அஸ்திவாரம்

Tuesday, December 10, 2019

50 வயது


ஒவ்வொரு ஆங்கில வருடம் முடியும் நேரத்தில் அந்த வருடத்தின் நினைவுக்குறிப்புகளை எழுதி வைப்பது என் வழக்கம்.  இந்த வருடம் என் 50 வருட வாழ்க்கை அனுபவத்தில் நான் பார்த்த, சந்தித்த, என்னைப் பாதித்த, மகிழ்ச்சியடைய வைத்த, நான் பார்த்து ஆச்சரியப்பட்ட மனிதர்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். 

இது வலையுலகம், தொழில் உலகம், சொந்த வாழ்க்கை தொடர்பான மனிதர்கள் வருவார்கள். நான் இந்த வருடம் செய்த முக்கியமான பணிகள் குறித்தும், செய்த காரியங்களைப் பற்றியும் எழுதி வைக்க விரும்புகிறேன். இது என் நினைவில் இருக்க வேண்டும் என்பதற்காகவும் நீங்களும் இது போன்று எழுதி மற்றவர்களைப் பெருமைப்படுத்துங்கள். 

அத்துடன் உங்களுக்கு நீங்களே உற்சாகத்தை அளித்துக் கொள்ளுங்கள் என்ற கோரிக்கையும் வைக்கின்றேன்.  
↑↑↑↑↑↑↑↑↑↑

தனித்தனி பதிவாக நான் பிரித்து எழுத விரும்புவதில்லை.  பெரிதாக உள்ளது. என்னால் வாசிக்க முடியவில்லை என்பவர்களைப் பற்றி நான் எப்போதும் கண்டு கொள்வதில்லை.  வாசிக்க விரும்புபவர்களுக்கு, நிதானமாக உள்ளே வந்து ஆற அமர இவர் எழுத்தை வாசித்தே ஆக வேண்டும் என்ற கொள்கை கொண்டவர்கள் குறைவாக இருந்தாலும் அவர்களுக்காகவே என் எழுத்துப் பயணம் இன்று வரையிலும் தொடர்கின்றது என்பதனையும் நினைவூட்ட விரும்புகிறேன்.  

அப்படிப்பட்டவர்கள் இன்னமும் என் தொடர்பில் இருப்பதும் எனக்குக் கிடைத்த வரமாக அங்கீகாரமாகக் கருதுகிறேன்.  

எனக்கு நேரம் இருக்கும் போது மட்டுமே எழுத முடியும்.  இதற்கென தனியாகக் குறிப்பிட்ட நேரம் ஒதுக்க முடியாது.  குடும்பம் மற்றும் தொழில் அத்துடன் நம் கருத்துக்களைச் சொல்ல ஒரு தளம் என்ற நோக்கில் மட்டுமே நான் எழுதுகிறேன்.  பொழுது போக்கு, ஜாலி என்பது எனக்கும் உண்டு.  ஆனால் "வேலையின்னு வந்தால் வெள்ளைக்காரன்" என்கிற ரீதியில் நான் வாழ்வதால் ஒவ்வொன்றையும் அதன் பாதையில் என்னால் குழப்பம் இல்லாமல் இன்று வரையிலும் நகர்த்திச் சென்று கொண்டே இனிதாக வாழ முடிகின்றது என்பதனையும் நீங்கள் கவனத்தில் வைத்திருக்க வேண்டும்.

முதலில் சில விசயங்களைக் குறித்து கேள்வி பதிலாகத் தந்து விடுகிறேன். அடுத்த பதிவில் பெருமைப்படக்கூடிய, பெருமைப்படுத்த வேண்டிய உறவுகளைப் பற்றி எழுதுகிறேன்.


எப்படி உங்கள் தொழில், குடும்பம் கடந்து இவ்வளவு எழுத முடிகின்றது?

வாழ்க்கையின் பிற்பகுதியில் ஒவ்வொரு ஆணுக்கும் தேவைப்படுகின்ற முக்கியமான விசயம் அளவுக்கு அதிகமான பொறுமை. நிதானம். சகிப்புத்தன்மை.  இது ஏன் பெண்களுக்குத் தேவையில்லையா? என்று கேட்கத் தோன்றும். உண்மை. அதில் சில சட்டச் சிக்கல் உள்ளது.

