சுய ஊரடங்கு 3.0 - 53
Corona Virus 2020
(மாா்ச் 25 முதல் மே 17 வரை)
முகக்கவசங்களை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள் .....
இந்தியா ,அமெரிக்கா உட்பட பல நாடுகள் இப்போது வெளியில் செல்பவர்கள் ,வணிக நிறுவனங்களை நடத்துபவர்கள் ,நெரிசலான குடியிருப்புகளில் வசிப்பவர்கள் ,பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள்,சுகாதார பணியாளர்கள் தன்னார்வலர்கள் உட்பட பொது இடங்களில் புழங்குபவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியிருக்கிறது.
இந்நிலையில் முகக்கவசங்களை பற்றி முழுமையாக ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது.இந்த கட்டுரையை சிறிது நேரம் செலவிட்டு படிப்பதன் மூலமும், இதை பகிர்வதன் மூலமும் சில உயிர்களை காப்பாற்ற முடியும்.மேலும் முகக்கவசங்கள் அவசியமா ? யார் யாருக்கு தேவை ? எப்போது முகக்கவசங்களை அணிய வேண்டும் ?இவை கொரோனா வைரஸ் பரவலை தடுக்குமா ?சரியான முகக்கவசங்கள் எவை ? அவற்றின் நோய்க்கிருமி மற்றும் நுண்ணுயிரிகளை வடிகட்டும் திறன் என்ன ?அவற்றை எப்படி தேர்ந்தெடுப்பது என்பதை ஆதாரத்துடன் விளக்குகிறேன் .
முகக்கவசங்களின் வகைகள்
மருத்துவ தேவைகளுக்கு மட்டுமல்லாது ,ஆலைகள் ,ஆய்வகங்கள், சுரங்கங்கள் ,சுகாகாதார பராமரிப்பு போன்ற பணியில் ஈடுபடுபவர்களுக்காக பல்வேறு வகையான முகக்கவசங்கள் தயாரித்து விற்கப்படுகின்றன. இவை ஓவ்வொன்றும் ஒன்றுக்கு ஓன்று வேறுபட்டது என்று உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.இவற்றில் நுண்ணுயிரிகள் ,மற்றும் நோய்கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கும் என்று நம்பி அணியப்படும் சில முகக்கவசங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்,
1.இரண்டடுக்கு முகக்கவசம் ( 2 ply Mask)
2. மூன்றடுக்கு பொது உபயோக முகக்கவசம் (3 ply Civil Mask)
3. மூன்றடுக்கு மருத்துவ முகக்கவசம் (3 ply Medical Mask )
4. மூன்றடுக்கு அறுவை சிகிச்சை முகக்கவசம் (3 ply Surgical Mask )
5. N 95 முகக்கவச வகைகள் ( Not resistant to oil Masks / Respirators )
1.இரண்டடுக்கு முகக்கவசம் (2 ply mask )
எந்த விதத்திலும் மருத்துவ மற்றும் நுண்துகள் தடுப்பிற்கு பயன்படாத போலி முகக்கவசங்கள் இவை. வடிகட்டி (Melt blown Filter )இல்லாமல் வெறும் இரண்டடுக்கு PP Non Woven துணியால் தயாரிக்கப்படும் இந்தவகை முகக்கவசங்களைத்தான் இந்திய மக்கள் அதிக அளவில் அணிவதை பார்க்க முடிகிறது. மருத்துவமனைகள் கூட தரம் வாய்ந்த முகக்கவசங்கள் கிடைக்காததால் இவற்றை வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதுதான் கொடுமை.இவை மாஸ்க் இல்லை ஆனால் மாஸ்க் மாதிரி ..இவைகள் 10 % நுண்ணுயிரிகளை கூட தடுக்காது.இதை அணிந்து திரிந்தால் தொற்று உறுதி.
2. மூன்றடுக்கு பொது உபயோக முகக்கவசம் (3 ply Civil Mask)
இந்த வகை முகக்கவசங்கள் உள் மற்றும் வெளிப்புற அடுக்குகள் PP Non woven வகை துணியால் ஆனது.நடுவில் வடிகட்டி (Melt Blown Filter) இருக்கும். இவை மூன்று வகைகளில் தயாரிக்கப்படுகிறது.
