அஸ்திவாரம்

Monday, November 04, 2019

நாம் மாறாவிட்டால் நம்மை மாற்றிவிடுவார்கள்?



என்னால் இனி முடியாது என்பதற்கும் எனக்கு இது இனி தேவையா? என்பதற்கு உண்டான வித்தியாசத்தை உங்களால் உணர முடியுமா?

கடந்த பத்தாண்டுகளாக வலைபதிவில் ஆயிரக்கணக்கான நண்பர்களைப் பார்த்து விட்டேன். பழகியுள்ளேன். 




இன்னமும் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களையும் பார்த்துக் கொண்டே வருகிறேன்.  சமீபத்தில் எனக்குக் கிடைத்த அனுபவங்கள் மிக ஆச்சரியமாக இருந்த காரணத்தால் இதை எழுதத் தோன்றியது.  

படித்தவுடன் உங்களுக்கு வருத்தம் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.  

அது உங்களின் இயலாமை,சோம்பேறித்தனம் தான் காரணம் என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள். 

என் வேலை எப்போதும் ஒன்றைச் சுட்டிக் காட்டுவது. மாற்றுப் பாதை இருந்தால் அதனையும் அடையாளம் காட்டுவது. அப்படியும் நான் திருந்த மாட்டேன் என்றால் அது தவறில்லை. அது அவர்களின் தனிப்பட்ட சுதந்திரம் என்றே எடுத்துக் கொள்வேன்.

திண்டுக்கல் தனபாலன் போல எனக்கு வலையுலக தொழில் நுட்பம் எதுவும் தெரியாது.  இப்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் ப்ளாக் என்பதனை நாகா என்ற நண்பர் தான் எனக்கு உருவாக்கிக் கொடுத்தார். எவ்வித எதிர்பார்ப்பு இல்லாமல் என் திறமையைப் பார்த்துச் செய்து கொடுத்தார். 

அதன் பிறகே வேர்ட்ப்ரஸ் ல் இருந்து இங்கு வந்தேன்.  

ஆனால் இன்று என்னால் இதன் அடிப்படை சூட்சமங்களைப் புரிந்து கொண்டு செயல்பட முடியும் ஓரளவிற்கு கற்றுள்ளேன்.  ஆனால் தனபாலன் போல முனைவர் பட்டம் வாங்கும் அளவிற்குத் தெரியாது. எனக்கு என்ன தேவையோ? அதனை அவ்வப்போது கற்றுக் கொண்டு என்னை மேம்படுத்திக் கொண்டு உள்ளேன்.

இதை இங்கே எழுதுவதற்குக் காரணம் நான் முதல் முறையாகச் சீனிவாசன் உருவாக்கி இருந்த மின் நூல் தளத்திற்கு வாருங்கள். உங்கள் எழுத்துக்களை மின்னூலாக மாற்றி அங்கே கொண்டு போய்ச் சேருங்கள் என்று கூவிக் கொண்டே இருந்தேன். 

நான் அந்த தளத்தில் மூன்றாவது என்ற வரிசையில் என் ஈழம் வந்தார்கள் வென்றார்கள் என்பதனை மின்னூலாக மாற்றி வைத்தேன்.  இன்று எழுபது லட்சம் தரவிறக்கம் கண்ட அந்த தளத்தில் இன்று வரையிலும் அந்தப் புத்தகம் (மின்னூல்) முதல் 25 இடத்திற்குள் அப்படியே தன்னை தக்கவைத்து மேலும் மேலும் யார் யாருக்கோ சென்று கொண்டேயிருக்கின்றது. 

அதனை மேம்படுத்தி அமேசான் தளத்தில் போட்டேன்.  

அதுவும் ஆச்சரியப்படத் தக்க வகையில் மிகக் குறுகிய காலத்தில் நல்ல எண்ணிக்கையைத் தொட்டது.

நான் மின் நூலுக்கு அடுத்தபடியாக அமேசான் குறித்துத் தொடர்ந்து கூவிக் கொண்டே வருகிறேன். என் புத்தகம் குறித்து வெளியிட்டு வருகிறேன். அதன் சாதக பாதக அம்சங்களைப் பல முறை எழுதி உள்ளேன்.

சரி? இந்த முன்னுரை இப்போது எழுதக் காரணம் என்ன?

இன்று அனைவருக்கும் உகந்த தளமாக ஃபேஸ்புக் தளம் உள்ளது. குறிப்பிட்ட சிலருக்கு ட்விட்டர் உள்ளது. இது எண்ணிக்கையில் மிகக்குறைவு. சிலருக்கு யூ டியுப்.  இதே போல வலைபதிவர்கள் பிரிந்து சிதறிவிட்டனர்.  

தவறில்லை.  மாற்றம் ஒன்றே மாறாதது.

