குற்றப் பத்திரிக்கையின்படி, வழக்கு காலமான 19.05.2001 அன்று உள்ளபடி, பன்னீர்செல்வத்தின் சொத்து 17,44,840.   வழக்கு காலத்தில் அவரது வருமானம், 46,05,454.   இந்த காலகட்டத்தில் செலவு 67,82,569.

வருமானம், செலவு ஆகியவற்றை கூட்டி கழித்துப் பார்த்தால், வழக்கு கால இறுதியில், பன்னீர்செல்வம், அவர் பெயரிலும் அவர் பினாமி பெயர்களிலும் 1,72,03,116  அதாவது ஒரு கோடியே 72 லட்சம் சொத்து சேர்த்ததாக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.   

இந்த வழக்கையே லஞ்ச ஒழிப்புத் துறை சரியாக புலன் விசாரணை செய்யவில்லை.  சரியான முறையில் விசாரணையை மேற்கொண்டிருந்தால், பன்னீர்செல்வத்தின் சொத்து, 2006 காலகட்டத்திலேயே குறைந்தது 20 கோடியை தாண்டியிருக்கும்.

2009ம் ஆண்டில் இந்த வழக்கு, தேனி தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது.   இந்த நீதிமன்றத்தில் பன்னீர்செல்வமும் அவர் குடும்பத்தினரும் தொடர்ந்து ஆஜராகி வருகின்றனர்.   ஆனால் வழக்கு விசாரணை தொடங்கவில்லை.  

ஒரு வழக்கிலிருந்து குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை விடுவிக்கக் கோரி, மனு தாக்கல் செய்ய உரிமை உண்டு.  

ஆனால் பன்னீர்செல்வம், விடுவிப்பு மனுவுக்கு பதிலாக, வழக்கை மேலும் புலனாய்வு செய்ய வேண்டும் என்று ஒரு மனுவை தாக்கல் செய்கிறார்.   அந்த மனுவை நீதிமன்றம் அனுமதிக்கிறது.

இதற்கிடையே லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் சிறப்பு நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டு,  வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் தொடங்குகிறது.  

அங்கே தேனி நீதிமன்றம் வழக்கை மேலும் விசாரணை செய்ய உத்தரவிட்டிருப்பதாக பன்னீர் மனுத் தாக்கல் செய்கிறார்.  ஆனால் அந்த மனு நிராகரிக்கப்படுகிறது. 

 மதுரைக் கிளை உயர்நீதிமன்றத்தில் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணை செய்யக் கூடாது என்று மனுத் தாக்கல் செய்து, விசாரணையை சிவகங்கை நீதிமன்றத்துக்கு மாற்றுகிறார் பன்னீர்செல்வம்.   

2011ல் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, லஞ்ச ஒழிப்புத் துறையும் பன்னீர்செல்வம் கட்டுப்பாட்டில் வருகிறது.   அரசு வழக்கறிஞர்கள் அனைவரும் அதிமுகவினராக நியமிக்கப்படுகிறார்கள்.

2012ல், சிவகங்கை நீதிமன்றம், பன்னீர்செல்வம் மீது போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி அவரை விடுதலை செய்கிறது.

  இந்த வழக்கில் பன்னீர்செல்வம் சார்பில் ஆஜரானது அவரது மகள் வழி சம்பந்தி செல்லபாண்டியன்.  பின்னாளில் அவர் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞராக ஆனார்.

ஆனால் பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் உருவாக்கியுள்ள சாம்ராஜ்யம், பெரும் தொழிலதிபர்களையும் வெட்கம் கொள்ளச் செய்யக் கூடியது.

பன்னீர்செல்வத்தின் மகன்கள் முதலில் செய்த முதலீடு பல ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கிய ஜெயவந்த் என்டர்பிரைசஸ்.  பழைய பொருட்களை மொத்தமாக வாங்கும் நிறுவனம் இது.    

தேனியை சேர்ந்த அதிமுக பிரமுகரான ராஜகுரு நாயுடுவின் அறிவுரையின் பேரில், திருப்பூரில் ஒரு நூற்பாலையில் முதலீடு செய்கின்றனர். 

திருப்பூரில் ஏற்கனவே நூற்பாலை தொழிலில் இருந்த ஹரிசந்திரன் மற்றும் ஞானசேகரன் என்பவர்களின் அறிமுகம் கிடைக்கிறது.   அதன் பிறகு சுக்கிர திசைதான்.

