அஸ்திவாரம்

Thursday, November 21, 2019

இளம் படைப்பாளர் விருது 2019


வாழ்க்கை ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான பாடங்கள் நடத்திக் கொண்டே இருக்கிறது. அதன் மூலம் வித்தியாசமான அனுபவங்களும் கிடைத்துக் கொண்டேயிருக்கிறது.  

பார்வையாளர் போலவே பார்த்துக் கொண்டேயிருக்கிறேன். கூடவே அதனை இங்கே பதிவு செய்து விட வேண்டும் என்பதனை கடமையாகவும் வைத்துள்ளேன்.

நெருங்கிய நண்பர் பேசும் போது இதனைத் தவறாமல் குறிப்பிடுவார்.

"கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே" என்பதன் உண்மையான அர்த்தம் "கடமையைச் செய் பலனில் பற்று வைக்காதே" என்பார்.  

இதனை உணர நமக்கு வாழ்க்கையின் பிற்பகுதி தான் சரியாக இருக்குமோ? என்று தோன்றுகின்றது.

திருப்பூரில் டாலர் நகரம் புத்தக வெளியீட்டு விழா டிசம்பர் 2013 அன்று நடந்தது.  அதற்குப் பிறகு அந்தப் புத்தகம் சார்ந்த எந்த சந்தைப்படுத்துதல், விழாக்களில் கலந்து கொள்ளுதல், விளம்பரப்படுத்திக் கொள்ளுதல் போன்ற எதிலும் கவனம் செலுத்தவில்லை.  






காரணம் விரும்பவில்லை.  எது எவர்களுக்குத் தேவையோ அது அவர்களுக்கு ஏதோவொரு சமயத்தில் கிடைத்தே தீரும்.  வாங்குபவர்கள், வாங்க வேண்டியவர்கள், தேடிக் கொண்டிருப்பவர்கள் அவர்களின் தரம் பொறுத்து தகுதியான தரமான விசயங்கள் அவர்களைச் சென்று அடைந்தே தீரும் என்று நம்புபவன் நான்.

இப்போதைய விளம்பர உலகில் உங்கள் கொள்ளை எந்த அளவுக்கு ஏற்புடையதாக இருக்கும்? என்ற கேள்வி உங்களிடமிருந்து வரக்கூடும்.  உண்மை தான். ஆனால் என்னதான் நீங்கள் உங்களை ஒவ்வொரு இடத்திலும் முன்னிலைப்படுத்திக் கொண்டேயிருந்தாலும் அது எத்தனை காலம் நிலைத்து நிற்கும்?

இதை இங்கே எழுதுவதற்கு இப்போது என்ன தேவை?

திருப்பூரில் நடக்கும் புத்தக சந்தை என்பது கம்யூனிஸ்ட் கட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.  கடந்த நாலைந்து வருடங்களாக அங்கே நடக்கும் நிகழ்வுகளை, தொடர்புடைய மனிதர்களின் பழக்கவழக்கங்கள், எதிர்பார்ப்புகள், குணாதிசயங்களைப் பார்த்து மெதுவாக விலகிக் கொண்டேன்.  கிண்டில் அறிமுகமான பின்பு புத்தகங்கள் வாங்குவதன் தேவை அறவே இல்லாமல் போய்விட்டது.



அவர்கள் தோழர் என்று அழைப்பதே நமக்கு முதலில் ஒவ்வாமையாக இருக்கும்.  இது எழுதுவதற்கு நான் வருத்தப்படப்படவில்லை.  காரணம் செய்வது முழுவதும் அக்மார்க் அயோக்கியத்தனம்.  அழைப்பது தோழர் என்றால் உங்களுக்கு எப்படியிருக்கும்?  

நூற்றில் ஐந்து பேர்கள் தான் இன்னமும் உண்மையான கம்யூனிஸ்ட் கொள்கைகளை கடைப்பிடிக்கின்றனர்.  என் டாலர் நகரம் புத்தக விழாவில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் அப்போது திருப்பூர் வடக்கு தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினர் திரு. தங்கவேல் அவர்கள்.  அவரும் கம்யூனிஸ்ட் கட்சி என்றாலும் அவரின் தரமான தனிப்பட்ட கொள்கைகள் இன்றளவும் மாறவில்லை.

