சிறுவயது முதலே எனக்கு என் வயது தோழர்களை விட சில வயது மூத்தவர்களே அதிகம் நட்பானவர்கள். அவர்கள் சொல்லும் அனுபவக் கதைகளே என்னை அதிகம் செதுக்கியவை. கல்விக் காலங்களில், டியூஷன், பள்ளி, கல்லூரி நேரம் போக அதிகமாய் அங்கு இருந்தது அவர்களுடன் பொது விஷயங்களைப் பேசுவதற்கே. வேலைக்குப் போன பின்னும் எனக்கு அமைந்த மேனேஜர்கள், டேமேஜர்களாக இல்லாமல் அண்ணன்களாகவே அமைந்தனர்.
பணியிடங்களை விட, மைதானங்களிலும், மலையேற்றங்களிலும், சுற்றுலாக்களிலும் அவர்களிடம் கற்றவையே மிக அதிகம். பெரும்பாலும் அவர்கள் சொல்பவை சுயபுராணங்களே. நீண்ட, தனிமையான தருணங்களில் மட்டுமே, மனதின் அடிவாரத்திலிருந்து வைரங்களை வெட்டி எடுத்துத் தருவர். தோல்விகள், உறவுகள், வெற்றிகள், இனிய தருணங்கள் என மனித வாழ்வின் பல முகங்களைக் காட்டி, என்னைப் பண்படுத்தியுள்ளனர்.
இதே பணியைச் சிலர் எழுத்து வழியாகவும் செய்கின்றனர். தனது அனுபவங்களையும், கருத்துகளையும்,சறுக்கல்களையும், கற்றல்களையும் ஒளிவு மறைவுமின்றி, தனியான தருணங்களில் மனமொத்தவர்களிடம் பகிர்வது சுலபம். ஆனால் அவற்றை இணையவெளியில் எழுதி பொதுவில் வைப்பது ஜோதிஜி திருப்பூர் அவர்களுக்கு எளிதில் சாத்தியமாகிறது.
கணநேர வாசிப்பு இன்பம் தரும் சமூகவலைத்தள அலையடிக்கும் இக்காலத்திலும், சற்றே நீண்ட வலைப்பதிவுகள் தொடர்ந்து எழுதும் ஒரு சிலரில் இவரும் ஒருவர். தமிழக வரலாறு, அரசியல் கட்டுரைகள் தாண்டி சுய வரலாற்றையும் தொடர்ந்து எழுதுகிறார். ஒரு ரிமோட் அண்ணனாகத்தான் எனக்கு எப்போதும் தோன்றுகிறார்.
பல பேர்களோடு பழகினாலும் எனக்கு அனுபவங்களைப் பகிரவோ, அசைபோடுடவோ, பிறரது அனுபவங்களையும், பல கதைகளையும் பேசவோ நேரம் வாய்ப்பதில்லை. அக்குறையை இவரது எழுத்துகள் போக்குகின்றன.
அண்ணன் சமீபத்தில் வெளியிட்டுள்ள 5 முதலாளிகளின் கதை மின்னூல், அவரது அனுபவக் குறிப்புகளே. திருப்பூரின் வளர்ச்சியை, அதன் உள்ளே இருந்து ஒரு காரணியாக, வாழ்ந்து வருபவர். அவர் கண்ட ஐந்து முதலாளிகளை நமக்கு அறிமுகம் செய்கிறார். மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை இவற்றிற்கு அடிமையானால் என்னவாகும் என்பதை தனக்கே உரிய பாணியில் சொல்லிச் செல்கிறார்
இது போன்ற அனுபவக் கதைகளுக்குக் கதைமாந்தர்களின் பெயர் முக்கியமில்லை. அவர்களின் பழக்கங்கள், செயல்களே முக்கியம். அவ்வாறே பெரிதும் பெயர்கள் இன்றி, நம் அருகில் அமர்ந்து, குளக்கரையிலோ, கோயில் மண்டபத்திலோ, மலையேற்றத்திலோ, உடன் அமர்ந்து கதை சொல்வது போலவே சொல்லிச் செல்கிறார்.
வாழ்க்கை எனும் பெரிய பரமபதம் விளையாட்டில், நற்குணங்கள் எனும் சிறிய ஏணிகளையும், மண்ணாசை-பெண்ணாசை-பொன்னாசை எனும் பெரிய பாம்புகளையும், வளர்த்துக் கொண்டு போகும் முதலாளிகள், வெல்வது எப்படி? பெரிய பலூனை உடைக்க ஒரு சிறு ஊசியும், ஒரு கப்பலை மூழ்கடிக்க ஒரு சிறு துளையும் போதும் என்பதை, தான் பணிபுரிந்த முதலாளிகளின் கதைகள் வழியே சொல்கிறார்.
ஆர்எஸ் பிரபு அவர்கள் எழுதியது போல, அண்ணன் மேலாண்மை நூல்களாக எழுதினால், பாடப்புத்தகங்கள் ஆகவே வைக்கலாம். தொழில்முனைவோர் அனைவரும் ஜோதிஜி நூல்களை ஒரு முறை படித்து விடுவது பல்வேறு அபாயங்களிலிருந்து அவர்களைக் காத்திடும். தொடர்ந்து எழுதி சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் முன்னேராக விளங்கி வர வேண்டுதல்களும், வாழ்த்துக்களும்.
மின்னூல் இங்கே வாங்கலாம் - https://www.amazon.in/gp/product/B07ZXJQH4T
வாழ்த்துகள்...
ReplyDeleteஅருமையான விமர்சனம்
ReplyDeleteவாழ்த்துகள்
http://karanthaijayakumar.blogspot.com/2019/11/blog-post_22.html
ReplyDeleteவருக வருக
நன்றியும் அன்பும்.
Deleteஉங்களின் எழுத்தானது அனைவரையும் பிரமிக்க வைக்கும் என்பதை அனைவரும் அறிவோம். வாழ்த்துகள்.
ReplyDeleteதமிழ் விக்கிபீடியா டிசம்பர் 2019இல் நடத்துகின்ற ஆசிய மாதம் போட்டியில் கலந்துகொண்டு கட்டுரைகளை எழுதி வருகிறேன். இந்த மாதம் 30ஆம் நாள் வரை இப்போட்டி நடைபெறுகிறது. தமிழில் இல்லாத செய்திகளை/பதிவுகளை ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து தமிழுக்குக் கொண்டு வரும் என்னுடைய சிறிய முயற்சி. ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு கட்டுரையாவது எழுத/மொழிபெயர்க்க திட்டமிட்டு எழுதி வருகிறேன். ஆதலால் கருத்துரை இடுவதில் தாமதமாகிறது. பொறுத்துக்கொள்க.