வாணி பேப்ரிக்ஸ் என்ற நிறுவனத்தில் பன்னீரின் மகன்கள் ரவீந்திரநாத் குமார் மற்றும், ஜெயப்ரதீப் ஆகியோர் சேர்ந்து 12 கோடி முதலீட்டில்,   தொடங்குகின்றனர்.   

15 கோடி முதலீட்டில் வாணி ஸ்பின்னர்ஸ்.  8 கோடி முதலீட்டில் வாணி டெக்ஸ்டைல்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஜவுளித் துறையில் மட்டும்.  இந்த நிறுவனங்கள், எண் 5, தட்டான் தோட்டம், இரண்டாவது குறுக்குத் தெரு, பல்லடம் சாலை, திருப்பூர் என்ற முகவரியில் இருந்து இயங்குகின்றன.

இதன் பிறகு பிரம்மாண்ட வளர்ச்சியை கண்ட மற்றொரு நிறுவனம் எக்செலன்ட் மெரைன்லைன் ப்ரைவேட் லிமிட்டெட் (Xllent Marine Line Private Limited).  அண்ணா சாலையில் அமைந்துள்ள ரஹேஜா டவர்ஸில், இதன் அலுவலகம் அமைந்துள்ளது.

 2016க்கு முன்பாக, கன்டெய்னர்களை வாடகைக்கு எடுத்து அதன் மூலம் லாஜிஸ்டிக்ஸ் தொழில் நடத்தி வைத்த இந்த நிறுவனம், 2016க்கு பிறகு, திடீர் வளர்ச்சியை அடைந்துள்ளது.   

தற்போது இந்த நிறுவனத்தின் இணையதளம் 80க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு எந்த பொருளை வேண்டுமானாலும் எடுத்துச் செல்லக் கூடிய மிகப் பெரும் நிறுவனம் என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறது.  பல நாடுகளில் இந்நிறுவனத்துக்கு அலுவலகம் உள்ளன.

துருக்கி நாட்டுக்கு சரக்கு போக்குவரத்து நடத்திய விபரத்தை கூறும் எக்செலன்ட் நிறுவனம்.

இந்த நிறுவனத்தில் மொத்தம் 8 இயக்குநர்கள் உள்ளனர்.   17 ஆகஸ்ட் 2016ல், பன்னீரின் மகன்கள் ரவீந்திரநாத் மற்றும் ஜெயபிரதீப் ஆகியோர் பங்குதாரர்களாக இணைகிறார்கள்.  

இந்த நிறுவனத்தில் இயக்குநராக உள்ள ராஜேந்திரன் தரணி என்பவர் பன்னீர் மகன் ரவீந்திரநாத்தின் நெருக்கமான நண்பர்.    இந்த தரணியின் தொடர்பு காரணமாக மேலும் பல்வேறு புதிய நிறுவனங்களில் பன்னீர்செல்வத்தின் மகன்கள் முதலீடு செய்துள்ளனர்.

திருப்பூரில் இருந்து செயல்பட்டு வரும், எச்எஸ்வி கார்ப்பரேஷன் சோலார் என்ற நிறுவனம் 5 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ளது.

   பன்னீர் மகன்களின் நிறுவனங்களில் பங்குதாரராக உள்ள ஹரிசந்திரன் இதிலும் பங்குதாரராக உள்ளார்.

 ரவீந்திரநாத் மற்றும் செந்தில்குமார் என்பவர் பங்குதாரராக உள்ள மற்றொரு நிறுவனம், பாண்டி பஜார், ரெயின்போ ஆர்கேடில் இருந்து இயங்கும் வில்லோ நெட்.  இந்த நிறுவனத்தில் முதலீடு 50 லட்சம். 

 சென்னை,ராஜா அண்ணாமலை புரத்தில் இருந்து இயங்கும் மற்றொரு நிறுவனம் ஜெயவந்த் என்டர்பிரைசஸ்.   இதில் பன்னீர் மகன்களின் முதலீடு 50 லட்சம்.

  மற்றொரு நிறுவனமான மேட்ரிக்ஸ் மீடியா டிசைன்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனம், குமார் கிருஷ்ணா, எண் 56, 2வது மெயின் ரோடு, ராஜா அண்ணாமலை புரம் என்ற முகவரியில் இருந்து இயங்குகிறது.  இதில் இவர்களின் முதலீடு 75 லட்சம்.   

