அஸ்திவாரம்

Thursday, October 22, 2020

7.5 - அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ ஒதுக்கீடு

இதனை நீங்கள் எப்படி உச்சரிப்பீர்கள்? ஏழு புள்ளி ஐந்து அல்லது மருத்துவ இட ஒதுக்கீட்டுக்குத்  தமிழக அரசுப் பள்ளிக்கூட மாணவர்கள் பலன் பெறும் திட்ட சதவிகிதம் அல்லது ஏழரை.

ஆனால் கடைசி வார்த்தை தான் இப்போது பேசு பொருளாக மாறியுள்ளது? ஏன்?

தமிழக சட்ட மன்றத்தில் செப்டம்பர் 15 அன்று இந்தச் சிறப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. 40 நாட்கள் அருகே வரப் போகின்றது. முடிவு தெரியவில்லை? என்ன காரணம்?

1. நீட் என்ற ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு எதிர்க்கட்சிகள் கபடி ஆடிக்கொண்டிருப்பதைத் தடுக்க வேண்டும். அதிமுகவிற்கு இன்னமும் கிராம ஓட்டுச் சதவிகிதம் அப்படியே தான் உள்ளது.  கிராமப்புற மாணவர்கள் அரசுப்பள்ளியில் படித்தாலும் மருத்துவத்துறை சார்ந்த கனவு காண்பது அரிது. இன்றைய சூழலில் படிப்படியாக அந்த எண்ணம் அரசு பள்ளிக்கூட மாணவர்களிடம் பல்வேறு விதங்களில் விதைக்கப்பட்டாலும் நீட் குறித்து ஊடகங்களால் ஊதிப் பெருக்கப்பட்ட எதிர்மறை சிந்தனைகளாலும், நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் குறித்த புரிதலற்ற தன்மையினாலும், கற்றுக் கொண்டிருக்கும் பாடங்களுக்குத் தொடர்பு இல்லாத தன்மையினாலும்,  நீட் பரிட்சைக்கு முன்னும் பின்னும் நடக்கும் அலோங்கோல காட்சிகள் உருவாக்கிய தாக்கத்தினாலும் நாம் இந்தப் பக்கமே போகத் தேவையில்லை என்பதாகத்தான் பெரும்பாலான கிராமப்புற அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் மனத்தில் அச்சம் இன்னமும் விலகாமல் உள்ளது. வெற்றி பெறக்கூடியவர்களும் முதல் முறை எழுதி வெல்பவர்கள் குறைவு. இதற்கு மேலாகத் தனிப்பட்ட முறையில் கோச்சிங் சென்டர் செல்லாமல் எழுதி வெல்பவர்களும் மிகவும் குறைவு என்ற பல காரணிகள் இதற்குப் பின்னால் உள்ளது.  

2. மொத்தத்தில் நம்பிக்கையை விதைப்பவர்களும் யாருமில்லை. தமிழக அரசுக்கும் அதற்காகச் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் கவலையில்லை. அப்படியே செய்யக்கூடிய முயற்சிகளையும் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுத்துச் செல்வதும் இல்லை. ஒரு பக்கம் வழியிருந்தால் பத்துப் பேர்களாவது வெல்ல முடியும். எட்டுத் திசைகளையும் மூடி வைத்த பின்பு கடைசி ஆயுதமாக விவசாயி இந்த ஏழரையைக் கொண்டு வந்தார்.

3. இந்த ஏழரை கிராமப்புற மாணவர்கள் மேல் அக்கறை கொண்டு உருவாக்கப்பட்டது அல்ல. ஏற்கனவே தண்டச் செலவாக வருடந்தோறும் 300 முதல் 350 கோடி வரை அரசுப் பள்ளிக்கூட மாணவர்களை தனியார் பள்ளியில் அரசே பணம் கட்டி சேர்க்கும் அசிங்கங்கள் இங்கே வருடந்தோறும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஏழரைக்குள் அப்படி தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் சலுகை உண்டு என்ற சிறப்பு விதியும் சேர்க்கப்பட்டுள்ளது.  என்ன காரணம்? ஆண்டவனுக்குத் தான் தெரியும்?

4. இப்போது வைக்கப்படும் குற்றச்சாட்டு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்பது. ஆனால் ஆளுநருக்கு யார் உத்தரவு கொடுப்பார்கள் என்பதனை இவர்கள் வசதியாக மறந்து விட்டார்கள். அவர்களைச் சந்திக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவர்களைச் சந்திப்பதாக எண்ணமும் இல்லை என்பதாகத்தான் தெரிகின்றது. என்ன செய்யலாம் என்று யோசித்து அடுத்த ஆயுதமாக அனுமதி வழங்கும் வரை கலந்தாய்வுக் கூட்டத்தை நிறுத்தி வைக்கின்றோம் என்று வாணவேடிக்கையை நிகழ்ச்சியுள்ளனர்.