ஆனால் இப்போது தொழில் நுட்பம் வளர்ந்துள்ள சூழலில் ஒரு சின்னப் பையனுக்குத் தெரிந்த அமேசான் கிண்டில் குறித்து நம்மவர்களுக்குத் தெரியவில்லை என்பதே கேட்கக் கேட்க ஆச்சரியமாக, வியப்பாக, வருத்தமாக உள்ளது.

அமேசானில் ஆன் லைன் மூலமாகப் பொருட்கள் வாங்குபவர்களுக்குக் கூட இதனைப் பற்றித் தெரியவில்லை.  

திண்டுக்கல் தனபாலன் வலையுலகின் பிதாமகன்.  

அவரிடம் உதவி பெறாதவர்கள் இங்கு யாருமே இல்லை என்று சொல்லக்கூடிய வகையில் அவர் வீடு என்பது வலையுலக அறக்கட்டளை போலவே இன்று வரையிலும் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. அவரின் சொந்தத் தொழிலை லாபகரமாகக் கொண்டு செல்கின்றாரோ இல்லையோ வலையுலகில் ஒருவருக்குப் பிரச்சனை என்றால் உடனே அதில் தான் அதிக கவனம் செலுத்துகிறார்.  

இன்று வரையிலும் அவர் பதிவுக்குத் தான் அதிக விமர்சனங்கள், இன்று வரையிலும் அதிக பார்வையாளர்கள் வருகின்றார்கள். 

ஆனால் அவருக்கே கிண்டில் குறித்துத் தெரியவில்லை. 

அமேசான் கிண்டில் அக்கவுண்ட் குறித்துப் புரியவில்லை. தடுமாறி விட்டார்.  

நன்றாக என்னிடம் திட்டும் வாங்கினார். ஆனால் வெற்றி பெற்று விட்டார். 

என் புத்தகத்தைப் படித்து முடித்து விட்டு இப்படியொரு வாய்ப்பை என் அறியாமல் தவற விட்டுட தெரிந்தேனே? என்றார்.

இது மார்க்கெட்டிங் பதிவு அல்ல. நீங்கள் என் புத்தகத்தை வாங்க வேண்டும். படிக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. நான் கலந்து கொண்டு இருக்கும் போட்டி என்பது உள்ளூர் போட்டி அல்ல. உலகளாவிய போட்டி. 

என்னை விட மூத்தவர்கள் இங்கே பலரும் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் இருக்கின்றார்கள். என்னை விட ஆழமாக அக்கறையுடன் எழுதுபவர்கள் இருக்கின்றார்கள். தரவுகளின் அடிப்படையில் எழுதுபவர்கள் என்று பலரும் இருக்கின்றார்கள்.  அவர்களை ஒப்பிடும் போது நான் ஒரு சின்னப்பையன். பத்து வயது பையன்.  

ஆனால் நானும் கலந்து கொள்கிறேன். 

உங்களிடம் ஆதரவை எதிர்பார்க்கிறேன். நான் என்னை சந்தைப் பொருளாக மாற்றிக் கொண்டு உள்ளேன்.  இது தான் இப்போதைய உலக நியதி. இதைச் சொல்வதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. 

வெல்வதற்கு எத்தனை வாய்ப்புகள் உள்ளதே அத்தனை வாய்ப்புகளையும் கவனிப்பது தான் வெற்றி பெறக்கூடியவர்களின் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்.

தோல்வியடைந்தால்?

கவலைப்படத் தேவையில்லை. உலகம் பெரிது. 2019 போனால் 2020 வரும். அப்போதும் கலந்து கொள்வேன்.  

ஆனால் உங்களையும் கலந்து கொள்ள வைப்பேன். கட்டாயப்படுத்துவேன். கடலில் நீந்தக் கற்றுக் கொடுப்பேன். கிணறு, ஆறு, ஏரி, குளம் போன்றவற்றில் நீந்தியது போதும் என்று கட்டாயப்படுத்தி வெளியே இழுப்பேன்.  

அதற்கு முன்னோட்ட எச்சரிக்கை தான் இந்தப் பதிவு.

ஆனால் நீங்கள் உங்கள் பலவீனத்தை உணரத் தெரிந்து இருக்க வேண்டும். 

காரணம் உங்கள் மகன், மகள், பேரன், பேத்தி போன்றவர்கள் முழுமையான தொழில் நுட்ப உலகில் தான் வாழப் போகின்றார்கள். அவர்களுடன் உங்களுக்கு நல்ல உறவு இருக்க வேண்டும் என்றால், அவர்கள் உங்களுடன் பேச ஆர்வமாக உங்களை நோக்கி வர வேண்டும் என்றால் உங்களின் பழமைவாத சிந்தனைகள் மாற வேண்டும். உங்களை நீங்களே மாற்றிக் கொள்ள வேண்டும்.  உங்களைச் சுற்றிலும் என்ன நடக்கின்றது? என்ன மாற்றங்கள்? என்ன மாறுதல்கள் என்பதனை உணர்ந்து கொள்ளத் தெரிந்து இருக்க வேண்டும்.