Type A
வடிகட்டியின் கனம் சதுர மீட்டருக்கு 18 கிராம் ( 18 GSM Melt Blown Filter )
வடிகட்டியுடன் வரும் முகக்கவசங்களிலேயே மிகவும் தரம் குறைந்தது இந்தவகைதான். இதுதான் இந்தியாவில் பெரும்பான்மையான ஆலைகளில் தயாரிக்கப்படுகிறது.இவற்றின் உண்மையான நுண்ணுயிரிகளை வடிகட்டும் திறன் 80 சதவீதத்திற்கும் குறைவு..இவற்றால் கொரோனா வைரஸை போன்ற நுண்ணிய நோய்க்கிருமி பரவலை தடுக்க முடியாது.
Type B
வடிகட்டியின் கனம் சதுர மீட்டருக்கு 20 கிராம் ( 20 GSM Melt Blown Filter )
இந்த வகை முகக்கவசங்களின் நுண்ணுயிரிகளை வடிகட்டும் திறன் 94 சதவீதத்திற்கும் குறைவு..இவற்றாலும் கொரோனா வைரஸை போன்ற நுண்ணிய நோய்க்கிருமி பரவலை தடுக்க முடியாது.இந்த வகை முகக்கவசங்களும் இந்தியாவில் மிகக்குறைவான அளவிலேயே தயாரிக்கப்படுகிறது'
Type C
வடிகட்டியின் கனம் சதுர மீட்டருக்கு 25 கிராம் ( 25 GSM Melt Blown Filter )
நோய்த்தொற்று உள்ள இடங்களில் பணி செய்யும்,அரசு ஊழியர்களும் , சுகாதார பணியாளர்களும்,தன்னார்வலர்களும் ,கொரோனா போன்ற நோய்த்தொற்று உள்ளவர்களும் ,இந்த தொற்றில் இருந்த ஓரளவு பாதுகாக்க மக்கள் அணியத்தகுந்த குறைந்த விலை 3 ply மாஸ்க் இதுதான்.ஜனவரி மாத இறுதியில் ஷாங்காயில் இருக்கும் எனது சீன நண்பர்கள் கேட்டுக்கொண்டதால் சில முகக்கவச தயாரிப்பு தொழிற்சாலைகளை நேரடியாக சென்று பார்த்து அவர்கள் தயாரிப்புகளை ஆய்வகங்களில் கொடுத்து சோதனை செய்தேன் . இந்த தரத்துடன் முகக்கவசம் தயாரித்தவர்கள் 3 நிறுவனங்கள் மட்டும்தான்.அவர்களும் பின்னர் தரம் குறைந்த முகக்கவசம் தயாரித்து அதிக லாபம் பார்க்க துவங்கி விட்டார்கள்.
3. மூன்றடுக்கு மருத்துவ முகக்கவசம் (3 ply Medical Mask )
மருத்துவ முகக்கவசங்கள் இந்த கட்டுரையின் மேலே சொன்ன அனைத்து வகைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.பார்க்க ஒரே போல இருந்தாலும் இவற்றின் முன் மற்றும் பின் புற அடுக்குகள் 25 GSM SMS Non woven (நெய்யப்படாத) துணியால் ஆனது.இந்த SMS Non Woven துணி என்பது Melt Blown மற்றும் PP Non woven துணியால் நெருக்கி அழுத்தப்பட்ட அடுக்கு ஆகும். 25 GSM முன்புற மற்றும் 25 GSM பின்புற SMS அடுக்குடன் நடுவில் 25 GSM Melt Blown வடிகட்டியால் இந்த மருத்துவ முகக்கவசங்கள் தயாரிக்கப்படுகிறது .இவை EN 14883 என்ற ஐரோப்பிய மற்றும் ASTM Level 3 தரத்துடன் இருக்கும். இவை 95 சதவீதம் மற்றும் அதற்க்கு மேல் நுண்துகள் ,நுண் உயிரிகள் மற்றும் நோய் கிருமிகளில் இருந்து பாதுகாக்கிறது.
4. மூன்றடுக்கு அறுவை சிகிச்சை முகக்கவசம் (3 ply Surgical Mask )
மூன்றடுக்கு மருத்துவ முகக்கவசத்திற்கும் ,மூன்றடுக்கு அறுவை சிகிச்சை முகக்கவசத்திற்கும் மூன்று வேறுபாடுகள் உள்ளன .