திருப்பூர் புத்தக சந்தையின் பொறுப்பாளர்களாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சி மக்களிடம் முதல் முறையாக டாலர் நகரம் புத்தகம் அறிமுக விழாவின் அழைப்பிதழைக் கொண்டு போய்க் கொடுத்த போது அவர்கள் வேறு எதையும் பார்க்கவில்லை.  முதல் கேள்வியே "நீங்கள் ஆர்எஸ்எஸ் ஆஆஆ?"  என்று கேட்டார்கள். காரணம் என் பெயருக்குப் பின்னால் ஜி என்ற எழுத்து வருவதால் அவர்கள் பதற்றமடைந்த காரணம் பிறகு தான் புரிந்தது.  

சிரித்துக் கொண்டே வந்து விட்டேன்.

இதே போலத் திருப்பூருக்குள் இலக்கிய சங்கம் என்று நாலைந்து உள்ளது.

பதிப்பகங்கள், இலக்கியக் கூட்டங்கள் என்று தொடர்ந்து வீட்டுக்கு அழைப்பிதழ்கள் வந்து கொண்டேயிருக்கும்.  ஒரு முறை சென்று அங்கு நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்து விட்டு அதன் பிறகு எங்கும் செல்லக்கூடாது என்று முடிவெடுத்து விட்டேன்.  வலைபதிவு சார்பாக நண்பர்கள் கூட்டங்கள், விழாக்கள் என்று அழைப்பார்கள்.  தவிர்த்து விடுவேன்.  





எதிலும் நான் இல்லை. எவருடனும் சேர்வதும் இல்லை. 

பலருக்கும் என் மேல் வருத்தம் இன்னமும் உண்டு. 

காரணம் எழுத்து என்பது என் பொழுது போக்கு.  வாசிப்பவர்களுக்கு சில நிமிடங்கள் மகிழ்ச்சியைத் தந்தால் போதும்.  

மேலும் நான் உனக்கு சந்தனத்தைத் தடவுகிறேன்.  நீ மறக்காமல் எனக்குத் தடவு போன்ற கொள்கைகளை எல்லாம் கடந்து வந்து நாளாகிவிட்டது. 

அப்படித் தடவிக் கொண்டிருப்பவர்கள் தங்கள் திறமைகளை மறந்து இன்னமும் பரஸ்பரம் தடவிக் கொள்ளும் வேலையைத்தான் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.  சமீப காலமாக வலைபதிவிலும் இந்த தடவுதல் வேலை நடந்து கொண்டிருக்கின்றது.  வாட்ஸ் அப் அரட்டை போல வலைபதிவு பின்னூட்டங்களை நண்பர்கள் பயன்படுத்துவதைப் பார்த்து அவர்கள் வயதினை ஒரு கணம் மனதிற்குள் கொண்டு வந்து பார்த்தேன். அற்புதமான தொழில் நுட்பத்தை நாசமாக்குவதில் நம்மவர்களைத் தவிர வேறு எவரையும் என்னால் உதாரணமாகச் சொல்லத் தெரியவில்லை.

வயதாகிவிட்டது என்று ஒருவரைப் பார்த்து மதிப்பளிக்க வேண்டும் என்று கருதாதீர்கள். அவர்கள் வாழ்க்கையில் கடந்து வந்த அனுபவங்கள் அவர்களை எப்படிச் செதுக்கியுள்ளது? என்பதனை வைத்து முடிவு செய்யுங்கள்.  சில மிருகங்கள் கூட 50 வயது வாழ்கின்றது. அதற்காக அதனை வீட்டில் படுக்கையில் கொண்டு வந்து அருகே படுக்க வைக்க முடியாது என்பதனையும் கவனத்தில் வைத்திருங்கள்.



எனக்கு குடும்பம், தொழில், எழுத்து இந்த மூன்றும் போதுமானது.  அங்கீகாரம் எதுவும் தேவையில்லை.  அது தேவையெனில் தேவையான இடத்தில் ஏதாவது ஒரு நாள் வந்தே தீரும். அல்லது நான் இறந்த பிறகு வரக்கூடும். 

