சில நிகழ்வுகள் கண நேரத்தில் நம் வாழ்க்கையில் நடந்து விட்டுப் போய்விடும். நம்மால் கூட நம்ப முடியாது. அதனை மற்றவர்களிடம் சொன்னால் என்னப்பா கதை விடுறே? என்று கூடச் சொல்லக்கூடும். அப்படியொன்று சில வாரங்களுக்கு முன்பு நடந்தது. அதனால் இந்தப் புத்தகத்தை இங்கே அறிமுகம் செய்கின்றேன்.
நள்ளிரவில் கணினி முன்னால் அமர்ந்து என் இரவு நேரப் பணியில் இருந்தேன். வாட்ஸ் அப் அழைப்பு ஒன்று வந்தது. சர்வதேச அழைப்பு. புதிய எண். எடுத்தவுடன் "சாதித்து விட்டீர்கள் அய்யா" என்று தொடங்கினார். தலையும் புரியாமல் வாலும் புரியாமல் "உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்" என்றேன்.
அவர் அயர்லாந்திலிருந்து அழைத்து இருந்தார். அவரும் திருப்பூர் தான். உயர்கல்வி கற்று அங்கே இருந்தார். குடும்பம் தற்போது சென்னையில் உள்ளது. மகளைத் திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பையனுக்குத் திருமணம் செய்து வைத்திருந்தார்கள். பையன் சம்பளம் மிக சுமார் ரகம். மகள் ஐடி முடித்து வீட்டில் இல்லத்தரசியாக இருந்தார். அப்பாவிடம் நான் ஏதாவது செய்ய விரும்புகிறேன். உதவுங்கள் என்று கேட்டுள்ளார். ர்லாந்தில் இருந்தவர் வலைதளங்களில் திருப்பூர் தொழில் குறித்துத் தேடிய போது இந்தப் புத்தகம் கண்ணில் பட்டுள்ளது. கிண்டில் வழியாக வாசித்து முடித்துள்ளார்.
வாசித்த கையோடு பிரமிப்பு அடங்காமல் மீண்டும் ஒரு முறை வாசித்துள்ளார். மனதில் ஒரு விதமான பரபரப்பு இருந்து கொண்டே இருக்க இது சார்ந்த தொழிலில் அங்கே இருப்பவர்கள் யார் யார் என்று தேடித் தேடி நண்பர்கள் வழியாகச் சிலரை அடையாளம் கண்டு அவர்களுடன் நானும் இதே தொழிலில் ஒரு காலத்தில் இருந்தவன் தான் என்று அறிமுகம் செய்து கொண்டு இதில் வாசித்தவற்றை வைத்துக் கொண்டு பேசியுள்ளார்.
மகளுக்கு அறிமுகம் செய்து வைக்க அடுத்த ஆறு மாதத்தில் தட்டுத்தடுமாறி தம் கட்டி இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வெளிநாட்டுக்கு ஆடர் அனுப்பிக் கொண்டிருக்கின்றார். மகளின் வேகம் இறக்குமதியாளருக்குப் பிடித்துப் போக வேகம் தொடங்கியது.
நள்ளிரவில் பேசியவர் இது குறித்துப் பல விசயங்களைச் சொல்லிவிட்டு இந்தப் புத்தகம் என் மகளின், மருமகனின் வாழ்க்கையை மாற்றிவிட்டது.
"உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார்.
திருப்பூர் வந்தால் "கௌரி கிருஷ்ணா உணவகத்தில் அற்புதமான பில்டர் காபி வாங்கித் தாருங்கள்" என்றேன்.
அவர் மகிழ்ச்சியில் சிரித்த சிரிப்பு இன்னமும் மனதில் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றது.
அமேசான் போட்டிக்கு எழுதப்பட்ட 5 முதலாளிகளின் கதையை வாசித்தவர்கள் இது உன் நடையல்ல. நீ எதனை ஆழமாக அழகாக எழுதுவாய்? என்ன ஆயிற்று? தற்கால வாசிப்புக்குத் தகுந்தாற்போல மாறி நீயும் கெட்டுப் போய்விட்டாய் என்று சொன்னவர்கள் இதனைப் படிக்க வேண்டும்.
இதிலிருந்து 5 முதலாளிகளின் கதை உருவானது.
அதில் வரும் சிலரின் விசயங்களை இதில் நாவல் போல விவரித்துள்ளேன்.
என்னுடன் பேசியவர் சொன்ன அறிவுறுத்துதல் காரணமாக இதனை மேம்படுத்தி உள்ளேன்.