1.இவற்றின் நடு அடுக்கில் இருக்கும் வடிகட்டி 30 GSM Melt Blown Fabric -ல் ஆனது. இது கூடுதல் வடிகட்டும் திறனை கொண்டது.99 % வரை நோய் கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கிறது.
2.இவை கிருமி நீக்கம் /நோய் நுண்மங்கள் நீக்கப்பட்டது .
3.இவற்றை அறுவை சிகிச்சை கூடங்களிலும் ,தீவிர கண்காணிப்பு பிரிவிலும் பயன்படுத்தலாம். 3 அடுக்கு முகக்கவசங்களில் மிகவும் பாதுகாப்பானது இந்த வகைதான்.
மேற்கண்ட அனைத்து வகையான முகக்கவசங்களும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தத்தக்கது .அதுவும் 3ல் இருந்து நான்கு மணிநேர பயன்பாட்டிற்கு மட்டுமே உகந்தது. குறிப்பாக மாஸ்கின் உட்புறத்தை கையால் தொடக்கூடாது.அப்படி தொட்டால் அதன் பிறகு அதை பயன்படுத்தக்கூடாது.
5. N வகை மருத்துவ முகக்கவச வகைகள் ( Not resistant to oil Masks / Respirators )
N வகை மருத்துவ முகக் கவசங்களை பற்றிய ஒரு தவறான புரிதல் அனைத்து மட்டத்திலும் இருக்கிறது. ன் 95 மட்டும்தான் இந்த வகையில் உள்ள ஒரே முகக்கவசம் என்ற தவறான எண்ணம் பலரிடமும் உள்ளது.N 95 அமெரிக்க தரக் கட்டுப்பாட்டுடன் கூடிய Not resistant to oil Masks வகையை சார்ந்தது அவ்வளவுதான். N 95 -ஐ அதிகமாக தயாரிக்கும் அமெரிக்க நிறுவனம் 3 M அதன் பெரும்பான்மையான உற்பத்தியை சைனாவில் இருக்கும் தனது தொழிற்சாலைகளிலேயே செய்கிறது.
ஐரோப்பிய தரக்கட்டுப்பாடு இவ்வகை முகக்கவசத்தை FFP 2 என அழைக்கிறது. சீனா இதை KN 95 என அழைக்கிறது.தென் கொரியா இதை KF 94 என அழைக்கிறது.ஜப்பான் இதை DS என்று அழைக்கிறது.இவை அனைத்தும் ஒரே வகையாக இருந்தாலும் காப்புரிமை காரணமாக தோற்றத்தில் சில மாறுபாடுகள் உள்ளன.இந்த வகை மாஸ்க்குகள் முகத்தை சரியாக மூடிக்கொள்வதால் அதிக பாதுகாப்பை தருகிறது. மேலும் 3 நாட்கள் வரை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
N 95 தயாரிப்பு நிறுவனமான 3ம் 2020 ஜனவரி வெளியிட்ட செய்தி அறிக்கையில் இந்த வகை முகக்கவசங்களை ஆய்வு செய்து விளக்குகிறது. அந்த அறிக்கையில் ஐரோப்பிய FFP 2 (EN 149-2001) ,Korean KF 94 ஆஸ்திரேலிய / நியூசிலாந்து P 2 ஆகியவை 94 % அல்லது அதற்க்கு மேல் பாக்டீரியா மற்றும் வைரஸ்களிடம் இருந்து பாதுகாக்கிறது
அமெரிக்காவின் N 95 ,சைனாவின் KN 95 மற்றும் ஜப்பானின் DS ஆகியவை ஒரே தரம் மற்றும் செயல்திறனை கொண்டுள்ளது.இவை 95 % -ல் இருந்து 99.7 % வரை நுண்ணுயிரிகள் ,கிருமிகள் மற்றும் வைரஸ்களிடம் இருந்து பாதுகாக்கிறது என்று அந்த ஆய்வ றிக்கையில் 3M நிறுவனம் தெரிவித்துள்ளது.சீனாவின் KN 95 -தான் அந்த நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிகம் உதவிய முகக்கவசம் என்பது குறிப்பிடத்தக்கது.
