அஸ்திவாரம்

Saturday, February 22, 2020

கேள்விக்குறியாகிறதா நீதித்துறையின் அதிகாரம்?

நேற்று தூங்கிக் கொண்டிருந்த போது நம் அன்புக்குரிய நிதியமைச்சர் என்னை எழுப்பி பொருளாதார பாடங்களை கற்றுக் கொடுத்தார். கனவில் வந்த பெண்மணி காணாமல் போய்விட்டார்.

குறிப்பாகத் தனியார் தொலைபேசி நிறுவனங்கள் கட்ட வேண்டிய ஒரு லட்சத்து நாற்பத்து ஏழு லட்சம் கோடி ரூபாய் என்பது ஊடகம் ஊதிப் பெருக்கி நடந்து கொண்டிருக்கும் நல்லாட்சியை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். டேட்டா புரட்சியை ஏற்படுத்திய, ஏற்படுத்தக் காரணமாக இருந்த தனியார் நிறுவனங்களை நாரசாரமாய் ஏசுகின்றார்கள் என்று புள்ளி விபரங்களைத் தந்து இருந்தார். (இணைப்பு கீழே கொடுத்துள்ளேன்).

"நாங்கள் இந்த நாட்டில் இருக்க வேண்டுமா? இவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது? நாங்கள் சொல்வது இறுதியான தீர்ப்பு என்பது கூட இவர்களுக்கு மட்டுமல்ல அரசாங்கத்திற்குக் கூடத் தெரியாதா? எந்த அரசாங்கமாவது வசூலிக்கத் தேவையில்லை. ஒத்தி வையுங்கள் என்று சொல்வார்களா?" என்று புலம்பித் தீர்த்தவர் வேறு யாருமில்லை. நம் உச்ச மன்ற நீதிமான்.

நிச்சயம் இது போன்ற பஞ்சாயத்துக்கள் நம் மோடி அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை என்று என் பக்கத்து வீட்டுக்காரர் பக்குவமாக எனக்கு எடுத்துரைத்தார். நானும் நம்பிவிட்டேன்.



காரணம் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கட்ட வேண்டிய பாக்கித் தொகையைக் கட்டு என்றதும் அவர்கள் நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டு கொள்ளாமல் கோல் மால் செய்து அரசாங்க ஊழியர் மூலம் நீதிமன்றத் தீர்ப்பைக் கேலிக் கூத்தாக்கிய சம்பவங்களை முழுமையாக நீங்கள் அறியக் கீழே இணைப்பு கொடுத்துள்ளேன்.

காங்கிரஸ் மட்டுமல்ல பாஜகவும் இந்த விசயத்தில் ஜெகதலகில்லாடி என்பது தான் இதில் முக்கிய விசயம். 2003 அன்று பஞ்சாயத்து தொடங்குகின்றது. ஜக்மோகன் தொலைத்தொடர்புத் துறை மந்திரியாக உள்ளார். தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கண்களைக் கசக்கிக் கொண்டு "எங்களால் கட்ட முடியவில்லை. தள்ளுபடி செய்யுங்கள் என்கிறார்கள். அப்படியா? சரி? உங்கள் ஆண்டு வரவு செலவு கணக்குகளைக் கொண்டு வாங்க. பார்த்தவுடன் தள்ளுபடி செய்கிறேன்" என்கிறார். நிறுவனங்கள் பின்னங்கால் பிடரி தெறிக்க ஓடி பிரதமர் வாஜ்பேஜ் முன் நின்றனர். பிரதமர் என்ன முடிவு எடுத்தார் தெரியுமா? ஜக்மோகன் அவர்களை நகர்ப்புற அமைச்சராக மாற்றி பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

ட்ராய் தலைவர் மூன்று மாதம் இலவசம் கொடுக்கக்கூடாது என்கிறார். உடனே அவர் மாற்றப்படுகின்றார். லாபத்தை விட எதிரிகளை அழிப்பது முக்கியம். ஏர்செல் சந்தையில் இல்லை. பாதி நிறுவனங்கள் இன்று பயத்தில் உள்ளது. ட்ராய் சட்டதிட்டங்கள் முழுமையாக மாற்றப்படுகின்றது. ஆனால் பிஎஸ்என்எல் ஒரு நாள் தாமத கட்டணத்திற்கு 30 லட்சம் ரூபாய் அபராதம். இதனைத்தான் நாம் ஜியோ புரட்சி என்று நாம் அழைக்கின்றோம்.

