அஸ்திவாரம்

Sunday, December 06, 2020

வணிக சூத்திரங்கள் 2

வளர்ச்சி என்பதனை நீங்கள் எப்படி பார்ப்பீர்களோ? எனக்குத் தெரியாது.  ஆனால் அந்த வார்த்தையுடன் கொஞ்சம் மசாலா அயிட்டங்களைச் சேர்த்துப் பார்ப்பதுண்டு. வளர்ச்சி என்றால் அதன் மறுபெயர் மாற்றம் தானே? மாற்றத்தின் விளைவுகள் என்ன? அதன் தாக்கம் என்ன? இவற்றைப் பற்றி நாம் யோசிப்பதில்லை. நாம் வளர்ச்சி என்பதனை நம் குடும்பத்தை வைத்து அளவிடுகின்றோம். நம் அரசின் கொள்கைகள் நம் வாழ்க்கையை நேரிடையாக மறைமுகமாகப் பாதிப்பை உருவாக்குகின்றது என்பது எத்தனை பேர்களுக்குத் தெரியும் என்று நம்புகிறீர்கள்?




நான் அரசாங்கத்தின் கொள்கை எப்படி வெல்கின்றது? என்பதனை நான் ஒவ்வொரு முறையும் என் பிறந்த ஊருக்குச் செல்லும் போது நான் சந்திக்கும் கிராமத்து நண்பரிடம் கேட்பேன். அவருக்கு அது குறித்த அடிப்படை புரிதல் கொஞ்சமாவது இருந்தால் அரசு வெற்றி பெற்றுள்ளது என்று அர்த்தம். எத்தனை காரணங்கள் இதற்குச் சொல்லப்பட்டாலும் இது தான் உண்மை. ஆனால் அது இங்கே நடப்பதில்லை. 

ஆனால் அப்படியான மாற்றங்களை உருவாக்கியவர்களைத் தான் நான் மகத்தான மனிதர்களின் பட்டியலில் வைத்திருக்கிறேன். "கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வந்ததே" என்பதனை போல அப்படிப்பட்ட மனிதர்களைப் பற்றிப் பேசுவதற்காகவே இந்தத் தொடரைத் தொடங்கினேன். துரதிருஷ்டவசமாக அந்தப் பட்டியலில் நம்மவர்கள் இல்லை. அனைவரும் அமெரிக்கர்களாக இருப்பது ஆச்சரியமே. அவர்களுக்கு கொரானா கால கொள்ளை நோய்களும் ஒன்று தான். பூகம்பம் சுனாமி போன்ற பேரிடர் காலமும் ஒன்று தான். 

கொரானா காலத்தில் மூன்று வேளையும் நன்றாகச் சாப்பிட்டு, வீட்டு வாடகை கொடுத்து, பிள்ளைகளைப் பள்ளிக்குச் சேர்க்க நான் தடுமாறிக் கொண்டிருக்கின்றேன் என்ற அவலக்குரல் ஒரு பக்கம். ஆனால்  ஃபோர்ப்ஸ் தரவுகளின்படி, 2020 ஆம் ஆண்டில் மொத்த பில்லியனர்களின் மொத்த நிகர மதிப்பு 8 டிரில்லியன் டாலராக இருந்தது, இது 2019 ல் 8.7 டிரில்லியன் டாலராக இருந்தது. “பூமியில் உள்ள பணக்காரர்கள் கொரோனா வைரஸிலிருந்து விடுபடுவதில்லை. இந்தத் தொற்றுநோய் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா மீதான தனது பிடியை இறுக்கிக் கொண்டதால், உலகளாவிய பங்குச் சந்தைகள் வெடித்துச் சிதறின, பல செல்வங்களைத் தணித்தன. எஞ்சியிருக்கும் பில்லியனர்களில், 51 சதவீதம் பேர் கடந்த ஆண்டை விட ஏழ்மையானவர்கள் ”என்று இந்த மாதத் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் செய்து கொண்டிருப்பது தொழில் அல்ல. அவர்கள் செய்த தவத்தின் வெளிப்பாடு. காலம் கடந்து நிற்கும் வரம் வாங்கி வந்தவர்கள்.  அவர்கள் ஈட்டுவது லாபமல்ல. நீங்களும் நானும் "வாங்கிக்கோ வாங்கிக்கோ" என்று அள்ளிக்கொடுக்கும் அளவில்லா ஆனந்தத்தின் வெளிப்பாடு. 