இவையெல்லாம் தெரியாவிட்டால் குடி முழுகிப் போய்விடுமா? என்று உங்களிடம் ஒரு கேள்வி வரும். உண்மை தான். ஒன்றும் ஆகிவிடாது. 

என் உறவினர் ஒருவர் இன்னமும் வானொலி தான் கேட்டுக் கொண்டு இருக்கின்றார். இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி அப்படியே உடைக்காமல் இருக்கின்றது.  ஆனால் அவரின் மகன் பொறியியல் படித்து முடித்து விட்டு மெடிக்கல் வேலையில் சேர்ந்து 5000 ரூபாய் வாங்கிக் கொண்டு உள்ளூரில் இருக்கின்றார்.

எனக்குப் பட்டன் தொலைப்பேசி போதும் என்ற நண்பர் ஒருவர் இருக்கின்றார்.  

அவர் செய்வது எல்ஐசி ஏஜெண்ட் தொழில். இப்போது எல்ஜசி ஆன் லைன் மூலமாக முக்கால்வாசி நிர்வாகத்தை மாற்றிவிட்டது. அவரும் பிடிவாதமாக அந்த தொலைப்பேசி என்னை உளவு பார்க்கும் என்று புது வியாக்கியானம் சொல்லிக் கொண்டிருந்தார்.  அவருக்குப் பின்னால் வந்தவர்கள் மாதம் ஒரு லட்சம் சம்பாரிக்கின்றார்கள். இவர் கடந்த ஐந்து வருடமாக அதே 50 000 யைத் கடந்து வராமல் அப்படியே இருக்கின்றார். 

நான் திட்டி புரியவைத்தேன்.  இப்போது வாங்கி விட்டார். 

இப்போது வருத்தப்படுகின்றார்.

இதை எழுதுவதற்குக் காரணம் உங்கள் எழுத்துப் பயணம் அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டும். வேறு வாகனத்தில் பயணிக்க வேண்டும். அதற்கு உங்களுக்கு மனமாற்றம் தேவை. 

ஓசைப்படாமல் வெகுளி போல இருந்து கொண்டு இங்கே இணையத்தில் மாதம் பெருந்தொகை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் ஏராளமான பேர்கள் இங்கே இருக்கின்றார்கள்.  அவர்கள் யாரிடமும் எதையும் பகிர்ந்து கொள்வதில்லை.  

நீங்கள் மாங்கு மாங்கென்று எழுதிய நான்கு விமர்சனம் வந்து விடுமா? என்ற மொகஞ்சதாரோ ஹரப்பா காலத்தில் இருக்காதீர்கள்.

மின்னூல் பக்கம் வாங்க. 

அமேசான் பக்கம் வாங்க. 

உங்கள் வாகனத்தை மாற்றுங்கள்.

கிண்டில் என்பது ஒரு கருவி.  7000 முதல் 20 000 வரை வசதிகள் பொறுத்து உள்ளது.  ஆயிரக்கணக்கான புத்தகங்களை உள்ளே அடக்க முடியும். உங்கள் வீடு புத்தமாக நிறைந்து இருக்க வாய்ப்பில்லாமல் பயணத்தின் போது கையில் தூக்கிச் சென்று உங்களின் வாசிப்பின் ருசியை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

அவ்வளவு பணம் இல்லைங்கோ?

பரவாயில்லை. வீட்டில் லேப்டாப், டெக்ஸ்டாப் உள்ளதா?  அதில் கிண்டில் ஆப் தரவிறக்கம் செய்யுங்கள்.  அதில் உங்கள் பயனர் அக்கவுண்ட் திறந்து கொள்ளுங்கள்.  தினமும் ஏராளமான இலவச புத்தகங்கள் அமேசான் முதலாளி தந்து கொண்டே இருக்கின்றார்.  

ஒவ்வொரு நாளும் தருகின்றார்.  

பெரியவர்கள் சொல்வது போல படி. படி. படி. என்று சொல்லிக் கொண்டேயிருக்கின்றார்.

வீட்டில் இதுவும் இல்லைங்கோ?

பரவாயில்லை. கடன் வாங்கியாவது நீங்கள் உங்கள் மகனுக்கு மகளுக்கு நவீன ரக அலைபேசியை வாங்கிக் கொடுத்து அவனைப் படிக்க விடாமல் செய்யும் மோசக்கார பெற்றோர்களின் வரிசையில் நீங்களும் கட்டாயம் இருக்கத்தான் செய்வீர்கள்.  அல்லது உங்களின் தேவையின் பொருட்டு நீங்களே அதனை வாங்கியும் வைத்திருக்கக்கூடும்.

