அஸ்திவாரம்

Friday, May 15, 2020

கொரானா காலத்தில் திறக்கப்படும் மதுக்கடைகள்

சுய ஊரடங்கு 3.0 - 56

Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)

மே 4 2020

வாடிவாசல் திறந்தது போல உற்சாகம் தான். ஆனால் காற்பங்கு மகிழ்ச்சி மட்டுமே. என் வீட்டிலிருந்து அருகே உள்ள முக்கிய சாலைக்கும் 200 அடி தொலைவு தான். ஆனால் கடந்த ஐந்து வாரங்களில் ஒரு முறை தான் அந்தப் பக்கம் சென்றுள்ளேன். சந்தைக்காக வெளியே செல்லும் தருணம் தவிர வேறெங்கும் செல்லத் தோன்றியதே இல்லை. பயமில்லை. பொறுப்பு.

ஆனால் நேற்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் முழு மனதோடு திருப்பூர் இயங்கலாம் என்று சொல்ல முடியாத அளவுக்கு மென்று விழுங்கி சென்னையிலிருந்து விபரமான அறிக்கை வரும் என்று தான் சொன்னார்.
கொரானா காலத்தில் காய்கறிகளின் விலை எந்த அளவிற்கு இருந்தது என்பதற்காக



ஏற்றுமதி உலகம் தனி. உள்ளூர் வர்த்தகம் தனி.

ஒன்று உலகத்தோடு தொடர்புடையது. லாரியில் பயணம் தொடங்கும். கப்பல், விமானம் என்று பல படிகள் கடந்து சென்று ஏறிச் செல்ல வேண்டிய ராஜ்யம். இப்போது இந்தியாப் பொருளாதாரம் அந்நியச் செலாவணி என்ற ஆக்ஸிஜன் தேவை. திருப்பூர் போன்ற ஊர்களால் முடியும்.

ஆனால் அதே சமயத்தில் இதன் மூலம் கொரானா பரவி விடக்கூடாது என்ற இரண்டுங்கெட்டான் நிலைமை.

மற்றொன்று எல்லைகளைக் கடந்து இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களோடு உறவாட வேண்டிய அவசியத்தில் உள்ள உள்ளூர் வர்த்தகத்தில் முக்கிய பங்காளி கனரக வாகனங்கள். அருகில் உள்ள ஈரோட்டுக்கே செல்ல வழியில்லாத போது ஜட்டி பனியனை ஏற்றிக் கொண்டு வட மாநிலங்களுக்கு எப்படிச் செல்ல முடியும்? மும்பை ஏற்கனவே முக்காடு போட்டுள்ளது. பாதி மாநிலங்களில் மருத்துவ கட்டமைப்பு என்பது ஆண்டவன் விட்ட வழி தான். முடங்கிப் போய் தான் கிடக்கின்றார்கள்.

பிழைத்தவர்கள் ஆசீர்வாதம் பெற்றவர்கள். இறந்தவர்கள் வரவில் செலவு என்று நினைத்துக் கொள்ள வேண்டியது தான்.

காலையில் வங்கி சென்று இருந்த போது வெளியே நவீன சானிடைசர் கூடவே வாளியில் தண்ணீர் வைத்திருந்தார்கள். ஏடிஎம் செயல்படவில்லை. வங்கியின் உள்ளே ஆட்கள் இல்லை. அதாவது நேரத்திற்கு ஆட்கள் வரவில்லை. மற்ற வங்கிகளில் எடுங்கள். கட்டணம் பிடிக்க மாட்டோம் என்று ஆறுதல் அளித்தனர். அதாவது தனியார் மற்றும் அரசு வங்கிகள் இயங்க முதல் அடியை எடுத்து வைத்துள்ளது. வருகின்ற புதன் கிழமை சற்று ஆசுவாசம் அடைய வாய்ப்புண்டு.

ஆனால் தபால்துறை இயங்கிக் கொண்டு தான் உள்ளது. அங்கு சோப்பு ப்ளஸ் வாளியில் தண்ணீர் வைத்து கழுவிட்டு உள்ளே போங்க என்று ஒருவர் கத்திக் கொண்டிருந்தார். ஒவ்வொரு இடங்களிலும் முகமூடி இல்லாதவர்கள் உள்ளே வர வேண்டாம் என்று அன்புக் கட்டளையிட்டுக் கொண்டிருந்தனர்.

சாலையில் லேசாக உயிர் வந்துள்ளது. பிழைக்க மாட்டார் என்று நம்பப்பட்ட நோயாளி கண்விழித்துப் பார்த்தால் எந்த அளவுக்குச் சந்தோஷம் வருமோ? அதே போலச் சாலையில் காலையில் நான் பார்த்த சில சிறு வாகனங்கள் உற்சாகத்தைத் தந்தது. காவல்துறை பயமின்றி இரண்டு சக்கர வாகனங்கள் எண்ணிக்கையில் சற்று அதிகமாக நீண்ட இடைவெளிக்குப் பின்னால் பறந்து சென்று கொண்டிருந்தனர்.

