அஸ்திவாரம்

Thursday, May 28, 2020

இந்தியாவில் வறுமையை ஒழிப்போம்.

சுய ஊரடங்கு 4.0 - 69

Corona Virus 2020


(மாா்ச் 25 முதல் மே 31 வரை)

கொரானா காலத்தில் மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிவித்த இருபது லட்சம் கோடி திட்டங்களின் விபரங்கள்.

முதல் கட்ட அறிவிப்பில் ரூ.5,94,550 கோடி,

2ம் கட்ட அறிவிப்பில் ரூ.3,10,000 கோடி,

3ம் கட்ட அறிவிப்பில் ரூ.1,50,000 கோடி,

4 மற்றும் 5ம் கட்ட அறிவிப்பில் ரூ.48,100 கோடி மதிப்பிலான திட்டங்களை நிதியமைச்சர் அறிவித்தார்.

மேலும், பிரதமர் முன்கூட்டி அறிவித்த திட்டங்களுக்கு ரூ.1,92,800 கோடியும்,

ரிசர்வ் வங்கி அறிவித்த திட்டங்களுக்கு ரூ.8,01,603 கோடியும் என மொத்தமாக ரூ.20,97,053 கோடிக்கான அறிவிப்புகள் இடம்பெற்றன.






இப்போது நிர்மலாக்காவின் "20 லட்சம் கோடி".


கொஞ்சம் முன்னால் அருண் ஜேட்லி "கரை கண்ட வித்தகர்".


அதற்கு முன்னால் ப.சிதம்பரம் "ஆசியாவின் சிறந்த நிதியமைச்சர்".


அதற்கு முன்னால் மன்மோகன்சிங் இல்லாவிட்டால் என்ன ஆகியிருக்கும் தெரியுமா? "கண் கண்ட கடவுள்" போல வந்தார்?

சரி இவர்கள் யாருக்கு உழைத்தார்கள். என்ன செய்தார்கள்? இவர்களின் புத்திசாலித்தனம் யாருக்குப் பயன்பட்டது. இந்தியாவில் வறுமை ஒழிந்து விட்டதா? இதற்குப் பின்னால் உள்ள உண்மையான காரணம் என்ன?

நீங்கள் இந்தியப் பொருளாதாரம் குறித்து யாருடனும் பேசவே முடியாது. அதுவொரு மகா பெரிய சமுத்திரம். கடலின் பெயர் மாறுவது போல வங்கி, காப்பீடு, ஜிடிபி,தங்கம், பாண்ட, அந்நியச் செலாவணி,வராக்கடன், மானியம், நலத்திட்டங்கள், என்று இன்னும் பல விதங்களில் பிரிந்து கொண்டே செல்லும்.

இதுபோன்ற விபரங்களைத் தொலைக்காட்சி விவாத மேடைகளில் நடிகர் மயில்சாமி வரைக்கும் பேச வந்து விட்டார். இப்போது ஜெயரஞ்சன் இந்த நாடு உருப்பட வாய்ப்பே இல்லை என்று சாபமாகக் கொடுத்துக் கொண்டே பிரபலமாகிக் கொண்டேயிருக்கிறார்.

ஆனால் ஆக்ஸ்போர்ட், ஹார்வேர்டு போன்ற சர்வதேசப் புகழ் பெற்ற பல்கலைக்கழகப் பொருளாதார வல்லுநர்கள் போல இந்தியாவின் பொருளாதார பலத்தைப் பற்றிப் பேசவே மாட்டேன்.

நான் பேச விரும்புவது வேறு சில விசயங்கள்.

1. தெருவோரங்களில் மிதிவண்டி மூலமாக, தள்ளுவண்டிகள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வீடு வீடாகக் காய்கறி முதல் பிளாஸ்டிக் சாமான்கள் வரைக்கும் பல்வேறு பொருட்களைக் கொண்டு வந்து விற்பவர்களின் ஒரு நாள் முதலீட்டுத் தேவை ஆயிரம் முதல் பத்தாயிரம் வரைக்கும்.

2. மீன் சந்தையில் பங்கு பெற்றுள்ள மொத்த வியாபாரிகள், தரகர்கள், சில்லறை வியாபாரிகள், பெரிய கடைகள், சிறிய கடைகள், தெருவோரக் கடைகள் போன்ற இவர்களுக்குத் தேவைப்படும் தொகை தினமும் பத்தாயிரம் முதல் ஐந்து லட்சம் வரைக்கும்.

3. போன்டா, பஜ்ஜி, பக்கோடா போன்ற திண்டபண்டங்களை வண்டிக்கடைகள் மற்றும் சிறிய பெரிய கடைகள் மூலம் விற்பனை செய்பவர்கள். தேவைப்படும் தொகை தினந்தோறும் ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரைக்கும்.

4. குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு செயல்படும் மிகச் சிறிய நிறுவனங்கள்.

உங்கள் எண்ணத்தில் வருகின்ற மேலே சொன்ன நான்கு பிரிவுகள் போல அழுகும், அழுகாத, தினசரி தேவைப்படுகின்ற, சில நாட்கள் வைத்துப் பயன்படுத்துகின்ற என்று ரகம் வாரியாக பிரித்து யோசித்துப் பாருங்கள். இவர்கள் யார்? எப்படித் தொழில் செய்கின்றார்கள்? யார் உதவுகின்றார்கள்? லாப நட்டக் கணக்கு என்ன?