அதில் அமேசான் கிண்டில் ஆப் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். அதன் மூலமாகவும் படிக்க முடியும்.

இல்லைங்க எனக்குப் படிக்கத் தொடங்கினால் ஐந்து நிமிடத்தில் தூக்கம் வந்து என்று சொல்லக்கூடியவரா? 

பரவாயில்லை.  யூ டியுப் பக்கம் வாங்க. அதில் எப்படி சம்பாரிக்கின்றார்கள்? யார் சம்பாரிக்கின்றார்கள்? எதைச் சொல்லி சம்பாரிக்கின்றார்கள்? என்பதனை ஒரு மாதம் ஒவ்வொன்றாகப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்.

ஏதாவது ஒரு வழியில் இணையத்தைத் தெளிவாகப் பயன்படுத்தக் கற்றுக் கொள்ளுங்கள்.

குலப்பெருமை, இனப்பெருமை, மொழிப் பெருமை எல்லாம் விரைவில் அழிந்து விடும். ஆனால் உங்கள் பணப் பெருமை உங்களை, உங்களின் தலைமுறையை வாழ வைக்கும் என்பதனை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

இதனைத் தான் 5 முதலாளிகளின் கதையின் வாயிலாக உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்.

இது போட்டிக்காக எழுதப்பட்ட மின்னூலாக இருந்தாலும், வெல்ல வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்தாலும் இந்த சமயத்தில் இதன் மூலம் உலகத்தீரே இதனைக் கேட்பாயாக? என்று முக்கியமான தகவலைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள் என்று என் அனுபவச் சாற்றைக் கசக்கிப் பிழிந்து தந்துள்ளேன். 

நிர்வாகவியல், வணிகவியல், தத்துவ இயல், தொழிலாளர் நலம், முதலாளி நலம், பொருளாதார பலம், மாறும் சூழல், மாறாத மனிதர்கள், பலவீனம் உள்ள மனிதர்கள் அடையும் துன்பங்கள், சந்திக்கும் பிரச்சனைகள் என்று ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்துச் செதுக்கி உள்ளேன்.

அடைவது உங்கள் விருப்பம்.

உங்களை நான் அடைந்தே தீருவேன் என்பது என் ஆவலுடன் கூடிய எதிர்பார்ப்பு.

அலைபேசியைப் பயன்படுத்துபவர்கள் இந்த இணைப்பில் சென்று தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

உங்கள் கணினியில் படிக்க விரும்புபவர்கள் இந்த இணைப்பில் சென்று தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

தினமும் மதியம் மூன்று மணிக்கு அமேசான் எந்தப் புத்தகங்களை இலவசமாகத் தருகின்றார்கள் என்பதனை அறிவதற்கு இந்த இணைப்பில் சென்று அறிந்து கொள்ளுங்கள்.

ராசா நான் பொழுது போவதற்கு இங்கு வந்து எதையாவது எழுதி என் நேரத்தைப் போக்கிக் கொள்ள விரும்புகிறேன். என்னை ஏன் தொந்தரவு செய்கின்றாய் என்று கேட்பவரா?

பரவாயில்லை.

உங்கள் தலைமுறை உங்களுக்குப் பாடம் கற்றுக் கொடுப்பார்கள். உங்களின் மனோதிடம் உங்களை அப்போது காப்பாற்ற வேண்டும். 

நல்வாழ்த்துகள்.


(இது திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதித் துறையில் சாதித்த சறுக்கிய முதலாளிகளைப் பற்றிப் பேசும் வாழ்வியல் தொடர்.  சுய முன்னேற்ற நூல்கள் ஜீ பூம்பா என்பது போன்ற படங்கள் எதுவும் இதில் பாடங்களாகச் சொல்லி நான் உங்களைப் பயமுறுத்தவில்லை.  கிளர்ச்சியூட்டவில்லை. உடனடி நிவாரணம் எதையும் சொல்லவும் இல்லை.

உங்கள் வாழ்க்கையை, வாழ்ந்த வாழ்க்கையை, வாழப் போகும் வாழ்க்கையைக் கொஞ்சமாவது அசைத்துப் பார்க்கும். நீங்கள் இதைப் பகிர்வதும், உங்களின் நண்பர்களின் வட்டத்திற்கு அறிமுகம் செய்வதும் உங்களின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. 

நன்றி. வணக்கம்

30 comments:

  1. super , I can see the confidence... Nice . All the very best and A BIG THANKS for introducing this...