பெண்கள் என்பவர்கள் அம்மா, அக்கா, தங்கை, மனைவி, மகள் என்று எந்தப் பாத்திரமாக உங்களுடன் இருந்தாலும், வாழ்ந்தாலும் அவர்களின் எண்ணங்கள், நோக்கங்கள் எதுவும் கடைசி வரைக்கும் உங்களுடன், உங்கள் கொள்கைகளுடன் முழுமையாக ஒத்துப் போய்விடும் என்று எண்ணம் இருந்தால் அதனை மாற்றிக் கொள்ளுங்கள்.

திருமணம் ஆகும் வரையிலும் அவர்களின் எண்ணங்கள் வேறு. திருமணம் ஆனதும் அவர்கள் எண்ணங்கள் வேறு. குழந்தைகள் பிறந்ததும் அவர்கள் நோக்கம் மாறும். குழந்தைகள் வளரும் போது, வளர்ந்த பின்பு முற்றிலும் அவர்கள் வேறொரு ஜீவனாக மாறியிருப்பார்கள்.  உடல்வாகு முதல் உள்ள அமைப்பு வரைக்கும் எல்லாமே மாறி இருக்கும்.

நீங்கள் எத்தனை ஆராய்ச்சி செய்தாலும், எவ்வளவு நல்லவராக வாழ்ந்தாலும் அவர்கள் மாறவே மாட்டார்கள். அவர்கள் கடைசி வரைக்கும் அவர்களாகவே இருப்பார்கள்.  என் கணவன், என் குழந்தைகள் என்று அவர்கள் சொல்லலாம்.  ஆனால் அவர்களின் முழு உணர்வும் வெளியே வருவது அபூர்வம்.

மது, மாது இருந்தாலும் பரவாயில்லை. எனக்குத் தேவைப்பட்ட பணத்தை சம்பாரித்துக் கொண்டு வா? என் தேவைகளை நிறைவேற்று? என்று சொல்லும் காலகட்டத்தில் குடும்ப வாழ்க்கை வந்து நிற்கின்றது. தாய் என்ற வார்த்தைக்குள் இருந்த அனைத்தும் காலப் போக்கில் மாறிவிட்டது.

ஆனால்......

அளவான ஆசைகள், எதார்த்தம் புரிந்த மனைவி, இதயத் துடிப்பை எகிற வைக்காத மகள்கள் இருந்தால் உங்களின் தனிப்பட்ட திறமைகளுக்கு வாய்ப்பு உருவாகும்.

அப்படி எனக்கு இருப்பதால் எழுத முடிகின்றது.

முழுமையாக விரிவாகச் சொல்லுங்களேன்?

நான் இருப்பது தொழில் நகரம்.  பெருநகரங்கள், தொழில் நகரங்களில் நண்பர்கள் அமைவது கடினம்.  அப்படியே அமைந்தாலும் அவர்கள் ஒரே தொழிலில் இருந்தால் புரிந்துணர்வு உருவாவது அதனை விடக் கடினம்.

இங்கு எல்லோரும் போட்டியாளர்கள்.  பணம் மட்டுமே பிரதானம்.  அந்தஸ்து மட்டுமே குறி. உளப்பூர்வமான உரையாடல் நிகழ்வது அபூர்வம். பொறாமை அதிகம்.  எவரையும் அங்கீகரிக்க விரும்ப மாட்டார்கள்.  அங்கீகாரம் பெற்றவனையும் ஆதரிக்க மாட்டார்கள்.  இவனுக்கு ஏன் நாம் அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்றும் நினைப்பார்கள். 

இத்தனை நிகழ்வுகள் நடக்கும் சூழலில் நம் வாழ்க்கை அமைந்தால் எப்படியிருக்கும்.  மன உறுதி அவசியம். நாம் பாதையைக் கண்டு அடைவது அதனை விட முக்கியம்.  நமக்கென்று ஒரு கொள்கை உருவாக்கிக் கொள்வது அதனை விட முக்கியம். 

அப்படித்தான் என் எழுத்துப் பயணத்தைத் துவங்கினேன்.  இது இன்று வரையிலும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.  மன ரீதியான தாக்குதல்கள், தாக்கங்கள் உங்களிடம் இல்லாவிட்டால் நிச்சயம் உங்கள் ஆரோக்கியம் மேம்பட்டு இருக்கும்.  உங்கள் உள்ளத்தில் இருக்கும் கவலைகள், ஆதங்கம், எரிச்சல் போன்றவற்றை இறக்கி வைக்க, உரையாட ஆட்கள் இருந்து விட்டால் பரவாயில்லை. இல்லாத போது வேறு வழியில் தான் மனம் செல்லத் துவங்கும்.  எனக்கு எழுத்துப் பயணம் வழி மாற்றியது.  இதன் காரணமாக எனக்குக் கிடைக்கும் நேரத்தில், நான் உருவாக்கிக் கொண்ட நேரத்தில் என்னால் எழுத முடிகின்றது. 