உங்களையும் என்னையும் ஒரே புள்ளியில் இணைத்திருக்கின்றார்கள். யோசிக்க வைக்கின்றார்கள். சண்டை போட வைக்கின்றார்கள். சமாதானப்படுத்துகின்றார்கள். தினமும் பின் தொடரவும் வைத்துக் கொண்டேயிருக்கின்றார்கள். நம் வாழ்நாள் முழுக்க நம்மை அவர்கள் உருவாக்கிய கோட்டுக்குள் நம்மை ஓட வைத்திருப்பது தான் மிகப் பெரிய ஆச்சரியம்.

அவர்கள் நம்மை அழைப்பதில்லை. நாம் அவர்கள் அழைப்பில்லாமல் உள்ளே நுழைந்து அவர்களுடன் ஓடத் துவங்குகின்றோம். அவர்கள் கட்டாயப்படுத்தி நம்மைப் பற்றிய விபரங்கள், ஜாதகம், நல்லது கெட்டவற்றைப் பற்றி விசாரிப்பதில்லை. ஆனால் நாமே மனம் உவந்து அவர்களுக்குக் கொடுக்கத் தயாராக இருக்கின்றோம்.

எப்பேர்ப்பட்ட சிந்தனையிது? எத்தனை பெரிய ஆச்சரியமான உண்மையிது. ஏனிந்த மாற்றங்கள் இங்கே நம் நாட்டில் நிகழவில்லை என்பதற்குப் பின்னால் உள்ள அனைத்தும் நம்முடைய சமூக அமைப்பு மற்றும் அரசியல் அமைப்பு சார்ந்த பிற்போக்குத் தனங்கள் மட்டுமே. 

அவர்கள் செய்து கொண்டிருக்கும் தொழிலுக்கும் நாம் செய்து கொண்டிருக்கும் தொழில் சமூகத்திற்கும் உண்டான பெரிய வேறுபாடுகளைப் பார்த்து விடுவோம்.

நான் ஓர் ஏற்றுமதியாளன். என் தொழில் எனக்கு வருமானத்தைத் தருகின்றது. குறிப்பிட்ட சிலருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. அரசுக்கு கொஞ்சம் அந்நியச் செலாவணியைத் தருகின்றது. வேறென்ன? என்று பட்டியலிட்டால் ஒன்றுமில்லை. சுபம். 

திருப்பூரில் விவசாயிகளுக்கு மகனாகப் பிறந்தவர்கள், பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி பனியன் தயாரிக்கும் நிறுவனத்திற்கு ஷிப்ட் சம்பளத்திற்கு வந்து சாப்பாட்டுப் பிரச்சனையைத் தீர்த்துக் கொண்டவர்கள், பட்டப்படிப்பு முடித்தவர்கள் தொடங்கிய நிறுவனங்கள் என்று கலந்து கட்டிய தொழில் சமூகம் திருப்பூர் தொழில் சமூகம். இங்கு தோற்றவர்கள் மிக மிக அதிகம். அதே போல வென்று காட்டியவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகம். 

மாதம் ஆயிரம் ரூபாய் நமக்கு கிடைத்து விடாதா? என்று ஏங்கியிருந்தவர்கள் 90 லட்சம் மதிப்புள்ள வாகனங்களில் செல்கின்றார்கள். வீட்டில் பல வெளிநாட்டுக் கார்கள் அணிவகுத்து நிற்கின்றது. அவர்கள் செய்து கொண்டிருக்கும் தொழில் வளர்ச்சி, வீழ்ச்சி என்ற மாறி மாறி பயணித்துக் கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் இவர்களைப் பார்த்து நான் பெருமைப்பட்டதுமில்லை. பொறாமை கொண்டதுமில்லை. இவர்களின் வளர்ச்சி தனி மனித பெருமை. கூட்டு முயற்சியைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு காலம் பார்த்துச் சூழலை தங்களுக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொண்டு வென்றவர்கள். வென்று வந்த பாதையில் இரத்தச் சுவடுகளும் உண்டு. மனிதாபிமானமற்ற செயல்பாடுகளும் அதிகமுண்டு. 

