அஸ்திவாரம்

Saturday, February 13, 2021

உணர்ச்சிவசப்படும் குறள்சித்தருக்கு ஒரு கடிதம்

அன்புள்ள குறள் சித்தர் அவர்களுக்கு

இந்தக் கடிதத்தில் உங்கள் பெயரைக் குறிப்பிட்டு எழுதுகிறேன் என்று வருத்தப்படாதீர்கள்.  நீங்கள் அடிப்படையில் வெகுளி. இல்லாவிட்டால் நாம் இருவரும் இந்நேரம் நாம் சார்ந்திருக்கும் தொழிலில் கொடியை நாட்டியிருப்போம். நாம் தொழிலோடு, குடும்பத்தோடு நம் வாழும் சமூகத்தையும் கருத்தில் கொள்கின்றோம்.  




இப்படி வாழக் கூடியவர்கள் தொழில் வாழ்க்கையில் பிற்பாதியில் வெல்வார்கள் அல்லது அமைதியாக தங்கள் வாரிசுகளை ஏணியின் உயரத்தில் ஏற்றி அழகு பார்த்து காலத்தோடு கரைந்து போய்விடக்கூடும். நம்மைப் போன்றவர்கள் உருவாக்கும் சக்தி என்பது மகத்தானது. அது நம் காலத்திற்குப் பின்னால் மட்டுமே நினைவு கூறப்படும்.  காரணம் நாம் வாழும் காலச் சமூகத்திற்கு எதிராகச் சிந்திக்கக்கூடியவர்கள். சம காலத்தில் இருப்பவர்களின் கொண்டாட்ட மன நிலையிலிருந்து விலகி வாழ்ந்து கொண்டிருக்கும் காரணத்தால் நம்மை வியப்பாக, பெருமையாக, ஆச்சரியமாகப் பார்ப்பார்களேயொழிய நம்மை எவரும் வெளிப்படையாக ஆதரிக்க மாட்டார்கள். 

காரணம் இது அவரவர் மனநலம் சார்ந்தது. இந்தக் கடிதம் ஏன் இன்று அவசரமாக எழுத வேண்டும் என்று தோன்றியதற்குக் காரணம் இணையம் குறித்து உங்களுக்கு என்னை விட நன்றாகவே தெரிந்திருக்கும். அதன் தொழில் நுட்ப விசயங்களில் கரை கண்டவர் என்று உங்களை அறிந்த புரிந்த லட்சணக்கணக்கான உங்களின் அதி தீவிர வாசகக் கண்மணிகளுக்குத் தெரிந்தே இருக்கும்.

ஆனால் சமீப காலமாக நிறையவே உணர்ச்சி வசப்படும் மனநிலையில் இருப்பதாகத் தெரிகின்றது.  

இணையம் என்பது அடிப்படையில் மனநோயாளிகளின் கூடாரம் என்பது தாங்கள் அறியாதது அல்ல. வாழ முடியாத வாழ்க்கை, அனுபவிக்காமல் அல்லாடிக் கொண்டிருக்கும் வாழ்க்கை தரும் அழுத்தம், பணம் காட்டும் மாயம், புரிந்து கொள்ளாமல் அல்லாடும் மனம், சிறுவயதில் தான் பெற்ற சாதிய இழிவுகள், அவமானங்கள், தரங்கெட்ட வார்த்தைகள் இவற்றை மனதில் கொண்டு மருகும் இளையர் கூட்டமும், இனி நம் வாழ்க்கை மாறியுள்ளது. நாமும் பொருளாதார வளர்ச்சியடைந்துள்ளோம். நம்மைப் போன்ற நம் இன மக்களுக்கு உதவுவோம் என்ற எண்ணத் துணிவு இல்லாத கொடூர மதி கொண்டவர்களும் இணையத்தை வேறு விதமாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பதை நீங்கள் உணர வேண்டும்.

அதிகாரத்தை எப்போது எதிர்க்க முடியும்? 

அதே அதிகாரத்தை நாம் பெறும் போது தான் என்பதனை நீங்கள் உணர வேண்டும். அதற்குக் கல்வி வேண்டும். போட்டியில் வென்றெடுக்க வேண்டிய திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாறிய சமூகத்தைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் வேண்டும். புலம்பல் கூடாது. இங்கு எதுவும் புனிதம் இல்லை. எல்லாமே தத்தமது கடமைகளைச் சரியாகச் செய்யும் போது தான் அது கிடைக்கும் என்பதனை உறுதியாக நம்பத் தெரிந்து இருக்க வேண்டும்.

73 ஆண்டுகளில் இந்திய அரசியல் அமைப்பு உருவாக்கிக் கொடுத்த எந்த வசதிகளையும் வைத்துத் தாழ்த்தப்பட்ட சமூகம் இன்னமும் முழுமையாக முன்னேற முடியவில்லை என்பது எந்த அளவுக்கு உண்மையோ? அது இன்னமும் அடி மட்டம் வரைக்கும் சென்று சேரவில்லை என்ற எதார்த்தத்தையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.  அந்தச் சலுகைகள் குறிப்பிட்ட குடும்பங்கள் தாண்டி வேறு பக்கம் செல்ல முடியாமல் தடுமாறிக் கொண்டிருப்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எனக்குத் தெரிந்து காங்கிரஸ் ல் தென்காசி தொகுதியில் போட்டியிட்ட அருணாசலம் என்பவர் தொடங்கி இப்போது சபாநாயகராக இருக்கும் தனபால் வரைக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் உள்ள அனைவரும் பல்வேறு பிரிவுகளிலிருந்து, பல்வேறு சூழலிலிருந்து அதிகாரத்தின் உச்சத்தை அடைந்து உள்ளனர். ஆனால் கடந்த ஐம்பது ஆண்டு காலத்தில் தங்கள் சார்ந்த சமூகத்திற்கு இவர்கள் என்ன செய்துள்ளார்கள் என்பதனை கூர்மையாகக் கவனித்தால் இந்தச் சமூகம் ஏன் முன்னேறாமல் இருப்பது என்று உங்களுக்குப் புரிய வாய்ப்புண்டு.