குடும்பம் எப்படி உதவுகின்றார்கள்?

1. நான் தினமும் எழுத வேண்டும். அதற்கு என் குடும்பமே முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். நான் டைப் அடிக்க உட்காரும் நேரத்தில் புலம்பல் வரக்கூடாது.  குடும்பத்தின் அமைதியும் மகிழ்ச்சியும் நான் எழுதுவதற்கு மிக முக்கியமாகத் தேவை.  அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே என்னால் எழுத முடியும்.

2. மளிகைச் சாமான்கள் என்ன தேவையோ இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மனைவியை அழைத்துக் கொண்டு சென்று அடுத்த 75 நாட்களுக்கு உனக்கு என்னன்ன தேவையோ? அனைத்தையும் வாங்கிக் கொள் என்று சொல்லிவிட்டு அங்கே இருக்கும் நிகழ்வுகளை வேடிக்கை பார்க்கத் தொடங்கி விடுவேன்.  மகள்களையும் வாய்ப்பு கிடைத்தால் மூவரையும் அழைத்துக் கொண்டு சென்று விடுவேன்.  அவர்களுக்கு வெளியுலகத்தைப் பார்த்த மகிழ்ச்சி.  ஷாப்பிங் அனுபவம்.  அவர்களுக்கு எதுவும் தேவை என்றால் அம்மா அனுமதியோடு வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுவதுண்டு.  

3. இந்த இடத்தில் இவர்களை அவசரப்படுத்தவே மாட்டேன். தடவித் தடவி, ரசித்து ருசித்து, வாங்க வேண்டியதை விட்டுவிட்டு வாங்க விரும்பாதவற்றை வேடிக்கை பார்த்து, பராக்குப் பார்த்து, ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்து அவர்களுக்கென்ற குறுகிய சொந்த உலக மகிழ்ச்சியை அனுபவிக்க குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் ஆகும். அமைதியாக ஒரு புத்தகம் வாங்கி ஒரு இடத்தில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருப்பேன்.  

பில் போட்டு கைக்கு வரும். எதையும் சோதிக்க மாட்டேன்.  மனைவி காசு விசயத்தில் கறார் பார்ட்டி. தேவையில்லாமல் ஒரு பைசா அதிகமாக செலவளிக்க மாட்டார். மகள்களும் ஆசைப்படுவதற்கு அளவீடுகள் வைத்துள்ளார்கள்.  இந்த சாதகத்திற்கு நான் செய்யும் பிரிதி உபகாரம் அமைதியாக அவர்களின் செயல்பாட்டிற்கு ஒத்துழைப்பு.  இரண்டு மாதப் பிரச்சனைகள் முழுமையாக இதன் மூலம் நம் முதல் கடமை முடிவுக்கு வந்து விடும்.

4. வெவ்வேறு சந்துப் பக்கம் காய்கறி விற்பவர்கள், வயதான பாட்டிகள், மற்ற அன்றாடச் சமான்களை தினமும் தெரு தெருவாகக் கூவிக் கொண்டு வருபவர்களை ஒன்றிணைத்து என் வீட்டுக்கு வரவழைத்து, மனைவியிடம் அறிமுகம் செய்து வைத்து, அவர் பேசும் கறார் தனத்திற்கு அவர்களிடம் எடுத்துரைத்து, இருவருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி, அதன் சில வாரங்கள் பார்த்து, பாதுகாத்து அவர்கள் தினமும் இங்கே வந்தாக வேண்டும் என்ற கட்டாயத்தை உருவாக்கி விட்டால் போதும்.  காய்கறிகள் மற்ற சாமான்களுக்கு நாம் வெளியே செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. 

இரண்டாவது முடிவுக்கு வந்து விடும்.

5. இது தவிர ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அந்த வாரத்தில் வேறு எதுவும் தேவைப்படுகின்றதா? என்று பலமுறை நினைவூட்டி அதனையும் வாங்கிக் கொடுத்து விட்டால் அந்த வாரம் முழுக்க நம்மை நோக்கி எந்தத் தோட்டாவும் பாயாது.