இன்று மளிகைக்கடையில் கூட்டமில்லை. காய்கறிக் கடைகளில் காய்கள் அதிகமாக இருந்தது. இன்று முதல் காலை 9 முதல் மாலை 5 மணி வரைக்கும் கடைகள் இயங்கலாம் என்றதும் காலையிலேயே முண்டியடித்து வந்து கொரானாவை விற்பனை செய்து கொண்டிருந்த பெண்கள் கூட்டம் எந்தக் கடையிலும் காணவில்லை. கத்திரிக்காய் விலை கிலோ என்பது ரூபாய் வரைக்கும் விற்றார்கள். இன்று கிலோ இருபது ரூபாய்க்கு வந்துள்ளது. காய்கறிகளின் விலை இனிமேல் குறையத் தொடங்கும்.

ஆனால் மளிகை மற்றும் அரிசியின் விலைகள் 30 முதல் 40 சதவிகிதம் ஏறியுள்ளது. கொரனாவிற்காக ஏற்றியவர்கள் இனி இறக்க வாய்ப்பில்லை. ஆனால் அரசாங்கம் 3 ரூபாய் பெட்ரோல் விலையைக் கூட்டினால் ஒரு மாதம் திட்டிக் கொண்டிருப்பார்கள். பெரிய உணவகங்கள் இன்னமும் திறக்கவில்லை.

பேக்கரி கடைகள் முழுமையாகத் திறக்கவில்லை. வெளியே ரஸ்க் மற்றும் ரொட்டி சமாச்சாரங்களை வைத்துக் கொண்டு உட்கார்ந்துள்ளனர். கடந்த ஐந்து வாரங்களில் ஸ்டாக் கில் இருந்த கேக்குகளை என்ன செய்திருப்பார்கள் என்று வீட்டில் உள்ள கேக் பிரியர் ஆவலுடன் கேட்டார்.

பழக்கடைகள் திறந்து இருந்தனர். துக்க வீட்டுக்குப் போவது போலப் பெண்கள் சேலைத் தலைப்பை வாயில் கட்டிக் கொண்டு செல்கின்றனர். கர்ச்சீப் முகமூடி முதல் பலவிதமான முகமூடிகளைச் சாலையில் பார்க்க முடிகின்றது. உடலில் உடை போல இப்போது முகமூடியும் அவசியத் தேவைகளில் ஒன்றாக மாறியுள்ளது.

திருப்பூர் இயல்பான வாழ்க்கைக்குரிய அ ஆ என்று எழுதத் தொடங்கியுள்ளது.

இந்த மாதத்திற்குள் ஃ போட வேண்டும். அக்கடா என்று போய்விடக்கூடாது.

கொரானா உருவாக்கியுள்ள மாற்றத்தை விட டாஸ்மாக் கலாச்சாரத்தை முழுமையாக முடங்கிய எடப்பாடி அரசு மீண்டும் திறக்குமா? மூடுமா? என்று தெரியவில்லை.

அரசின் கஜானா என்ற நோக்கிலும், வரப்போகின்ற தேர்தலுக்குரிய ஆயுதம் என்ற போக்கிலும் எடப்பாடி சில தைரிய நடவடிக்கைகளைச் செய்தால் வரலாற்றில் அவருக்கு இடமுண்டு. திருப்பூர் தொழிலாளர்களின் வாழ்க்கையிலும் அவர் முகம் கடவுளுக்குச் சமமாகப் பார்க்கப்படும்.

ஆனால் வாய்ப்புகள் மிக மிகக் குறைவு.

காரணம் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கும் கும்பலின் கஜானாவும் அது தான். அதிகாரத்தைத் தொடர்ந்து தக்க வைத்தே ஆக வேண்டும் என்ற பதைபதைப்பில் இருப்பவரின் ஆணிவேரும் அது தான்.



ஜனத்தொகை அதிகம். குறைந்தால் பரவாயில்லை - May 2020


8 comments:

  1. திருப்பூர் எவ்வளவோ பரவாயில்லை...

    ReplyDelete
    Replies
    1. முதல் முறை ஏமாந்து விட்டேன். 650 வரைக்கும். அடுத்த முறை சுதாரித்து விட்டேன்.

      Delete
  2. எழுத்தளவு சரியாக இருக்கிறதே... இதே போல் தொடரவும்...

    ReplyDelete
    Replies
    1. முயன்று பார்த்தேன். நன்றி

      Delete
  3. பிழைத்தவர்கள் ஆசீர்வாதம் பெற்றவர்கள். இறந்தவர்கள் வரவில் செலவு என்று நினைத்துக் கொள்ள வேண்டியது தான்.

    ReplyDelete
    Replies
    1. நிலமை அப்படித்தான் உள்ளது.

      Delete
  4. நல்ல பகிர்வு. இங்கே காய்கறி விலைகள் முன் போலவே இருக்கிறது. அதிக விலை இல்லை. மற்ற பொருட்களும் விலை அதிகமாகவில்லை.

    ReplyDelete
    Replies
    1. அருமை. உங்கள் ஹனிமூன் தேசம் இன்று தரவிறக்கம் செய்துள்ளேன். ஏற்கனவே படித்த பாதி அத்தியாயங்கள் இன்னமும் நினைவில் உள்ளது. குலுமணாலி என் விருப்ப இடங்களில் ஒன்று. நன்றி.

      Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.