அஸ்திவாரம்

Wednesday, May 27, 2020

ராகுல் மற்றும் பிரியங்கா

சுய ஊரடங்கு 4.0 - 68

Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 31 வரை)


கொரானா காலத்தில் கூட ராகுலும் பிரியங்காவும் மக்களுக்கான அரசியல் செய்ய முன் வரவில்லை. அவர்களின் பாட்டி அரசியல் போலவே கௌரவ அரசியல் எண்ணத்திற்குள் தான் இன்னமும் உழன்று கொண்டு இருக்கின்றார்கள்.  

ராஜீவ் காந்தி நல்லவரா? கெட்டவரா? ஊழல் செய்தவரா? அல்லது ஊழல் செய்தவர்களுக்குத் துணை புரிந்தவரா என்று தெரியாது. எங்கள் ஊரில் என் அருகில் நள்ளிரவில் வந்து நின்றார். அவர் போட்டு இருந்த செண்ட் வாசம் கூட என் நினைவில் உள்ளது. பாதுகாப்பு என்பது இல்லவே இல்லை. அவர் ட்ரேட் மார்க்கான கையை உயர்த்திக் காட்டுவது. அங்கு கூடியிருந்த ஐம்பது பேர்களை மதிப்புடன் பார்த்து அருகே சென்று சுற்றிச் சுற்றி வந்தார்.




என் அருகே ஐந்தடி தொலைவில் வெள்ளை குப்தாவில் வந்து நின்றார். அவர் ஓட்டி வந்த ஜீப்பிலிருந்து இறங்கி வந்து புத்தம் புது மலர் போல இறங்கி வந்து பேசினார். நான் என் வாழ்நாளில் பார்த்த ஒரே பாரதப் பிரதமர். இன்று வரையிலும் அதே பிரமிப்பு என்னிடமுண்டு.

எங்கள் ஊருக்குள் வருவதற்கு முன்பு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ப. சிதம்பரம் வீட்டில் செட்டி நாட்டுப் பலகார வகைகளை இரவு நேர சாப்பாடாகச் சாப்பிட்டு விட்டு வந்து இருந்தார். திகைப்புடன் கூடவே ஆச்சரியத்துடன் (மறுநாள் பத்திரிக்கையில் செய்தியாக வந்தது) பேட்டி கொடுத்து இருந்தார்.

நேரு, இந்திரா, ராஜீவ் போன்றோர்களை நிறை குறையுடன் ஏற்றுக் கொள்ள எனக்குத் தயக்கமில்லை.

ராஜீவ் இந்தியாவை நேசித்தார். அங்குலம் அங்குலமாக அலசினார். பறந்து கொண்டே இருந்த மனிதர். அவர் பிரதமராக இருந்த காலகட்டத்தில் எங்கள் ஊரில் தெரு விளக்குகள் கூட அதிகமில்லை. (அவர் பயணித்து வந்த ஜீப் இருட்டுக்குள் தான் சென்றது. அருகே புதுக்கோட்டை மாவட்டத்தின் எல்லை தொடங்கும். அந்தப் பக்கம் இன்னமும் மோசம். சாம்பல் பள்ளத்தாக்கு போல 1000 ஏக்கர் முந்திரிக்காடு வழியாகவே சென்றார்) இந்த நிலையில் தான் இந்தியாவை முழுமையாக மாற்ற வேண்டும் துடித்தார். விதி வேறு பாதையில் அழைத்துச் சென்றது.

காந்தி சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பு இந்தியாவில் (அன்றைய இந்தியாவின் போக்குவரத்து சூழலை நினைவுக்குக் கொண்டு வரவும்) வடக்கும் கிழக்கும், மேற்கும் தெற்கும் என நான்கு திசைகள் தொடங்கி மொத்தமாக எட்டுத் திசைகளும் பயணித்தார்.

இந்தியர்கள் என்ற ஒற்றை வார்த்தையில் இங்குள்ள பலம் பலவீனங்களைப் புரிந்து கொண்டு அதன் பிறகே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்திராவிற்கு போதும் போதும் என்கிற அளவிற்கு நேரு பயிற்சி அளித்தார். அது ராஜீவ் காந்திக்கு அமையவில்லை. எடுத்தேன். கவிழ்த்தேன் என்று இறுதியில் சிதறிப்போனது கொடுமையிலும் கொடுமை.


ஆனால்......