5. இதற்குப் பின்னால் உள்ள அரசியல் என்ன? தமிழக சட்டமன்றத் தேர்தல் மிக அருகில் வர இருக்கும் நிலையில் பேரங்கள் என்பது வெளியே தெரிந்து தெரியாமல் எல்லாப் பக்கங்களிலும் பலவிதமான காய்கள் நகர்த்தப்படும். காரியம் சாதிக்க விரும்புபவர்கள் ஒவ்வொரு சூழலையும் தங்களுக்குச் சாதகமாகத்தான் பயன்படுத்திக் கொள்வார்கள். அரசியலில் சூழல் முக்கியம். தவறவிட்டால் மீண்டு எழ அடுத்த ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டும். பாஜக என்ன எதிர்பார்க்கக்கூடும்?

6. பத்து சதவிகித இட ஒதுக்கீடு பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய மதிய நேரத்தில் உடனே ஜனாதிபதி ஒப்புதல் வழங்கி அடுத்த நாளே அரசு ஆணையாக வெளியிடப்பட்டு உடனே அமுலுக்கும் வந்துவிட்டது. ஆனால் தமிழகம் இங்கு வாய்ப்பு இல்லை என்று கதவைச் சார்த்தி வைத்துள்ளது. வாய் மொழி உத்தரவாகச் சான்றிதழ் வழங்கக்கூடாது என்பது தான் இன்று வரையிலும் இங்கே உள்ளது. எங்களுக்கும் வாய்ப்பு வரும் என்று காத்திருந்தார்கள். இப்போது வைத்துச் செய்யக் காத்திருந்த நேரம் இப்போது கிடைத்துள்ளது. இது தவிரக் கூட்டணி பேரங்கள் என்பது தனிப் பாதையில் செல்லக்கூடியது. ஆட்சி அமையும் பட்சத்தில் என்ன வேண்டும் என்பதும், தேர்தலின் போது என்ன எதிர்பார்க்கின்றோம் என்பது போன்ற பல விசயங்கள் ஊடகங்களுக்கு நிச்சயம் தெரிந்து இருந்த போதிலும் எந்தப் பக்கமும் வலிக்காத மாதிரியே வேறு விவகாரங்களை வைத்தே விவாதம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

7. விவசாயிக்கு என்ன லாபம்? எதிர்க்கட்சிகள் நீட் குறித்து இனி பேச முடியாது. நாங்கள் சட்டம் கொண்டு வந்து விட்டோம். நிச்சயம் கிராமப்புற மாணவர்கள் 300 முதல் 350 மாணவர்கள் பலன் பெறுவார்கள் என்று ஓங்கி அடிக்க முடியும்.  பாருங்கள் இதற்கும் காரணம் பாஜக என்று தான் திசைகாட்டியைத் திருப்பி தொடர்ந்து அரசியல் களத்தைச் சூடாகவே வைத்திருக்க முடியும். காரணம் அரசியலில் ஒரு விசயத்திற்கு தீர்வு கிடைத்து விட்டது என்பது முக்கியமல்ல. நாங்கள் இலக்கை அடைந்து விட்டோம் என்பது முக்கியம் என்றாலும்  அதைப் பற்றிப் பேசிக் கொண்டேயிருக்கக் கூடிய சூழலை உருவாக்கத் தெரிய வேண்டும் என்பது மிக முக்கியம். அது தான் இங்கே இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

ஆளுநர் ஒப்புதல் அளித்தால் நாங்கள் வென்றோம்

ஒப்புதல் அளிக்காவிட்டால் பாஜக அரசு காரணம்

எதிர்க்கட்சிகள் இது போன்ற திட்டங்களை அவர்கள் ஆட்சியில் கொண்டு வந்தார்களா?

பல பக்கம். பல விசயங்கள். வலிக்காமல் தொடர்ந்து குத்துவது  என்பது சிலருக்கு கை வந்த கலை. 

விவசாயி எளிய விவசாயி அல்ல. கார்ப்பரேட் விவசாயி. லாபம் பெறுவதை விட வேறு எவரும் பேரம் பேசும் சூழலை அனுமதிக்க விடாமல் தன் லாபத்தில் குறியாக இருப்பவரை நீங்கள் வேறு எந்தப் பெயர் சொல்லி அழைப்பீர்கள்?

தூண்டுதல் | Self Motivation

தாழ்வு மனப்பான்மை | Inferiority Complex Vs Superiority Complex

விலகி நில்லுங்கள் | Stay Away

கல்வியில் மாற்றத்தை கொண்டு வந்த கொரோனா

ஏன் இங்கே இத்தனை கற்பழிப்புகள்? | Why so many rapes here?

3 comments:

  1. கார்ப்பரேட் தான் எல்லாம் - அழிவும்...

    ReplyDelete
  2. "அடிமையே 10% அமுல்படுத்து; ஏழரையாகிய நாங்கள் பிறகு யோசித்து நாசமாக்குவோம்" என்று மண்ணாகப் போக வேண்டிய மத்தியிலிருந்து, சற்றுமுன் வந்த தகவல்...!

    ReplyDelete
    Replies
    1. நாங்க ஞானி. எழுதியது சரிதானே

      Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.