    ReplyDelete
    Replies
    1. நீங்க என்னுடைய முதல் பதிவில் இருந்து என்னோட எழுத்துக்களை படித்துக் கொண்டு வர்றீங்க சுந்தர். எத்தனை எத்தனை மாற்றங்கள். ஆனால் நம்ம மக்கள் பிடிவாதமாக ஒரே இடத்தில் இருக்கிறார்கள் சுந்தர். புத்தகம் படித்து விட்டு இங்கே விமர்சனம் தாங்க சுந்தர். நன்றி.

      Delete

  2. நாம் மாறாவிட்டால் நம்மை மாற்றிவிடுவார்கள்? https://avargal-unmaigal.blogspot.com/2019/11/jothiji-amazon-kindle.html

    ReplyDelete
  3. அமேசான் புக் (Kindle)பற்றி முன்பே தெரிந்தாலும் ஆன்லைன் மூலம் புக்படிக்கும் பழக்கம் என்னிடம் இல்லை இருந்தாலும் உங்களின் முயற்சிக்கு கை கொடுப்பதற்காக முதன் முதலில் உங்களின் இந்த புக்கை டவுன்லோடு செய்துள்ளேன்.... படிக்க நேரம் கிடைத்ததும் படித்துவிடுகிறேன்

    உங்களின் முயற்சிகளுக்கு எனது பாரட்டுகலும் வாழ்த்துக்களும்

    ReplyDelete
    Replies
    1. நன்றியும் அன்பும்.படித்து முடித்ததும் தரமாக இருக்கிறது உங்கள் எண்ணம் உருவானால் உலகத்திடம் உங்கள் நெருங்கிய வட்டத்திடம் கொண்டு சேர்ப்பீர்களாக. ஆமேன்.

      Delete
  4. நீங்கள் சொல்வதை நானும் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.  திரு அமுதவன் ஸ்டேட்டஸில் கூட சொல்லி இருந்தீர்கள்.  இதன் வசதிகள் பற்றி அறியாதவனாகவே இருக்கிறேன்.    லிங்க்ஸ் கொடுத்திருப்பது உபயோகமாய் இருக்கிறியாது.  இனி முயற்சி எடுக்கிறேன்.  நன்றி.

    ReplyDelete
    Replies
    1. //இருக்கிறியாது//

      * இருக்கிறது

      Delete
    2. உங்களுக்கு ஆங்கிலம் நான் எழுத பேசத் தெரியும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் தமிழில் தான் விமர்சனங்களை எழுதுவேன் என்ற உங்கள் எண்ணத்தில் இந்த எழுத்துப் பிழை எனக்குப் பெரிதாக தெரியவில்லை. வாழ்த்துகள். நன்றி ராம்.

      Delete
  5. சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை கேளுங்கள்... கற்றுக் கொள்கிறேன்... அதை ஒரு பதிவாக போடுகிறேன்... அவை பலருக்கும் பயன் தரும்...

    மேலுள்ள வரி எனது சில தொழிற்நுட்ப பதிவுகளிலும், சமீபத்தில் நடந்த வலைத்தள பயிற்சிப்பட்டறைகளிலும் சொல்வதுண்டு... தங்களால் இன்று மேலும் ஒன்றை கற்றுக் கொண்டுள்ளேன்... வெறும் பொருட்களை வாங்க மட்டும் amazon இருந்தது... இனி வாசிப்பதற்கும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் சொல்லத் தோன்றுகின்றது. மறைந்த எழுத்தாளர் ஞாநி அதிகாலை 2 முதல் 3 மணிக்குள் இறந்து இருப்பார் என்றே நினைக்கிறேன். அப்போது இரவு வேலை முடித்து வீடுக்குள் வந்து தூங்கப் போவதற்கு முன்பு வேறு ஏதும் மின் அஞ்சல் வந்துள்ளதா? என்று பார்த்துக் கொண்டிருந்த போது என்னைப் போலவே அவருடன் நெருக்கமாக பழகிய பாஸ்கர் சக்தி ஞாநி சற்று நேரத்திற்கு முன்பு இறந்துவிட்டார் என்ற பேஸ்புக் பதிவை நான் தான் முதலில் பார்த்தேன். ஆச்சரியம் என்னவென்றால் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு ஞாநி வலைதளத்தில் அவர் செயல்பட்டுக் கொண்டிருந்தார். இது தான் வாழ்க்கை. செயல்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். இதுவொரு தொடர் ஓட்டம்.

