ஊரில் நடந்த கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விழாவிற்கென விழா மலர் ஒன்றைக் கொண்டு வந்தனர். அதற்காக நான் எழுதிக் கொடுத்த சிறப்புக் கட்டுரையிது. விழா மலரில் வெளியாகியுள்ளது.
யான் பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரத்
தான்பற்றத் தலைப்படுந் தானே.
திருமந்திரம் - 85
வாழும் வரைக்கும் காதலிக்க முடியும். உங்கள் மனம் விசாலமாக இருந்தால். வாழ்நாள் முழுக்க நினைத்துப் பார்க்க முடியும். நீங்கள் பிறந்த ஊர் உங்களுக்குப் பெரிய தாக்கத்தைக் கொடுத்து இருந்தால். நீங்கள் வணங்கிய தெய்வத்தை நாள்தோறும் எங்கிருந்தாலும் பூஜிக்க முடியும்.
உங்கள் வாழ்நாளில் திருப்பு முனையை உருவாக்கியிருந்தால்.
உங்கள் ஊர் சிறிதாக, வளராத கிராமமாக இருக்கலாம். கால மாற்றத்திற்கேற்ப புதுப்பிக்காத வித்தியாச சூழலில் இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஊருக்குள் வந்து இறங்கியதும் உங்களுக்குள் ஒரு அதிர்வு உள்ளுற ஓடுமே? நீங்கள் ஓடித்திரிந்த தெருவும், படித்த பள்ளிக்கூடங்களும், பழகிய, பார்த்த மனிதர்களும் உங்கள் கண்களில் பட்டு பலவித நினைவுகளைக் கிளறுமே? அதற்கு உங்களால் ஏதேனும் விலை வைக்க முடியுமா? நீங்கள் அமெரிக்காவில் ஐரோப்பாவில் வாழக்கூடியவராக இருக்கலாம்? உச்சக்கட்ட தொழில் நுட்ப வசதிகளை அனுபவித்து வாழ்ந்து வரக்கூடியவராக இருந்தாலும் உங்களின் வேரின் ஆழமும், அதன் வீரியத்தின் தன்மையையும் உங்களின் சொந்த ஊர் தான் உணர்த்தும். உணர்த்தும் எண்ணங்களை உங்களால் மொழி பெயர்க்க முடியாது. அது நீங்கள் ஊரின் உள்ளே வந்து இறங்கும் போது உணரத் தான் முடியும்.