ராகுல் இன்று வரையிலும் தப்பு மேல் தப்பாகச் செய்து கொண்டு வருவது தான மோடியின் அதிர்ஷ்டம் என்றே சொல்வேன். தாயின் வளர்ப்பு அப்படி என்று எடுத்துக் கொள்ள வேண்டும். குடும்பம் செய்த மொத்த பாவங்களையும் இன்று ராகுல் சுமப்பது தான் கர்மா.மாநிலக் கட்சிகளைப் பாட்டி கொத்து பரோட்டா போல சால்னா போடாமல் சாப்பிட்டார். தன் அப்பா வரைக்கும் அப்படித்தான் நடந்தது. இன்று ஒரு மாநிலக்கட்சி கூட ராகுலை மதிக்கத் தயாராக இல்லை என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மன்மோகன்சிங் இரண்டாவது முறை ஆட்சி அமைத்த போது இவரை வந்து பொறுப்பு எடுத்துக் கொள்ளச் சொன்னார். எந்த நிலையிலும் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல், எதில் மீது பற்று இல்லாமல், பொறுப்பற்ற தன்மையால் கிடைத்த அதிர்ஷ்ட வாய்ப்புகளைக் கொட்டிக் கவிழ்த்தார். அப்பாவைப் போல எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தான் ஒவ்வொன்றையும் கையாள்கின்றார். இதற்கிடையே திடீர் திடீர் என்று காணாமல் போய்விடுகின்றார். ஆராய்ந்து பார்த்தால் அது தாய்லாந்தில் தொடங்கின்றது. இறுதியில் இத்தாலியில் முடிகின்றது. உச்சக்கட்ட அவமானத்தில் நேரு பரம்பரை இன்று தவிக்கின்றது.

இவர் போதாது என்று பிரியங்கா உள்ளே வந்து கொண்டு இருக்கின்றார். அவர் கணவர் பற்றி ஒரு வார்த்தையில் எழுத வேண்டுமென்றால் பக்கா கிரிமினல்.முழு நேர கிரிமினல். போதாதா? பிரியங்கா அரசியல் கற்றுக் கொள்ள வாய்ப்பில்லை. எப்படி இந்திராவிற்கு சஞ்சய் காந்தி சவாலாக இருந்தாரோ அதே போல வதேரா இருக்கக்கூடும். ஆட்சி அதிகாரம் இல்லாத காரணத்தால் வெளியே தெரியாமல் உள்ளது. மேலும் ராகுலும் பிரியங்காவும் படித்த படித்த உபி முதல்வர் யோகி அவர்கள் ஹெட்மாஸ்டர் என்பதனை கவனத்தில் வைத்து யோசித்துப் பாருங்கள்.

நேரு, இந்திரா, ராஜீவ், சோனியா வரைக்கும் உபி மக்கள் கைவிடாமல் கடைசி வரைக்கும் அன்பைத்தான் பொழிந்தார்கள். ஆனால் இந்தியாவில் இன்று வரையிலும் 100 ஆண்டுகள் வளர்ச்சியில் பின் தங்கியுள்ள மாநிலம் என்றால் அது உபி தான். திருப்பூரில் பணிபுரியும் உபி மாநிலத் தொழிலாளர்களின் நடவடிக்கைகள், மிரட்சிகளைப் பார்த்து பல முறை வியந்ததுண்டு.

ஓட்டு வாங்கி, ஆட்சி அமைத்தும், கடைசி வரைக்கும் எதுவும் செய்யாமல் இவர்கள் உபி மக்களுக்கு நன்றாக வச்சு செய்த பாவத்தை இன்று ராகுலும் பிரியங்காவும் அறுவடை செய்கின்றார்கள்.

(நண்பர்கள் உபியில் நடப்பதைப் பற்றி எழுதும் போது வருத்தப்படுகின்றார்கள். இது குறித்து முழுமையாக அறிய வேண்டுமென்றால் ஆங்கிலப் பத்திரிக்கை சிலவற்றையாவது படிக்க வேண்டும் என்பது அன்பான கோரிக்கை. இல்லாவிட்டால் யோகி ஒழிக. முடிந்தது கதை).

(புலம் பெயர் தொழிலாளர்களைப் பற்றி, கொரானா காலத்தில் அவர்கள் படும் துன்பங்களைப் பற்றி, இதிலும் நடக்கும் அரசியல் குறித்து இந்த வாரக் குரல் பதிவில் விரிவாகப் பேசியுள்ளேன், இந்த முறை பலவிதங்களில் மேம்படுத்தியுள்ளேன். வரும் ஞாயிறன்று 4 தமிழ் மீடியாவில் வருகின்றது.)

ராகுல் மற்றும் பிரியங்காவும் காங்கிரஸ் ஆட்சியை இந்தியாவில் கொண்டு வருகின்றார்களோ இல்லையோ? அல்லது இந்தியா என்பது எங்கள் குடும்பம் மட்டுமே ஆள வேண்டியது. இங்கு வேறு எவருக்கும் உரிமையில்லை என்று மனதிற்குள் நினைக்கின்றார்களே இல்லையோ? நேஷனல் ஹெரால்ட் வழக்கிலிருந்து வெளியே வர ஆட்சிக்கு வந்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் மோடி அன் கோ மண்ணுக்குள் போட்டுப் புதைத்து பில்லர் கட்டி எழுப்பி விடுவார்கள் என்று கருதுகின்றார்களோ? இல்லையோ?