2003 தொடங்கி பாக்கி, பாக்கி என்று மாறி மாறி வட்டி சேர்ந்து இன்று ஒரு லட்சத்து 47 ஆயிரம் லட்சம் கோடி வந்து நிற்கின்றது. இன்னமும் கட்டாமல் அடம் பிடித்து தள்ளுபடி கேட்ட போது போது மேலே சொன்ன நீதிமான் குமுறி நொந்து போய்ச் சென்ன வாசகங்கள் வந்தது.

இப்போது உங்கள் நினைவுக்கு வர வேண்டியது என்ன தெரியுமா? எங்கள் நிர்மலாக்கா பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்து அவர் சொன்ன தொகை
2019-20இல் மத்திய அரசின் பட்ஜெட்டில் வரவுக்கு மேல் ஏற்பட்ட செலவுகளினால் ஏற்பட்ட பற்றாக்குறை : ரூ.7,66,846 கோடி

மோடி பெருமகனார் சில நாட்களுக்கு முன் திருவாய் மலர்ந்தார்? எல்லோரும் வரி கட்டினால் தான் நல்ல அரசாங்கத்தை நடத்த முடியும் என்றார்.

பற்றாக்குறை தொகையில் ஐந்தில் ஒரு மடங்கு மட்டும் தனியார் தொலை நிறுவனங்கள் கட்டாமல் அடம் பிடிக்கின்றார்கள். லாபத்துடன் செயல்பட்ட நிறுவனங்கள், களத்தில் பிஎஸ்என்எல் என்ற நிறுவனத்தை முறைகேடான வழியில் முடக்கிப் போட்டு கோடி கோடியாக சம்பாதித்த நிறுவனங்கள் ஏன் கட்ட மறுக்கின்றது?

அவர்கள் தான் லாபத்தில் பங்கீடு என்று அரசாங்கத்துடன் ஒப்பந்தம் போட்டார்கள். லாபம் வந்துள்ளது. வருடந்தோறும் கட்ட வேண்டிய தொகையைக் கொஞ்சம் கொஞ்சமாக இத்தனை வருடங்களில் கட்டியிருக்கலாமே? காரணம் இது ஜனநாயக நாடு. தள்ளுபடி எளிதில் நடந்து விடும் என்ற ஆசைக்குத்தான் இப்போது நீதிமான் ஆப்பு சொருகி உள்ளனர். ஆட்சியாளர்கள் தள்ளுபடி செய்யத் தயாராக உள்ளனர். நீதிமான் குறுக்கே படுத்துள்ளார். எப்படி தாண்டிப் போவது என்று குழம்பிப் போய் இருக்கின்றார்கள்.

பிஎஸ்என்எல் மேல் நிர்வாகம் மேல் ஏராளமான குற்றச்சாட்டு வைப்பவர்கள், எங்கக்கா ஏன் இந்தத் தொகையை வசூலிக்க வாய் திறப்பதில்லை என்பதனையும், சிறப்பாக சில வருடங்களுக்கு முன் செயல்பட்ட ரவிசங்கர் பிரசாத் பிஎஸ்என்எல் க்கு இன்னமும் வங்கி உத்தரவாதம் வழங்க மறுக்கின்றார் என்பதும், 4ஜி கொடுக்காமல் இருக்கின்றார் என்பதும், இது போல ஏன் அமைச்சர் கண்டும் காணாமல் இருக்கின்றார். பேசத் தொடங்கினால் தன் பதவி காணாமல் போய்விடும் என்பதனையும் நன்றாக உணர்ந்தே வைத்துள்ளார்.

மேலைநாடுகளில் தனியார் நிறுவனங்கள் மொத்த நாட்டுக்கும் சேவை புரியும் நிலையில் உள்ளது. பொருளாதார வளர்ச்சியை அதிகமாக்கியது. ஆனால் இங்குள்ளவர்கள் பிச்சைக்காசை தேர்தல் பத்திரம் மூலம் வழங்கி விட்டு, மக்களிடம் சுரண்டி, கொள்ளையடித்து, சம்பாரித்த தொகையையும் அரசுக்குக் கட்ட மனமின்றி தங்கள் விருப்பப்படி ஆட்சியில் இருப்பவர்களை ஆட்டுவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இவர்கள் தான் சொல்கின்றார்கள் ஊழலுக்கு எதிராக நாங்கள் ஆட்சி நடத்துகின்றோம் என்று.

பாவம் எளிய மக்கள்.


3 comments:

  1. எனக்கு தெரிந்த அதிகாரம் வேறு...!

    ReplyDelete
  2. அரசியல்... எந்தத் துறையும் இதில் விதிவிலக்கல்ல.

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.