இவர்கள் உருவாக்கும் ஆடைகளை ஐரோப்பாவில் அமெரிக்காவில் மற்ற கண்டங்களில் உள்ளவர்கள் அணிகின்றார்கள். அணியும் போது கிடைக்கும் சுகத்தை அவர்கள் இவர்களுக்குத் தெரிவிப்பதுமில்லை. இவர்கள் அதனை எதிர்பார்ப்பதுமில்லை. அதாவது கடைசி நுகர்வோர் வரைக்கும் சென்று சேர்ந்து இவர்களின் செயல்பாடுகளுக்கு மகுடம் சூட்டி சாதனைகளை உருவாக்கினாலும்  அது பிராண்ட் என்ற பெயரில் வேறு ஒருவருக்குத் தான் செல்கின்றது.

ஆனால் நாம் பிராண்ட் என்ற பெயரைக் கடந்த பத்தாண்டுகளில் தான் சுவாசிக்கத் தொடங்கியுள்ளோம். தாமதமாக முழித்துக் கொண்டாலும் நான் எட்ட வேண்டிய உயரத்தை அடைய அடுத்த பத்தாண்டுகள் காத்திருக்க வேண்டும். அதற்குள் சூழல் எப்படி மாறும் என்றே தெரியாது? 

சரி, காலச் சூழலை ஒவ்வொரு தொழில் அதிபர்களுக்குக் கவனத்தில் எடுத்துக் கொண்டே தான் இருப்பார்கள். ஏன் அவர்களால் மாற முடிவதில்லை என்பதற்குப் பின்னால் நாம் ஆராய்ந்து பார்த்தால் நம் சந்ததி சந்ததியாகக் கடத்தப்பட்டு வந்து இன்னமும் நமக்குள் பொதிந்துள்ள ஜீன் மூலக்கூறுகளை ஆராய்ந்து பார்த்தால் தெரியும். நான் சாதியை விரும்புபவன். நான் மதத்தை விரும்புபவன். நான் பல நம்பிக்கைகளை நம்புபவன். என் உயரம் இதுவே போதும் என்று மனதார நம்பி மாற்றத்தை ஏற்றுக் கொள்ளத் தயங்குபவன் போன்ற பட்டியல்களை நம்மால் போட்டுக் கொண்டே போக முடியும்.

அடிப்படையில் நம் சமூகம் அமைதியை விரும்பும் சமூகமாகவே காலம் காலமாக வாழ்ந்து பழகிய காரணத்தால் எளிதில் மாற்றங்களை உள் வாங்கத் தயங்குவதால் யாரைக்குறை சொல்லலாம் என்பதில் தொடங்கி அங்கேயே முடிந்தும் போய்விடுகின்றது.

இப்போது நான் சொல்ல விரும்பிய மசாலா விசயத்திற்கு வருகிறேன்.

முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த கரிகாற் பெருவளத்தான் குறித்து நாம் மனப்பாடப் பகுதியில் படித்து வந்திருப்போம்.  அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வந்தால் 13 ஆம் நூற்றாண்டுக்குள் சோழர், சேரர், களப்பிரர், பல்லவர், சோழர், பாண்டியர் என்று மாறி மாறி வந்து அடித்துக் கொண்டு மண்ணோடு மண்ணாகிப் போய் வடக்கிலிருந்து திரு நங்கையைப் பாக்கு வெற்றிலை வைத்து அழைத்து வந்த கதைகளையும் படித்திருப்போம்.  அவரை மாலிகாபூர் என்ற நாம் சொன்னாலும் நமக்கு ஆளவே தெரியாது என்பதற்கு அவரை நான் எப்போதும் உதாரணமாக எடுத்துக் கொள்வதுண்டு. விஜயநகரப் பேரரசு முதல் நாயக்கர் காலம் வரைக்கும் காணக்கிடைக்கும் வரலாற்றுப் பொக்கிஷங்கள் பார்த்து, படித்த போது நான் உணர்ந்து கொண்டது ஒன்றே ஒன்று தான். கடைக்கோடி தனிப்பட்ட குடும்பம் வரைக்கும் இவர்களின் ஆதிக்கம் சென்று சேரவில்லை. அடங்கியிருந்தார்கள், அடக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருந்தார்கள் அல்லது அறியாமையில் தான் வாழ்க்கை முழுக்க தலைமுறை தலைமுறையாக மடிந்து போனார்கள். 