      Delete
  6. // முனைவர் பட்டம் வாங்கும் அளவிற்கு // வலையுலகின் பிதாமகன் // - ஏனிந்த வெறித்தனம்...? பிகில் படம் பார்த்து விட்டீர்களோ...? ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. மகள்கள் இரண்டு பேர்களுடன் மனைவியை அனுப்பி வைத்தேன். நானும் இன்னோரு மகளும் இன்னமும் பார்க்கவில்லை. அதற்குப் பதிலாக அனைவரும் கைதி பார்த்தோம். அந்தப் படத்தில் கூவல் அதிகமோ? ஷாருக்கான் படத்திற்கு அட்லி சம்பளம் 40 கோடி என்கிறார்கள். ஷங்கர், முருகதாஸ் க்குப் பிறகு இவர் வந்துள்ளார். எப்படி?

      Delete
  7. // அவரின் சொந்தத் தொழிலை லாபகரமாகக் கொண்டு செல்கின்றாரோ இல்லையோ //

    இந்த "5 முதலாளிகளின் கதை" முடிவில் ஒருவர் சொன்னது போல், திருப்தியான வாழ்க்கை... அதற்கு காரணம் துணைவி...

    நேற்று இந்தப் பதிவை எனது மகளிடம் வாசிக்க சொன்னேன்...

    "அப்பா... என்னைக் கேட்டால் நான் சொல்ல மாட்டேனா...? வலைச்சித்தர் என்று பெயர் வேறே...!"

    "நான் வலைப்பித்தர் தானே...?!" என்று மனதில் நினைத்துக் கொண்டேன்... இனி வரப்போகும் காலங்களில், Kindle எனது மகளுக்கும் பலவிதங்களில் பயன்தரும்... முடிவாக, நாம் மாறாவிட்டால் நம்மை மாற்றிவிடுவார்கள் என்பது உண்மை...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. அமெரிக்காவில் உள்ள நூல், நூறு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த முக்கியமான நூல், 17 ஆம் ஆண்டு ஆவண காப்பகத்தில் உள்ள நூல், அரசாங்கம் எங்கள் நாட்டில் இந்த புத்தகத்தை வெளியிடக்கூடாது என்ற தடை செய்த நூல் என்று பாரபட்சம் இல்லாமல் அத்தனையும் இதில் உள்ளது. கிடைக்கின்றது என்றால் என்னவொரு தொழில்நுட்பம். முன்பு ஐஏஎஸ் க்கு எந்தப் புத்தகங்களைப் படித்து முயல வேண்டும் என்பதே இங்கே 90 சதவிகித பேர்களுக்குத் தெரியாது. ஆனால் இன்று கிண்டில் மூலமாக அனைத்து புத்தகங்களும் கிடைக்கின்றது. மகள் சரியாக பயன்படுத்தினால் அலைபேசியை தூக்கி ஓரமாக வைத்து விட்டு இதற்குள் குதித்து விடுவார். இணைய தளம் போல கருமாந்திரங்கள் இதிலும் உண்டு. நாம் தான் வழிகாட்ட வேண்டும்.

      Delete
  8. நல்லதொரு கட்டுரை ஜோதிஜி. சில வருடங்களாகவே அலைபேசி மூலம் கிண்டில் நூல்களை படித்து வருகிறேன். சமீபத்தில் கிண்டிலும் வாங்கி படித்து வருகிறேன். மிகவும் நல்ல விதமாக நேரத்தினை பயன்படுத்த கிண்டில் ஒரு நல்ல கருவி. ட்விட்டர், முகநூல், இன்ஸ்டா என அனைத்திலும் எனக்குக் கணக்கு இருந்தாலும் அங்கே செல்வது வெகுவும் அரிது.

    சில நாட்களாக பதிவுகள் எழுத முடியவில்லை. விரைவில் பதிவுகள் வரும். நண்பர் ஸ்ரீனிவாசன் தளத்தில் எனது சில மின்னூல்களும் உண்டு. அமேசானில் ஒரு புத்தகத்தோடு நிற்கிறது. தொடர வேண்டும்.

    அனைவருக்கும் பயனுள்ள தகவல்.... உங்கள் முயற்சி வெற்ற பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பயணக்கட்டுரை ஒவ்வொன்றும் மிக மிக முக்கியமானது. அதனை அமேசான் தளத்தில் ஏற்றவும்.

      Delete
  9. பதிவைக் கண்டதும் மன நிறைவாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. எழுதாத பலரை எழுத வைத்துவிடுகின்றீர்கள். சிந்திக்காத, சிந்திக்க இயலாத பலரை சிந்திக்க வைத்துவிடுகின்றீர்கள். உங்களின் அபார திறமையினைக் கண்டு வியக்கிறேன். தொலைபேசியில் உங்களுடன் பேசும்போது மேலும் பல ஆக்கபூர்வமான உங்களின் சிந்தனைகளை உணர்கிறேன். ஆசிரியர் ஓர் அருமையான பாடத்தை வகுப்பில் எடுத்ததுபோல இருந்தது இப்பதிவு. வாழ்த்துகள். நூலைப் படித்துவிட்டு தனியாக எழுதுவேன்.