6. நான் இருக்கும் தொழில் காரணம் அதிகாலை முதல் நள்ளிரவு வரை எந்த நேரத்தில் எங்கே இருப்போம் என்று நிர்ணயமாகச் சொல்ல முடியாது என்ற காரணத்தால் இவர்களைத் தொந்தரவு செய்யாமல் பல முறை நானே நள்ளிரவில் தோசை சுட்டுச் சாப்பிடுவதுண்டு.  அதாவது எக்காரணம் கொண்டு என் வித்தியாசமான செயல்பாடுகள், என் விருப்பங்கள் சார்ந்து செயல்படும் எந்த விசயமும் இவர்களுக்கு உறுத்தலாக இருக்கக்கூடாது என்பதில் அதிகக் கவனமாக இருப்பேன்.  

அப்படியும் பல சமயம் பஞ்சாயத்து வரும்.  நடு ராத்திரியில் ஒரு அரசியல் தலைவரின் பேட்டியைக் கேட்டுக் கொண்டிருந்தால் எந்த மனைவி பாராட்டுவார்.  அது போன்ற சமயங்களில் மொட்டை மாடிக்கு ஓடி விடுவதுண்டு. எந்தச் சூழலிலும் என் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதுண்டு.

7. இயல்பாகப் பத்தரை மணிக்குப் படுத்து விடுவேன். படுத்த பத்து நிமிடத்தில் வேறொரு உலகத்திற்குப் போய் விடுவேன். இரவு எத்தனை மணிக்குப் படுத்தாலும் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து வழக்கம் இன்று வரையிலும் உள்ளதால் நடைப்பயிற்சி முடித்து விட்டு செய்தித்தாள்களை வாசித்து விட்டு, இணைய மேய்ச்சலை முடித்து விட்டால் அன்றைய பொழுது எழுத ஏதோவொன்று சிக்கி விடும்.  

8. கடந்த கால எழுத்தாளர்கள் வறுமையில் வாழ்ந்ததற்குக் காரணம் அவர்கள் சமூகத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்பதோடு அவர்கள் அவர்களின் குடும்பத்தையும் கண்டு கொள்ளவும் இல்லை என்பதே உண்மை. அவர்கள் எழுதியது எல்லாமே அவர்களுக்காக மட்டுமே என்ற நோக்கில் தான் எழுதினார்களே தவிர அவர்கள் வாழ்ந்த சமூக மாற்றத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை. 

இதன் காரணமாகவே சமூகம் அவர்களைக் கண்டு கொள்ளவும் இல்லை. கணக்கில் எடுத்துக் கொள்ளவும் இல்லை.  ஆணி வேர் சரியாக இருக்க வேண்டும்.  அப்போது தான் பழங்கள் சிறப்பாக இருக்கும். இதனை உணர்ந்தே இருக்கின்றேன்.  

இதன் காரணமாக என் குடும்ப உறுப்பினர்களின் பலவீனங்களைக் கண்டு கொள்ளாமல் அவர்களின் தேவைகளை நிறைவேற்றி விடுகிறேன்.

அவர்களும் என் பலவீனங்களைப் பொருட்படுத்திக் கொள்வதில்லை என்பதால் என்னால் எழுத முடிகின்றது.

9. எந்தவொரு விசயத்தை நான் மேம்போக்காக, பொழுது போக்காக அணுகுவதே இல்லை. நிதானமாக, பொறுமையாகப் பார்க்கப் படிக்க விரும்புவதால் எழுதியவர் சொல்லாத விசயங்களையும் என்னால் எளிதில் யூகித்துக் கொள்ள முடியும். அது தொடர்பான மற்றொரு பக்கத்தையும் உடனே கண்டு பிடித்து வாசித்து உள்வாங்கிக் கொள்வதுண்டு. இதன் காரணமாக எனக்கு எழுத ஏராளமாகக் கிடைத்துக் கொண்டேயிருக்கின்றது.

10. தொழில், குடும்பம், உறவுக்கூட்டம் என இந்த மூன்று இடங்களிலும் நான் அங்கீகாரத்தை எதிர்பார்ப்பதே இல்லை. என் கடமையை நான் சரியாகச் செய்துள்ளேன் என்று என் ஆழ்மனம் நம்ப வேண்டும். இது எனக்குப் பெரிய எதிர்பார்ப்புகளை வளர்க்காது. உருவாக்காது. காத்திருக்கச் சொல்லாது.