பாரதி செய்த காரியங்களை நாம் செய்து உள்ளோமோ? தன்னை தீப்பந்தம் போல மாற்றி உலகத்தீரே இதனைக் கேட்பீர் என்று தன் குடும்பம், மகிழ்ச்சியான வாழ்க்கை என்று அனைத்தையும் இழந்து குறுகிய காலத்தில் வாழ்ந்து முடித்து இறந்த போன அவரை ஒப்பிடும் போது நாமெல்லாம் சிறு தூசி. இதற்கு ஏனிந்த இத்தனை ஆர்ப்பாட்டம்? என்று நினைத்துக் கொள்வதுண்டு.  

பலரும் உங்களால் எப்படி தொழில், குடும்பம் கடந்து இவ்வளவு எழுத முடிகின்றது? அதுவும் பெரிது பெரிதாக எழுத முடிகின்றது என்று கேட்கும் போது இது தான் காரணம் என்று இங்கே இந்த சமயத்தில் எழுதி வைத்திடத் தோன்றுகின்றது. எது (மட்டும்) நமக்குத் தேவை? என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.  அது போதும்.  உங்களின் வளர்ச்சி இயல்பாக ஒரு நாள் உங்களை வந்தே தீரும்.  இது எனக்கு நானே சொல்லிக் கொள்ளும், கடைப்பிடிக்கும் கொள்கை.

இலக்கிய சங்கங்கள், அதற்குள் இருக்கும் அரசியல், காழ்ப்புணர்ச்சி போன்றவற்றை எல்லாம் முழுமையாக அறிந்து வெறுத்துப் போயுள்ளேன். 

திருப்பூர் என்றால் "நான் தான் தாதா" என்று சொன்னவர்கள், சொல்லிக் கொண்டிருப்பவர்கள் என அத்தனை பேர்களும் செயல்பட முடியாமல் மெது மெதுவாக ஆரோக்கியம் இழந்து ஒதுங்கிக் கொண்டேயிருக்கின்றார்கள்.  நான் இன்னமும் என் பாதையில் தெளிவாக அழகாகப் பயணித்துக் கொண்டேயிருக்கின்றேன்.  


திருப்பூரில் நடக்கும் இலக்கிய விழாக்களில் (?) வருடந்தோறும் சிறந்த எழுத்தாளர், சிறந்த புத்தகம் என்று ஏதேதோ பெயர்களில் பட்டம் கொடுத்துப் பாராட்டு விழா நடத்திக் கொண்டிருப்பதைக் கவனித்து மனதிற்குள் சிரித்துக் கொள்வதுண்டு. செய்தித்தாளில் அது போன்ற செய்திகளை வாசிப்பதுண்டு. காரணம் சம்மந்தப்பட்ட எழுத்தாளருக்கும் விழா நடத்தும் எழுத்தாளருக்கும் என்ன கொடுக்கல் வாங்கல் என்பதனை நண்பர்கள் வாயிலாக நன்றாகவே உணர்ந்த காரணத்தால் மனைவியிடம், மகள்களிடம் பேசி சிரித்துக் கொள்வோம்.

இப்போது ஏனிந்த சுயபுராணம்?

நேற்று மதியம் நேரம் 3 மணி அளவில் திருப்பூர் மாவட்ட நூலகத்தின் உதவி நூலகர் அழைத்தார்.  "சார் 4 மணிக்கு விழா நடக்கப் போகின்றது. வந்து கலந்து கொள்ளுங்கள்" என்றார்.  என்ன விழா? எதற்கு? என்று தெரியவில்லை.  கேட்ட போது "வாங்க பேசிக் கொள்வோம்" என்றார்.  அழைத்து விட்டார்களே என்று சென்ற போது அங்கே கதை வேறுவிதமாக இருந்தது.

திருப்பூர் மாவட்ட நூலக வாசகர் விழா, இளம் படைப்பாளிகளுக்கு விருது வழங்கும் விழா, தேசிய நூலக வார விழா என்பதனை ஒன்றாகச் சேர்த்து ஒரு விழா நடத்த அறுபதுக்கும் மேற்பட்ட நபர்கள் கூடியிருந்தனர்.  

உள்ளே வரவழைத்து அழைப்பிதழை என்னிடம் கொடுத்த போது சிரித்து விட்டேன். அப்போது தான் அழைப்பிதழைப் பார்க்கிறேன்.