 இந்த நிறுவனம் திரைப்படம் மற்றும் தயாரிப்பு வேலைகளில் ஈடுபடும் ஒரு நிறுவனம்.

பன்னீர் மகன்கள்  பங்குதாரர்களாக உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பெயர் க்ளோபல் ஹோம் ரியாலிட்டீஸ். இது தேனி மாவட்டத்திலிருந்து இயங்குகிறது.  இதில் இவர்களின் முதலீடு 10 கோடி.

இது வரை குறிப்பிட்ட நிறுவனங்களில்   பன்னீரின் மகன்கள் கணக்கில் காட்டிய பணத்தை முதலீடு செய்தது மட்டுமே 70 கோடியை தாண்டுகிறது.

பன்னீரின் மகன்கள் ரவீந்திரநாத், மற்றும் ஜெயப்ரதீப் தவிர்த்து, பன்னீரின் மகள் கவிதா பானு ஆகியோர் முதலீடு செய்து நடத்தப்பட்டு வரும் நிறுவனம், விஜயந்த் டெவலப்பர்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட்.  

இந்த நிறுவனம், ஃப்ளாட் எண் எஸ்.2, சல்மா க்ரீன் கேஸ்சில், 154, க்ரீன்வேஸ் சாலை, ராஜா அண்ணாமலைபுரம்,  சென்னை 28 என்ற முகவரியில் இருந்து இயங்கி வருகிறது.

இந்த சல்மா க்ரீன் கேஸ்சில் அடுக்கு மாடியில், பன்னீரின் மகன் ஜெயப்ரதீப் பெயரில் 2வது தளத்தில் வீடு உள்ளது.   பன்னீர்செல்வம் மற்றும் அவர் மகள் கவிதா பானு பெயரில் 3-வது தளத்தில் ஒரு வீடு உள்ளது.

இது தவிர, பசுமை வழிச்சாலையிலேயே, கேஜீஎஸ் என்ற பெயரில் ஒரு உயர் ரக சொகுசு மாடிக் குடியிருப்பு உள்ளது.  

இந்த குடியிருப்பில் மிகப் பெரிய வீடு ஒன்று, பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தின் நண்பர் அஷ்வின் என்பவர் பெயரில் உள்ளது.    இந்த வீட்டில்தான் தற்போது ரவீந்திரநாத் குடியிருந்து வருகிறார்.

 அஷ்வினிடம் இருந்து வாடகைக்கு இந்த வீட்டில் இருப்பதாக ஒப்பந்தமெல்லாம் போடப்பட்டு உள்ளது. 

இந்த அஷ்வினின் தந்தை பாஷ்யம் என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார்.   சென்னையின் முன்னணி கட்டுமான நிறுவனங்களில் இது ஒன்று.    இந்த கட்டுமான நிறுவனத்தில்தான், பன்னீர்செல்வத்தின் கருப்புப் பணம் முதலீடு செய்யப்படுகிறது.

இந்த நிறுவனங்களில் பன்னீரின் மகன்கள் மற்றும் மகள் செய்துள்ள முதலீடுகள் அனைத்தும் வெள்ளையாக கணக்கு காண்பித்த பணம் மட்டுமே.   

பெரியகுளத்தில் உள்ள ஒரு பிரபலமான கோவில் பாலமுருகன் கோவில்.  இந்த கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டுவதற்காக தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  இந்த கோவில் திருப்பணிக்காக ஒரே காசோலையில் பன்னீரின் மகன் 95 லட்ச ரூபாயை வழங்கியுள்ளார்.

இது போக ஓட்டக்காரத் தேவர் கல்வி அறக்கட்டளை என்று ஒரு ட்ரஸ்ட் உருவாக்கப்பட்டுள்ளது.   பன்னீரின் தம்பி ராஜா, அவர் மனைவி சசிகலாவதி, மகன் அமர்நாத் மற்றும் பன்னீரின் சகோதரி ஒருவர் இதன் நிர்வாகிகளாக உள்ளனர்.  15 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இந்த அறக்கட்டளை பெயரில் உள்ளன.

இப்படி கணக்கு காட்டும் பணத்தையே தண்ணீர் போல இரைக்கும் அளவுக்கு இவர்களிடம் பணம் கொட்டிக் கிடக்கிறதென்றால், கணக்கில் வராத கருப்புப் பணம் எவ்வளவு இருக்கும் என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன்.


No comments:

Post a Comment

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.