விஞ்ஞான ஆராய்ச்சி முடிவுகள்
எடின்பர்க் பல்கலைக்கழகம் N வகை மருத்துவ முகக்கவசங்களை மையமாக வைத்து கொரோனா தொற்றை இவை தடுக்குமா என்ற ஆராய்ச்சியில் ,இவ்வகை N 95, KN 95 மற்றும் DS வகை மாஸ்குகள் 0.007 மைக்ரான் வரையுள்ள வைரஸ்கள் மற்றும் நுண் துகள்களிடம் இருந்து அணிபவர்களை பாதுகாக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறது. கொரோனா வைரஸ் நுண்நோக்கியால் அளவீடு செய்யப்பட்டதில் 0.02-ல் இருந்து 0.05 வர இருக்கிறது. ஆகவே N 95 ,KN 95 மற்றும் DS ஆகிய N வகை முகக்கவசங்கள் கொரரோனா பரவலை தடுக்க உதவும்.
எந்த முகக்கவசங்களை வாங்கலாம் ?
கீழ்கண்ட முகக்கவசங்கள் மட்டுமே வாங்க வேண்டும்.
25 GSM-ம் மற்றும் அதற்குமேல் உள்ள 3 ply சிவில் மாஸ்க்
3 ply Medical Mask
Sterile Surgical Masks
N 95 ,KN 95 ,KF 94 ,FFE 2 &3 , P 2 மற்றும் DS
எவற்றை பயன்படுத்தக்கூடாது ?
25 GSM-கும் குறைவான Melt Blown Filter கொண்ட மாஸ்குகள்
Melt Blown Filter இல்லாத 2 ply மாஸ்குகள்
துணியால் செய்யப்பட்ட மாஸ்குகள்
கையால் ,தையல் எந்திரத்தால் தைக்கப்பட்ட மாஸ்குகள்
இவை அனைத்தும் 20 சதவீதம் கூட நுண்ணுயிரிகளை தடுக்காது.கைக்குட்டை ,துணி ,துண்டுகள் போன்றவை 10 சதவீதம் கூட உங்களை பாதுகாக்காது..
* மாஸ்க் வியாபாரிகள் கவனத்திற்கு
இதை படித்த பிறகாவது தரமற்ற போலி முகக்கவசங்களை விற்று உயிரோடு விளையாடாதீர்கள்.
முகக் கவசங்கள் பற்றி, அறியாத பல செய்திகளை அறிந்தேன் ஐயா.
ReplyDeleteமகிழ்ச்சி
Deleteவிதம்விதமான மாஸ்க் வகைகள் பற்றிய தகவல்கள் சிறப்பு.
ReplyDeleteநன்றி
Deleteமாஸ்க் என்று கடையில்கேட்டால் கொடுக்கு முகக் கவசங்களே பெரும்பாலும் உப்யோகத்தில் நம் பிதமர் அணியும் துணிக்கவசம் சரியா
ReplyDeleteபழைய துணிகள், பெண்கள் பயன்படுத்திய உள்ளாடை துணிகளை வைத்து முகமூடி தைத்து விற்கின்றார்கள்.
Deleteஎந்த மாஸ்க் பயன்படுத்தலாம் என்பதற்கான பதிவு - எந்த முகக்கவசங்களை வாங்கலாம் ?
ReplyDeleteகீழ்கண்ட முகக்கவசங்கள் மட்டுமே வாங்க வேண்டும்.
25 GSM-ம் மற்றும் அதற்குமேல் உள்ள 3 ply சிவில் மாஸ்க்
3 ply Medical Mask
Sterile Surgical Masks
N 95 ,KN 95 ,KF 94 ,FFE 2 &3 , P 2 மற்றும் DS - அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி
நன்றி
Deleteஅருமையான தொகுப்பிற்கு நன்றி...
ReplyDeleteஇவைகளின் விலை விபரங்கள் பற்றி எதுவும் இதுவரை சரியாக தெரியவில்லை...
ReplyDeleteஇரண்டு ரூபாய் தொடங்கி 90 ரூபாய் வரைக்கும் அவரவர் விருப்பப்படி விற்கின்றனர். ஆன்லைன் வியாபாரத்தில் 3 நவீன மாஸ்க் 399 என்று விற்கின்றார்கள். எண்ணிக்கை தரம் பொறுத் மாறுபடும்.
Delete