இது போன்ற தொழிலில் இருப்பவர்களை அரசாங்கம் கடந்த 70 வருடங்களாக யோசிப்பதே இல்லை.

இவர்களால் அரசாங்கத்திற்குப் பிரயோஜனமில்லை. இவர்கள் வங்கிகளுடன் தொடர்பு இல்லை. தனியார் நிதி நிறுவனங்கள், தனி நபர்கள் கந்து வட்டிகள் போன்றோர்கள் மூலம் தான் இவர்களின் நடைமுறை மூல தனம் திரட்டப்படுகின்றது. இவர்களின் லாபத்தில் முக்கால் பங்கு மூன்றாம் நபர்களுக்குச் சென்று சேர்ந்து விடுகின்றது.

வங்கிகள் சொல்வது.

இவர்களுக்கு பேலன்ஸ் ஷீட் இல்லை. பேன்கார்டு இல்லை. வங்கிக்கணக்கு இல்லை. இருந்தாலும் தினசரி பயன்படுத்துவதில்லை. ரிஸ்க் அதிகம். திரும்பக் கட்டுவார்கள் என்று சொல்ல முடியாது. வங்கியில் ஊழியர்கள் இல்லை. இவையெல்லாம் சல்லப்பிடிச்ச வேலை.

மொத்த ஐரோப்பியத் தேசங்களில் ஜிடிபி அளவை விட நம் இந்தியாவில் இது போன்ற முறைசாராத் தொழில் மூலம் நடக்கும், பரிமாற்றமென்பது பல மடங்கு அதிகம் என்று சொன்னால் நம்புவீர்களா?

இவர்கள் அரசாங்கத்தைத் தொடர்பு கொள்வதே இல்லை. காரணம் அவமானப்படத் தயாராக இல்லை.

வெற்றுக் கோஷமும், விளம்பர அறிவிப்புகளும் இவர்களுக்கு எந்த நல்லதையும் செய்து விடுவதில்லை.

வங்கிகளும் இவர்களைத் தேடிப் போகும் அளவிற்கு நம் நாட்டில் வெளிப்படைத்தன்மை இன்னமும் உருவாகவில்லை.

பதவியில் வந்து அமர்கின்ற ஒவ்வொரு மத்திய, மாநில நிதியமைச்சர்களும் இவர்களைக் கண்டு கொள்வதே இல்லை.

தன் கையால் கர்ணம் ஊன்றி தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் அபலைகள் இவர்கள்.

ஆனால் ஒவ்வொரு அரசியல்வாதிகளும் மறக்காமல் சொல்லும் கோஷம்,

இந்தியாவில் வறுமையை ஒழிப்போம்.☺️



ராகுல் மற்றும் பிரியங்கா



14 comments:

  1. உட்டோப்பியன் உலகில் வாழ்கின்ற அரசியல்வாதிகளைப் பற்றி என்ன சொல்வது?

    ReplyDelete
    Replies
    1. உட்டோப்பியன் உலகில்////////// இதன் அர்த்தம் என்ன?

      Delete
    2. உட்டோப்பியன் உலகில்/////-- meaning is 'every thing is very prefect', a ideal state or really a 'state in your dream'.

      Rajan

      Delete
  2. எதில் லாபமோ அதில் மட்டுமே அக்கறை... இது தான் அரசியல்வாதிகளுக்கும் பெரும் முதலாளிகளுக்கும் வசதி. சிறு தொழில் செய்பவர்கள் பற்றிய கவலை எப்போதும் இருப்பதே இல்லை.

    நல்லதொரு கட்டுரை.

    ReplyDelete
    Replies
    1. சரியான வார்த்தைகள்.

      Delete
  3. அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களில் யார் அதிகலாபமடைகிறார் கையில் வழியும் தேனை நக்காதவர்களா அரசியல் வாதிகள்

    ReplyDelete
    Replies
    1. தேனை எவரும் நக்கித் தின்பதில்லை. அப்படியே எடுத்துக் கொள்கிறார்கள். அது தான் பிரச்சனை.

      Delete
  4. ஐயா மோடி அவர்களுக்கு இவர்களை பற்றி தெரியும். இத்தகைய சிறு தொழில் செய்து மேலே வந்தவர் தான். அதனால் தான் பகோடா விற்க சொன்னார். ஆனால் மேலே வந்தவுடன் வந்த வழியை மறந்து விட்டார். "கண் இருந்தும் குருடன் ஆகிவிட்டார்."

     Jayakumar

    ReplyDelete
  5. //இது போன்ற தொழிலில் இருப்பவர்களை அரசாங்கம் கடந்த 70 வருடங்களாக யோசிப்பதே இல்லை//
    இவர்கள்தான் நம் நாட்டை நேற்றும் நடத்தினார்கள்
    இன்றும் வழி நடத்துகின்றனர்
    நிச்சயமாக நாளையும் வழி நடத்துவார்கள்.

    இவர்களை போன்றோர் எவரையும் நம்பாமல் தத்தமது உழைப்பை மட்டுமே நம்புகின்றவர்கள்.

    இவர்களால்தான் நம் நாடு மீண்டும் மீண்டும் எழுந்து நின்று வீறு நடை போட்டு கம்பீரமாக சாதிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் நம்பிக்கையுள்ளது.

      Delete
  6. முதலில் மதவாதத்தை ஒழிப்போம்... மற்றவை பிறகு...!

    ReplyDelete
    Replies
    1. அவர்களை நிறுத்தச் சொல். நாங்கள் நிறுத்துகிறோம் என்கிறார்களே?

      Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.