என் நெருங்கிய நண்பர் சில மாதங்களுக்கு முன்பு சித்ரா லெஷ்மணன் காணொளிக் காட்சிகளைப் பாருங்கள் என்று பரிந்துரைத்தார். நான் பார்த்து விட்டு "எனக்கு இது போன்ற காட்சிகளைப் பார்த்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. அந்தச் சமயத்தில் கூடுதலாக 300 வார்த்தைகள் கொண்ட சமூக நிகழ்வைப் பதிவு செய்யவே விரும்புவேன்" என்றேன்.
மேலும் திரைப்படத்துறை சார்ந்த கிசுகிசு, பார்வைகள், உதார்கள், பிலாக்கணம், பெருமை புராணங்கள் எதையும் எந்தக் காலத்திலும் பார்க்கவே விரும்பியதில்லை. காரணம் அந்தத்துறையில் உள்ளவர்கள் ஒருவர் கூட ஐந்து சதவிகிதம் கூட உண்மை பேசுபவர்கள் அல்ல. பொறாமையும், எரிச்சலுமாய் 24 மணி நேரமும் உள்ளுற வன்மம் கொண்டு அலைந்து கொண்டிருப்பவர்கள் அதிகம் உள்ள துறையது.
யார் யாரோ உழைத்து வேறு எவரோ அதனைப் பெற்றுக் கொண்டு சுகமாக அங்கீகாரம் பெற்று குறிப்பிட்ட சிலர் அனுபவித்து அவர்கள் மட்டுமே ஆள வேண்டும் என்று இருக்கும் மோசமான துறையது. அது அந்தத் துறையின் சாபக் கேடு. நீங்கள் நம்பும் விரும்பும் எவரும் அதீத புத்திசாலிகள் இல்லை. அவருக்குப் பின்னால் எத்தனை ஜீவன்களின் உழைப்பு இருக்கும் என்று உங்களால் யூகிக்கவே முடியாது. உழைத்தவன் வடபழனி சாலையில் ஏதாவது ஒரு டீக்கடையில் கடன் சொல்லி டீ அருந்தி வானத்தை வெறுத்துப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். காலம் காலமாகத் திரைப்படத்துறை இப்படித்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.
எந்த திட்டமிடுதலும் இருக்காது. திட்டமிடுபவர்களைப் பிடிக்கவும் செய்யாது. பணம் போட்ட முதலாளி பைத்தியக்காரனாகவும், அந்த முதலாளியைக் கூச்சம் இல்லாமல் தெருவில் நிறுத்துவது எப்படி என்ற எளிய கலையை வைத்திருப்பவர்கள் பலகோடி அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரே படம் முடித்து வாங்கி அனுபவிக்கக்கூடியவர்களாகவும் இருப்பதை நேரிடையாகப் பார்த்துள்ளேன்.
இதை எழுதுவதற்குக் காரணம் கடந்த சில தினங்களாகக் கங்கை அமரன் முதல் பலரும் இசைஞானியைப் புழுதி வாரித் தூற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
உண்மை தான்.
இசைஞானி சாரசரி மனிதர் அல்ல.
தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கும் எழுத்தாளர்களுடன் உங்களால் இயல்பாக பத்து நிமிடம் பேச முடியாது. அவர்கள் உலகம் வேறுவிதமாக இருக்கும். அப்படி இருப்பதால், வாழ்வதால் தான் அவர்களால் எழுத்துத்துறையில் இயங்க முடிகின்றது என்பதனை எப்போதும் நினைவில் வைத்திருங்கள். உங்களின் பார்வையும் படைப்புத்துறையில் இருப்பவர்களின் பார்வையும் முற்றிலும் வேறானது.
நீங்கள் பேசுவதை விரும்புவீர்கள். அவர்கள் உள்ளுற வாழ்வதை விரும்புவார்கள். உணர்ந்ததை வார்த்தைகள் மூலம் கொண்டு வந்து உங்களுக்குத் தருவார்கள். அப்படித்தான் இளையராஜாவும்.
அவரின் தொடக்க வாழ்க்கை, அவரின் சமூக பின்புலம், கடந்து வந்த கஷ்டங்கள், அங்கீகாரத்திற்காக அலைந்த தினங்கள், அடைந்த பிறகு அதனைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடிய விதம், அப்படியும் அவரை நோக்கிப் பார்த்த பார்வைகள், உருவான, உருவாக்கிக் கொண்ட எதிரிகள் என்று எல்லாவற்றையும் நீங்கள் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால் அவர் இந்நேரம் வரைக்கும் தாக்குப் பிடித்து நிற்பதே மகா அதிசயம். அவரை வெல்ல முடியாதவர்கள் கடைசியில் எடுக்கும் ஆயுதம் அவரின் சமூக பின்புலம்.
அவர் குடும்ப வாழ்க்கை முதல், குழந்தைகள் வாழ்க்கை வரைக்கும் அனைத்தையும் இழந்தவர். கண்டு கொள்ள நேரம் இல்லாமல் இசைத் துறைக்குத் தன்னை அர்ப்பணித்தவர்.