இருவரும் முதலில் அடுத்த நான்கு வருடங்களும் இந்தியா முழுக்க சுற்றி வந்தால் போதும். மாநிலத்தில் உள்ளவர்களை மதித்து அவர்கள் சொல்வதைக் கேட்டால் போது. மாநிலத்தில் உள்ள தலைவர்களை வளர அனுமதித்தால் போதும். கூட்டணிக் கட்சிகளிடம் இன்னமும் தாதா போல நடக்காமலிருந்தால் போதும். பழம் பெருச்சாளிகளை வெளியே துரத்தினால் போதும். குடும்பம் வேறு. அரசியல் வேறு என்று நிரூபித்தால் போதும்.

முன்பு போல உழைக்காமல் அப்பா பெயர், பாட்டி பெயர் சொன்னால் போதும் என்று நம்பிக்கொண்டு இருக்கின்றார்கள் போலும். அதற்கெல்லாம் இனி இங்கே வாய்ப்பே இல்லை. வருகின்ற 4 வருடத்திற்குள் பாஜக என்ன செய்வார்கள் என்று யோசித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

காரணம் காங்கிரஸ் ன் வாக்கு சதவிகிதம், காங்கிரஸ் கட்சியை விரும்பக்கூடியவர்கள் இந்தியாவில் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றார்கள். தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் வலுவான ஓட்டு வங்கி உண்டு.

இப்படி நடக்கும் பட்சத்தில் அடுத்த நான்கு வருடங்களுக்குப் பிறகு தகுதியான பாஜகவுடன் சரிக்குச் சமமாகப் போட்டிப் போட்டு எதிரே நிற்கும் அளவிற்கு எதிர்க்கட்சியாக மாற வாய்ப்புண்டு.


"விகடன் வீழ்ச்சி"

9 comments:

  1. இப்போ மொத்தமும் கிரிமினலாக உள்ளதே... அதைப்பற்றி ஏதேனும்...?

    ReplyDelete
    Replies
    1. இன்னும் மூன்று வருடங்கள் காத்திருப்பேன். காத்திருங்கள். பார்க்கலாம். கொஞ்சம் நம்பிக்கை உள்ளது.

      Delete
  2. வெள்ளை குப்தாவில் - குர்தாவில்?

    படித்த படித்த

    சொல்வதைக் கேட்டால் போது.

    அன்பின் ஜோதிஜி... இந்த முறை ஏனோ இந்த தட்டச்சு பிழைகள் கண்ணில் பட்டது!

    உத்திரப் பிரதேசம், பீஹார் பகுதிகளில் பல வருடங்களாக முன்னேற்றம் என்பதே இல்லை - 1991-இல் இருந்து பல முறை அங்கே சென்று வந்திருக்கிறேன் - அவற்றை எல்லாம் பார்க்கும்போது அங்கே இருப்பவர்கள் துயரம் நேரில் கண்டிருக்கிறேன். நிறைய மாற்றங்கள் தேவை. பெரும்பாலான அரசியல்வாதிகள் தங்கள் ஆதயத்திற்கு மட்டுமே அரசாங்கத்தினை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை அங்கே சென்று வந்தால் உங்களால் புரிந்து கொள்ள முடியும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. பார்வையில் இருந்து தவறிவிட்டது. வட மாநிலக் கொடுமைகளை இங்கு வரும் தொழிலாளர்கள் மூலம் அறிந்து கொள்கிறேன்.

      Delete
  3. எனக்கென்னவோ எழுதும் எல்லோரும் எல்லாம் தெரிந்தவராக தங்களை நினைக்கிறர்கள்

    ReplyDelete
    Replies
    1. நீங்க எப்படி விமர்சனம் எழுத நினைத்தாலும் அப்படியே அப்பட்டமாக இங்கே எழுதலாம். பாராட்டி எழுத வேண்டும் என்று அவசியமில்லை. மாற்றுக் கருத்தையும் இங்கே எழுதலாம். ஆனால் அது ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்க வேண்டும். முயற்சிக்கவும்.

      Delete
  4. நல்ல ஆய்வு. தெளிவாக விளாசியுள்ளீர்கள். உபி எல்லாவற்றிலும் பின் தங்கித்தான் இருக்கிறது. ட்ரெயின் டிக்கெட் வாங்கித்தான் ஏறவேண்டும் என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. கவர்ன்மெண்ட் ஃப்ரீயாக ட்ரெயின் விடுகிறதுஎன்பது அவர்கள் நினைப்பு.

    ReplyDelete
    Replies
    1. வட மாநிலங்கள் முழுக்க இப்படித்தான். 75 வருடங்கள் பின்தங்கி உள்ளனர்.

      Delete
  5. ironic-you published a photo which shows Rahul sitting on a pavement talking with seemingly poor fellows... contrary to your writing
    Rajan

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.