இது போன்ற விசயங்களில் மூத்த மகள் தான் எனக்குத் தொழில்நுட்ப விசயங்களில் உதவுவார். கடந்த இரண்டு நாட்களாக எங்கள் இருவருக்கும் அறிவிக்கப்படாத யுத்தம் நடந்து கொண்டிருப்பதால் நான் செய்து தர மாட்டேன் என்று பிகு செய்து கொண்டு பழிப்பு காட்டி நகர்ந்து விட்டார்.
புதைகுழியில் சிக்கியது போல ஆகிவிட்டது. ஒழுங்குபடுத்தி முடித்த போது சித்தம் கலங்கிவிட்டது.
உங்களைப் பரவசப்படுத்தும்.
உங்களை ஆச்சரியப்படுத்தும்.
நீங்கள் இருக்கும் தொழிலை நாம் ஏன் எழுதக்கூடாது என்று யோசிக்க வைக்கும்.
வாழ்த்துகள்.
#ஒருதொழிற்சாலையின்குறிப்புகள்
#பஞ்சுமுதல்பனியன்வரை
பஞ்சு முதல் பனியன் வரை: Cotton up to Banian (4) (Tamil Edition) by ஜோதிஜி ...
Amazon Kindle India
வளர நினைக்கும் இளைஞர்களின் கையேடு
ReplyDeleteஎப்பேர்ப்பட்ட மோசமான குணாதிசயங்கள் கொண்டவருடன் பழகினாலும் தன் சுயபுத்தியை இழக்காமல் தன் நிலையை எந்தச்சூழ்நிலையிலும் கடைசி வரை மாற்றிக் கொள்ளாமல் அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் மனோநிலையில் இருக்கும் 22 வருடக் கடின உழைப்புடன் கூடிய அனுபவம் கொண்ட ஜோதிஜி எழுதியிருக்கும் “ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்” என்ற தொடரை ஒரு அத்தியாயம் கூட விடாமல் கவனமாக வாசித்தேன்.
நான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை, நான் சந்திக்கும் மனிதர்கள், நான் சார்ந்திருக்கும் தொழில் என்பதனை இந்த தொடர் மூலம் என்னால் மீள் ஆய்வு செய்து கொள்ள முடிந்தது. இந்தத் தொடர் மூலம் தனிப்பட்ட முறையில் நான் கற்றதும் பெற்றதும் ஏராளம். என் பார்வையில் சில விமர்சனக் கருத்துக்களை மட்டும் இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன்.
1. ஒரு தொழிற்சாலை நிர்வாகியின் அனுபவத்தொடர் என்பதா?
2. ஒரு தொழிற்சாலை நிர்வாகியின் மனிதவளம் தொடர்பான அனுபவங்கள் மற்றும் ஆலோசனைகள் ;தொடர் என்பதா?
3. மனிதர்களையும் அவர்களின் குணாதிசயங்களையும் அலசி ஆராயும் ஒரு சக மனிதரின் அனுபவக்குறிப்புகள் என்பதா?
4. 22 வருடங்களுக்கும் மேலாக இருந்துவரும் தொழிலில் தான் கண்ட மனிதர்களின் ஏற்ற இறக்கங்களைப் பதிவு செய்யும் தொடர் என்பதா?
5. ஆயத்த ஆடைத்தொழிலின் தலைநகரம் திருப்பூரைப் பிடித்துப் பார்த்த நாடித் தொடர் என்பதா?
6. தான் கடந்து வந்த 22வருடத் திருப்பூர் வாழ்க்கையின் வாழ்வியல் தொடர் என்பதா? அல்லது
7. திருப்பூர் தொழிலதிபர்களின் வாழ்ந்த வீழ்ந்த கதையைச் சொல்லும் தொடர் என்பதா?
8. வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களைச் சொல்லி வாழ்க்கையைப் புரிந்துகொள்ளச் சொல்லும் வாழ்வியல் நன்னெறித் தொடர் என்பதா?
9. எல்லாம் கலந்து கட்டிய சரம் என்பதா?
என்று சத்தியமாக நம்மால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. அந்த அளவிற்கு வார்த்தைகளை வைத்து ஜோதிஜி விளையாடி இருக்கிறார்.
எழுதச்செல்லும் முன்பு எழுத வேண்டிய விசயத்தை மனதில் ஆழ்ந்து உள்வாங்கி அத்துடன் தனது கருத்துக்களையும் சரியான முறையில் எழுதியதால் இத்தொடர் ஒரு நாட்குறிப்பு போலவோ அல்லது ஒரு கட்டுரை போலவோ இல்லாமல் ஒவ்வொரு வார்த்தையையும் கவனத்துடன் படித்துச்செல்லும் அளவிற்கு அவரது எழுத்து நடை அமைந்திருப்பது மிகச்சிறப்பு.
மாரியப்பன் ரவீந்திரன். மதுரை.
அருமை. நன்றி
ReplyDeleteநன்றி
Delete