ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு சின்னம்மா என்ற சசிகலா என்ற தியாகத்தலைவி கொடுங்கோலர்களின் சிறுமதியால் சிறை சென்று தன் தாய் தமிழ்நாட்டிற்கு வருகை தந்த போது, நடந்த முன்னேற்பாடுகள், நிகழ் கால அரசியல் சூழல் குறித்து எழுதியிருந்தேன். நான் பத்திரிக்கையாளர் அல்ல. களத்தில் சென்று பார்க்கக்கூடிய வாய்ப்பும் உள்ளவன் அல்ல.
ஆனால் இங்கு நடக்கும் ஒவ்வொன்றையும் ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டுக் கொண்டு மனதிற்குள் வைத்திருப்பதை எழுத வாய்ப்பிருப்பதால் எழுத முடிந்தது.
ஆனால் ஒவ்வொரு பத்திரிக்கையும் அவரவர் நிர்வாகம் சொல்லும் ஏற்ற இறக்கத்துடன் தாள லயத்தோடு (வாங்கிய விளம்பரக் காசுக்கு என்று அர்த்தம் கொள்ளவும்) கட்டுரைகளாகச் செய்திகளாக வெளியிட்டாலும் அதற்குள் சில உண்மைகள் ஒளிந்திருக்கும். எத்தனை நாளைக்குடா எங்களை ஏமாற்றுவாய்? என்ற குறுக்குப்புத்தி வாசிப்பாளர்களால் எளிதாக உணர்ந்து கொள்ள முடியும்.
நான் என்ன எழுதியிருந்தேனோ அதனை அப்படியே இரண்டு செய்தித்தாள்கள் வெவ்வேறு விதமாக எழுதியிருந்தார்கள். எண்ணிக்கை கொஞ்சம் முன்னே பின்னே இருக்கலாம்.
ஆனால் கில்லாடி எடப்பாடிக்கு உளவுத்துறை கொடுத்த அறிக்கை என்று வேறு சேர்த்திருந்தார்கள். இரண்டு செய்தித்தாளிலும் வந்த முக்கியமான சமாச்சாரங்கள். கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து பெயிண்ட் பூசி உள்ளேன்.
கூட்டம் கூட்டினால் அது மாஸ் என்பதனையும், தான் ஆடம்பரமாக மகாராணி போல (நீண்ட வாகன அணிவகுப்பு, கட் அவுட் கலாச்சாரம்) சென்று இறங்க வேண்டும் அல்லது சாலை வழியாகச் செல்லும் போது பத்தடிக்கு ஒரு காவல்காரர் நிற்க வேண்டும் என்ற கலாச்சாரத்தை உருவாக்கியவர் தாயம்மா அவர்கள். பொட்ட வெயிலில் அவர்கள் நிற்க வேண்டிய அவரவர் தலையெழுத்து. அதைத்தான் தினகரன் கையில் எடுத்துக் கொண்டார். ஆனால் அதற்காக அவர் உருவாக்கிய திட்டமிடல் பலே ரகம். செலவழித்த தொகை அதிர்ச்சியின் உச்சம்.
இன்னும் எத்தனை லட்சம் கோடிகள் எங்கங்கு வைத்திருக்கிறார்கள் என்பதே புரியவில்லை?
தாயம்மா சுற்றுப்பயணத்தில் கொடி காட்டும் வீரர்களாகச் செயல்பட்டவர்கள் செங்கோட்டையன் மற்றும் தம்பிதுரை. அந்தந்த இடங்களில் முன்னால் சென்று கொடியாட்டி வரவேற்பு அளிப்பார்கள். அந்த இடத்தில் பேச வேண்டும் என்று தாயம்மா வாகனம் நிற்கும். அப்படித்தான் தினகரன் சசிகலா வருகைக்காக எத்தனை பாயிண்ட் என்பதனை திட்டமிட்டுள்ளார். தொடக்கத்தில் மொத்த 350 கிமீ தொலைவுக்கு 71 பாயிண்ட் என்பதனை ஒரு மாதத்திற்கு முன்பே திட்டமிட்டுள்ளார். பிறகு 100 என்று மாறி கடைசியில் 120 நிறுத்தங்கள் என்று மாறியது.
கடந்த முப்பது நாட்களாகத் தான் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் இந்த திட்டமிடுதலை முக்கியமாக வைத்து ஆட்களைத் திரட்டுவது தான் அவரின் முக்கியப் பணியாக இருந்துள்ளது.