ஆனால் 16 ஆம் நூற்றாண்டு முதல் 1947 வரைக்கும் கிழக்கிந்திய நிறுவனம், பிரிட்டன் அரசு மூலம் உருவான, உருவாக்கிய மாற்றங்கள், மறுமலர்ச்சி போன்றவற்றை எந்தப் பார்வையில் பார்த்தாலும் லேசான சமூக அசைவுகள் தான் உருவானது. வாய்ப்பு இருந்தவர்கள் மேலேறினார்கள். மேலேறியவர்கள் மாற்றத்தை உருவாக்க முனைந்தாலும் அதிலும் முழுமையாக வெற்றி பெறவில்லை என்றே நான் கருதுகிறேன். 

இந்தியா சுதந்திரம் அடைந்து "நமக்கு நாமே" என்ற திட்டத்தின் அடிப்படையில் எல்லாமே இங்கு உருவானது. மாறியது. "முழுமையான வளர்ச்சி" என்று சொல்லமுடியாவிட்டாலும் "பெருமைக்குரிய வளர்ச்சி" என்கிற ரீதியில் நாம் நம்மை வளர்த்துக் கொண்டோம்.

நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் 1970 வரைக்கும் இந்தியாவில் நடந்த சமூக கலாச்சார மாற்றங்கள் அனைத்தும் கடைக்கோடி கிராமங்கள் வரைக்கும் செல்லவே இல்லை. செல்ல அனுமதிக்கும் சூழலில் இங்குள்ள அரசியல் மாற்றங்கள் நிகழவே இல்லை. விரும்பிய தலைவர், விரும்பிய கட்சி, விரும்பிய கொள்கைகள், பாரபட்சப் பாதைகள் என்று குழம்பு சாம்பார், ரசம், மோர் என்று ஒன்றாக கலந்து கட்டி வயிற்றில் அஜீரணத்தைத்தான் உருவாக்கியது.

நமக்கு மாற்றங்கள் வேண்டும். அந்த மாற்றங்கள் கடைக்கோடி கிராமத்தில் வாழ்கின்றவனுக்குச் சென்று சேர வேண்டும் என்ற எண்ணம் எல்லோருடைய மனதில் மட்டும் தான் இருந்தது. காலம் கனியவே இல்லை. அதுவரையிலும் உலகம் முழுக்க ஏராளமான போர்கள் நடந்தது. அரசு மாறியது. மதம் ஆட்சி செய்தது. வலிமையானவன் சொன்னது கொள்கை என்று இருந்தது. அவர்கள் உருவாக்கியது தான் சட்டம் என்பதாகவும் இருந்தது. வலிமையற்றவர்கள் அடங்கியிருப்பதே சிறப்பு என்று வாழ்ந்தார்கள். மக்கள் அவரவர் வணங்கும் தெய்வங்களிடம் முறையிட்டு விட்டு அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். உருவான புரட்சிகள் எல்லாமே ஒவ்வொரு காலகட்டத்திலும் புகழப்பட்டது. அதுவே மற்றொரு சமயத்தில் தூக்கிய எறியப்பட்டது. எது தான் உண்மையான மாற்றம் என்பதனை எவராலும் அறுதியிட்டுச் சொல்லவே முடியவில்லை. குறிப்பாக தனிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையில் வந்த மாற்றங்கள் எதுவும் மறுமலர்ச்சியை உருவாக்கவே இல்லை. அதனை உருவாக்கிய முதல் பெருமகனின் பெயர் William Henry Gates III.   இப்படிச் சொன்னால் உங்களுக்குக் குழப்பம் வரக்கூடும். உலகப் பணக்காரர்களில் ஒருவரான மைக்ரோசாப்ட் நிறுவன அதிபர் பில்கேட்ஸ் என்றால் உங்களுக்குப் புரியக்கூடும்.