தவறான விசயங்களை ஆதரிக்கச் சொல்லாது. தரம் கெட்ட மனிதர்களைத் தொடர்பில் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகாது. 

"என் கடன் பணி செய்து கிடப்பதே" என்று எளிதாக என்னால் நகர்ந்து செல்ல முடிகின்றது.

நம் வாழ்க்கையை எப்படித்தான் வாழ வேண்டும்?

ஐரோப்பாவில் உள்ள நண்பர் சில தினங்களுக்கு முன் சொன்ன ஒரு தகவலைக் கடைசியாகச் சொல்லத் தோன்றுகின்றது.

ஐரோப்பியர்கள் இப்போது 90 வரைக்கும் வாழ்கின்றார்கள். ஆரோக்கியமாக இருக்கின்றார்கள். ஆண் பெண் என்ற பாரபட்சம் இல்லை. 90 வயதுக்குண்டான கூன் இல்லை. தொப்பை இல்லை. உடல் தளர்ச்சி இல்லை. நவீன ரக ஆடைகள் அணிகிறார்கள். அப்போது உள்ள பேஷன் குறித்து அறிந்து அதன் படி வாழ விரும்புகின்றார்கள்.  

அப்படித்தான் இருக்கின்றார்கள். துணையோடு இருக்கின்றார்கள். துணை இல்லாமலும் இருக்கின்றார்கள். 

அவர்களே பயணம் செல்கிறார்கள். உறவுகளைக் குழந்தைகளை எதிர்பார்ப்பதில்லை. நடுக்கம் இல்லை. 30 வயதுக்குண்டான துடிப்பான வாழ்க்கை வாழ்கின்றார்கள்.

காரணம் அவர்களை வாழ்க்கையைக் கடைசி வரையிலும் சொட்டு சொட்டாக உறிஞ்சி கடைசி நிமிடம் வரைக்கும் வாழ்ந்து மறைகின்றார்கள்.

ஆனால் நாம்?

••••••••••••

கீழே உள்ள மூன்று புத்தகங்களை நீங்கள் படித்து முடித்தால் திருப்பூர் குறித்து முழுமையாக உங்களால் புரிந்து கொள்ள முடியும்.  நீங்கள் 50 வருடங்கள் இந்த ஊரில் வாழ்ந்த அனுபவம் கிடைக்கும்.

டாலர் நகரம் (DOLLAR NAGARAM)


5 முதலாளிகளின் கதை


பஞ்சு முதல் பனியன் வரை


கடந்த 5 வருடங்களில் நண்பர்கள் எழுதிய விமர்சனங்களை இதன் மூலம் ஆவணப்படுத்தியுள்ளேன்.  


14 comments:

  1. அளவான ஆசைகள், எதார்த்தம் புரிந்த மனைவி, இதயத் துடிப்பை எகிற வைக்காத மகள்கள் இருந்தால் உங்களின் தனிப்பட்ட திறமைகளுக்கு வாய்ப்பு உருவாகும்.

    அப்படி எனக்கு இருப்பதால் எழுத முடிகின்றது.

    கொடுத்து வைத்தவர் தாங்கள்

    ReplyDelete
    Replies
    1. நாம் தான் சூழலை உருவாக்க வேண்டும். முடியும். நானும் முயற்சித்தேன். முடிந்தது. நன்றி ஆசிரியரே.

      Delete
  2. எதிலும் எதிர்ப்பார்ப்பு இல்லையென்றால் வாழ்க்கை சொர்க்கம் தான்...

    ReplyDelete
    Replies
    1. பலனில் பற்று வைக்காதே என்ற மூன்று வார்த்தைகளுக்குப் பின்னால் மிகப் பெரிய மனித வாழ்க்கையின் தத்துவமே உள்ளது தனபாலன். ஆனால் உணர்பவர்கள் மிக மிக குறைவு.

      Delete
  3. தொழில், குடும்பம், உறவுக்கூட்டம் என இந்த மூன்று இடங்களிலும் நான் அங்கீகாரத்தை எதிர்பார்ப்பதே இல்லை. என் கடமையை நான் சரியாகச் செய்துள்ளேன் என்று என் ஆழ்மனம் நம்ப வேண்டும். இது எனக்குப் பெரிய எதிர்பார்ப்புகளை வளர்க்காது. உருவாக்காது. காத்திருக்கச் சொல்லாது.- அருமை. மகிழ்ச்சி. வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. எதிர்பார்ப்பதால் ஏக்கம் வரும். ஏங்குவதால் அடுத்த காரியத்தின் மேல் கவனம் வராது. செய்ய வேண்டிய கடமைகள் மறந்து சோர்வு வந்து விடும். கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை.