இரண்டு மாதத்திற்கு முன்பு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 136 நூலகங்களுக்கு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 126, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 50 நூலகங்களுக்கு, திருநெல்வேலி மாவட்ட கல்லூரிகள் மற்றும் நூலகங்களுக்கு என டாலர் நகரம் நூல் கொடுத்து, இந்த நூல் எல்லா நூலகங்களிலும் இருக்க வேண்டும் என்று வழங்கியிருந்தேன். 





திருப்பூர் மற்றும் சிவகங்கை மாவட்டத்திற்கு அதிகாரிகள், அங்கே பணிபுரிபவர்கள் தொடர்பு மூலம் கொடுத்து அனுப்பினேன். திருநெல்வேலி மாவட்டத்திற்குக் கல்லூரிப் பேராசிரியராக பணிபுரிந்து கொண்டிருக்கும் மதிப்பிற்குரிய ஜோஸ்பின் முன்னெடுப்பில் பலருக்கும் கொண்டு சேர்க்க முடிந்தது.

குறிப்பாகக் கிராம பஞ்சாயத்து நூலகங்களில் இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து இருந்தேன். 

இதனை அப்போதே மறந்து போய் விட்டேன்.  திருப்பூர் நூலக வாசகர் வட்டத்தில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள், பணிபுரிந்து கொண்டிருக்கும் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள், சிற்பிகள், அரசு பள்ளிக்கூட மாணவர்கள், மாணவியர்கள், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சாயத்து, நகரப் பொறுப்பு நூலகர்கள் என்று அனைவரும் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்.  ஒருவர் கூட பெருமைக்காக இந்த சங்கத்தில் இல்லை.  

நாற்பது வயது முதல் எழுவது வரைக்கும் உள்ளவர்கள், புத்தக வாசிப்பில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் இருக்கின்றார்கள்.  ஒவ்வொரு முறையும் விழா நடக்கும் போது யாராவது ஒருவர் எழுதிய புத்தகத்தை உறுப்பினர்கள் அனைவரும் வாசித்து அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து விழா நடக்கும் போது பாராட்டு விழா நடத்துகின்றார்கள்.  

இந்த முறை என்னைத் தேர்ந்தெடுத்து இருந்தார்கள். 

இதில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் விழா ஏற்பாடு பத்து நாட்களாக நடந்து கொண்டு இருக்கிறது.  எனக்கு எந்தத் தகவலும் சொல்லவில்லை. 

காரணம் என் அலைபேசி எண்ணை உதவி நூலகர் எந்தப் பெயரில் சேமித்து வைத்தேன் என்பதனை மறந்து விட்டார்.  பத்திரிக்கையில் என் பெயரை ஜோதி ஸ்ரீ என்று போட்டு பெண்ணாக மாற்றி இருந்தார்.  ஆகா இது கூட நல்லாத்தானே இருக்கிறது என்று சிரித்துக் கொண்டே யோசித்தேன்.

இருபதுக்கும் மேற்பட்டவர்கள் டாலர் நகரம் நூலை வாசித்து இருப்பார்கள் போல.  ஒவ்வொருவரையும் நூல் திறனாய்வு என்று தலா மூன்று நிமிடங்கள் பேசினார்கள்.

இந்தப் புத்தகம் வெளிவந்து ஆறு ஆண்டுகள் முடியப் போகின்றது.  இது தான் முதல் விழா.  எதிர்பாராத விழா.  ஆனால் நூறு சதவிகித தரமான மனிதர்கள்.  திருப்பூர் வளர்ச்சியில் முக்கியமாகப் பங்காற்றிக் கொண்டிருப்பவர்கள், திருப்பூர் மாவட்ட நூலக முக்கிய அதிகாரி என்று அனைவரும் வந்து இருந்தனர்.

பொன்னாடை என்று ஒரு துண்டைப் போர்த்தினர்.  (மனைவி அதனை அவசரமாக உள்ளே அவர் இடத்தில் பத்திரப்படுத்தி வைத்து விட்டார்). பேச்சுப் போட்டியில் வென்ற அரசு பள்ளிக்கூட மாணவ மாணவியர்களுக்கு பரிசு  வழங்கினேன். 