காரணம் இவர் உருவாக்கிய மாற்றமென்பது சாதாரணம் அல்ல. இருபது நூற்றாண்டுகளை அப்படியே அல்லாக்க தூக்கி மல்லாக்கப் போட்டுப் பந்தாடினார். உலகமே புதுப் பாதைக்கு வந்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை உருவாக்கினார். எளிய குடிமைச் சமூகம் முதல் ஏற்றமிகு கணவான் சமூகம் அனைத்துப் படிகளும் மாறியது. இவர் 17 முறை உலகப் பணக்காரர் பட்டியலில் தொடர்ந்து இடம் பிடித்தார் என்பது எனக்குப் பெரிய விசயமாகத் தெரியவில்லை. இவருக்குப் பின்னால் வந்தவர்கள், இவரை அடியொற்றி வளர்ந்தவர்கள், வாழ்ந்தவர்கள் உருவாக்கிய மாற்றங்கள் தான் எனக்குப் பெரிதாகத் தெரிகின்றது. இது தான் மாற்றம். இது தான் புரட்சி. இது தான் வளர்ச்சி. இந்தியாவில் 1990ல் ஹைதராபாத்தில் முதல் முறையாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்காமல் என்னவாயிருக்கும்?. இன்னும் பத்தாண்டுகள் பின் தங்கி வளர்ந்திருப்போம். 

வல்லவனுக்கு வல்லவனை உருவாக்குவது தானே உலக நியதி. அப்படியொருவர் இவருக்குப் பின்னால் வந்தார். அவர் உருவாக்கிய மாற்றங்கள் கடலுக்குள்ளும் சென்றது. பனிப்பாறைகளையும் அளவெடுத்தது.

அவரைப் பற்றி அடுத்துப் பார்ப்பதற்கு முன்பு நம்மவர்களில் உள்ள ஜாம்பவான்களையும் பற்றி முதலில் பார்த்து விடுவோம். அதன் மூலம் நம் தொழில் சமூகத்தின் மனம் குணம் திடம் போன்றவற்றை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.


வணிக சூத்திரங்கள்


மனிதர்களின் கதை 4 - அதிர்ஷடம் மனிதர்களை மாற்றும்

மனிதர்களின் கதை 3 - தொழில் என்பது முதலைகள் வாழுமிடம்

மனிதர்களின் கதை -2 நம்பிக்கைத் துரோகம் நடத்தும் பாடமிது

மனிதர்களின் கதை - 1 உயிரைப் பறித்த சொந்த வீட்டுக் கனவுகள்

2 comments:

  1. சில கருத்துக்களை முழுவதுமாக உள்வாங்கி கொள்ள போதிய அறிவு எனக்கு இல்லை.. ஆனால் வணிகம் என்ற சொல்லை உச்சரிக்கும் போது ஏதோ ஒரு மந்திர ஒலி எழுவது போல் ஒரு உணர்வு.. நீண்ட நாளாக எனக்குள் எழும் சந்தேகம்.. 25 ஆண்டுகளுக்கு மேலாக IT துறை இந்தியாவில் சக்கை போடு போட்டு கொண்டு வருகிறது.. ஆனால் புதிய தொழில் முனைவோரின் நிலை எவ்வாறு இங்கு இருக்கிறது??? பல லட்சம் நமது பணியாளர்கள் எல்லாம் IT துறையில் பணிபுரிந்து கொண்டு வருகின்றார்.. ஏன் தனிப்பட்ட முறையில் எந்த பெரிய சாதனையையும் / கண்டுபிடிப்புகளையும் இந்திய நிறுவனங்களால் செய்ய முடியவில்லை..??? அல்லது அவ்வாறான சாதனைகள் வெளி வராமலே போய் விடுகின்றதா??? கொஞ்சம் விளக்கவும்..

    ReplyDelete
    Replies
    1. இந்தியாவில் உருவானது உண்மையான தொழில் வளர்ச்சியல்ல. கூலித் தொழில் வளர்ச்சி. இங்கு எத்தனையோ தனியார்கள் தங்கள் திறமைகளை இங்கே நிரூபிக்க முயன்றும் புதிய தொழில் முறை மாடல்களை உருவாக்க முடியாததற்கு காரணம் அரசியல்வாதிகள் அதிகாரிகளின் அலட்சியம் ஆணவம் பண விருப்பம். மேலைநாடுகளில் இருந்து இங்கே வந்து கொண்டிருந்தால் குறிப்பிட்ட சமூகம் எப்போதும் சுகமாகவே இருக்கும். இதன் காரணமாகவே இங்கே எதையும் வளரவிடக்கூடாது வந்து விடக்கூடாது என்பதனை கொள்கையாக வைத்து இருந்தனர். இப்போது கொஞ்சம் மாறியுள்ளது.

      Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.