    ReplyDelete
  10. மிக அருமை...

    உண்மைதான் டெக்னாலஜி நாளுக்கு நாள் மிக வேகமாக வளர்கிறது... அந்த அளவிற்கு வேகமாக நாமும் கற்று , வளர வேண்டும்..

    புதிதாக கற்க வேண்டும் என்ற எனது ஆர்வத்தில் பயண தொகுப்பாக இரு மின்னூல் அமேசாலில் பதிவிட்டுள்ளேன் அதே போல் யூடியூப் சேனலும் செல்கிறது..

    தினமும் மதியம் மூன்று மணிக்கு அமேசான் எந்தப் புத்தகங்களை இலவசமாகத் தருகின்றார்கள் ...இந்த செய்தி புதுசு எனக்கு ...நான் தேடியே அவ்வாறு உள்ள புத்தகங்களை சேமித்து வைக்கிறேன் .. உங்களின் இந்த தகவல் மிகவும் பயனுள்ளது .

    நன்றியும் வாழ்த்துக்களும்

    ReplyDelete
    Replies
    1. வீட்டில் நாம் படிக்க விரும்புவோம். வேறொருவர் விரும்ப மாட்டார். புத்தகம் அடைந்து கிடைக்கும். ஏகப்பட்ட பிரச்சனை உருவாகும். இனி அந்தப் பிரச்சனை இருக்காது. முயன்று பார்க்கவும். நன்றி. 5 முதலாளிகளை கதையின் விமர்சனத்தை உங்களிடம் எதிர்பார்க்கிறேன். நன்றி அனுப்ரேம்.

      Delete
  11. வணக்கம் ஜோதிஜி, அடைமழை பெய்ந்து ஒய்ந்தது போல ஒரு உணர்வு!!! கிட்டத்திட்ட என்னுடைய தற்போதைய 80 % மன நிலையை நீங்கள் தெளிவாக எடுத்து கூறியிருக்கிங்க. தொழில்நுட்பங்களில் மீது அதிக ஆர்வம் கொண்டவன் இல்லை .. எனக்கு தேவையானது மட்டும் போதும் என்ற எண்ணம் கொண்டவன்.. வாசிப்பிலும் எனக்கு பிடித்தது, நான் பரவசமடைவது இவற்றை மட்டும் வாசித்து பழகியவன்..

    35 வயதை கடந்த பின் ஏதோ ஒரு தேடல்.. மனதிற்குள்.. தொடர்ச்சியாக அந்த தேடல் இருந்து கொண்டே இருக்கிறது.. அது என்ன என்று கூட சரியாக சொல்ல தெரியவில்லை.. மனைவியிடம் கூட தெளிவாக சொல்ல முடியாது.. சொன்னாலும் பாரம் அதிகமாகுமே தவிர. குறையாது.. நெருங்கிய நட்பு வட்டமும் இல்லை.. ஒரே ஒரு நெருங்கிய நண்பர் மட்டுமே..சில விஷியங்களை மட்டும் பகிர்வதுண்டு..

    ஆனால் தேடலுக்கான வினாவும், விடையும் தெரியவில்லை.. கிண்டில் பற்றி சென்ற மாதம் தான் எனக்கு தெரியும்.. தெரிந்தும் கூட பெரிய ஆர்வம் இல்லை.. ஆனால் தற்போது ஒரு சிறுவிதை என்னுள் விழுந்துள்ளது.. அது செடியா மாறி, மரமாகுமா??? இல்லை பட்டுபோகுமா??? காலம் தான் பதில் சொல்லவேண்டும்.. ஆனால் உங்களை போன்றவர்களது "எழுத்துக்கள்" தான் என் போன்ற மனநிலையில் உள்ளவர்களுக்கான உரம்.. இயங்கி கொண்டே இருங்கள்..நன்றி..

    ReplyDelete
    Replies
    1. நன்றி யாசின். சோதனை முயற்சியாக விருப்பம் இருந்தால் இந்தப் புத்தகத்தை தரவிறக்கம் செய்து படித்துப் பாருங்கள். இது வேண்டாம் என்றாலும் இலவச புத்தகம் ஏதோவொன்றை படிக்கத் தொடங்கவும். எதற்கும் செயல் முக்கியம். நகர்வது அதனை விட முக்கியம். மனத்தடையை நீக்குவது இவற்றை எல்லாம் மிக மிக முக்கியம். வாழ்த்துகள். நன்றி.