மாணவியர்கள் பட்டாசு போலத் தெறிக்கின்றனர்.

இந்த விழாவில் நான் கவனித்த முக்கியமான ஒன்று. நம்மை வைத்துக் கொண்டே பலரும் பலவிதங்களில் பாராட்டிப் பேசிக் கொண்டேயிருக்கும் போது நம் மனநிலை எப்படியிருக்கும்? காரணம் அரசியல்வாதிகள், திரைப்பட நடிகர்கள் இது போன்ற 4 மணி நேர விழாவில் இருப்பதை நாம் அன்றாடம் காட்சி வடிவில் பார்க்கின்றோம்.  

ஆனால் எனக்குச்  சகிக்க முடியவில்லை.

கவுண்டமணி செந்திலிடம் சொன்னது தான் என் நினைவுக்கு வந்தது.

நீ யாரென்று எனக்குத் தெரியும்.
நான் யாருன்னு ஊருக்கே தெரியும்.

இதுவும் கடந்து போகும் என்று நினைத்துக் கொண்டே வெளியே வந்து பார்த்தேன். தூறல் அதிகமாகிக் கொண்டேயிருந்ததைப் பார்த்து, ரசனையுடன் அனுபவித்து நனைந்து கொண்டே வந்து கௌரி கிருஷ்ணா உணவகத்தில் ஒரு பில்டர் காபி குடித்து விட்டு மறந்து விட்டேன்.

நாவில் ஒட்டியிருந்த கசப்பும் இனிப்பும் சேர்ந்தது தான் இந்த வாழ்க்கை என்று பருகிய பில்டர் காபி எனக்கு உணர்த்தியது.

14 comments:

  1. Hearty congratulations, God bless
    Rajan

    ReplyDelete
    Replies
    1. மனிதர்கள் தான் கடவுள். அதே மனிதப் பயல்கள் தான் சல்லிப்பயல்களாகவும் இருந்து தொலைக்கின்றனர் ராஜன். வாழ்த்துக்கு நன்றி.

      Delete
  2. Congratulations... I drink coffee without sugar (infact I love Sulaimani... Black tea without sugar)

    ReplyDelete
    Replies
    1. முதல் பத்தாண்டுகளாக பில்டர் காபி வெறியராக இருந்தேன். அடுத்த பத்தாண்டுகள் அதனை முழுமையாக விட்டு வெளியே வந்து விட்டேன். கடந்த ஒரு மாதமாக மீண்டும் இந்த கள்ளப் பயணம் தொடங்கியுள்ளது. நமக்கு சர்க்கரை, மாங்காய், புளிப்பு, கிறுகிறுப்பு எதுவும்இல்லை. இருக்கின்ற வரைக்கும் இருப்பதை ஒரு வெட்டு வெட்ட வேண்டும் தானே சுந்தர்.

      Delete
  3. ஒவ்வொரு பதிவிலும் நீங்கள் உஙகள் ப்ராண்டுக்காக உழைப்பது தெரிகிறது வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் 5 முதலாளிகளின் கதை படித்தீர்களா?

      Delete
  4. கவனத்தில் வைக்க வேண்டிய சாட்டையடிகள்...!

    உங்களின் கொள்கையும் பயணமும் மேலும் சிறக்க வாழ்த்துகள் அண்ணன்...

    ReplyDelete
    Replies
    1. நாம் தான் மாற வேண்டும். இனியாவது மாற்றிக் கொள்ள வேண்டும். எருமைத் தோலுக்கு தண்ணீரும் ஒன்று தான். சாக்கடையும் ஒன்று தான்.

      Delete
  5. மனமார்ந்த நல் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஆசிரியரே.

      Delete
  6. மனம் நிறைந்த வாழ்த்துகள் ஜி

    ReplyDelete
    Replies
    1. நன்றி மீசைக்கார நண்பா.

      Delete
  7. தோழர் என்று கூறினால் எனக்குக் கடுப்பாகி விடும். டேய் ன்னு வேணாலும் கூப்பிடுங்க ஆனால் தோழர் ன்னு சொல்லாதீங்கன்னு சொல்லிடுவேன் :-) .

    ReplyDelete
    Replies
    1. என் இனமடா நீ என்று சொல்லத் தோன்றுகிறது கிரி.

      Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.