மோடி தனது அரசியல் பொது வாழ்வில் தலைமைப் பதவியில் அடியெடுத்துவைத்து இந்த ஆண்டோடு (அக்டோபர் 2021) இருபது ஆண்டுகள் நிறைவடைகின்றன.
அதாவது, குஜராத் முதல்வராக 13 ஆண்டுகளும், இந்தியப் பிரதமராக ஏழு ஆண்டுகளும் எனத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பில் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறார் மோடி.
இதையும் கொண்டாடும்விதமாக, இன்று முதல் தொடர்ந்து 20 நாள்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் திட்டமிட்டிருக்கிறார்கள் பா.ஜ.க-வினர்.
2001-ம் ஆண்டு பாஜக சார்பில் முதன்முறையாக குஜராத் முதல்வராக, மோடி தனது அரசியல் பொது வாழ்க்கையில் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
முதற்கட்டமாக குஜராத் பூகம்பத்தால் ஏற்பட்ட பேரழிவுகளிலிருந்து மாநிலத்தை மீட்டெடுக்கும் பணிகளைத் துரிதப்படுத்தினார்.
2002-ம் ஆண்டில் மோடி தலைமையிலான மாநில அரசு ராஜினாமா செய்தது. இருப்பினும், அதே ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று இரண்டாவது முறை முதல்வரானார் மோடி.
அதிலிருந்து குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முழுமூச்சாக உழைத்தார். சோலார் மின் உற்பத்தி மூலம் குஜராத்தை மின்மிகை மாநிலமாக்கியது, குட்காவுக்குத் தடை விதித்து போதைக்கு அடிமையான இளைஞர்களை விடுவித்தது, கார்ப்பரேட் முதலீடுகளைப் பெற்று தொழில் வளர்ச்சி கண்டது, ஊழலற்ற நிர்வாகத்தால் கல்வி, சுகாதாரம், விவசாயம், குடிநீர், சாலைப் போக்குவரத்து என அத்தனை துறைகளிலும் அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்தியது போன்ற பல்வேறு மறுமலர்ச்சி திட்டங்களைச் செயல்படுத்தினார்.
இதன்பொருட்டு, அடுத்தடுத்து வந்த 2007, 2012 குஜராத் சட்டமன்றத் தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்று, நான்கு முறை முதல்வராக அரியணை ஏறினார். குஜராத் மாநிலத்தின் மிக நீண்டகால முதல்வர் என்கிற தனிச்சிறப்பைப் பெற்றார்.
2006-ல் `இந்தியா டுடே' நாளிதழ் இந்தியாவின் 'சிறந்த முதல்வர்' என்ற விருதை வழங்கி கௌரவித்தது.
‘கம்ப்யூட்டர் சொசைட்டி ஆஃப் இந்தியா’ அமைப்பு ‘இ-ரத்னா’ விருதை வழங்கியது.
தொடர்ந்து, 2009-ல் ஆசியாவின் சிறந்த ‘எஃப்.டி.ஐ பர்சனாலிட்டி’ விருது,
2012-ல் 'டைம்’ இதழின் அட்டைப்படத்தில் இடம் பெற்று இந்தியாவின் ‘சிறந்த அரசியல்வாதி'
என்றெல்லாம் போற்றுதலும், புகழ் விருதுகளும் பெற்று இந்திய அளவில் செல்வாக்குமிக்க தலைவராக உருப்பெற்றார்.
மோடியின் செயல்பாடுகள், புகழ் வெளிச்சம், குஜராத் மாடல் போன்ற பல்வேறு காரணங்களால், பாஜக தலைமை, அவரை 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவித்தது.
தென்னகம் தவிர, நாடெங்கும் மோடி அலை வீசியது. தேர்தல் முடிவில் பாஜக கூட்டணி 336 மக்களவை இடங்களில் வெற்றிபெற்று, ஆட்சியமைத்தது. மோடி முதன்முறையாக இந்தியாவின் பிரதமரானர்.
அதிலிருந்து பல்வேறு அதிரடித் திட்டங்களைச் செயல்படுத்தினார்.
2014-ல் மோடி கொண்டுவந்த `தூய்மை இந்தியா இயக்கம்' நாடு முழுவதும் தொடங்கப்பட்டு, உலக சுகாதார நிறுவனத்தின் பாராட்டைப் பெற்றது. உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமாக ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைக் கொண்டுவந்து ஏழை, நடுத்தர மக்களும் மருத்துவ உயர் சிகிச்சை பெறுவதற்கு வழிவகை செய்தார்.
இந்திய மக்கள் ஒவ்வொருவருக்கும் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும் என்று கூறி `பிரதமர் ஜன் தன் யோஜனா' திட்டத்தைக் கொண்டு வந்து, 35 கோடிக்கும் அதிகமான வங்கிக் கணக்குகளைத் தொடங்கச் செய்தார்.
குடும்பப் பெண்களுக்குப் புகையில்லா சமையலறை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என்ற நோக்கில், `பிரதமர் உஜ்வாலா' திட்டத்தைக் கொண்டுவந்து, ஏழைகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்க ஏற்பாடு செய்தார்.
இந்தியர்கள் வீடில்லாமல் இருக்கக் கூடாது என்று கூறி, `பிரதமர் ஆவாஸ் யோஜனா' திட்டத்தைக் கொண்டுவந்து, சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான வீடுகளை இலவசமாகக் கட்டித்தந்தார்.
சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் மின்சார இணைப்பு இல்லாமல் இருந்த சுமார் 18,000 கிராமங்களுக்கு மின்சார வசதி ஏற்படுத்தித் தரப்பட்டது.
கார்ப்பரேட் அல்லாத சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் பயனடையும் வகையில், 'பிரதமர் முத்ரா யோஜனா' திட்டத்தைக் கொண்டுவந்து, சுமார் 10 லட்சம் ரூபாய் வரை கடனுதவி பெற வழிசெய்தார்.
பெண் குழந்தைகளின் உயர் கல்வி, திருமணம் போன்ற எதிர்கால நலன்களுக்காக, அதிக வட்டி வழங்கும் 'சுகன்யா சம்ரிதி' எனும் அஞ்சலக சேமிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
இந்தியாவை சர்வதேச உற்பத்தி மையமாக மாற்ற முயலும்விதமாக, `மேக் இன் இந்தியா’ திட்டத்தை கொண்டுவந்தார்.
இதற்கு முன்பு இந்தியப் பிரதமர்களே செல்லாத சிறிய நாடுகள் உட்பட 58 நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார்.
தொலைத்தொடர்பு, பாதுகாப்பு, வளர்ச்சி சம்பந்தமாக பல்வேறு ஒப்பந்தங்களை அந்நாடுகளுடன் ஏற்படுத்திக்கொண்டார்.
இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் பறைசாற்றும்படி, சர்வதேச யோகா தினத்தை ஐ.நா அங்கீகரிக்க உறுதுணையாக விளங்கினார்.
Listen to "'மக்களை நோக்கிய என் பயணத்தில் உங்க துணை தேவை' (BJP Anna Letter-7)"
⚓ https://anchor.fm/jothig/episodes/BJP-Anna-Letter-7-e17hfv3/a-a6hu08q
எதிர்ப்பும் ஆதரவும் நிலவிய இரட்டைச் சூழ்நிலையில், 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக 303 மக்களவை இடங்களில் தனித்து வெற்றிபெற்று, மீண்டும் இரண்டாவது முறையாக மோடி பிரதமரானார்.
No comments:
Post a Comment
கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.