      Delete
  4. குழந்தைகளாக இருந்தால் நம் விருப்பங்களை இஷ்டப்படி, இஷ்டப்பட்ட நேரத்தில் நிறைவேற்றிக் கொள்ளலாம்.  பெரியவர்களானதும் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் அவர்கள் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நம் விருப்பங்களைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டிய சூழல்.  

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய தேவைகள் மிக மிக குறைவு. முன்பு வெளியே சென்றால் பல விதமான புத்தகங்கள் வாங்குவேன். கிண்டில் வந்தது முதல் அதுவும்இல்லை. முன்பு கண்ட இடங்களில் பார்ப்பதை எல்லாம் வாங்கி சாப்பிடுவேன். அதுவும் இல்லை. இப்போது பில்டர் காபி மட்டுமே.

      Delete
  5. //தனித்தனி பதிவாக நான் பிரித்து எழுத விரும்புவதில்லை. பெரிதாக உள்ளது. என்னால் வாசிக்க முடியவில்லை என்பவர்களைப் பற்றி நான் எப்போதும் கண்டு கொள்வதில்லை. வாசிக்க விரும்புபவர்களுக்கு, நிதானமாக உள்ளே வந்து ஆற அமர இவர் எழுத்தை வாசித்தே ஆக வேண்டும் என்ற கொள்கை கொண்டவர்கள் குறைவாக இருந்தாலும் அவர்களுக்காகவே என் எழுத்துப் பயணம் இன்று வரையிலும் தொடர்கின்றது என்பதனையும் நினைவூட்ட விரும்புகிறேன்.//

    அது...

    செமண்ணா... நம் எழுத்தை விரும்பினால் வாசிக்கட்டும்... உண்மை...

    எதிர்பார்ப்பில்லாத வாழ்க்கை சொர்க்கம்தான்...

    தொடருங்கள்... தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. எழுதும் போது மார்க்கெட்டிங் பற்றி யோசிக்கக்கூடாது. யோசித்தால் எழுதும் திறமை மங்கி எப்படி வாசிப்பார்கள்? நாம் எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்து அவர்களுக்காக நாம் சமரசம் செய்து கொள்ள வேண்டியதாக இருக்கும். முழுமையாக நாம் எழுதி முடித்தபின்பு எதிர்ப்புகள் ஏளனம் வந்தால் திருத்திக் கொண்டால் போதும்.

      Delete
  6. உங்கள் எழுத்துக்கள் பல பாடங்களை எங்களுக்குக் கற்பிக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு நான் பாடம் நடத்துவதா? நீங்கள் அல்லவா என் குரு. எப்போதும் 5 முதலாளிகளின் கதை விமர்சனத்தை தரப் போறீங்க. காத்திருக்கிறேன். டிசம்பர் 31 கடைசி நாள். ஒரு வாரத்திற்கு முன்பு வரும் படி தரவும். நன்றி.

      Delete
  7. நான் அப்படியே பின்பற்றுவதில்லை.. காலத்துக்கு ஏற்ப எழுத்தில் சில மாற்றங்கள் செய்து கொண்டு தான் இருக்கிறேன்.

    என்னுடைய கருத்தை மற்றவர்களுக்காக மாற்றிக்கொள்ளாமல் சுதந்திரமாக தைரியமாக கூறுகிறேன். இதை மட்டும் மாற்றாமல் தொடர்கிறேன்.

    என் மனசாட்சிக்கு சரியா என்பது மட்டுமே என் முன் உள்ள கேள்வி.. சரி என்றால், மற்றவர்கள் நினைப்பதை பற்றி எனக்கு கவலையில்லை. திருத்தம் இருந்தால் திருத்திக்கொள்வேன்.

    இது போதும் எனக்கு. ஆளுக்குத் தகுந்த பேச்சு என்னிடம் இல்லையென்பதால், எனக்குக் கவலையில்லை. எங்கும் எப்போதும் ஒரே கருத்து தான்.

    உங்கள் கட்டுரையைப் படித்ததும் என்னைப் பற்றி இவை தோன்றியது.

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.