தியாகத்தலைவி பயன்படுத்தும் வாகனத்தில் ஒரே மூச்சாக சென்னை வந்தால் அதிகபட்சம் 6 மணி நேரம் போதும். ஆனால் நடந்த விழாக்கோலத்தில் சசிகலா உறவினர் சென்னை கிருஷ்ணப்ரியா வீடு வந்து சேர்ந்த போது 23 மணி நேரம் ஆகியுள்ளது. ஒரு நிறுத்தத்திற்கு இவர்கள் திட்டமிட்டபடி 200 வாகனங்கள் என்றால் மொத்தமாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இந்தக் கணக்கு தனியா கீழே வரும். விவசாயி மற்றொரு காரியத்தைச் செய்திருந்தார். சசிகலா வரும் பாதையில் வாடகைக் கார்கள் எவரும் வழங்கக்கூடாது என்ற மறைமுக எச்சரிக்கைகளையும் மீறி சொந்தக் கார் முதல் இரவல் கார் வரைக்கும் கொண்டு வந்து சேர்த்தனர்.
இந்த இடத்தில் திமுக, அதிமுக இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். திமுக கொள்கை குந்தாணி பேசினாலும் பணத்தை டெலிவரி செய்வதில் ரொம்பவே வீக். மனசு வராது என்பது ஒரு பக்கம். கொடுக்க வேண்டுமா? என்று இடையில் உள்ளவர்கள் அமுக்குவது மற்றொரு பக்கம். ஆனால் அதிமுக அப்படியல்ல.
இந்த விசயத்தில் கர்மவீரர்கள். தாயம்மா இருக்கும் போது ஒவ்வொரு தேர்தலிலும் ஒரே இரவில் ஊர் முழுக்க பண மழையைப் பொழிவது எப்படி? உபி கள் எந்தப் பக்கம் இருந்தால் எந்தப்பக்கம் பைபாஸ் செய்து போவது போன்ற அர்த்த சாஸ்திரக் கலைகளை மூன்றாண்டு பட்டப்படிப்பு போலக் கீழிருந்து மேலே உள்ளவர் வரைக்கும் படித்துக் கரைத்துக் குடித்திருந்த காரணத்தால் எங்கும் பூம்புனல் போலப் பாய்ந்தோடியது. எப்போதும் போல திமுக ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட என்று தேய்ந்து போன ரிக்கார்டுகளை தேய்த்துத் தொங்கிக் கொண்டு கோட்டை விட்டார்கள். கடைசியில் கலைஞரைக் கடைசிக் காலத்தில் முன்னாள் முதல்வராக மாற்றியது தான் மிச்சம்.
ஆர்கே நகர் தேர்தலில் இருபது ரூபாய் டோக்கன் கொடுத்து அதனையும் கடைசியில் கொடுக்காமல், தேர்தலில் திமுகவையே டெபாசிட் இழக்க வைத்த தினகரன் எப்படிப்பட்ட ஆள் என்று விவசாயிக்குத் தெரியாதா?
கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி, ஓசூர் மாரியம்மன் கோயில், ஓசூர் ஆனந்தபவன் உணவகம், சூளகிரி ஆகிய நிறுத்தங்களில் கிருஷ்ணகிரி மேற்கு மற்றும் மத்திய மாவட்ட அமமுகவினர் வரவேற்க வேண்டும் என்று ஒதுக்கப்பட்டிருந்தாலும், தஞ்சாவூர் மாவட்டத்தினரையும் அங்கே பார்க்க முடிந்தது. அதேபோல, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் பகுதிகளில் உள்ள நிறுத்தங்களில் சசிகலாவுக்கு பெரும் ஆதரவு உள்ள மதுரை மாவட்டத்தினரைப் பார்க்க முடிந்தது. ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள எட்டு நிறுத்தங்களில் நின்றவர்களில் ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்ட அமமுகவினரும் அடக்கம். (தமிழ் இந்து)
இனி மளிகை லிஸ்ட் விபரங்கள்.
1. 120 இடங்களில் கலந்து கொண்டவர்கள் ( மாறி மாறி கலந்து கொண்டனர். மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர்கள்). இரண்டு நாட்கள் ஒப்பந்தம். தலைக்குச் சாப்பாடு செலவு உட்பட தலா 1800 ரூபாய். இதற்கு மட்டும் 21 கோடியே 60 லட்சம்.