      Delete
  12. நீங்கள்தான் உங்கள் BRAND என்னும் தலைப்பில் ஒரு பதிவு எழுத முடிவெடுத்திருக்கிறேன் அதில் உங்கள்பதிவிலிருந்து சிஅ பகுதிகளை quote செய்யலாம் என்றிருக்கிறேன் அனுமதி வேண்டி

    ReplyDelete
    Replies
    1. தெய்வமே நானெல்லாம் மேலே சொன்ன மாதிரி பத்து வயது சின்னப் பையன் (எழுத்துலகில்). நீங்க என்ன வேண்டுமானாலும் செய்ய உரிமையுண்டு.

      Delete
  13. ஜோதிஜி நீங்க பல முறை இதைப் பல தளங்களிலும் கருத்தில் சொல்லிவருவது தெரியும். வெங்கட்ஜி தளத்தில் கூட அவர் கிண்டில் வாங்கிவிட்டேன் என்று சொல்லியிருந்த பதிவில் நீங்கள் சொன்ன கருத்து.

    எனக்கும் மின் நூல் வாசிப்பது கொஞ்சம் சிரமமாக இருக்கிறது என்றாலும் புத்தகம் வாங்க எல்லாம் முடியாது. அதுக்கு இந்த மின் நூல் தான் மிக மிக உதவியாக இருக்கிறது. நிறைய தரவிறக்கம் செய்து வைத்திருக்கிறேன். கிண்டில் இனிதான் தரவிறக்கம் செய்ய வேண்டும்.

    நல்ல பதிவு ஜோதிஜி. பயனுள்ள பதிவு.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகள். தொடர வேண்டும் உங்கள் புதிய பணி பாதை எண்ணம்.

      Delete
  14. எங்களின் சில பதிவுகளையும் அமேசான் கிண்டிலில் பதிவேற்றம் செய்ய எண்ணம் உள்ளது. உங்கள் பதிவு ஊக்கம் தரும் ஒன்று. பயனுள்ள பதிவு.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. இது தொடர்பாக மற்றொரு பதிவும் எழுதுகிறேன். படிக்கவும்.

      Delete
  15. வணக்கம் சகோ
    5 முதலாலிகளின் கதையை கிண்டிலில் (என் கணவருடையது) என் கணவரை தரவிறக்கம் செய்து தரச் சொல்லி வாசித்தேன். 2 நாட்களில் இரவு உணவிற்கு அப்புறமாக அமர்ந்து வாசித்து முடித்தேன். 5 ஸ்டார் செய்து விட்டு கமண்ட் செய்தோம். ஆனால் கமண்ட் போகவில்லை.ஏன் என தெரியவில்லை.

    திருப்பூரை பணியன் உற்பத்தி ஊராகத் தான் தெரியும். தொழில், தொழிற்சாலை,அதன் அன்றாடப் போக்கு, தொழிலாளிகள், முதலாளிகள், சப் காண்டிராக்ட்,நிதி,அதை கையாடும் விதம், நிதி நிறைய வந்ததால் மக்களின் குணங்கள், நிதியைச் சுரண்ட வரும் பொருச்சாளிகள், மோகவலை,பெண் தொழிலாளிகளின் கஷ்டங்கள், தாங்கள் சந்தித்த கஷ்டங்கள், சவால்கள்...அதை நேருங்கு நேர் நின்று சரி செய்த விதங்கள்,நேர்மை,நாணயம்...சில முதலாளிகளின் சாமர்த்தியங்கள்,அவர்களின் நிர்வாகத்திறன்கள், அடித்தளத்தில் இருந்து வந்தவர்களின் முன்னேற்றங்கள், யார்யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என தெரிந்து இருத்தல்...என மிக அருமையாக எதார்த்தமாக எழுதி இருக்கிறீர்கள்.இதை வாசிக்கும் போது வாசிப்பதாய் எனக்குத் தோன்றவில்லை...நேரடியாக பார்ப்பது போல் இருந்தது. எல்லோருக்கும் புரியும் படியாக சொல்ல வந்ததை தெளிவாக சொல்லிச் சென்ற விதம் சிறப்பு. நமது அன்றாட வாழ்க்கைக்கும் நிறை கற்றுக் கொள்ள வேண்டியது இந்த புத்தகத்தில் இருக்கிறது. சகோ... இந்த புத்தகத்தை மீண்டும் வாசிக்க வேண்டும். வாழ்த்துகள் பாராட்டுகள்.

    உங்கள் எழுத்துப் பணி மேலும் மேலும் தொடர்ந்து வர வாழ்த்துகள்.

    5 ஸ்டார் மட்டும் ஏற்றுக் கொண்டது. கமண்ட் லேட் ஆகவில்லை. பின்பு வருமா என தெரியவில்லை.

    ஆகையால் நான் இங்கு என் மனதில் பட்டதை கருத்திட வந்தேன்.

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நன்றி. மீண்டும் அமேசானில் கருத்திடமுடியுமா? என்று பாருங்க.

      Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.