அஸ்திவாரம்

Friday, February 21, 2020

நிதிநிலை அறிக்கை 2020

வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம். பெருக்குவோம் என்பது வெறும் கோஷமா? தேர்தல் அறிக்கையில் இட்டு நிரப்ப வேண்டிய வார்த்தைகளா? இனி இங்கே வாய்ப்பு உள்ளதா? என்ன பிரச்சனை?

மூன்று துறைகளின் வாயிலாக மட்டுமே இங்கே வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும்.

1. சுரங்கத்துறை.

(வட மாநிலங்களில் தனியார் கையில் இருந்தாலும் இது இன்று வரையிலும் மாஃபியா பிடியில் தான் உள்ளது) காமதேனு பசு போலக் கிடைக்கும் வருமானம் அரசாங்கத்திற்கு வருவதில்லை. அதிகாரிகள், இடைத்தரகர்கள், அந்தந்த பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்களைக்கடந்து முதலீடு செய்த நிறுவனம் காசு பார்க்க வேண்டும். வேலை செய்பவர்களும் வாழ்நாள் முழுக்க தங்களது பசியின் ரொட்டிக்காக உழைத்து மடிய வேண்டியது தான்.

இன்று வரையிலும் மாற்றமில்லை. எந்த அரசாங்கமும் இதில் கை வைப்பதே இல்லை. லிக்னைட் தொழிலில் என்எல்சி மட்டுமே ஏகபோகமாக உள்ளது. சீனாதானா இதில் கை வைக்க முயன்றார். பின்வாங்கி விட்டார்.

இந்தத் தொழில் இந்தியா முழுக்க பரவலாக்கம் ஆகாமல் இருப்பதற்குக் காரணம் சுற்றுச்சூழல் என்ற பெரிய ஆயுதம் கொண்டு அவவ்வபோது சொருகப்படுகின்றது. குற்றுயிரும் குலையிருமாகவே இந்தத் துறை உள்ளது.

இந்தத் துறையில் இருக்கும் அமைச்சர் மட்டும் ஏழெழு ஜென்மங்களுக்குத் தேவைப்படும் வசதிகளை அடைந்து விடுகின்றார்கள்.



2. கட்டுமானத்துறை.

கடந்த ஆறு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட 60 சதவிகித வீடுகள் விற்கப்படாமல் அப்படியே உள்ளது. பல ஆயிரம் கோடிகள் தூங்கிக் கொண்டிருக்கின்றது. கள்ளப் பொருளாதாரம் பெருக்கெடுத்து ஓடிய போது மொத்த முதலும் இந்தத்துறையில் கொண்டு போய் கொட்டப்பட்டு பூம் ஆக்கப்பட்டு வளர்ச்சி என்கிற ரீதியில் ஊதிப் பெருக்கப்பட்டுக் காட்டப்பட்டது.

வரியில்லா சொர்க்கத்திலிருந்து வந்து கொண்டிருந்த பணத்தையும் நிறுத்தியாகி விட்டது. எதற்காக வருகின்றது? யாருக்கு வருகின்றது? என்ற கேள்வி மூலம் இப்போது நான்கு பக்கமும் கம்பி வேலி போடப்பட்டுள்ளதால் இந்தத்துறை மூச்சுத் திணறிக் கொண்டிருக்கின்றது.

வசூலாக வேண்டிய வங்கிகளின் பணமும் பயம் கொள்ள வைத்துள்ளது.

3. உற்பத்தித்துறை.

உருவாக்கப்பட்ட ஜிஎஸ்டி இன்னமும் மாறுதலாகிக் கொண்டேயிருக்கிறது. முடிவாக இன்னமும் இது தான் சரி. இது தான் வழிமுறை என்று சொல்லும் அளவிற்கு உருவாகவில்லை. அவசர கதியாக அள்ளித் தெளித்த கோலம் போல இருப்பதால் அலங்கோலமாகவே இன்னமும் உள்ளது. 90 நாட்களில் கட்டிய பணம் திரும்பி வரும் என்றார்கள்.

மாயமான் போலவே கண்ணாமூச்சி காட்டிக் கொண்டேயிருக்கிறது. கள்ளப் பொருளாதாரத்தின் ஒவ்வொரு ஓட்டைகளை அடைத்து விட்டார்கள். வரிசையில் நின்று வரவும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால் கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறி இறந்து கொண்டிருப்பவர்களைப் பற்றிக் கவலைப்பட யாருமே இல்லை. எவன் செத்தால் எங்களுக்கென்ன? என்று ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேயிருக்கின்றார்கள்.

எவரும் புதிய முதலீடு செய்யத் தயாராக இல்லை. செய்த முதலீடுகளையும் வரி என்ற குழப்பமான நடைமுறைகள் (இணையச் செயல்பாட்டில் உள்ள குறைபாடுகளை இன்று வரையிலும் களையப்படவே இல்லை) இன்னமும் மாறவில்லை.

வெளிப்படையாகத் தேசிய நெடுஞ்சாலைகள் மூலமாக நடக்கும் ஊழல் குறித்து மொத்த ஊடகமும் அலறிய போதும் கூட எவரும் இன்னமும் அசைந்து கூடக் கொடுக்கவில்லை என்பதிலிருந்து நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

சரஸ்வதி முக்கியமா? சங்கப்பட்டுக் கொண்டிருப்பவர்களின் வாழ்க்கை முக்கியமா? என்பது கூடத் தெரியாமல் எங்கக்கா 150 நிமிடங்கள் கடந்த போது தடுமாறிவிட்டார்.

எப்படிடா பட்ஜெட்? என்று மகளிடம் கேட்டேன்.
அவர் கட்டியிருந்த சேலை நிறத்தில் சுடிதார் வாங்க வேண்டும் அப்பா?" என்றார்.

மனைவியிடம் கேட்டேன்.

"அந்தப் புடவை ஆன்லைனில் கிடைக்கிறதா? என்று பாருங்கள்" என்றார்.

அம்புட்டுத்தான் பட்ஜெட் தாக்கம்.

#Budget2020




இன்று முதல் இலவசமாக வாசிக்க முடியும்.


ஞாநி ஒரு தலைமுறையின் மனசாட்சி


4 comments:

  1. Replies
    1. திண்டுக்கல் நேயர் நம் வலைத்சித்தர் கேட்டதற்கு இணங்க இந்தப் பாடலை ஒலிபரப்புகின்றோம். கேட்டு மகிழவும்.
      https://youtu.be/NkL5pjzCWUo

      Delete
  2. //அம்புட்டுதான் பட்ஜெட் தாக்கம்// கடைசி வரி பஞ்ச்!

    பட்ஜெட் பற்றி வேறென்ன சொல்ல!

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.