2. வந்த கார்களுக்கான செலவு 20 கோடி. (உத்தேசமாக 24 ஆயிரம் கார்கள்)
3. ப்ளெக்ஸ் போர்டு மற்றும் சுவரொட்டிகளுக்கு மொத்தச் செலவு 60 லட்சம்.
4. மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், நாதஸ்வரம் போன்ற ஏழை எளிய தமிழ்ப்பிள்ளை கலைஞர்களுக்கு மொத்தச் செலவு 10 கோடி.
5. தமிழகம் முழுக்க பேருந்து வழியே வந்தவர்களுக்குப் பஞ்சப்படி, பயணப்படி, சாப்பாடு படி, திரும்பிச் செல்லும் போது வீட்டில் மனைவி சொன்ன நயம் பொன்னி அரிசி வாங்கிக் கொண்டு செல்ல என்ற வகையில் 12 கோடி. அழைத்து வந்த பேருந்துகளுக்குத் தனியாக 5 கோடி.
6. வாண வேடிக்கைகள், கிரேன் மாலை முதல் சாதா மாலை வரைக்கும் மொத்தச் செலவு 2 கோடி.
7. தியாகத்தலைவி விடுதலையாகும் சமயத்தில் அங்கே 500பேர்கள் மலர்பாதை அமைத்து வரவேற்கக் காத்திருந்தனர். அவர்கள் தங்க திங்க குடிக்க கும்மாளமிட உண்டான அனைத்துச் செலவுகளும் சேர்ந்து 1 கோடி.
8. தொலைக்காட்சி நேரிடையாக ஒளிபரப்ப அவர்களுக்கு வாக்கரசி போட்ட செலவு 120 கோடி.
மொத்தக் கணக்கு 198 கோடியே பத்து லட்சம் ரூபாய்.
(உடனே மேலிருந்து கூட்டி, இது சரியான தொகை தானா என்று கால்குலேட்டர் தேட வேண்டாம் என்று சங்கத்தின் சார்பாக வேண்டுகோள் வைக்கக் கடமைப்பட்டுள்ளோம்)
அவ்வளவு தான் பாஸ்.
ஏன் இதனை இவ்வளவு சிரமப்பட்டு எழுத வேண்டும் என்ற நியாயமான கேள்வி உங்களுக்குத் தோன்றுமே?
ஏன் பாஸ் பணத்தைப் பற்றி, பணக்காரர்களைப் பற்றி, பணம் வைத்திருப்பவர்களைப் பற்றி நாம் யோசித்துக் கொண்டிருந்தால் நாமும் கோடீஸ்வரர்களாக மாற முடியும் என்று பல பேர்கள் சொல்லிக் கொண்டு இருக்கின்றார்களே? அது உண்மையா பாஸ்?
(பின்குறிப்பு) இந்தச் சமயத்தில் கீழே கொடுத்துள்ள காமராஜர் புத்தகத்தைப் படிக்க வேண்டாம். உடம்பு சரியில்லாமல் போனால் நான் பொறுப்பல்ல)
பதிவின் நிறைவுப்பகுதியில் தந்துள்ள குறிப்பு முத்தாய்ப்பானது.
ReplyDeleteஅண்மையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சில ஆய்வுப்பணிகள் காரணமாக தொடர்ந்து வலைப்பக்கம் வர இயலவில்லை. பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
டி டி வி தினகரன் வீட்டில் வருமான வரிதுறை சோதனை
ReplyDeleteசெய்த போது வீட்டிலே ஒன்றும் சிக்கவில்லை. அவர்
மனைவி கோபூஜை செய்யும் பசுவும் கன்றுக்குட்டியை
தவிர வேறொன்றும் இல்லை. கொள்ளையடித்த பணம் முழுதும்
தமிழக அமமு க அமைப்பாளர்களிடம் பதுக்கி வைக்கப்பட்டு அவ்வப்போது
ரிலீஸ் செய்யப்படுகிறது. சசிகலா விடுதலையின் போது
நடந்த "வாணவேடிக்கை" அந்த பணத்தில்தான் நடந்தது.
முதல்வர் முதலானவர்கள் எதிர்ப்பதுபோல நடிக்கிறார்கள் என்றே எனக்கும் தோன்றுகிறது.
ReplyDeleteஇப்பவே கண்ணைக் கட்டுதே...
ReplyDeleteபோங்க பாசு... இதுக்கே ஆச்சர்யபட்டா? இன்னும் எவ்வளவோ பார்க்க வேண்டியிருக்கு...
ReplyDelete