நீங்கள் கற்பனையே செய்ய முடியாத அளவிற்கு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருந்தவர். உடல் உழைப்பு, உள்ள உழைப்பு, மூளை உழைப்பு இவற்றுக்கெல்லாம் உண்டான வித்தியாசம் தெரிந்தால் உங்களுக்கு இளையராஜாவின் உழைப்பு குறித்துப் புரியும். மூளை சோர்ந்து, உடலில் உள்ள வெப்பம் மாறிக் கொண்டேயிருக்கும் அவஸ்தையிது.
அவர் செய்து கொண்டிருந்த வேலைகள் அனைத்தும் காலத்தை மிஞ்சும் படைப்புகளை உருவாக்க அவர் எடுத்துக் கொண்ட பிரயத்தனம் என்பதனை எப்போதும் நினைவில் வைத்திருங்கள்.
அவர் இன்னமும் நான் கற்றுக் கொண்டே தான் இருக்கிறேன் என்கிறார். இப்போது கூடப் புதிதாகத் தெலுங்கு படவுலகில் ராமர் குறித்த கீர்த்தனைகளை இந்த வழியில் நீங்கள் இசைக் கோர்வையாக மாற்ற வேண்டும் என்று கேட்ட போது என்னால் இது முடியுமா? என்று தெரியவில்லை என்று தயங்கி நிற்கும் மாணவனாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
பொதுவெளியில் அவருக்கு எப்படிப் பேச வேண்டும்? என்பது தெரியவில்லை என்பது அனைவரும் வைக்கும் பொதுவான குற்றச்சாட்டு உண்மை தான்.
அவர் என்ன அரசியல்வாதியா?
ஜாலக்கு வார்த்தைகளைப் போட்டு எப்படிப் பேசினால் யார் மயங்குவார்கள் எப்படி மயக்க எப்படிப் பேச வேண்டும் என்று ஒத்திகை பார்த்து வெளியே வந்து பேச? அவர் நினைத்ததைப் பேசும் போது பலருக்கும் கசப்பாகத்தான் இருக்கிறது. அவர் அவராகத்தான் இருக்கின்றார். இருக்கவே விரும்புகின்றார்.
சமீபத்தில் நடிகர் சிவகுமார் ஒரு பேட்டியில் சொன்ன வாசகமிது. "அரசியல் மற்றும் திரைப்படத்துறையில் இருப்பவர்கள், மக்கள் எப்போதும் முட்டாளாகவே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். காரணம் அப்போது தான் அவர்கள் பிழைப்பு ஓடும்" என்றார்.
அதுவே தான் இளையராஜாவை ஏதோவொரு வழியில் தூற்றிக் கொண்டிருப்பவர்கள் வழியாக நான் பார்க்கிறேன்.
வங்கிகளின் EMI உலகம்
வங்கியில் கடன் அட்டை வாங்கியவரின் கதை
நவீன உலகில் வாழ தேர்ந்தெடுக்கப் பழகிக் கொள்
ஆன்மாவை வருடும் ஞானிகளை, ரிஷிகளை, முனிவர்களை, உங்களுக்குப் பிடித்த தெய்வங்களை மற்றவர்கள் வேறு விதமாகப் பேசும் போது உங்கள் மன உணர்வு ஏற்றுக் கொள்ளுமா?
அப்படித்தான் இளையராஜா தனக்கான உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதைக் கேட்பவர்களுக்கு, பார்ப்பவர்களுக்கு விமர்சிக்க ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அவையெல்லாம் போட்டியில் வென்று வர முடியாமல் சம்பாதிக்க வழியில்லாமல், அங்கீகாரம் கிடைக்க வழியில்லாத அற்பக் காரணங்களாகத்தான் எனக்குத் தெரிகின்றது.
உங்களுக்குத் தேர்ந்தெடுக்க இப்போது ஆயிரம் வழிகள் உள்ளது. அவர் இசை தேவையில்லை என்றால் புறக்கணித்துப் பாருங்கள்.
உங்கள் வார்த்தைகளால் அவர் செயல்பாடுகளைப் புறக்கணிக்கவே முடியாத இடத்திற்கு அவர் வந்து சேர்ந்து பல பத்து வருடங்கள் ஆகி விட்டது.
இசை கேட்டால் புவி அசைந்தாடும் - அது
ReplyDeleteஇறைவன் அருளாகும்...
ஏழாம் கடலும் வானும் நிலமும்...
என்னுடன் விளையாடும் – இசை
என்னிடம் உருவாகும்...
இசை என்னிடம் உருவாகும்...
எதையும் சிரித்து விட்டு நகர்வது அறிஞர்கள்...
சரியான விமர்சனம்
Deleteஅவர் இசைக்கு நான் ரசிகன்.
ReplyDeleteநாம் அனைவரும்.
Deleteஅவரது இசையை ரசிப்போம்.
ReplyDeleteநன்றி
Deleteகடவுளை வணங்க வேண்டும், இசையின் இரண்டாம் கடவுள் இசைஞானி இளையராஜா அவர்கள். வணங்குகிறேன் உம்மை.
ReplyDeleteநண்பர் ஒருவர் சொன்னார். பாதிப் பேர்கள் பைத்தியம் ஆகி போயிருப்பார்கள். இளையராஜா காப்பாற்றி உள்ளார்.
Delete