பள்ளர் சமூகத்தின் பிரதிநிதி என்று சொல்லிக் கொண்டிருக்கும்  மருத்துவர் கிருஷ்ணசாமி தன் மகனுக்கு கேரளாவிலிருந்து பெண் எடுத்து சமீபத்தில் திருமணம் நடத்தியதை நீங்கள் சமீபத்தில் செய்தித்தாளில் வாசித்திருக்கலாம்.  ஏன் தென் காசி இராஜபாளையம் தொகுதியில் பெண்கள் இல்லையா?

பறையர் சமூகத்தின் பிரதிநிதியாக உள்ள திருமாவளவன் இஸ்லாமியப் பழக்கவழக்கம் தான் மிகச் சிறந்தது என்று கூறுவது தவறில்லை. அதனை அவர் கடைப்பிடித்துக் கொண்டிருப்பது அவர் தனிப்பட்ட சுதந்திரம். அவர் அக்கா கடைசிவரைக்கும் கிறிஸ்துவராக வாழ்ந்து மறைந்த போது அவருக்கு இந்து மத முறைப்படி நீத்தார் கடன் செய்ய வேண்டிய அவசியம் ஏன்?

இடைநிலை சாதிகளின் ஆதிக்கத்தில் தான் இன்று அரசியல் உள்ளது.  

ஆனால் பள்ளர், பறையர், இடைநிலை சாதிகள் என்று மூன்று பிரிவினரும் தங்களுக்கான பொருளாதார பலத்தைப் பெற்றதும், அதிகாரத்தை அடைந்ததும் அவர்களும் பிராமணர்களாகத்தான் வாழ ஆசைப்பட்டு அப்படித்தான் ஒவ்வொரு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களே? இது ஏன்? ஏனிந்த முரண்பாடு? 

எல்லா அரசியல்வாதிகளும் பிராமணர்களைத்தான் கணக்காளர்களாக வைத்து உள்ளனர். ஆலோசகராக வைத்து உள்ளனர். அறிவுரை கேட்கும் நிலையில் அவர்கள் தான் அருகே இருக்கின்றார்கள்.  

இது ஏன்?

இது தான் நுட்ப அரசியல்.  

இதை உணராமல் இணையத்தில் முகமூடி போட்டிக் கொண்டு தன் கழிவுகளைத் தானே உண்டு வாழும் பிராணிகள் எழுதுவதைப் பொருட்படுத்தாதீர்கள்.  கம்பீரமாக தன் முகம் தன் இருப்பிடம், தன் வாழ்க்கையைப் பற்றி எழுதும் கொள்கை வீரர்களை ஆதரிக்கவும். அவர்கள் தவறாகவே எழுதினாலும் அது அவர்களின் தனிப்பட்ட கொள்கை என்பதனை மனதார ஏற்று புரிந்து கொள்ளுங்கள்.

பன்றிகளுக்கு மலம் என்பது உணவு. நமக்கு அது அசிங்கம். பன்றிகள் அதன் வாழ்க்கையை வாழட்டும். நாம் அதனைத் தொந்தரவு செய்யத் தேவையில்லை.

காரணம் நம் கழிவுகள் தான் அதற்கு உணவாக இருக்கும் போது என் கழிவை நானே உண்ண விரும்புவேனா? அல்லது அதைத்தான் நான் திரும்பிப் பார்த்துக் கொண்டிருப்பேனா?

கழிவுகளை ஆதரிக்காதீர்கள்.

கழிவுகளை விரும்பாதீர்கள்.

கழிவுகள் தான் சிந்தனை என்று நம்பாதீர்கள்.

இப்படிக்கு

உங்களைப் போன்ற (கோபக்கார) அப்பாவி.

3 comments:

  1. ஐயா நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. சாதிப் பிரச்சினைகளை அவர் தொடவே இல்லை. அவர் யாருடணும் மோதவில்லை. அவருடைய அங்கலாய்ப்புகளை அவர் இயல் இசை ஒளி வடிவங்களில் வெளிப்படுத்துகறார். கடந்த சில வருடங்களாக சிறு குறு தொழில் நசிப்பதால் அவர் நெஞ்சம் பொருக்காமால் இணையத்தில் எண்ணங்களை வடிக்கிறார். மற்றபடி மனநிலை எல்லாம் சரியே.

    ReplyDelete
    Replies
    1. இது அவருக்கும் எனக்கும் நடந்த பேஸ்புக் பஞ்சாயத்து. தவறாக ஒன்றுமில்லை. பயப்படத் தேவையில்லை.

      Delete
  2. நீங்கள் சொல்லும் பல உண்மைகள் புரிகிறது...

    மனநிலையை மாற்ற வேறொரு பாதையில் பயணிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்... ஆனால் எழுத தான் வரவில்லை... பார்ப்போம்...

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.